Tuesday 24 April 2012

மகிழ்ச்சியாக வாழ . . . 2


சோகம் தவிர்ப்போம். 

எனக்கு சோகம் பாடல்களில் இருந்தால் மட்டுமே பிடிக்கும். நிஜத்தில் அல்ல. என்னைச் சுற்றி இருப்போரும் நானும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றே என் செய்கைகள் இருக்கும். 'டோன்ட் வொரி பி ஹெப்பி' என்பது எனக்கும் மந்திர வார்த்தைகள் தான்.

எனது 13வயதில் நான் நடிகர்  சிவாஜியின் ' நிச்சைய தாம்பூலம்' பார்த்தேன். அதில் ஒரு பாட்டு,

" படைத்தானே படைத்தானே....
மனிதனை ஆண்டவன் படைத்தானே...
கொடுத்தானே கொடுத்தானே
மனதினில் கவலையை கொடுத்தானே....",

 சிவாஜி தனது ஒரு கையை நீட்டி நீட்டிப் பாடுவார்.

'புதியப் பறவையில்' அவர் தனது இரு கைகளையும் உயரே காண்பித்துப் பாடுவார்.

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”

சட்டி சுட்டதடா கை விட்டதடா' என்பார்..
'போனால் போகட்டும் போடா' என்பார்...

 நிஜமாகவே நடிக்கத்தெரிந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. குடும்பத்தில் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் திரையில் அப்படியே கொண்டுவந்தார்.

இளம் வயதில் ஒரு நாள். ஏதோ ஒரளவு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த நேரம்.

அப்பா,  திட்டிக்கொண்டிருந்தார்..." உன்னுடைய கூட்டாளிங்க ராமு, சங்கர், ரவி எல்லாருக்கும் வேலை கிடைச்சிடுச்சாம். வந்து சொல்லிட்டுப் போனாங்க. நீ இன்னும் என்ன செஞ்சிகிட்டு இருக்க..? வேலைக்கு ஏதும் முயற்ச்சி பன்னுறியா இல்ல..."

வீட்டில் ஒரே டென்ஷன்.

'தங்கப் பதக்கம்' வெளிவந்த நேரம்அது. அரங்கினுள் சென்று இருக்கையில் அமர்ந்து படத்தைப் பார்த்தால், அங்கேயும் ஒரு பாடல்.. 

'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி..." 

இங்கேயும் சோகமா...? வாழ்க்கை வெறுத்துடுச்சி....
அதற்கப்புறம் சிவாஜி நடித்த படங்களை எனது 30 வயதுக்கு மேல் பக்குவம் வந்த பிறகுதான் பார்க்கத்தொடங்கினேன். 

இதற்கு நேர்மாறானவர் எம்ஜிஆர் அவர்கள். அவரின் எந்தப் படத்தைப் பார்த்தாலும் ஹெப்பியாக, ஜாலியாக, கலகலப்பாக போய்க்கொண்டே இருக்கலாம் 

"வீட்டுலே நடக்கிறத எல்லாம் நினைவு படுத்த மாட்டார். அவருக்கு அதா வேல...? படத்துல வருவார், இந்தியா எது, தலைவர்கள் யார் யார், நல்ல பிள்ளைங்க எப்படி இருக்கனும்னு பாட்டு, கதா நாயகியோட சில பாட்டுங்க, வில்லனை அடிச்சி நொறுக்கிட்டு போய்கிட்டே இருப்பார். அதிலும் முக்கியமா எப்போதும் ஒருமாதிரி புன்னகையோட இருப்பார் படம் முழுவதும்.....
அப்பாவ பத்தி ஆங்காங்கே சொல்லுவார். ஆனா அம்மாவைப்பத்தி எல்லா இடங்களிலும் சொல்லுவார். தாய்ப்பாசத்துக்கு உதாரணம் அவர்." 

"அட...இது நல்லா இருக்கேன்னு மனதுக்கு பட்டது. எம்ஜிஆர் ரசிகனாயிட்டேன்.
எதிலும் ஒரு ஆப்ஷன் நம்ம கையிலேதான் இருக்குன்னு சொல்ல வரேன் இங்க, அவ்வளவுதான்."

சோகம் நம்மை துறத்தும்போது மறுமலர்ச்சித் திட்டங்களை நாமே வகுத்துக்கொள்ள வேண்டும். நமது எதிர்கால வளர்ச்சிக்கு அத்திட்டங்கள் வித்திட வேண்டும்.

முடியுமா இது.?

முடியும்...

சோகம் பொல்லாததுதான். ஆனால் அதனிலும் பொல்லாதது நமது மனக்கடல். துன்பத்தையும் திருப்பித்தாக்கும் குணம் நம் மனதுக்கு உண்டு. பலர் இதை உணர்வதில்லை.

 நமது ஆழ்மனதுக்கு சோகம் பிடிப்பதில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் எதையாவது நினைத்து நினைத்து நமது மனதை சோர்வாக்கி விடுகிறோம். இதில் மிக முக்கியம், எந்த நேரத்திலும் நமது அறிவையும் ஆழ்மனதையும் மோதவிடவேகூடாது. இது ஆபத்தானது.

அறிவும் மனதும் எல்லா விசயங்களிலும் ஒத்துப் போகவேண்டும். 

எப்படி  படகில் கடலில் செல்லும் போது அதன் ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து இங்கும் அங்கும் நடக்கிறோமோ அது போல அறிவுக்கும் மனதுக்கும் இடையே ஒருவித நட்பு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம்.

இல்லையேல், கடலும் புயலும் மோதிக்கொள்ளும் போது பாதிக்கப்படும் மாலுமி கதையாகிவிடும் நம் நிலை. 

இயற்கையோடு ஒன்றிப்போகும்போது,  எதிர்மறையாக ஏதும் செய்யாத போது, துன்பம் நம்மைத் துரத்துவதில்லை. வந்த வேகத்திலேயே அது சென்றுவிடும். 

தீய எண்ணங்களை மனதில் இருந்து உடைத்து தரைமட்டமாக்கி நல்லெண்ணங்களுக்கு வழி விடவேண்டும். கெட்டப் பழக்கம் என்பது வழிப்போக்கன் வடிவில் வந்து, விருந்தாளியா மாறி, பிறகு அதுவே நம் மனதில் எஜமானனாகி விடுமாம். பெரியோர் பல நூல்களில் சொல்லியிருப்பது இது 

தீயவற்றைவிட நல்லவைகளைச் செய்வது சிறமமானது என செயல்படத் தொடங்கு முன்பே எண்ணலாகாது. 

கோடுகளை கோணல்களாக பார்த்தால் அழகிய கோலங்களைப் பார்க்க முடியுமா?
கோணல்களான கோடுகளை முறன்பாடாக பார்க்கக்கூடாது. அவைகளின் துணை கொண்டே கண்கவர் கோலங்கள் உறுவெடுக்கின்றன. 

அவற்றைப்போலவே, சிறமங்களை சீராக்கி மன மகிழ்வுக்கு தேவையான ஆக்ககரமான ஒன்றாக எண்ணத் தொடங்கினால் வாழ்வில் எல்லா வளமும் ஒவ்வொன்றாக வரக் காணலாம்.

மகிழ்ச்சியாக வாழ மனதை நம் வசம் வைத்துக்கொள்வது மிக முக்கியம்.

No comments:

Post a Comment