Friday 24 May 2013

'வாங்க... போங்க' என குழந்தைகளை அழைப்பது...

மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவது காலங்காலமாக நம் சமூகத்தில் உள்ள ஒரு உன்னத பண்பு.  மேலை நாட்டு கலாச்சார சீர்கேடுகள் இறக்குமதியாகும் இப்போதும் மரியாதை என்பது தொடர்ந்து நாம் கட்டிக் காப்பாற்றி வரும் ஒன்றாகும்.

தாய், தந்தை எனும் வித்தியாசமின்றி சினிமாவில் புகுத்தப்படும் கேவலமான உரையாடல்களைத் தவிர்த்து நம் நாட்டில் எல்லா வீடுகளிலும் குறை சொல்ல முடியா அளவுக்கு மரியாதைக்கு எவ்வித பங்கமுமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆயினும், மரியாதை என்பது சிறுவர்களுக்கு வித்தியாசமாக கற்பிக்கப் படுகிறது இப்போது.  பாலர் பருவத்திலேயே "வாங்க ...போங்க..." என்கிற மரியாதைச் சொற்களுடன் மழலைகள் அழைக்கப்படுகிறார்கள். அதன்படியே, அதனைச் சார்ந்தவாறே அனைவரும் குழந்தைகளை அழைக்கவேண்டிய கட்டாயம் இப்போது யாவருக்கும் திணிக்கப் படுகிறது. இதில் தவறில்லைதான். இதனால் குழந்தைகள் மரியாதையைக் கற்றுக்கொள்கிறார்கள் என்றால் அது நல்லது தானே...

ஆனல், பல குடும்பங்களில் உண்மை நிலை இதுவா?

 நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்த " வாங்க...போங்க..." எனும் பண்பான வார்த்தைகளை நம் பெற்றோரும், சுற்றத்தாரும் எப்படிச் சொல்லித் தந்தனர் என்பதை இங்கு நினைவு கூறும் போது, அன்றைக்கும் இன்றைக்குமான நடைமுறை வித்தியாசங்கள் பல  தெரிகின்றன.

வயதில் மூத்த யாவரையும் நாம் மரியாதைக் குறைவுடன் அழைத்ததே இல்லை.  ஆனாலும் நம் வீட்டுப் பெரியோர் நம்மை இப்போதைய "ஸ்டைலில்" வாங்க ... போங்க... என அழைத்ததில்லை.

காலச் சூழலில், வா...போ... நீ எனும் ஒற்றைசொல்லின் பயன்பாட்டை குறைப்பதற்காக இவ்வாறு குழந்தைகள் அழைக்கப் படுகிறார்கள் என்று வாதிடுவோர் கூறினாலும் இப்படியான குடும்பங்களில் இவர்கள் சொல்வதுபோல் "ங்க...." எனும் மரியாதை நிலை நிறுத்தப் படுகிறதா என்றால் பல வீடுகளில் இல்லை என்ற பதில் தெளிவாகத் தெரிகிறது.
பெற்றோர் பிள்ளைகளை "ஐயா வாங்க...அம்மா வாங்க.." என அழைக்கிறார்கள். ஆனால் குழைதைகளோ..."அம்மா, தண்ணி கொண்டு வா..சோறு ஊட்டு..." என ஒருமையில் பதில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால் சொல்லித்தரப்படும் இந்த " ங்க..." அவ்வளவுதானா?  வெறும் பந்தாவுக்குத்தான் மற்றவர் முன் குழந்தைகளை 'வாங்க போங்க' என அழைக்கிறார்களோ..?

 நம்மைச் சுற்றி உள்ள சிலரின் உரையாடல்கள் சுவாரஸ்யமாக இருக்கும்...

மகள்      : அம்மா வா வீட்டுக்கு போகலாம்...
அம்மா : கொஞ்சம் பொறுங்கம்மா, ஆண்டியோட அஞ்சு நிமிஷம் பேசிய  பிறகு உங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்...

---------
அப்பா  : ராயன், கணக்கில் உங்க மார்க் நல்லா இல்லையே...அங்கிள் கிட்ட காட்டுங்க...
மகன்  : நீதான் எனக்கு டியூசனுக்கு ஏற்பாடு பண்ணலயே..அத மொதல்ல அங்கிள் கிட்ட  சொல்லு...

--------
இப்படி பல நடப்புக்கள் நம்மைச் சுற்றி மரியாதைக்கான உதாரணங்களாக நாம் பார்க்கலாம்.

உண்மையில் மரியாதை என்பது வார்த்தயில் அல்ல.  அது மனதில் இருப்பது. பெற்றோர் பிள்ளைகளுக்கு மரியாதை என்பதன் பொருளை சிறுகச் சிறுக விளக்கிவர குழந்தைகள் உணரத்தொடங்கி விடுவார்களேயன்றி, இந்த "ங்க.." நடைமுறை, பல குடும்பங்களில் காமெடி விசயமாகவே இன்றிருக்கிறது.

 நம்ம வீட்டுல எப்படி?

No comments:

Post a Comment