Sunday 6 January 2013

மாணவர்களுக்கு உதவுவோம்...

"பிறந்தோம், வளர்ந்தோம், இருந்தோம், இறந்தோம்" என்பதுவே வாழ்க்கையாகி விடாது.  இருக்கும் காலத்தில் ஒரு சிலராவது நம்மைப் பற்றி நல்லவிதமாக பேசும் படி  நடந்து கொள்வது அவசியம்.

இதற்கு பெரிதாக நாம் எதுவும் செய்யத்தேவையில்லை. ஏதோ நம்மால் ஆன சின்னச் சின்ன உதவிகளை செய்யத் தொடங்கினால் நாளடைவில் அவைகளே நமக்கு மனத் திருப்தியத் தந்து விடும். பல உதவிகளுக்கு பணம் தேவைப்படுவதில்லை. நல்ல மனம் இருந்தாலே போதும்.

சிலர் உதவி செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் உதவும் மனம் இல்லாததினால் சுய நலமாக நடந்து கொள்கின்றனர்.  மீண்டும் ஒருமுறை அவர்கள் தங்களின் செயலை எண்ணிப் பார்ப்பது நல்லது. 

 நான் பார்த்த சிலர்,  மேல் படிப்புக்கு போகும் உறவுக்கார பிள்ளைகளுக்கான பாரங்களில் இருக்கும் விதிகளுக்காககூட கையொப்பம் இட மறுக்கின்றனர். அது அவர்களின் உரிமை  என்பது உண்மைதான் என்றாலும், அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும்.  நம் சமூக பிள்ளைகளுக்கு நாம் உதவாவிடில் வேறு யார் வந்து உதவுவது ஞாயமானதாக உங்களுக்குப் படுகிறது?

 நம்மவர்கள், அதிலும் பெண்கள், கல்விக்கடனை ஏமாற்றுவது என்பது புள்ளிக்கணக்கின் படி மிகவும் குறைவு. கடந்தாண்டு  நமது  அரசாங்கம் பத்திரிக்கைகளில் வெளியிட்ட 'கல்விக்கடன் கட்டாதோர்' பட்டியலில்  இருந்தே இதைச் சொல்கிறேன்.

 நான் பணியில் இருந்த காலத்தில் எத்தனை எத்தனையோ உயர்கல்வி மாணவர்களுக்கு இதுபோல் அவர்களின் விண்ணப்ப பாரங்களில் சிபாரிசு கையெழுத்திட்டிருக்கிறேன். இதுவரை   யாரும் என்னை ஏமற்றியது கிடையாது.

வளரும் பயிர்களுக்கு பணத்தைச் செலவிட்டு உரம் வாங்கி போடாவிட்டாலும், கொஞ்சம் தண்ணீராவது ஊற்றலாமே. சிபாரிசுக்கான கையொப்பம் என்பது மேல் படிப்பு மாணவர்களுக்கு செடிகளுக்கு உற்றுகின்ற தண்ணீர் போன்றது.

எல்லா மாணவர்களும், எல்லா நேரங்களிலும், எல்லா நல்லுள்ளங்களையும் ஏமாற்றுவதில்லை. அங்கும் இங்குமாக ஓரிரு சம்பவங்கள் இப்படி நடக்கலாம். அதை வைத்து எல்லா மாணவர்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது அறிவுடைமை ஆகுமா?

இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படி சுய நலபோக்கில் உள்ள சிலர் சமைய அமைப்புக்களில் சேர்ந்து தியாக சீலர்கள் போல  தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். மேல் நிலையில் இருப்பதைப்போல காட்டிக்கொள்ளும் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லுவேன்.

வியாச முனிவர் பதினெட்டு புராணங்களையும் முடித்த பின்னர் அவரின் சிஷ்யர்கள் அவற்றுள் இருக்கும் ஒன்றிரண்டு சுலோ கங்களின் சாராம்சத்தை தங்களுக்கு விளக்கும் படி கேட்டனர்.

அப்போது வியாசர் " இந்த பதினெட்டு புராணங்களில் மட்டுமல்ல, உலகில் உள்ள கோடி புத்தகங்களின் சாராம்சமும் அரை சுலோ கத்தில் இதுதான் : புண்ணியம் சம்பாதிக்க பரோபகாரம் பண்ணு. பாவத்தை மூட்டையாக கட்டிக்கொள்ள மற்றவர்களுக்கு கஷ்டத்தைக்கொடு" என்றார்.

பாவமூட்டைகள் இல்லாதிருப்பினும் புண்ணியங்களும் பூஜியமாக வாழ்ந்து என்ன பயன்?

மதத்தினையும், சமயத்தினையும் ஆயுதமாக எடுத்துக்கொள்ளும் சிலரின்  பின்னனியை அலசினால், ரிஷிமூலம் நதிமூலம் என பாவங்களின் மொத்த உருவமாக  அவர்கள் இருப்பதை பார்க்கலாம். போலியாக, பொய்யாக, நல்லவர்கள் போல் வெளியுலகுக்கு நடிக்கும் அவர்கள், அவ்வப்போது தங்கள் மனதுக்காகவாவது கொஞ்சம் நேர்மையாக நடந்து கொண்டு புண்ணியம் தேடிக்கொள்ளலாமே.



No comments:

Post a Comment