Monday 27 August 2012

இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா

பழைய இசையமைபாளர்களில் டி ஜி லிங்கப்பாவும் ஒருவர். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இசைத்துறையில் சேர்ந்து பல நல்ல பாடல்களை  நாம் ரசிக்கும்படி இசையமைத்துத் தந்த அவரை இன்று நாம் நினைத்துப்பார்க்கிறோம்.

"அமுதைப் பொழியும் நிலவே - நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ..."

'தங்கமலை ரகசியம்' என்னும் திரையில் ஒலியேறிய பாடல் இது. பி.சுசிலாவின் தேனிசைக் குரலில் படத்தில் இருமுறை ஒலியேறும். சந்தோசத்திலும் சோகத்திலும்  சுசிலா அசத்தி இருப்பார். பல வருடங்கள் ஆனாலும் இன்னும் நம் மலேசிய நாட்டில் அப்பாடலின் புகழ் மங்கவே இல்லை. வயதானோர் முதல் இளம் உள்ளங்கள் வரை இப்பாடல் அவர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  ராகங்கள் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது போனாலும் கவிஞர்கள் சொல்வது போல நம் மனதைக் கவர்ந்த மோகன ராகமோ இது?? கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

'தங்கமலை ரகசியம்' நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.
"இகலோகமே, இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே"
என்றொரு பாடலும் இதில் இருந்தது. மொழி தெரியாது காட்டில் வளரும் சிவாஜி, இந்தப் பாடலில் தொடங்கி முடியும்போது தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தவராக காட்டியிருப்பார்கள். இது ஒருவகையில் ரசிக்கும்படியாகவே இருந்தது. இரு குரலிசையான இதற்கு பி.லீலா மற்றும் டி எம் எஸ் இருவரும் குரல் கொடுத்திருந்தனர்.

அமுதைப் பொழியும் நிலவே' பாடலைப்போலவே, டி ஜி லிங்கப்பா இசையமைத்த இன்னொரு பாடலும் திரையில் இருமுறை இடம்பெறும்.
அது,
"சித்திரம் பேசுதடி - என்
சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி...."
என்ற பாடலாகும்.

மிக அருமையான இசையமைப்பில் உருவான பாடல் இது என்றே நான் சொல்லுவேன். ஆண் குரலில் மகிழ்ச்சியாக முதல் பாதியிலும் பெண் குரலில் சற்றே ஏக்கத்துடன் மறுபாதியிலும் இடம்பெற்று புகழைச்சேர்த்துக்கொண்ட பாடல் இது. திரையில் கதா நாயகிக்கு சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும் நாயகன் சிவாஜிக்கு டி எம் எஸ்ஸும் பாடி இருந்தனர். படம் : சபாஷ் மீனா

"ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா" என்றும்,

"சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
சோளக்கதிரு தாளம் போடுது.. தன்னாலே" என்றும,
 'எங்கள் குடும்பம் பெரிசு' படத்துக்கு இசையமைத்து டி ஜி லிங்கப்பா பேரும் புகழும் சேர்த்துக்கொண்டிருந்தார் அப்போது.

தொடர்ந்து  அவர் இசையமைப்பில் வந்த பாடல்களில் அவரின் மகத்துவம் பலருக்கும் தெரியத் தொடங்கியது.

இதோ சில பாடல்கள்..

"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"

"கோட்டையிலே ஒரு ஆலமரம் - அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா"

"செவ்வந்திப்பூ செண்டு போல கோழிக்குஞ்சு - தன்
சிறகுக்குள்ளே குடியிருக்கும் கோழிக்குஞ்சு"

"கல்யாண ஊர்வளம் பாரு
மாப்பிள்ளை பெண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னுது பாரு
காரணம் நீயே சொல்லு..."

"பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை - நல்ல
உள்ளம் இல்லை - என்றும்
பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணும் இல்லை - இரு
கண்ணும் இல்லை"

"தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதில்
அருள் விளங்கும் தெய்வமே"

" ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம் "

"அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி"

இவை மட்டுமா, 'வாழ்விலே ஒரு நாள்' படத்தில் இடம்பெற்ற,

"தென்றலே வாராயோ
இன்ப சுகம் தாராயோ
தேன் மலர்ச் சோலையிலே
சிங்கார வேளையிலே..."

என்னும் பாடல் டி எம் எஸ், யு ஆர் ஜீவரத்தினம் குரலில் இனிமையாய் ஒலித்ததை என்னைப்போன்ற பழைய பாடல் விரும்பிகள் பலர் இன்னும் நினைவில் வைத்திருப்பர். காலத்தால் அழிக்கமுடியாத அமுத கானங்களில் இதுவும் ஒன்று. அன்றைய மிகவும் மதிக்கப்பட்ட பெண்பாடகிகளுள் ஒருவரான யு ஆர் ஜீவரத்தினம் பாடிய இப்பாடலை ஒரு பொக்கிஷமாகவே பலரும் குறிப்பிடுகின்றனர்.

அவர் குரலுக்காக மட்டுமல்ல, அப்போதுதான் பின்னனி இசையில் பாடத்தொடங்கி குரல் கொடுத்துக்கொண்டிருந்த டி எம் எஸ்சின் இளைமைக்கால குரலை கேட்டு ரசிக்கவும் இப்பாடலை பல முறை கேட்கலாம்.

அற்புதமான இதுபோன்ற பல பாடல்களைத்தந்த இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா என்றென்றும் நம்மோடு நிலைத்து நிற்பார் அவரின் பாடல்கள் மூலம்.

No comments:

Post a Comment