Sunday 23 September 2012

சம்பாதிப்பதும் சேமிப்பதும்...

கை நிறைய சம்பாதித்தாலும் அளவோடு செலவுகள் செய்து நிம்மதியாக வாழ்வது வாழ்வில் வெற்றிபெற்றோரின் ரகசியமாக இருந்து வருகிறது. இதை ரகசியம் என்று சொல்வதை விட அவர்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறை என்றுதான் சொல்லவேண்டும். சாதாரணமானவர்களும் சிறப்பு பெருவது இந்த சின்ன வித்தியாசத்தால் தான்.

ஆயிரம் வெள்ளியை   உடனே  செலவு செய்ய அனைவருக்கும் தெரியும். ஆனால், அதில் ஒரு நூறு வெள்ளியை சேமிக்கச்சொன்னால் பல மணி நேரம் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். சேமிப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்று. இதற்கு தனித்திறன் வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டு மக்களுக்காக அரசாங்கம் போடும் பட்ஜெட் போலவே, ஒவ்வொரு வீட்டிலேயும் குடும்ப பட்ஜெட் போடப்பட வேண்டும். இது மாதாந்திர பட்ஜெட்டாக இருந்தால் பண விரயத்தைக் கண்டுபிடிப்பது இன்னும் சுலபமாகும் குடும்பத் தலைவருக்கு.

ஒரு சராசரி குடும்பத்தின் மாதச் செலவுகள் எப்படி இருக்கும்?

1    மளிகை
2    மீன், இறைச்சி,கோழி மற்றும்  காய்கறி
3    வீட்டு தொலைபேசி   மற்றும்  கைபேசி
4    கரண்ட் பில்
5    தண்ணீர் பில்
6    வாகணங்களுக்கான பெட்ரோல்
7    ஆஸ்ட்ரோ
8    இன்டெர்னெட்
9    மாதந்திர காப்புறுதி பிரிமியம்
10   கார்    மற்றும்  பைக் போன்றவற்றுக்கான மாதாந்திர கட்டணம்
11   வீட்டுக்கான   மாதாந்திர  கட்டணம்

என இன்னும் எத்தனை எத்தனையோ...?

இதுபோன்ற செலவுகளுக்கு ஈடுகொடுத்து பணம் சம்பாதிக்கவேண்டிய நிர்பந்தம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்டு. சில குடும்பங்களில் மனைவியும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுகிறார். இதனால் கணவரின் சுமை கொஞ்சம் குறைகிறது.

இப்படி கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்பதை மிகச் சாதாரணமாக செலவுகள் செய்து இழந்துவிடலாமா? எவ்வளவு சிரமங்களுக்கிடையே உழைத்து சம்பளமாக நாம் பெற்ற பணம் இது. சிரத்தையுடன் அல்லவா செலவு செய்ய வேண்டும். முப்பது நாட்கள் காத்திருந்து பெற்று வந்த பணத்தை மூன்றே நாட்களில் அனாவசியச் செலவுகளில் செலவிடுவது சிறந்த ஒன்றா என்ன?

சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க நிச்சயம் ஒரு புத்திசாளியால் மட்டுமே முடியுமென்று அன்று பெரியோர் சொல்லி வைத்தனர்.

பலர் பணம் சம்பாதிப்பதெப்படி என தெரிந்து வைத்துள்ளனர்.  கடுமையான உழைப்பாளிகளான இவர்கள் சோம்பலின்றி பணம் சம்பாதிக்கிறார்கள். ஒருவேலைக்கு இரு வேலைகளாக செய்து அங்கும் இங்கும் ஓடிச் சென்று பொருள் ஈட்டுகிறார்கள். ஆனால், அந்தப் பணத்தின் மதிப்பினை சரிவர உணராமல் இருக்கிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பிள்ளைகளும் பணத்தின் அருமை பெருமைகளையும், முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். அவற்றோடு பணத்தை சேமிக்கும் விதங்களையும் பெரியோர் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவது எதிர்காலத்தில் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக்கொள்ளும் ரகசியத்தை    சொல்லித்தருவது  போலாகும்.

சில மாதங்களுக்கு முன் ஒருநாள், காப்புறுதியின் அவசியம் பற்றி குழுமியிருந்த சில இளைஞர்களிடையே பேசிக்கொன்டிருந்தேன். இடையே, பணத்தை செலவழிக்கும் வழிகள் பற்றி வினவினேன். எல்லோரும் கைகளை உயர்த்தி பல காரணங்களைத் தந்தனர். ஆனால், பணத்தை வளரச்செய்யும் வழிகள் பற்றி கேட்டபோது 'பிஸினஸ், ஷேர் மார்க்கெட்' என சிலவற்றை மட்டுமே சொல்ல முடிந்தது.  அதிலும் இவை பாதுகாப்பான முதலீடுகள் செய்யும் விதங்கள் அல்ல.

இளைஞர்கள் என்பதால் இன்னும் காலம் கடந்து விடவில்லைதான். ஆனால், உழைத்துக் கொண்டுவரும் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யாது அப்பணத்தினை சரியான முறையில் வளர்க்கும் ஆற்றலையும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

பல குடும்பங்களில் படிப்பைப் பற்றி தினமும் பேசுகிறார்கள். பணத்தினைப் பற்றிய நல்ல விசயங்களையும் அவ்வப்போது குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் சொல்லி வர வேண்டும்.

பணத்தின் மதிப்பு எப்படி உயருகிறது என சொல்லித்தரும்போது, அதை மதிக்கும் குணமும் பிள்ளைகளுக்குள் வளர்வதை பெற்றோர் உறுதி செய்யவேண்டும்.

No comments:

Post a Comment