Sunday 19 May 2013

பணம் தேவையே, ஆனால்...

இளம் பிராயம் முதல் பணம் என்பது எனக்கு முக்கிய ஒன்றாகவே மற்றாவர்களைப் போல் எனக்கும் பட்டது. அதனை அடைய எல்லோரும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதனை பார்க்கும் போது பணத்தின் தேவை எவ்வளவு பெரியது என விளங்கத்தொடங்கியது.

எனது வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு வித உணர்வுகளை உண்டு பண்ணிய பணம் என்னிடம் இல்லாது, என்னை வதைத்த காலமும், அனுபவமும் நிறையவே உண்டு. ஆனால் அதற்காக நான் என் கொள்கைகளையும் பிடிப்புகளையும் விட்டுக் கொடுத்ததில்லை.
குறுக்குவழிகளில் அதனை அடையும் குணம் எனக்கிருந்ததில்லை. அதுபோன்ற சிக்கலான சூழ் நிலைகளை சமாளிக்கும் வழிகள் எப்படியாவது ஒன்றிரண்டு எண்ணத்தில் உதித்து தேவைக்குத் தகுந்த பொருள் ஞாயமான வழிகளில் வந்தடைந்ததை இப்போதும் மன மகிழ்வுடனேயே எண்ணிப்பார்க்கிறேன்.

ஈய லம்பத்தில் வேலை செய்த போது பல்வேறு சந்தர்ப்பங்கள் கிட்டியபோதும்கூட, அதன் லாவகப் பிடியில், நேர்மைக்குப் புறம்பாக நான் செயல்பட்டதில்லை, .  உடன் வேலை பார்த்த பலரும் மூன்று நான்கு வீடுகளின் அதிபர்களாக வலம் வரும்போது, நான் பல காலம் வாடகை வீட்டில் இருந்ததும் எனக்கு தெரிந்திருந்ததுதான். ஆயினும் தகாத வழிகளில் வரும் பணத்தின் மேல் எப்போதுமே ஆசை வந்ததில்லை.

உறவினர்களிலும் நண்பர்களிலும் பலர் எப்படியும் வாழலாம் என பணத்தை அடைவதில் தீவிரம் காட்டுகின்றனர். மாட்டிக்கொண்டு அவமானமும் அடைகிறார்கள். அந்த  நேரத்தில் சுற்றி இருப்போர் அவர்களை எப்படி பார்ப்பார்கள், எவ்விதம் எண்ணுவார்கள் எனும் பயம் இல்லாமலே பலரும் தொடர்ந்து அடாத, தகாத வழிகளில் பணம் புறட்டுகிறார்கள். தங்கள் செயலால் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் நன்மதிப்பும் பாதிக்கப் படுவதை இவர்கள் அறியவில்லையோ...? இப்படி ஆணும் பெண்ணும் கேவல நிலைகளில் பணம் தேடுவதை பார்க்கையில் ஆச்சரியம் மேலிடுகிறது.

அரசாங்க பட்ஜெட்டில் எக்கொனொமிஸ்டுகள் போடும் கணக்கினைப்போல , சில நேரங்களில் அவர்களையும் மிஞ்சிய துள்ளியமான கணக்குகள் போட்டு குடும்பத்தை மேம்பாடடைந்த நிலைக்கு கொண்டுவந்த அனுபவமும், ஆனந்தமும் என் மனவிக்கும் எனக்கும் அதிகம் உண்டு.

குடும்பத்தில் எந்த முக்கிய செலவுகளையும் தள்ளிப் போட்டதில்லை...கடன் கேட்டதில்லை...பிறர் மெச்சும்படி வாழ நினைத்ததும் இல்லை.
போதும் என்ற மனமே சீரான எங்கள் வாழ்வின் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது.

No comments:

Post a Comment