Monday 27 August 2012

இன்றைய பெண்கள். . .

அலையெனப் பொங்கும் மனதை கஷ்ட்டப்பட்டு அடக்கி கொள்வது பெண்களுக்கே உரிய சிறப்பு. அன்றைய பெண்களுக்கு இது   நிறைய  இருந்தது. குடும்ப நன்மைக்காகவும், ஒற்றுமைக்காகவும் பெண்கள் கோபச் சூழ்நிலைகளிலும் சாந்தமாக இருந்து சாதித்தனர். வீட்டின் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திட அவர்கள் தங்களின் உண்மையான எண்ணங்களை வெளிக்காட்டியதில்லை.  குடும்ப முன்னேற்றமே அவர்களின் இலக்கு.

 நமது அம்மா, சின்னம்மா, பெரியம்மா, சித்தி, அத்தை, அக்கா, பாட்டி போன்றவர்களோடு நமது தோழிகளும் அடக்கி வாசித்த காலம் அது. இருந்தும் அவர்கள் மேல் நமக்கு மதிப்பும் மரியாதையும் பெருகியதேயன்றி ஒருபோதும் குறைந்ததில்லை.

இப்போது நிலைமை மாறிவிட்டது போன்ற தோற்றம் எங்கு பார்க்கினும். பெண்கள்  எதையும் எல்லாவற்றையும் எதிர்கேள்வியுடனேயே பார்க்கிறார்கள். இது தன்னம்பிக்கையின் தாக்கமா அல்லது சுழலும் காலச்சக்கரத்தின் கட்டாய புரட்சியா?

இதனால் அவர்களுக்கு ஏற்படுவது நல்லதே என்றால் யாரும் எதையும் கேட்கப் போவதில்லை. ஆனால், தங்களின் அவசர குணத்தாலும் வெளிப்படையாக பேசி பிறரின் மதிப்பை இழக்கும் போது நமக்கு சற்று வருத்தம் தோன்றவே செய்கிறது. அவர்கள் யார் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் நமக்கு தோன்றுவது ஒருவகை ஏமாற்றமே. "அடடா, சொல்லும் அதே கருத்தை கொஞ்சம் அமைதியாக பேசி எல்லோருடைய நன்மதிப்புக்கு பாத்திரமாகி இருக்கலாமே.." என எண்ணத்தோன்றுகிறது.  இது அவர்களுக்குத் தெரியாதா என்ன...? இருந்தும் அவர்களின் இந்த முரட்டு சுபாவம் அவர்களின் வாழ்வை மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் மனதையும் பாதிக்கத்தொடங்கிவிடுகிறது. அங்கும் இங்கும் என பரவலாக நாம் காணுகின்ற சம்பவங்கள் இதைத்தானே உணர்த்துகின்றன. விட்டுக்கொடுத்துப் போவதென்பது பெண்களிடத்தில் இப்போது அரிதாய் காணும் ஒன்றாகிவிட்டது.

அன்மையில் தொலைக்காட்சியில் இடம்பெற்ற மேலவைத்தகவல் ஒன்று என்னை ஆச்சரியப்படவைத்தது. 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நம் நாட்டில் 11,597 பேர் தனித்து வாழும் இந்திய தாய்மார்களாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். இது வெறும் தனித்து வாழும் தாய்மார்களின் புள்ளி விவரம் தான். மணம் புரிந்த சில காலங்களிலே கணவனைப் பிரிந்து வாழும் மனைவிகள் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் நாம் கலந்து கொள்ளும் திருமண வைபவங்கள் பல. அவற்றில் நண்பர்கள், உறவினர்கள், ஒன்றாக வேளை செய்பவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்த அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் என பலரின் திருமணங்களுக்கு நமக்கு அழைப்பு வருகிறது. இன்று போல் என்றும் இனிதே வாழ்க என மணமக்களை வாழ்த்துவதோடு நம்மால் முடிந்த அன்பளிப்பையும் கொடுத்துவிட்டு பரிமாறப்படும் உணவினையும் ஒரு பிடி பிடித்துவிட்டு வருகிறோம். ஆனால், நடக்கும் அனைத்து திருமணங்களும் வெற்றிபெறுவதில்லை. சில சிக்கள்களில் மாட்டி சிதறுண்டு போகின்றன.

பிரிவுக்கு சொல்லப்படுகின்ற காரணங்கள் ஆயிரமாயிரமாக இருந்தாலும், பாதிக்கப்படுகின்றவர்கள் ஏனோ பொதுவாக பெண்களாகவே இருக்கின்றனர்.

No comments:

Post a Comment