Monday 4 November 2013

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி..

உலக செஸ் சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்துக்கும்,  நார்வே நாட்டின்  மெக்னஸ்  கார்ல்சன் ஆகியோருக்கும்  இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப்  போட்டி தமிழ் நாட்டின் சென்னை மாநகரில்  வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

அதற்கு முன்னதாகவே, அனைத்துலக ரீதியிலான இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை முதல்வர் ஜெயலலிதா வரும் 7 ஆம் தேதி சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐந்து நட்சத்திர தனியார் ஹோட்டலான ஹயாத் ரீஜன்சியில் தொடக்க விழா நடைபெறுகிறது.

இரு விளையாட்டாளர்களும்  ஆடக்கூடிய தனி அறையும், சுமார் 400 பேர் அமர்ந்து அவர்கள் இருவரும் விளையாடுவதை கண்ணாடித் தடுப்புகளின் வழியாக பார்த்து ரசிப்பதற்கான சிறப்பு இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நவம்பர் 7லிருந்து 28ம் தேதி வரை இந்த 12 சுற்று போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

43 வயதான ஆனந்தை 22 வயதான கார்ல்சன்  எதிர்த்து விளையாடுகிறார். தங்களை முழுமூச்சாக தயார் படுத்தும் நிலையில்  இருவரும் சென்னைக்கு வந்து தற்போது  முகாமிட்டுள்ளனர்.

உள்ளூர் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், சுமார் 150 நாடுகளில்  இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 என ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment