Tuesday 18 June 2013

உடையது விளம்பேல்

பலரும் பலவாறு சொல்லக் கேட்டது தான் இது. ஆயினும் நாம் இச்சொற்றொடரை எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதே முக்கியம்.

பொதுவாக நமது சொத்து விவரங்களையும், நமக்கிருக்கும் பொருளாதார பலத்தையும் மற்றவர்களிடம் சொல்வது ஆபத்தை கொண்டுவரும் எனும் கருத்தில் சொல்லப்பட்டாலும், நம்முடைய பலவீனங்களையும், நமகுள்ள நோய்களையும் கூட பிறரிடம் நாம் சொல்வது நமக்கு எவ்வித பயனும் தராது, மாறாக சிலர் நம்மை  இகழ்வாக எண்ணக்கூடும் என்றும் நாம் புரிந்து கொள்ள சொல்லப்பட்டதே இந்த ஆத்திச்சூடியின் வரிகள்.  இக்கால கட்டத்தில் இப்படித்தான் நாம் இதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆயினும் இந்த இரு வார்த்தைகளுக்கும் நேரடியான அர்த்தங்களைப் பார்த்தால், அது  "உன்னிடம் உள்ளதை யாரிடமும் கூறாதே' எனும் பொருளையும் கொடுக்கும்,  " உன்னுடைய அருமை பெருமைகளை மற்றவரிடம் நீயே புகழ்ந்து பேசாதே"  எனும் படியும் இருக்கும். உண்மையில் ஔவையார் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட இதைத்தான் குறிப்பிட்டார் என்கின்றனர் பலர்.  

எனக்கென்னவோ, சொல்லப்பட்ட மேலுள்ள அனைத்துமே சரியான பொருளாகவே படுகிறது. உண்மையை சொல்லுவது சில நேரங்களில் தவறான முடிவுக்கு இட்டுச் செல்லும் என அன்று ஔவையார் பயந்தார் எனபது இதனால் தெளிவாகிறது. நம் பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்து கொண்டு எதிரிகள் உஷார் நிலைக்கு வந்திடுவர். இதனால் நமக்குத் தேவையான சாதக நிலையை நாம் இழக்க நேரிடும்.

பொதுவாக நண்பர் என நாம் பழகுவோரே நம்மைப்பற்றிய அனைத்தையும் மிக இலகுவாக அறிந்து கொள்கிறார்கள்.  நமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருப்பது ஒரு காரணம். அடுத்தது உறவினர்கலும் நம்மோடு நெருங்கிய தொடர்புள்ளவர்களே.  எதார்த்த மனப்பான்மையோடு இவர்களோடு நாம் பகிர்ந்து கொள்ளும் விவரங்கள், பின்னர் ஒரு நாள் இவர்களுடனான உறவு பாதிக்கப்படும் போது, நமக்கு தேவையில்லாத மனக் கசப்பையும், பொருட்செலவையும் ஏற்படுத்தலாம்.


இன்றைய நல்ல நண்பர்கள்தானே நாளைய நமது கடும் எதிரிகளாகின்றனர். தேவைக்கதிகமாக நம்மைப் பற்றிய உண்மைகள் எதையும் மற்றவருடன் கலந்து பேசுவதன் ஆபத்து இது. 

ராமாயணத்தில் சிறந்த ஒரு உதாரணம் உண்டு இந்த ஆத்திச் சூடி வரிகளுக்கு.

தன்னை கள்ளத்தனமாக கவர்ந்து செல்லும் இராவணனின் செய்கையை சீதை எதிர்க்க முடியாது அழுகிறார். அவரின் அழுகுரல் ஜடாயு எனும் கழுகரசனுக்கு கேக்கிறது. உடனே பறந்து வந்து இராவணனை எதிர்த்து போரிடுகிறான், ஜடாயு .  போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நிற்பதற்கான அறிகுறிகளைக் காணோம்.

கழுகானாலும் ஜடாயு உண்மையை மட்டுமே பேசும் சத்தியவான். அவனிடம் ராவணன் " உன்னுடைய உயிர் எங்கிருக்கிறது ? " என வினவுகிறான்.

பொய் சொல்லிப்பழக்கமில்லாத ஜடாயு, தனது உயிர் தனது இறகில் இருப்பதை சொல்லிவிடுகிறான்.

ஆனால், ஜடாயுவின் கேள்விக்கு, " எனது உயிர் எனது காலின் கட்டைவிரலில் இருக்கிறது" என இராவணன் பொய் சொல்கிறான்.



அடுத்து, ஜடாயு இராவணனின் கால் கட்டைவிரலையும், இராவணன் ஜடாயுவின் இறகையும் வெட்ட, உண்மையைச்சொன்ன ஜடாயு இறக்க, பொய் சொன்ன இராவணன் தப்பித்து சீத்தா தேவியை லங்கா நகருக்குக்கு தூக்கிச் சென்றுவிடுகிறான்.

இது நாம் படித்த அல்லது பெரியோர்களால் சொல்லப்பட்ட ராமாயணம். இதிலும் சில சூட்சும விசயங்களை நாம் உணரக் கொடுத்திருக்கின்றனர்.

பொய் சொல்லி உயிரை இழக்கும் ஜடாயு, 'அகத்தூய்மையும், ஆத்மபலமும் பொய்மை பேசாதிருப்பதே' என்கிற வாக்கின்படி வாழ்ந்து வந்ததனால் நல்லவனாக போற்றப்படுகிறான். பொய் சொல்லி, மாற்றான் மனைவியை கவர்ந்து சென்ற இராவணன் காலம் முழுவதும் அவனின் புகழ் இழந்து அனைவராலும் சபிக்கப்படுகிறான்.

ஆக, " உடையது விளம்பேல்" எனும் அடிப்படை கருத்து சீர் தூக்கிப்பார்க்கத் தக்கதே.

அதன்படியே நடப்போம், ஆபத்தின்றி வாழ்வோம்.


No comments:

Post a Comment