Friday 24 August 2012

நெடுஞ்சாலை மரணங்கள். . .

"சாலையின் குறுக்கே திடீரென்று கடந்த மாடு ஒன்றை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அதை ஓட்டி வந்தவர் பரிதாபமாக அதே இடத்தில் உயிர் இழந்தார்"

மிகச்சாதாரணமாக நம்முடைய தினசரிகளில் நாம் படிக்கும் செய்திதான் இது. இறந்தவர் யாரோ ஒருவர் என்பதனால் நாம் இதுபோன்ற செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மோட்டார் சைக்கிள்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் கார்கள்கூட எதிர்படும் மிருகங்களையோ அல்லது இறந்து கிடக்கும் மிருகங்களையோ மோதி ஓட்டுனர்களோ  உடன் வருபவர்களோ உயிர் இழப்பதுண்டு.

60/70 கி,மீ என வேகக் கட்டுப்பாடு இருக்கும் மாநில சாலைகளில் இது போன்று விபத்துக்கள் நடக்கும்போது பாதிப்பு அவ்வளவாக இருப்பதில்லை. ஆனால், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 110கி மீ வேகத்தில் இப்படி எதிர்பாரா விபத்துக்களில் யாரை குறை சொல்வது என்று சிந்திக்கவேண்டி உள்ளது. அதுவும் சில இடங்களில் "கவனம், கால் நடைகள் கடக்கும் இடம் " என நெடுஞ்சாலையை பராமரிப்போரே அறிவுப்புப் பலகைகளை வைப்பது சற்று ஆச்சரியப் படவைக்கிறது.

ஒரு சில  நேரங்களில் சரியான சாலை விளக்குகள் இல்லாததனால் சாலையின் நடுவே கிடக்கும் சிலவற்றை வாகன ஓட்டுனர்கள் கவனிக்க இயலாமல் போய்விடுகிறது.

நெடுஞ்சாலையில் நேரும் வாகன விபத்துக்களுக்கு பல காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில்,
- வாகன சக்கரங்களின் ரப்பர் பகுதிகள்
- விபத்துக்குள்ளாகும் வாகனங்களின் உடைந்து விழும் பாகங்கள்
- கனரக வாகனங்களில் இருந்து அவர்களின் பயண்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் கட்டைகளோ ஏனைய இரும்புத்துண்டுகளோ
- இறந்த மிருகங்கள்
போன்றவை சாலையில் கிடப்பது சில முக்கிய காரணங்களாக சொல்லப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாதவைகளாக இவற்றை எண்ண முடியவில்லை.

நெடுஞ்சாலையின் இரு மடங்கிலும் உள்ள வேலியை கவனிக்காதது,
அப்படி அத்துமீறி சாலையில் நுழையும் மிருகங்களின் உரிமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதது,
சாலையின் பராமரிப்பில் பணிபுரிவோர் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலையின் எல்லைக்குள் விழுந்து கிடப்பவைகளை அல்லது இறந்து போன மிருகங்களை தகுந்த நேரத்தில் அப்புறப்படுத்தாமல் போவது,
என்பது போன்றவை நெடுஞ்சாலை அதிகாரிகளின் கவனக்குறைவே என எண்ணத்தோன்றுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் விபத்துக்களினால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை    ( பத்திரிக்கை  தகவல்களின் படி... ):
-   2008   - 728 பேர்
-   2009   - 759 பேர்
-   2010   - 720 பேர்
-   2011   -  805 பேர் 

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை பயண்படுத்துவோர் அதை கல்லறை நடுவே போகும் பயணமாக எண்ணாமல் இருக்க அங்கு நேரும் அநாவசிய மரணங்களை  சாலை பராமரிப்பின் அதிகாரத்தில் இருப்போர் தவிர்த்தல் அவசியம்.

No comments:

Post a Comment