Monday 21 January 2013

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு. . .

பழசு என்றும் புதுசு என வாழும் பல ஆயிரம் தம்பதிகளின் வாழ்க்கை நிஜத்தில் அன்பை அடிப்படையாக கொண்டதேயாகும்.

"வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்...


வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்..."

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு


1967ல் வெளிவந்த  நெஞ்சிருக்கும் வரையில் இருந்து ஒரு பாடல்.

என்ன அழகான வரிகள்....
ஒருவருக்கொருவர் 'சென்டிமென்ட்" பார்த்து வாழ்ந்து வந்த அன்று எல்லா குடும்பங்களிலும் அன்பு ஆட்சி புரிந்தது.

அன்றைய திருமணங்கள் ஐம்பது / அறுபது ஆண்டுகள் நிலைத்திருந்தன. தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகும் வாழ்க்கை முறையை கடைபிடித்து அன்பை பங்கிட்டு வாழ்ந்தனர். ஏன்.. இன்னும் அப்படி வாழ்வோரும் நிறையவே இருக்கிறார்கள். ஆனால், இன்றைய திருமணங்களில் சில இரண்டொரு வருடங்களில், மாதங்களில் அல்லது நாட்களில் முற்றுப்பெறுவது ஆச்சரியப் படவைப்பதோடு வருந்தவும் வைக்கிறது.

நடைமுறைக்கொப்பாத அளவுக்கதிகமான எதிர்ப்பார்ப்புகளே இதற்கு அடிப்படை காரணம் என்பேன் நான். அதிக எதிர்ப்பார்ப்புகள் ஏக்கங்களாகி ஏமாற்றங்களைத் தருகின்றன. ஏமாற்றங்கள் சில நேரங்களில் அசாத்திய துணிச்சலைத் தருகின்றன. இதனால் திருமண பந்தங்கள் தோல்வியடைகின்றன.

இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். திருமணங்கள் தான் பிரச்சினையில் சிக்குகின்றனவே தவிர காதல் அதிவேகத்தில் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதுவும் ஒரு பெண் 5 பேரைக் காதலிப்பதும், ஒரு ஆண் 15 பேரை விரும்புவதும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. காதல் என சொல்லி முடியுமுன்னே அனைத்தும் முடிந்துவிடுகின்ற நிலையே இன்றைய "காதல்" எனும் வார்த்தையின் நிஜ அர்த்தமாக உள்ளது. எதையுமே பாதுகாக்க அவர்களுக்கு அவசியம் இல்லை. "எல்லாம்" பரிமாறப்படுகின்றது. இந்த வாழ்க்கைச் சூழலில் இருக்கும் பெண்களும் ஆண்களும் ஒருவனுக்கு ஒருத்தி எனும் திருமண விதியினை எப்படி மனதளவில் பின் பற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியும்...?

தான் பார்த்துப் பழகிய பல ஆண்களிலும் பெண்களிலும் தனக்கு ஜோடியாக வாய்த்தவரை விட மேலானவர்கள் இருப்பதை ஒப்பிடுவதும் இன்னொரு காரணம்.

காதலில் ஆடி அசந்து ஓய்ந்து போன பின் அப்பாவியாக ஒருவரை மணந்து வாழ்வை தொடர்வோரும் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறார்கள்.  ஐந்து வருட தீவிர காதலில் காதலனிடம் அனைத்தையும் இழந்த ஒரு பெண் ஒரே நாளில் தன் மனதை மாற்றிக்கொண்டு வேறொருவருக்கு கழுத்தை நீட்டிய ஒரு சில உண்மைச் சம்பவங்களும் எனக்குத் தெரியும். இங்கு மணமகனுக்கு பரிந்து பேசவும் முடியா நிலை. காரணம், சமூக வலைத்தளங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் ஆண்கள் பெண்களின் இயலாமையை பயன்படுத்தி தங்களின் பேராசைக்குத் தீனியாக அவர்களை உபயோகப் பொருளாக மாற்றிவிடுகிறார்கள். இதில் யார் பக்கம்தான் ஞாயமிருப்பதாக சொல்ல இடமிருக்கிறது?

இப்படி இருப்போர் அன்பை பிரதானப்படுத்தியா வாழ முடியும்...? தங்களுக்கு துணையாக ஒரு பாதுகாப்பிற்கே ஒருவரை எதிர் பார்க்கிறார்களே தவிர பவித்திரமான அன்பை பரிமாறிக்கொள்வோர் மிகக் குறைவே. அழகிய இளம் பெண்கள் வயதான ஆண்களை திருமணம் செய்யும் ரகசியமும் ஏறக்குறைய இதுவே.

செண்டிமென் என கணவனை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்ததெல்லாம் அந்தக் காலம். வீட்டில் இருக்கும் ஒரு சில மணி நேரங்களே அவர்கள் கணவன் மனைவி. அடுத்த நாள் காலை, வீட்டை விட்டு காலெடுத்து வைக்கும் அந்த  நிமிடம் அவர்கள் வேறு பலரின் நண்பர், வேறு சிலரின் உறவினர், வேறு ஒருவரின் உரிமை.


No comments:

Post a Comment