Sunday 23 June 2013

புத்ராஜெயா மலர்க் கண்காட்சி - 2013 @ 3

மலர்களினால் எவ்வளவு பிரமாண்டமான வழிகளில் மக்களைக் கவர முடியுமோ அத்தனையையும் ஏற்பாட்டாளர்கள் செய்திருக்கின்றனர்.

வருவோரை வரவேற்க பிரதான வாசலில் அழகிய கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. சற்று உள்ளே சென்றால் தற்காலிக கூடாரம் ஒன்றும் உண்டு. பங்கு கொள்ளும் நாடுகளின் கைவண்ணங்களை இங்கே காணலாம்.

மலர்களை அழகு படுத்துவதில் இத்தனை அம்சங்களா என பிரமிக்கும் வண்ணம் அவரவர் நாட்டு ரசனைப்படியும் கலாச்சாரத்துக்கேற்பவும் பூ அலங்காரங்கள்  இருப்பதைக் காணலாம்.

தனியார் சார்பில் பங்குகொள்வோரும் தங்கள் திறமையினை பிரமாதமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை அசத்துகின்றனர்.

முதல் நாள் நான் சென்ற போது, முந்தைய ஆண்டுகளைவிட இம்முறை இன்னும் சிறப்பாக மலர்ப்பூங்கா தோற்றமளிப்பதை உணர்ந்தேன். காலை முதலே மக்கள் அலை அலையாக திரண்டு வந்து பூக்களின் அணிவகுப்பை கண்டு களித்தவாறு இருக்கின்றனர் என்பது இம்மலர்க் கண்காட்சிக்கு கிடைத்த பேராதரவாகும்.

வழக்கமாக வெளி நாட்டு மலர் அணிவகுப்புக்களையே பார்த்து வந்த நமக்கு கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டிலேயே இப்படி ஒரு மலர்க்கண்காட்சியை நடத்த முடியும் என்பது  நிச்சயம் நாம் பெருமைப் படவேண்டிய ஒன்று. பல மாநிலங்களில் இருந்தும் பேருந்துகளில் மக்கள் வருவது இந்த நிகழ்வு பெரும் வெற்றியடைந்து விட்டையே காட்டுகிறது. வெளி நாட்டினரும் பெருமளவு இங்கே குவிகிறார்கள் இந்த சிறப்பு நிகழ்வின் போது.

கைபேசிகளிலும், புகைப்படக்கருவிகளிலும், ஐபெட்களிலும் பார்வையாளர்கள் நிற்காமல் புகைப்படம் எடுப்பது அவர்கள் எவ்வளவு ரசிக்கிறார்கள் இவ்வலங்காரங்களை என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

இவை மட்டுமல்லாது, வருகை புரியும் அனைவருக்கும் பிடித்தமான மலேசிய உணவுகளுக்கு பலதரப்பட்ட கடைகளும் இம்முறை ஏற்பாடு செய்துள்ளனர்.  நாசி ஆயாம், நாசி லெமாக், நாசி மாசாக் மேராக், பிரியாணி, பல வகை சூப், பல வகை பலகாரங்கள் இன்னும் பல உணவுகளுக்கான தனிப்பட்ட பேரங்காடிகள் வந்திருப்போரின் நாவிற்கு ருசியைத் தருகின்றன. பரிமாரப்படும் உணவுகளைப் பார்க்கும் போதே நமக்கும் ஆசை பிறக்கிறது சுவைத்துப்பார்க்க.


No comments:

Post a Comment