Tuesday 15 January 2013

நேரடி விற்பனை பிரதிநிதிகளாக பெண்கள். . .

நேரடி விற்பனையில் ஆண்களின் ஆதிக்கமே அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருந்தாலும், பெண்களுக்கான வாய்ப்புகளுக்கு எவ்வித குறைவும் இருப்பதாகத் தெரியவில்லை.  சரி நிகர் சமமாக ஆண்களோடு போட்டியிடும் ஒரு துறையாக நேரடி விற்பனையும் ஆகி வருகிறது. இதில் சாதனை புரிய பெண்கள் தயாரா என்பதே கேள்வி இப்போது.

சிறந்த சேவையினை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் நேரடி விற்பனைப் பிரதிநிதிகளை அவர்கள் ஆணா பெண்ணா என பார்ப்பதில்லை. தங்களுக்கு கிடைக்கும் சேவையினைப் பொறுத்தே விற்பனையாளர்கள் மதிப்பிடப் படுகிறார்கள்.

நேரடிச் சந்தையில் போட்டிகள் அதிகம். தங்களின் பொருள் பற்றிய சந்தேகமின்றி விளக்கும் திறன் இதில் மிக முக்கியம். பெயரைச் சொன்னாலே தெரிந்து கொள்ளும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட சுறுசுறுப்பில்லாவிடில் சோபிக்க முடியாமல் போய்விடும்.

கல்வியறிவு முக்கியமென்றாலும், பொருளறிவும், நிர்வாகவியல் நுணுக்கங்களும்  மற்றும்  ஓரளவுக்கு ஆங்கிலமும் தெரிந்திருப்பது அவசியம். பலபேருடன் நேர்காணலில் ஈடுபடவேண்டி இருப்பதால், சாந்தமான  அதே சமயம்  உறுதியான  பேச்சுத்திறமையும் இருப்பது ஒரு பலமாகும்.

தற்போதைய உலகம் கணினி யுகமாக மாறிவருகிறது. புத்தகங்களை பள்ளிக்கு எடுத்துப்பொகும் காலம் மாறி இப்போது பள்ளிப்பிள்ளைகள் ஐபேட், லேப் டாப், நோட்புக் என அறிவியல் முதிர்ச்சியனை தங்களின் இளம் வயதிலேயே தெரிந்துகொள்கிறார்கள். எனவே,   கம்ப்யூட்டர் தெரிந்திருப்பது இன்னும் நல்லது.

பொதுவாக பெண்கள் இதில் அபாரமான திறமைகளை வளர்த்துக் கொள்வதால் இந்த நேரடி விற்பனையில் பிரதிநிதிகளாக நல்ல முன்னேற்றம் காண்கிறார்கள். மாதச்சம்பளம் என வாங்கியது போய், இப்போது இத்துறையில் இருக்கும் பெண்கள் அடிப்படை சம்பளம், ஊக்கத்தொகை, வெளி நாட்டுப்  பயணங்கள் என பல வகைகளில்  கணிசமான தொகையினை பெறுவது மகிழ்ச்சி தருகிறது.

பெண்களுக்கு இயற்கையாகவே வீட்டு வேலைகள்  பல.  அவற்றை முடித்து தங்களது சொந்த நேரத்தில் இந்த நேரடி விற்பனையில் தங்களின் உதியத்தை பெருக்கிக் கொள்ளலாம். பல குடும்பங்களில் ஆண்கள் அலுவலகங்களிலும், பெண்கள் 'எம்வே', 'இன்ஸுரன்ஸ்', 'கொஸ்வே' மற்றும் 'புளொண்டல்' போன்ற  தனியார் நிறுவனங்களிலும் தொழில் செய்து பொருள் ஈட்டுவது நம் கண்முன்னே நடப்பதுதான். பாராட்டுக்குறிய விசயமாகும் இது.  ஒவ்வொரு குடும்ப முன்னேற்றத்திற்கும் அவர்களின் பொருளாதார பலமே காரணம்.

ஆயினும் தங்களின் சொந்த பாதுகாப்பினை அவர்களே உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலையும், கட்டாயமும் அவர்களுக்கிருக்கிறது. பெண்கள் சம உரிமையைப் பேசியவண்ணம் இருந்தாலும், ஆண்களில் பலர் அதை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. ஆக, எல்லாவித பாதுகாப்பு அம்சங்களும் கடைபிடிக்கப் படுவதன் மூலமே இந்த நேரடி நிற்பனை பிரதி நிதிகளாக பெண்கள் வெற்றிபெற முடியும்.

அப்படி வெற்றிபெற்று கடமையில் இருக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment