Monday 13 August 2012

பெரியோர் சொல்வது...

 மன நிறைவோடு பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நமது முன்னேற்றத்துக்கான நல்விதைகளாகும். நீண்ட கால தங்களின் அனுபவங்களை மின்னல் வெட்டாக பளிச்சென்று நம்மிடம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளும் மன ஆற்றல் நமக்கு வேண்டும்.

" நான் சொல்றத நானே கேக்கமாட்டேன்.இவர் சொல்றதையா கேட்பேன்.." என சினிமா வசனம் பேசுவோர் அதுபோன்ற பெரியோரின் கூற்றை தங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகலாம்.

இரண்டாகப் பிரியும் பாதையின் சந்திப்பில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். போக நினைக்கும் ஊரின் பாதை எது என அவனுக்கு தெளிவாக தெரியவில்லை. அப்போது அங்கே பெரியவர் ஒருவர் ஒரு பாதையின் எதிர்முனையில் இருந்து வந்துகொண்டிருந்தார்.
"தம்பி, நான் வரும் பாதை பாதியிலே முடிகிறது. அடுத்த பாதைதான் ஊர் போகும் பாதை என நினைக்கிறேன்" என்றவாறு பிரியும் பாதையில் செல்லத்தொடங்கினார்.

இப்போது அவன், அவர் சொல்வதை நம்பாமல் பாதியில் முடியும் எல்லைவரை அந்தப் பாதையில் பயணம் செய்து 'ஆமாம்' பெரியவர் சொன்னது சரியே என ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு பிறகு பிரியும் அடுத்த பாதையில் செல்வானா, அல்லது  கண்டு  வந்து சொல்லும் பெரியவரின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து தனது பயணத்தை புதுப் பாதையில் தொடர்வானா?

சில சமயங்களில்  நம்மிடம் சொல்லப்படுகின்ற விசயங்கள் நமக்குத்தான், நமக்கு மட்டும்தான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதுமட்டுமல்ல, பெரியோர் அறிவுரை என்பது நமக்கு நேரம் காலம் பொருட்செலவு ஆகியவற்றை மீதப்படுத்தும் ஒரு வழியாகும்.  நாமே சொந்தமாக தடைகளை அப்புறப்படுத்தி சாலை இட்டு ஒவ்வொரு நகருக்கும் போக நேர்ந்தால் என்னாவது??? நடக்கின்ற காரியமா இது...? யாரோ போட்ட பாதையில் தானே நாம் பயணிக்கிறோம்.

 எல்லாவற்றையும் அனுபவத்தில் தெரிந்து கொள்ள எண்ணினால் வாழ்க்கை முடியும் போதுதான் பல விசயங்கள் நமக்குத் தெரியத் தொடங்கும். அப்படி காலம் கடந்து விட்ட நிலையில், பாயோடும் நோயோடும் போராடிக்கொண்டிருக்கும் போது எல்லாம் தெரிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்....?

மகான்களின், பேரரிஞர்களின், சித்தர்களின் அறிவுரைகளோடு நம் பெற்றோர் சொல்வதையும் கேட்டு  நடைமுறைப் படுத்துவோம், நல்வழி நடப்போம்....


No comments:

Post a Comment