Friday 24 May 2013

வாகன நெரிசல்...

நம் நாட்டில் பல பிரமாதமான மாநகர்கள் இருந்தாலும் போக்கு வரத்து வசதி என பார்க்கும்போது நமக்கு தலையை சுற்றுகிறது.  நம்முடைய இன்றியமையாத தேவை தற்போது அதிகம் சிறமமில்லாத போக்குவரத்து  வசதிதான். இது வாகனம் செலுத்துவோர் மட்டுமல்ல, பொதுமக்களும் எழுப்பும் முக்கிய கேள்வியாகும்.

 நமக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் எதிர்பார்ப்பது சுலபமாக நகரின் கடைத் தெருக்களுக்குச் செல்வதுதான். ருசிமிகும் உணவுக்கும், தங்களின் தேவைக்கான இதர துணிமணிகளுக்கும் நிம்மதியாக கடைகளுக்கு சென்று வருவதையே இங்கு வரும் பெரும்பாலானோர் பெரிதும் விரும்புவார்கள்.

கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு, ஜோகூர் மற்றும் பல நகர்களிலும் சாலைகளில் குவியும் வாகனங்களைக் காணுகின்ற போது சுற்றுலாப் பயணிகள் பல கசப்பான அனுபவங்களுக்கு தங்களைத் தயார் படுத்திக்கொண்டுதான் இங்கு வரவேண்டி உள்ளது.

 நினைத்த நேரத்தில் ஒரு இடத்துக்குச் சென்று சேர முடியாத நிலை இன்னும் தொடர்வது  ஆச்சரியமான ஒன்றுதான். காரணம் உலகின் பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வது நமது சாலைகளும் அதன் தரமும் என்றால் அது பொய்யில்லை.

வாகன நெரிசலை தீர்க்க என்னவெல்லாமோ அரசாங்க அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். ஆயினும் சரியான தீர்வை அவர்கள் தொட்டதற்கான அறிகுறிகளைக் காணோம். பல இடங்களில் தொடங்கப் பட்ட சாலையை சீர் செய்யும் வேலைகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றன.
மானியத் தொகை போதாததால் குத்தகைக் காரர்கள் தொடர்ந்து சீரமைப்புப் பணிகளை செய்ய முடியாததாகிறது.

அழகாக தூர நோக்கு சிந்தனையில் தொடங்கப் பட்ட பல போக்குவரத்து பணிகள் பல வருடங்களாக  முடங்கிக் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது. அரசாங்கம் இவற்றில் தீவிரம் காட்டாத வரையில், நெரிசல்கள் குறையும் சாத்தியம் நிச்சயம் இல்லை.

உள்ளூர்வாசிகள் அத்தியாவசிய தேவையின்றி நகரின் வீதிகளுக்குச் செல்ல அஞ்சும் அளவுக்கு இந்த வாகன நெரிசல்  இருக்கின்றது தினமும்.  மணிக் கணக்கில் வாகனங்களில் மெல்ல ஊர்வது நம்மில் பலருக்கும் பொறுமையை சோதிக்கும் அனுபவமாகும்.

பொதுப் போக்குவரத்தில் போவது பல இடங்களில் உச்சிதமில்லாத ஒன்றாக இருக்கும் நிலை இப்போது. பொது போக்குவரத்து வாகனங்களுக்கென தனிப் பாதை இல்லாததால், வழக்கமான நெரிசலில் சிக்கியே நகர்கின்றன. 

முன்பு வேலை தொடங்கும் போதும் முடியும் போதும் இருந்த வாகன நெரிசல் இப்போது மற்ற நேரங்களிலும் தொடர்வது சம்பந்தப் பட்ட அமைச்சும் அதன் அதிகாரிகளும் சரியான திட்டமிடல் வழி, தேவைக்கேற்ப போக்குவரத்து விதிகளில்  மாற்றங்களை அமல் படுத்தவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

No comments:

Post a Comment