Wednesday 22 May 2013

கடன் பட்டார் நெஞ்சமா...அப்படின்னா???

" நாம் கேட்பதை நிறுத்தும்வரை மற்றவர்கள் நமக்கு அல்வா கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அதற்காக கேட்பதை நிறுத்திவிட முடியுமா என்ன? கிடைக்கும் வரை கேட்டுதான் ஆகவேண்டி இருக்கு...."
மெல்ல என் காதுகளில் கிசு கிசுத்தார் பக்கத்திலிருந்த என் நண்பர்.

"என்ன சொல்றீங்க..விளங்கலையே..." என்று அவரைப் பார்த்தேன்.

"அவசரம்னு ஆயிரம் வெள்ளி கேட்டார், கொடுத்தேன். இப்ப என்னப் பார்த்ததும் வேறு பக்கமா என் கண்ணில் படாதமாதிரி போறார்..." என்றார்.

" அடடா...என்ன தவறு பண்ணிட்டீங்க..கடன் கொடுக்கலாமா...? கடன் அன்பை முறிக்கும்னு படிச்சதில்லையா....?"

"கொடுக்கக் கூடாதுன்னுதான் நினைச்சேன்...சோகமா கதை சொன்னார். நிச்சயம் ஓரிரண்டு மாசத்துலே கொடுத்திடுறேன்'னார். ஒரு வருசத்துக்கும் மேலாச்சு...ஹ்ம்ம்ம்..."

 நண்பருக்கு பணம் திரும்ப வராவிட்டாலும் சாக்கு போக்கு சொல்லி தம்மை ஏமாற்றி ஒளிந்து கொண்டிருக்கும்  கடன் வாங்கியவரின்  செயல் சினமூட்டியது.

ஒரு ஆபத்து அவசரத்துக்கு 'கைமாத்தாக' வாங்குவது இயற்கை. ஆனால் நாணயம் தவறலாமா? நாக்கில் சுத்தம் அவசியமன்றோ... வாங்கியதை திருப்பிக்   கொடுக்கும்போது இப்படிச் செய்தால் பின்பு உண்மையான காரணங்களோடு  உதவி கேட்டு வருவோருக்கு மற்றவர்கள் எப்படி உதவி செய்வார்கள்...?

அதுமட்டுமல்ல, உதவும் மனப்பான்மை உள்ளோரிடம் சுமூகமாக பழகவேண்டாமா...? அதுவரை நன்றாக பழகியவர்கள், கடனை பெற்றபின்பு பழகுவதை குறைத்துக்கொள்வதும், பார்த்தும் பார்க்காதது போல போவதும் அந்த நட்பையும் உறவையும் கொச்சைப்படுத்துவதாகாதா???

"அவர் நல்ல நண்பர்தான். ரொம்ப நாள் பழக்கம். அதன் அடிப்படியில் தான் கொடுத்தேன். அவருக்கு அப்போ என்ன கஷ்ட்டமோ அது இந்நேரம் தீர்ந்திருக்கும். அதனால பணத்தை திருப்பிக்கேட்டேன். இப்ப, மனதை வருத்தப்படுறது மாதிரி நடந்துக்கிறார்."

நானும் கொடுத்துதவி இருக்கிறேன். ஆயினும், மனதினில் ஒரு நெருடல். அவரின் அனுபவம் நமக்கும் ஒரு பாடம்தான். தொகை எவ்வளவென்பது இங்கு கேள்வி அல்ல. நடந்துகொள்ளும் விதமே நம்மை நாம் எக்குல மக்கள் என எண்ண வைக்கிறது. வாக்குச் சுத்தத்தினைக் கடைபிடிப்போர் உயர்ந்தவரென்றும், பித்தலாட்ட மனமுடையோர் தாழ்ந்தவரென்றும் முன்னோர் சொன்னது பொருள் புதைந்த வாக்கியமன்றோ...

செத்தால்தான் சுடுகாட்டுக்கு பாதை தெரியவேண்டுமா, என்ன? நம்மை சுற்றி நடப்பவைகளை வைத்தே சுதாகரித்துச் செல்லும் சுபாவம் வேண்டும்.

கடன் வாங்குபவர் ஒரு நாள்தான் நம் வீட்டுக்கு நடக்கிறார். கொடுப்பவர்களோ ஆயிரம் முறை நடக்கவேண்டி இருக்கிறது கொடுத்த பணத்தை திரும்பப்பெற. இது கடன் பற்றி சொல்லப்படுகிற நகைச்சுவை. வெறும் நகைப்புக்கு மட்டுமன்று, பொதிந்திருக்கும் உட்கருத்து நமது கௌரவத்தின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

"இல்லாதபோது வாங்குறாங்க. இருக்கும்போது கொடுக்கலாமில்லையா...?"

 நாம் பிறரிடம் கடன் வாங்கும் போது எவ்வளவு சிரமப்படுகிறோமோ அந்தளவு பாதுகாப்பு அம்சங்களை கண்டறிய   வேண்டும் பணம் கை மாறும் முன். இல்லையேல், கொடுத்தப் பணம் ஒரு வழிப் பயணம் போன கதைதான்.

No comments:

Post a Comment