Saturday 1 September 2012

திருமணமானவர்களுக்கு ( மட்டுமல்ல... )

- திருமண கவுன்சிலர் ஐயா அ. ராமதாஸ்

வழக்கமான, படிக்கவே கூசுகின்ற அடுத்தவருடனான கள்ளத்தொடர்பில் முறியும் திருமணங்களைத் தவிர்த்து, ஞாயமான, "தவிர்க்கப்பட்டிருக்கலாமோ?" எனும் எண்ணத்தில், சிதறும் திருமணங்களுக்கான காரணங்களை இங்கு பார்ப்போம். இவை சாதாரணமாக தோன்றினாலும் விவாகரத்துக்கு அடிப்படை காரணங்களாக அமைவதாகும்...

#     புதிதாய் வரும் மனைவிக்காகவோ, கணவருக்காகவோ பல ஆண்டுகள் பழகி வரும் நம் நல்ல நண்பர்களையும் ஒரு எல்லைக்குள் கொண்டுவந்துவிடுகிறோம். இது நமது நண்பர்களை அன்னியர் ஆக்கிவிட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.
இதுவரை வாழ்ந்தது நம் வாழ்வின் ஒரு பகுதிமட்டுமே. இனி வாழப்போவதுதான் அதன் முக்கியப்பகுதியே. எனவே, நண்பவர்களை நண்பர்களாகவே நிறுத்திவிடவேண்டும். இது நல்ல நண்பர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒன்று. வார்த்தைகளில் சொல்லாமல் நமது புத்திசாளித்தன சொல்களால் மென்மையாக காட்டிக்கொள்ளலாம். இதை ஏற்க மறுப்பவர்கள் நம் நல்ல நண்பர்களாக நிச்சயம் இருக்க முடியாது.

#     நமது நண்பர்களால் நல்லதும் நடக்கும், சில நேரங்களில் எதிர்பாராவிதமாக சிரமங்களும் தோன்றும். சிரமங்கள் எனும்போது பொதுவாகவே, கடனாக வாங்கும் பணம் காரணமாகவும், இரவல் வாங்கும் பொருட்களினாலும் பிரச்சினைகள் தோன்றும். நண்பர்கள் என்பதால் உதவுவது நம் கடமைதான் என்றாலும், கணவனும் மனைவியும் கலந்து பேசிய பின்னரே அந்த உதவியைச் செய்யவேண்டும். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் தன்னிச்சையாக உதவி எனும் பெயரில் செய்யும் எதுவும் குடும்ப உறவுக்கு நல்லதொன்றாக அமையாது.

#     புதிதாக மணம் புரிந்துகொள்ளும் தம்பதிகளுக்கு ஒன்றைச் சொல்வேன்.
குடும்பதிற்கான செலவுகளை எவ்வளவு செய்தாலும் தவறில்லை. செய்யும் எல்லா செலவுகளையும் ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து மாத இறுதியில் இருவருமாக சேர்ந்து சரிபார்ப்பது நல்லது. ஆச்சரியப் படும் விதமாக அடுத்தடுத்த மாத செலவுகள் குறைந்து விடும். கையில் பணம் மீதப்படும்போது குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் தானே  கூடிவிடும்.

#     திருமணத்தின் போது இருவரும் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. படித்தவர்களாகவும்  இருக்கலாம்,  படிக்காதவர்களாகவும் இருக்கலாம். வாழ்வில் இணைவதற்கு படிப்பு ஒரு தடைக்கல்  அல்ல. ஆனால் திருமணத்திற்குப் பின் இருவரும்  படிக்கத் தொடங்குவது  அவசியம். பள்ளிப் படிப்பை இங்கு நான் சொல்லவில்லை. ஏதாவதொரு நல்ல புத்தகத்தை தினமும் கொஞ்சமாவது படிப்பது பின் காலத்தில்  குடும்ப முன்னேற்றத்துக்கு  பெரும் பங்காற்றும். தினமும்  படிப்பவர்கள் சிந்தனையில் பக்குவப் படுகிறார்கள். பக்குவப்படும் சிந்தனை நம்மை வளமான பல வழிகளில் செயல்படச் செய்கிறது.

#     எப்படித்தான் காலம் வேகமாக உருண்டோடினாலும் வீட்டுச் சமையல் இன்னும் பெண்கள் கைகளிலேயே இருக்கிறது. எனவே திருமணமாகும் பெண்களுக்கு சமையல் தெரிந்திருப்பது கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவை வலு சேர்க்கும் ஒன்றாகும். வீட்டில் இருக்கும் மற்றவர் சமைப்பதும், சமையலுக்கென உதவியாளரை வைத்துக்கொள்வதும் தவறில்லை. ஆனால், எப்போது ஒரு பெண் தன் கணவன் திருப்தி படும்படியாக சமைத்துப் பறிமாறுகிறாளோ அப்போதுதான் அவள் ஒரு மனைவி எனும் அந்தஸ்துக்கு தகுதி பெறுகிறாள். இது எழுதப்படாத உண்மை.

#     என்னதான் வீட்டில் பூஜை அறையில் தியானம் செய்தாலும், குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு வாழ்க்கைத் துணையுடன் சென்று வருவது இறையருளைப் பெரும் சீரிய அம்சமாகும்.  பலருக்கு சினிமா, பீச், பார்ட்டி, கடைத்தெரு என போவதற்கு நிறைய நேரம் இருக்கும். ஆனால், கோயிலுக்குப் போக கூச்சப்படுவர். இது தவறு. தம்பதி சமையதராக கோயிலுக்குச் செல்வது பல பாக்கியங்களை அடையும் ஒரு குறுக்கு வழியாகும்.

#     இதுமட்டுமல்ல, இதுவரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தனியே சென்று வந்த ஆண்களும், திருமணமான பின் தங்கள் மனவிமார்களுடன் சென்று கலந்துகொள்வது இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர அன்பினை பன்மடங்கு வளரச் செய்யும்.

( பல இன மக்கள் வாழும் நம் நாட்டில் நம் சமூகத்தினரிடையே ஏற்படும் அதிக அளவிலான திருமண முறிவுகளை தவிர்க்கும் வழிகள் பற்றி வினவினேன். 'பொஸிட்டிவ்வாக' அவர் கூறிய குறைகள் இவை. )





No comments:

Post a Comment