Thursday 30 May 2013

ஆங்கிலம்தான் அகிலமெங்கும்...

மொழியென  வரும் போது, உலக மக்கள் அனைவரும் தத்தம் மொழிகளையே உயர்ந்ததென  கருதி போற்றுகிறார்கள்.   எவரும்  தங்களின் தாய்மொழியை விட அடுத்தவர் மொழி உயர்ந்ததென சொல்லக் காணோம். இது இயல்பான  ஒன்று.

ஆயினும்  யாவரும் ஒரு விசயத்தில் மட்டும் ஒத்த கருத்தையே  பிரதிபலிக்கின்றனர்.  அதுதான், உலக தேசிய மொழியாக  ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டது.

தமிழ் நாட்டுக்கு தமிழ், மலாய் நாட்டுக்கு மலாய், ஜெர்மனிக்கு ஜெர்மன், பிரான்ஸ் நாட்டுக்கு ப்ரெஞ்ச் என இருந்தாலும் எல்லா நாட்டில் உள்ளோரும் பேசுகின்ற ஒரு பொது மொழியாக இருப்பது ஆங்கிலமே.

உலகின் பிரதான மொழி ஆங்கிலம் என்பதில் கருத்து வேற்றுமை இல்லாத போது அதை எற்றுக்கொள்வதிலோ, மற்றவர்களுடன் உரையாடுவதிலோ என்ன சுணக்கம் வேண்டிக்கிடக்கிறது?  உலக மொழியைக் கற்றுக்கொள்வதில் ஏன் ஒரு சிலர் தங்களின் தாய்மொழியை முட்டுக் கட்டையாக இடுகின்றனர்...?

இதை தீவிரமாக எண்ணுகையில்  அவர்களின் ஆதங்கம் நமக்கு தெரிகிறது.  ஆங்கிலத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் தங்களின் தாய்மொழி  மறைந்திடுமோ எனும் பயம் ஒரு காரணம் என துணிந்து கூறலாம். இது பல இடங்களில் மறுக்க முடியாத உண்மையாக நடைமுறையில் இருக்கிறது.  சற்றே ஆங்கிலம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் நேரத்திலும் ஆங்கிலத்திலேயே உரையாட பழக்குகின்றனர். தங்கள் குழந்தைகள் மற்றவர் முன் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம் என எண்ணுகிறார்கள். இப்படிச் சிலரால் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்திடுமோ என பயம் எழுவது இயற்கையே.

ஆனால் இதனால் எல்லாம் நம்மொழி மறைந்துவிடும் என என்னால் எண்ண முடியவில்லை. பிற மொழிகளைப் போலில்லாமல் நம் மொழியை உயிராய் மதித்து வாழ்பவர்கள் நாம்.

தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்த்தென்றல், தமிழ்வண்ணன், என நாம்தான் மூச்சு விடும்போதும் தமிழ்... தமிழ் என தமிழை சுவாசிக்கிறோம்.... உயிராக நேசிக்கிறோம்.  நம் மொழி என்றென்றும் நிலைத்து நிற்கும். அதன் அடிப்படைகளை நம்மில் பலர் தினமும் மேற்கொண்டுதான் வருகிறோம்.

ஆனால், நாம் இப்போது தமிழோடு ஆங்கிலமும் கற்றுக்கொள்ளும்  தருணம் வந்துவிட்டதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ் என ஊருக்கு ஊர் கருத்தரங்கங்கள் மட்டும் போதுமா? நமது வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன செய்கிறோம், நமது எதிர்கால திட்டங்கள் யாவை என பார்க்கும் போது, மெச்சத்தக்கதாக தமிழ் நம் உயிராயிருந்தாலும், ஆங்கிலம் நமதுடல் போலாகிறது.  ஒன்றிலிருந்து ஒன்று விடுபட முடியா நிலை. இந்த விகிதாச்சார சம நிலையில் மாற்றம் ஏற்படும்போது நாம் வெற்றி பெற்றோர் பட்டியலில் சேர முடியா நிலையாகிறது.

அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும் மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவர்களும் தங்களை பலருக்கும் அடையாளப் படுத்திக்கொள்ள ஆங்கிலமே உதவுகிறது.

உலக நாடுகள் அவர்களின் சொந்த மொழியினில் பல்கலைகழகங்கள் பல நடத்தி வந்தாலும், மாணவ மாணவியர் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக்கொள்வதில்  அந்நாட்டு அரசாங்கங்கள் அதிக அக்கறை செலுத்துவதை நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். எந்த நாடும் மற்ற நாடுகளைவிட கலை, கலாச்சாரத்திலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவிட தயாராக இல்லை. இந்த போட்டி மனப்பான்மையே ஆங்கிலத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்கின்றனர் மொழி வல்லுணர்கள்.

உலகமயமாக்களில் இம்மொழியின் பங்கு அளப்பரியதாக இருப்பதால் தனியொருவர் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும்  ஆங்கில மொழி இன்றியமையாததாகிறது. இதனாலேயே அந்தந்த  நாடுகளில் உள்ள உயர்கல்வி மன்றங்கள் இம்மொழியை அனைவரும் கற்பது அவசியமென  பரிந்துரை செய்கின்றன.

இளந்தலைமுறையினரின் எதிர்காலத்தை மனதில் கொண்டு கற்றலிலும், கற்றுத்தருவதிலும் காலத்துக்கேற்ப எழும் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டே வந்திருக்கிறோம். அதன்படியே ஆங்கில மொழி அவசியத்தையும் நாம் ஏற்றுகொண்டே ஆகவேண்டும்.

 நம் தாய்மொழித் தமிழுக்கு எவ்வளவு  முன்னுரிமை  தருகிறோமோ  அதே அளவுக்கு ஆங்கிலத்திலும் நாம் புலமை பெற்றிருப்பது நமக்கும் நம் பிள்ளைகளுக்கும்  நல்ல பலன்களைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நம் நாட்டு கல்வி அமைச்சு ஆங்கில பாடத்தை ஒரு கட்டாயப் பாடமாக்கியதிலிருந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு  ஆங்கிலம் ஒரு முக்கிய பாடமென்று நம் தலைவர்கள் கருதுவது தெரிகிறது.

நம் சமூக மாணவர்கள் பன்மொழிப் புலவர்களாக இருப்பதில்  நமக்கு மகிழ்ச்சியே. ஆயினும் தற்போது தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி உயர்கல்வி நிலையங்களில் கற்போர் கூட ஆங்கிலத்தில் சற்று திறன் குன்றி இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

பணி இடங்களுக்கு விண்ணப்பிப்போர் நேர்காணலின் போது ஆங்கிலத்தில் தன்னம்பிக்கை இல்லாது பதிலளிப்பதும்  ஆய்வுகளில் தெரிய வருகிறது. 

ஆண்டுதோரும் உயர்கல்விக்கு பதிவோரும், பட்டதாரிகளாக வெளிவருவோரும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் ஆங்கிலத்தில் திறமையானோர் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளனர் என்கின்றனர்  சம்பந்தப்பட்டோர்.

தமிழில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் திறன்வாய்ந்தவர்களாக மிளிர்வதாக மற்றொரு ஆய்வறிக்கையும் குறிப்பிடுகிறது. தமிழ், ஆங்கிலத்துக்கு எதிரியல்ல என இதனால் தெரிந்துகொள்ளலாம். தமிழ்வழி ஆங்கிலம் கற்று பிரபளமானோர் நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.

'இலக்கண இலக்கிய ஆங்கிலம்' தெரிகிற அதே நேரம், 'வணிக ஆங்கிலமும்' தெரிந்து வைத்திருப்பது அவசியம் என தொழில் துறையில் இருப்போர் அறிவித்திருக்கின்றனர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே நில்லாமல், பல சர்வதேச நிறுவனங்களிலும் தங்களின்  வேலை அல்லது தொழில் சம்பந்தப்பட்ட வாய்ப்புக்களை பிரகாசமாக வைத்துக்கொள்ளலாம்.

தொழில்துறைகள் அனைத்தையும் சர்வதேச அளவில் ஏக போகமாக ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது ஆங்கிலம்தான்.  தனிப்பட்ட நாடுகளின் உள்ளூர் மொழிகள் உள் நாட்டு தேவைக்கு மட்டுமே என்பது எழுதப் படாத சட்டம்.... அவ்வளவே.

இந்தியா, சீனா போன்ற ஏழை நாடுகளில் கூட ஆங்கிலம் உள் நுழைந்து அவர்களை உலகளாவிய முத்திரை பெற்றவர்களாக மாற்றி வருவது நம் கண்முன்னே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எதிலும் எதிர்வித கருத்துக்கள் இருப்பதனால், எரிச்சலடையும் சிலர் ஆங்கிலத்தை எதிர்க்கின்றனர். தங்களின் முக்கியத் துவம் பரிபோய்விடும் எனும் எண்ணம்கூட அவர்களின் பழமைவாத கருத்துக்கு காரணமாக இருக்கலாம். ஆங்கிலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழாசிரியர்களை கவனித்தால் ஒரு உண்மை தெரியவரும்.  அவர்களுக்கு ஆங்கிலம் சரி வரத் தெரியாது என்பதே அது. ஒருவித தாழ்வு மனப்பான்மையால் ஒட்டுமொத்தமாக அம்மொழியினை இகழ்பவர்கள் இவர்கள்.

இதற்கு நேர்மாறானோர், ஆங்கில  ஞானம் உள்ள தமிழாசிரியர்கள். அதனை தம் கற்பிக்கும் மொழித்திறனுக்கு சாதகமானதொன்றாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.   தங்களின் மாணவச் செல்வங்களை வெற்றிபெற்றோர் வரிசையில் நிற்க ஆங்கிலம் இவர்களுக்கு உதவுகிறது.
 
தமிழ் மட்டும் தெரிந்த தலைவரை விட ஆங்கிலமும் தெரிந்த தலைவரே மக்களுக்கு தேவை இப்போது.  கிணற்றுத் தவளைகள் போல் மக்கள் இருக்க, தான்தோன்றித் தனமாக ஆட்சி புரிந்த தலைவர்கள் காலம், கடந்த காலம் ஆகிவிட்டது.  வெளியுலக நடப்புக்களை சீர்தூக்கிப் பார்த்து செயல் வடிவம் தரும் தலவர்களே மக்களைச் சென்றடைகின்றார்கள் இப்போது.  ஆங்கிலம் அதற்கு வழி செய்கிறது கணினி ரூபத்தில்.


 தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் கற்கச் சொல்வதல்ல நமது நோக்கம். தமிழுக்கு அடுத்ததாக ஆங்கிலமும் கற்போம் என்பதே நாம் சொல்லவரும் கருத்து.

தமிழ் நமது உயிர் மூச்சாக இருந்தாலும், நல்ல ஊதியம் பெற, வளமான எதிர்காலம் அமைய ஆங்கிலத்தையும் கற்றுத்தேர்வோம்.

No comments:

Post a Comment