Friday 11 January 2013

எம்.எஸ்..விஸ்வநாதனுக்கு டாக்டர் பட்டம்!


 
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.  தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக கோலோச்சியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். 500 படங்களுக்கு மேல் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு  தமிழக கவர்னர் ரோசைய்யா கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இவ்விழாவில் தமி்ழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 நன்றி : தினமலர்

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களைப் பற்றிச் சொல்வதென்றால் பல 'வோலியூம்கள்" பிடிக்கும். இருந்தாலும், ஒரு சில விசயங்களை இங்கு நினைவு கொள்வோம்:
-  1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் இவர் இசையமைப்பாளராக இருந்திருக்கிறார்.

-  சொந்தக் குரலிலும் பாடியிருக்கிறார். பார் மகளே பார் எனும் திரையில் இவர் பாடிய தலைப்புப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

-  எம்.எஸ். விஸ்வநாதன்,  ராமமூர்த்தி இணை சுமார் 10 வருடங்களுக்கு மேல் கொடி கட்டிப் பறந்த இசையமைப்பாளர்கள்.

-  புதிய பறவை  படத்தில் 300க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு அவர் இசையமைத்த பாடல்`எங்கே நிம்மதி'. அதே நேரம் `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ எனும் பாடலுக்கு வெறும் மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசையமைத்து சிறப்பு சேர்த்திருக்கிறார். இரு பாடல்களுமே காலத்தால் அழிக்க இயலா பாடல்களில் அடங்கும்.

-  வெளிநாட்டு இசையைத் தமிழில் புகுத்தி சில பாடல்கள் தந்திருக்கிறார். அவற்றில் எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவைகளிலும்’, லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் புகுத்தி புதுமைகளைச் செய்தார்.

-  'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிடங்களில் இவர் இசைத்த பாடல். ஆனால்,  `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாக இரண்டு மாதம் பிடித்ததாம்.

-  ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. இசையமைத்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை 518.

இவற்றுள்,
ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்த படங்கள் – 88
இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்தவை – 4
மட்டும் தனித்து இசையமைத்த படங்கள் – 426

சங்கர் கணேஷ், இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.கோவர்த்தனம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இவருடைய உதவியாளர்களாகப் பணியாற்றியவர்களே.

 ‘காதலிக்க நேரமில்லை, அன்பே வா,, ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, ஊட்டிவரை உறவு, குடியிருந்த கோயில், உத்தரவின்றி உள்ளே வா, சிவந்த மண், எங்க மாமா, உலகம் சுற்றும் வாலிபன் என எனக்குப் பிடித்த அவரின் இசையமைப்பில் வந்த படங்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகும்...

No comments:

Post a Comment