Saturday 11 August 2012

ஊருக்குத்தான் உபதேசமா?

"ஊருக்குத்தான் உபதேசம், எனக்கில்லை" என்பது பொதுவாக சொல்லப்படுகின்ற ஒன்று.

அதாவது ஒரு விசயத்தை அறிவுரையாக சொல்பவர்கள் அதை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பதில்லை என பலரும் பரவலாக பேசிக்கொள்வதுதான்.

இவர்களே சரியில்லாத போது இவர்கள் சொல்வதை நாம் என்ன கேட்பது என்கின்றனர். இவர்களின் கூற்றில் உள்ள  நியாயம் நமக்கும் புரியாமல் இல்லை. ஆனால், சொல்லப்படுகின்ற கருத்தினைப் பற்றிதான் நாம் கவனிக்க வேண்டுமே தவிர சொல்கிறவர்களின் நிலையை அல்ல.

மிகச் சாதாரணமாக சில உதாரணங்களை நம் கண் முன்னே காணலாம். சாலை ஓரத்தில் கிடக்கும் குடிகாரன் மற்றவர்களைப் பார்த்து 'குடிக்காதே' என்பான். அவன் குடிகாரன் என்பதால் அவன் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாதா என்ன??

புகை பிடிக்கும் ஒரு தந்தை பிள்ளைகளைப் பார்த்து 'புகைபிடிக்காதீர்கள்" என்றால் அவர் சொல்லுவதில் உள்ள நண்மை தீமைகளைப்பற்றி ஆராய வேண்டுமேயன்றி எதிர் வாதம் செய்வது சரியாகப் படாது.

கண்ணதாசனுக்கு 3 மனைவிகள் 15 பிள்ளைகள்.

"அளவோடு பிள்ளைகள் பெற்று சுகமாக வாழ்வதெப்படி" என மேடையில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது ஒருவர் எழுந்து சொன்னாராம் ' திரு கண்ணதாசன் அவர்களே, இன்றைய நிகழ்வில் கலந்துகொள்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களுக்கு நிறைய பிள்ளைகள். எனவே நீங்கள் பேசக்கூடாது..." என்று.

அதற்கு, சிரித்துக்கொண்டே கண்ணதாசன், " பிள்ளைகளை அதிகம் பெற்று படும் அவஸ்தை எனக்குத்தானையா நிறைய தெரியும்" என்றதோடு, அந்த கேள்வி   கேட்டவரிடம் " உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?" என வினவ, "மூன்று பேர்" என்று பதில் வந்ததாம்.

பின்னர் கண்ணதாசன், மற்றொருவரை நோக்கி, "உங்களுக்கு ? "
" எனக்கு இரண்டு பேர்"

அடுத்து மேடையில் இருந்த பிரமுகரிடம் "உங்களுக்கு எத்தனை பிள்ளைகளோ?" என வினவ, அவர் "ஐந்து" என்றாராம்.

முகத்தில் புன்சிரிப்புடன் கண்ணதாசன் தொடர்ந்தாராம் "எனவே, 'அளவோடு பிள்ளைகளைப் பெற்று வளமோடு வாழ்வதன் முக்கி்யத்துவம் பற்றி பேச இங்கு அதிகம் தகுதி வாய்ந்தவன் நான் மட்டுமே" .....
( "கண்ணதாசன் கவிதைகளில் காதல் உணர்வே அதிகம்" என்னும் தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்  தகவல் இது.)

No comments:

Post a Comment