Monday 10 June 2013

விரைவு நடை

நோயில் இருந்து மீளவும், நோயுற்றவர்களுக்கான பயிற்சியாகவும் அமைவது பிரிஸ்க் வாக்கிங் எனும் விரைவு நடை. சாவகாசமாகவும், கதை பேசிக்கொண்டும் நடப்பதல்ல இந்த விரைவு நடை. விரைவு நடை ( பிரிஸ்க் வாக்கிங் ) எனும் சொற்களை கோடிட அதன் அர்த்தம் வேகமாக நடத்தல் என தெரிய வரும். இப்படி வேகமாக தினமும் நடப்பதே பல நோய்கள் நம்மை பீடிக்காமல் இருப்பதற்கான சிறந்த செயல் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

 ஆயினும் பலருக்கு இதன் இலக்கு புரியவில்லை. ஏதோ நேரத்தை போக்கினால் சரி என்பதைப்போல ஊர்க்கதைகளை பேசியபடி நண்பர்களுடன் நடக்கிறார்கள். உடல் வியர்ப்பது கூட இவர்களுக்கு பிடிப்பதில்லை. இது தவறு. நடப்பதை பயிற்சி என ஏற்றுக்கொண்டால் அதன் தத்துவம் தெரிந்திருக்க வேண்டும். நடப்பதில் ஒரு வேகம் இருக்கவேண்டும், விறு விறு என வேகமாக நடந்து உடல் வியர்க்கும் படி செய்யவேண்டும். அப்போதுதான் அது உடற்பயிற்சியாகிறது. உடலுக்கும் உள்ளத்துக்கும் பலனளிக்கிறது.

 நூற்றுக்கணக்கிலும், ஆயிரங்களிலும் உடல் பயிற்சி சாதனங்களின் செலவை விரைவு நடையாக தினமும் நாம் மேற்கொள்ளும் வேகமான நடை பழக்கம் மிச்சப்படுத்துகிறது.  அதுமட்டுமில்லாது, மிஷின்களில் பயிற்சி செய்வதை விட எளிதானதும்கூட.

விரைவான நடை பயிற்சி எல்லோருக்கும் ஏற்ற ஒன்று. எல்லா வயதினரும் இந்தப் பயிற்சியால் பயனடையலாம்.

பொதுவில், முப்பத்தைந்து வயதுக்கு மேல் நோயின் அறிகுறி உள்ளவர்களுக்கும், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், பந்து விளையாடுதல், மற்றும் திடல் தட போட்டிகளில் கலந்துகொள்ள முடியாதோருக்கும் இந்த பிரிஸ்க் வாக்கிங் 'பெஸ்ட் மெடிஸின்' ஆகிறது.

சோம்பலானோர், சுறு சுறுப்பில்லாதோர் நொறுக்குத் தீனி தின்பண்டங்களைக் கொறிக்கும் இயல்புடையவர்களாகிறார்கள். வீணான நச்சுத்தன்மையை உடலில் சேர்த்துக்கொள்கிறார்கள், தங்களையும் அறியாமல். இதனால் அவர்களின் உடல் அதிக கேலோரியினால் பருமனாகவும், இயற்கை அழகையும், வனப்பையும் இழந்து விடுகிறது. இவர்களுக்கு,  விரைவு நடை மருந்தில்லா மருத்துவமாகிறது.

நாளடைவில் உடல் சுறு சுறுப்படைவதால் நொறுக்குத்தீனியின் ஆசை குறைகிறது. உடலுக்கு தேவையான, ஆரோக்கியமான உணவை மட்டுமே உட்கொள்ள சிந்தனை செல்கிறது. மன ரீதியில் இந்த சிந்தனை மாற்றத்தை தருவது விரைவு நடையே. இது நடப்போர் பலரிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரிஸ்க் வாக்கிங் எனப்படும் விரைவு நடையின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம் :
1  )   இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

2  )   இரத்த ஓட்டம் அதிகரித்து மூளையின் ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

3  )   சர்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

4  )   இருதயம் பலப்படுகிறது.

5  )   நுரையீரல் சுறு சுறுப்படைகிறது.

6  )   எச். டி. எல் என்னும் நல்ல கொழுப்பின் அளவு உயர எல். டி. எல் எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது.

7  )   உடலில் தேங்கி இருக்கும் நச்சுந்தன்மை வெளியேறுகிறது.

8  )   உடலில் சேரும்  தேவையற்ற வாயுக்களின் சேர்க்கை நீக்கப்படுகிறது.

9  )   உடலின் சுரப்பிகள் சிறப்பாக இயங்குகின்றன.

10 )   ஜீரண  சக்தி அதிகரிக்கிறது.

11 )   உடலின் தசைகள் வலுவடைகின்றன.

12 )   உடல் எடை குறைகிறது.

13 )   இரவில் நன்றாக உறங்க ஏதுவாகிறது. 




No comments:

Post a Comment