Saturday 22 June 2013

புத்ராஜெயா மலர்க் கண்காட்சி - 2013 தொடங்கிவிட்டது...

கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் மிகச் சிறந்த வகை ஜோடனைகளோடு புத்ராஜெயா திருவிழாக் கோலம் காண்கிறது.

குறிப்பிட்ட இடங்களென இல்லாமல், எங்கு பார்க்கினும் மலர்ச்செடிகளும், அவற்றில் பூத்துக்குலுங்கும் மலர்களும், வண்ண வண்ண எழில் விளக்குகளும், வண்ணக்கலவையிலான தோற்றத்தில் இரவில் பாலங்களும், வித்தியாசமான அலங்காரங்களுடன் மிதந்து வந்து மனதைக் கவரும் படகுகளும்  இன்னும் சில நாட்களுக்கு மாநகரின் இப்பகுதியை சிங்காரச் சின்னமாக ஆக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இம்மாத முப்பதாம் தேதிவரையில் தான் இவ்வளவும் என்பதால், மக்கள் குழுமி மகிழும் இடமாக இன்னும் சில தினங்களுக்கு புத்ராஜெயா மக்கள்வெள்ளமாக தோற்றம் தரும்.

பத்து லட்சம் பேர் கூடுவார்கள் என கணிக்கப்பட்டிருக்கும் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்து விட்டது. இனி, இதன் அழகை நாம் கண்டு களிக்கவேண்டியதுதான்.  

 இந்நேரத்தில் ஒரு சின்ன தகவல்.

அதிக பொருட்செலவில் இம்மலர்க்கண்காட்சி தயாராகியிருந்தாலும், நாம் நம் குடும்பத்தினருடன் அதன் அழகை ரசிக்கத் தவறுவோமானால், அது ஒரு நமக்கு ஒரு இழப்பே. கடந்த காலங்களில், நம் சமூகத்தவர் இந்த மலர்க்கண்காட்சியில் அதிக ஆர்வம் காட்டக் கானோம்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.  வேலை பலு, வசதியின்மை, போக்கு வரத்துச் சிறமம் என பல பிரச்சினைகள் இருக்கலாம். ஆயினும், மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். குடும்பத்தினருடன் உலா போகும் ஒரு இடமாக இக்கண்காட்சிக்கு வருவதை தேர்ந்தெடுப்பது குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

வருடமுழுவதும் வேலையில் கவனம் செலுத்தி பொருளீட்டும் குடும்பத்தலைவர்கள், இந்த மலர்க்கண்காட்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்கள் அன்புக்குப் பாத்திரமான குடும்பாத்தார், நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு ஒரு ஜோலி பயணம் போய் வரலாம்.

இறைவனின் படைப்பில் மலர்கள் ஒரு முக்கிய இடம் பிடிக்கின்றன. பூமியை வாசனைத் தளமாக தொடர்ந்து பராமரித்து வருவது மலர்களே. மலர்களின்றி மனமில்லை இம்மண்ணில். சில கவிஞர்களின் கைவண்ணத்தில் வந்திருக்கும் சில பாடல்களை நினைத்துப்பார்த்தால் அது தெரியும்.


ஒரு முறை வந்தவர் மீண்டும் மீண்டும் வந்து போகும் ஒரு கவர்ச்சி இந்த மலர்விழாவிற்கு உண்டு. நீங்களும் வந்து பாருங்களேன்....இதன் உண்மை உங்களுக்கும் புரியும்.

தூய சிந்தனைகளின் இருப்பிடமான மனதை இதமாக வைத்துக் கொள்ளும் சக்தி மலருக்கு உண்டு.  மனம் மென்மையுடன் சிறக்க மலர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

ஒவ்வொரு மலருக்கும் தனித்தனியே ஒரு குணம் உண்டு. மதங்களிலும் மலர்களின் தெய்வத்தன்மையை சித்தர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். 'ஓரிதழ் தாமரை' என அவர்கள் போற்றிய பூ இங்கில்லாவிடினும், அவ்வகை பூக்களின் மற்ற சிலவற்றை இங்கு காணலாம்.

 அதுமட்டுமல்லாமல், மருத்துவ உலகில் மலர்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆயிமாயிரம் வகை மலர்களில் நாம் முன்னர் பார்க்காத பல வகை மலர்களை பார்க்கும் சந்தர்ப்பம் இது போன்ற கண்காட்சிகளில்தான் கிடைக்கும். அரசாங்கம்  பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு  அவர்களின் சிறப்பு மலர்களை வரவழைத்து நம் வசதிக்கு ஏற்பாடு செய்திருக்கும் இவ்விழாக்களில் நாம் கலந்து கொள்வது நல்ல அனுபவமாகும்.


No comments:

Post a Comment