Wednesday 11 April 2012

'பாவ்'வும் பழமும். . .

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒன்று.

சிரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படச்செய்யும் ஒன்றையே நாம் நகைச்சுவை ஊணர்வென்கிறோம்.

உண்மையில் இது ஒரு வரம்...காரணம் எல்லோரும் இப்படிப் பிறப்பதில்லை.
 சிலர் "அப்படியென்றால் என்ன?" என்றுகூட கேட்பார்கள்.


(சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, "அறிவியல் உலக விந்தைகள்" எனும் ஒருகாட்சியகத்தில் எடுத்த படம் இது. மற்றவர் விசயங்களில் மூக்கை நுழைத்தால் தான் தவறு. அவர்கள் சிரித்து மகிழ தலையை நுழைத்து காமிடி பண்ணுவது தவறில்லை எனப் பட்டது.

 இங்கே நீங்கள் பார்ப்பது கண்ணாடியினால் ஆன ஒரு மேஜை.அதில் சில பழங்கள். பழங்களுக்கு நடுவே உங்கள் தலையை நுழைக்க சின்னதாய் ஒரு இடம் . ஆனால், இது பார்வையாளர்களுக்குத் தெரியாது. ரகசியப் பாதைவழி நீங்கள் சென்று இப்படி போஸ் கொடுக்கும் போதுதான் அவர்களுக்கு தெரியும். பலரும் இப்படி படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.)

வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொன்றையும் ரசிக்கப் பழகும்போது மன அழுத்தம் குறைகிறது. ஆரோக்கியம் கூடுகிறது.

இந்த ரசிப்புத்தன்மைக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மற்றவர்கள் ஜோக் சொல்ல நாம் சிரிக்கலாம்.அது இயல்பானது. ஆனால், எந்த ஒன்றையும் நாமாகவே தெரிந்துக்கொண்டு அதில் உள்ள நண்மைகளை புன்சிரிப்போடு அனுகுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.

அப்படிப்பட்டவர்களை நாம் அடிக்கடி பார்க்க விரும்புகிறோம், அவர்கள் சொல்வதை சிறிதாயினும் கேட்டுவைக்கிறோம், அவர்களின் செய்கைகளை கண்டு நம் குறைகளையும் கவலைகளையும் தற்காலிகமாவது மறக்கிறோம்.

வாய் விட்டு சிரிக்கும் பயிற்சி மேலை நாடுகளில் புகழ்பெற்று வருகிறது. தங்களது நோய் விட்டுப் போக பலர் இதில் பங்குபெறுகின்றனர். நோய் தீர மருந்தொன்று வேண்டும் என்பது நிஜம். அந்த மருந்தும் சரிவர நம்முடலில் வேலை செய்ய நகைச்சுவை உணர்வு பெரிதும் உதவுகிறது.

மற்றவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கவேண்டாம். திரைபடங்களில் வரும் கேலியும் கிண்டலும் நகைச்சுவை உணர்வன்று. அவை ஒரு சாராரை மகிழ்ச்சிப் படுத்தி வேறொரு பகுதியினரை புன்படுத்துகின்றன பல நேரங்களில். 

மற்றவர்கள் செயலில் இருக்கும்  தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றை ரசிக்கப் பழகுங்கள்.... பின் அவர்களை பாராட்டத் தொடங்கிவிடுவீர்கள்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது தானாக இங்கே அடிபட்டு போய்விடும்.

எந்தச்சூழலிலும் நகைச்சுவையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சிகரமாக மாற்றியமைத்துக்கொள்ள முடியும். கலகலப்பான நிமிடங்களை நினைத்தமாத்திரத்தில் உருவாக்கிவிட முடியும். இப்படிப்பாட்டோர் இருக்கும் இடம் இன்பத்தால் ஆன நல்லதொரு அனுபவத்தை  அனைவரும்  பெரும் இடமாக இருக்கும்.  இந்த இடமே
சந்தோசமும் நிம்மதியும் கைகோர்க்கும் இடமாகும். இங்கே கவலையும் பிரச்சினையும் எட்டிப் பார்க்கக்கூட முடியாது.

பல சந்தர்ப்பங்களில் நான் எனது குறைகளை நினைத்தே சிரித்துக் கொள்வது உண்டு. இறைவன் எனக்களித்த வரங்களில் எனது தோல்விகளையும் துயரங்களையும் நான் மிகை படுத்திப் பார்க்காமல்  எனது நகைச்சுவை உணர்வை மேம்படுத்திக்கொள்ள உதவியதேயாகும்.

சிலர் இயல்பாக பேசும் போதே நம்மனம் இலேசாகிவிடும். கடும் சொற்கள் அவர்களிடம் இருந்து வராது. அவ்வப்போது ஒரு புன்னகை, சின்னதாக ஒரு காமிடி டயலொக், சமய சந்தர்ப்பதிற்கு ஏற்றாற்போல் சின்ன சின்ன சிரிப்பூட்டும் ஜோக்குகள்.... இப்படி ஒன்றோடிணைந்து ரயில் பெட்டிகளைப்போல் இனிமையும் மகிழ்ச்சியும் தொடர்ந்து கொண்டிருக்கும்.

இது ஆரோக்கியமான ஒன்று.

நமது நகைச்சுவை உணர்வை கிண்டல் பண்ணுவோரும் நம்மிடையே உண்டு. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என நாம் போய்க்கொண்டே இருக்கவேண்டும்.

நமது மனதை அன்போடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள  நகைச்சுவை உணர்வை மேம்படுத்திக் கொள்ளுவோம் வாருங்கள்.

No comments:

Post a Comment