Tuesday 14 August 2012

டத்தோ பஞ்ச் குணாளன் காலமானார்

பூப்பந்து உலகின் அன்றைய கதாநாயகன் டத்தோ பஞ்ச் குணாளன் தனது 68வது வயதில் இன்றுகாலை (புதன் கிழமை ) 6 மணியளவில் இயற்கை எய்தினார்.

அவரின் நிஜப் பெயர் குணாளன் பஞ்சாச்சரன். ஆனால் அவரின் ஆக்ரோஷமான 'ஸ்மெஷ்' காரணமாக 'என் எஸ் டி  ' நாளிதழ் அவருக்கு 'பஞ்ச்' என்னும் சிறப்புப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கியது. இந்த புதுப்பெயர்     டத்தோ   அவர்களுக்கு பிடித்துப்போகவே, அதிகாரப்பூர்வமாக அந்தப் பெயரை ஒரு சத்தியப்பிரமாணத்தின் வழி தனது பெயராக்கிக்கொண்டார். பின்னர் உலகம் முழுவதிலும் 'பஞ்ச் குணாளன்' என்றே அவர் அழைக்கப்பட்டார்.

நிகரற்ற விளையாட்டாளாராக திகழ்ந்த இவர் பின்னர் விளையாட்டிலிருந்து  ஓய்வு பெற்று அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்தின் துணைத்தலைவராக பதவி ஏற்றார். ஒரு உயர்தர அதிகாரியாக பூப்பந்து உலகிற்கு பல சேவைகளைச் செய்யும் சந்தர்ப்பம் இதன் பின்னர் தான் கிட்டியது.  அவ்விளையாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அதிக பங்காற்றினார்.

குறிப்பாக 15 புள்ளிகள் கொண்ட 3 செட் ஆட்டங்கள். அதில் 2 செட்களில் வெற்றி பெறுபவர் வெற்றியாளர் என்னும் முந்தைய ஆட்டமுறையிலிருந்து சற்று மாறுபட்டு இப்போதிருக்கும் 21 புள்ளிகள் அட்டமுறைக்கு தொலைக்காட்சி நேயர்களுக்காக மாற்றம் செய்தார்.

பொறுப்புக்கள் கூடிய அதே நேரத்தில்  பல மாற்றங்களையும்  பூப்பந்து  விளையாட்டுக்கு  அறிமுகப் படுத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் இனைவதற்கு பெரும் பங்காற்றியவர் இவர் ஆகும்.

அதோடு,  'ஐபிஎப்'   ( இன்டர் நேஷனல் பேட்மிண்டன் ஃபெடெரேஷன்) என்றிருந்ததை   'பிடபுள்யூஃஎப்'  ( பேட்மிண்டன் வெர்ல்ட் ஃபெடெரேஷன்) என மாற்றினார்.

" நான் ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்றிருந்த போது அவர்கள் 'ஐபிஃஎப்' என்றால் எதோ குத்துச்சண்டை சம்மேளனம் என தவறாக புரிந்துகொண்டிருந்தனர். எனவே இந்த பெயர் மாற்றம் மிக அவசியம்" என விளக்கினார்.

முதல் எழுத்தை 'பி'  அதாவது 'பேட்மிண்டன்' என அவர் மாற்றியமைத்து கொடுத்த பெயர் மாற்றதை பலர் ஆதரித்தாலும் சிலர் அதை எதிர்க்கவே செய்தனர். ஆக சின்னச் சின்னதாக எதிர்ப்பும் ஆங்காங்கே வரத்தான் செய்தது. எதிர்ப்பிலே வளர்ந்தாலும் யாரும் சாதரணமாக அசைக்க முடியாத ஒரு சக்தியாக பேட்மிண்டன் உலகில் வலம் வந்தார் டத்தோ பஞ்ச் குணாளன் அவர்கள். சுமார் 21 வருடங்கள் அந்த துணைத்தலைவர் பதவியில் அவர் இருந்தார்.

'இங் பூன் பி' யோடு அவர் சேர்ந்து ஆடிய இரட்டையர் ஆட்டங்கள், இந்தோனிசியாவின் 'ரூடி ஹர்தோனோ'வோடு அவர் மோதிய தனி நபர் ஆட்டங்கள் ஆகியவை என்னைப  போன்ற பூப்பந்து பிரியர்களின் நினைவில் என்றென்றும்  நிலைத்திருக்கும்.

இளம்வயதில் பெட்டாலிங் ஜெயா 'டன்லொப்' நிறுவனத்தில் நான் பணியில் இருந்த போது இவரை  சிலமுறை சந்தித்து உரையாடிய ஞாபகம் எனக்குண்டு. அதி நவீன பூப்பந்து காலணியை தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் அப்போது.

இதய நோய் காரணமாக 2008ல் அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சையினால் கடைசி சில வருடங்கள்   இவர் முன்பு போல் சுறுசுறுப்பாக இருக்க இயலவில்லை. சுமார்  நான்கு ஆண்டுகளுக்குப் பின் இன்று காலை ஆறு மணிக்கு டத்தோ பஞ்ச் குணாளன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து கல்லீரல் புற்று நோயால் சிரமப்பட்டுவந்த அவர் அதன் பாதிப்பு அதிகமாகி  ஏராளமான நண்பர்களையும் உறவினர்களையும் கண்ணீர்க் கடலில் தள்ளி மறைந்து விட்டார்.

பூப்பந்து உலகில் அவர் விளையாட்டின் சாகசங்களுக்காகவும,  அவர் செய்த மாற்றங்களுக்காகவும,  அவர் பெயர் என்றென்றும் சரித்திரத்தில் இடம்பெறும்.

நம் இனத்துக்கும் சமூகத்துக்கும் மட்டுமல்லாது, தேசிய அளவில் நம் நாட்டுக்கே பெருமை சேர்த்த அந்த மாமனிதர் நிஜத்தில் ஒரு சகாப்தமே. இன்று அந்த சகாப்தம் மறைந்தது பூப்பந்து உலகை செயலிழக்கச் செய்து விட்டது. பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

உள்ளூர் விளயாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்களோடு, அனைத்துலக ரீதியில் பஞ்ச் குணாளன் அவர்களுக்கு இரங்கட்செய்திகள் பலரிடம் இருந்து கம்ப்யூட்டர் சமூக  வலைத்தளங்களில்  வந்து கொண்டிருக்கின்றன.

80ம் ஆண்டுகளுக்குப்பின்னர் வந்த பூப்பந்து விளையாட்டாளர்கள் அனைவருக்கும் இவர் ஒரு முன்னோடியாகத்திகழ்ந்தார். பலர் இவரிடம் இருந்து புதுப் புது யுக்திகளை கற்று தங்களின் விளையாட்டினை மேம்படுத்திக்கொண்டனர். சம்மெளனத்தில் இவரோடு பணியாற்றியவர்கள் இவரின் ஆளுமைத்திறன்  கண்டு ஆச்சரியப்பட்டனர். பத்திரிக்கைகளில் நிதானமான ஆனால் நிச்சயமான தனது கருத்துக்களினால் இங்கு மட்டுமல்ல வெளி நாட்டிலும் உயர்வாக கருதப்பட்டார்.

"சிங்கள்ஸ்"  எனப்படும் தனி நபர் விளையாட்டில் அவரின் எதிரியாக கருதப்பட்ட ரூடி ஹர்த்தனோ மறைந்த தன் நண்பரின் குடும்பத்தினருக்கு மனம் உறுகி தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

கடைசியாக சில வருடங்களுக்கு முன்பு தனது அழைப்பை ஏற்று இந்தோனிசியாவுக்கு தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த டத்தோ குணாளன் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்ததை நினைவுப்படுத்தி பேசினார். அவர் பலருக்கும் பல உதவிகளை தன்னால் இயன்றவரைச் செய்தவர் என புகழாரம் சூட்டினார். அவரின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது என்று தனது இரங்கட்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

 ஸ்டார் நாளேட்டின் ஒன்லைன் பதிப்பில் இடம்பெற்ற சில படங்களை இங்கே பார்க்கலாம்.
















  நன்றி : தி ஸ்டார், ஒன்லைன் பதிப்பு  15.8.2012

1 comment:

  1. Yes, he was malaysian first, after than only all the rest. Feel so sad about his loss. May his soul rest in peace.

    ReplyDelete