Friday 5 October 2012

தவறு செய்யாதவர்களா மருத்துவர்கள். . .?

'வெர்னன் கோல்மன்" என்பவர் ஒரு மேல் நாட்டு எழுத்தாளர். இவரது படைப்புக்கள் பொதுவாக மருத்துவர்களின் தவறுகளை  சுட்டிக்காட்டப்படுபவைகளாகவே  இருக்கும்.

மருத்துவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பணம் . அவர்கள் மூடி மறைக்கும் தங்களின் பலவீனங்களை இவர் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுவது போல் வெளி உலகிற்கு சொல்லிவிடுவார். பல புத்தகங்கள் இவரின் இந்த வீர தீரச் செயலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

'மருத்துவர்கள் உங்களைக் கொல்வதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?' எனும் புத்தகத்தில் இவர் சொல்லியிருக்கும் கருத்துக்களை பலரும் படித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

மருத்துவம் பணமீட்டும் தொழிலாகிவிட்டது இப்போது. கைராசிக்காரர்கள் என முத்திரை இடப்பட்டு சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் இப்போது குறைந்து விட்டனர். நோய்களை பரிசோதனைகள் மூலம் கண்டு பிடித்து அவற்றை முறையான வழியில் சிகிச்சை செய்வது அங்கும் இங்குமாக   ஒரு சில இடங்களில் மட்டுமே நடை பெறும் செயலாகி விட்டது இப்போது.  நோய்களின் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டனர். நோயின் உண்மை நிலவரத்தை தெரிந்து அதனை தீர்க்கும் விதமாக செயலாற்றுவது பெரிதும் குறைந்துவிட்ட து ' என்கிறார். இதுபோன்ற எதிர்மறை கருத்துக்களை பலரும் இப்போது கவனமாக பார்க்கின்றனர்.

 மருத்துவம் பயிலச்செல்லும் மாணவர்களை வசப்படுத்தி அவர்களை  மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களே சுய நலமுடன் தங்களின் இலக்கு நோக்கி கூட்டிச்செல்கின்றன. பாடப் புத்தகங்களும், பேராசிரியர்களின் வழிகாட்டுதலும் ஓரளவே செயல்பாட்டில் இருக்கின்றன இப்போது. இதனால்தானோ என்னவோ இவர்கள் மருத்துவர்களாக வெளி வந்து அரசாங்க பணியிடங்களுக்கு செல்லும்போது அவர்களிடம் நோய்களை தீர்க்கும்    எந்தவித  ஊந்துதலும் இருப்பதில்லை.

நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துகளே அவர்களின் நோய்கள் தீர்வதற்கும், கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கும் அல்லது நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கும் காரணம் என தொடங்குகின்றது இவர் மருத்துவர்கள் மேல் தொடுக்கும் குற்றச்சாட்டுகள்.

மருந்துகள் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில், அவற்றை வினியோகிக்கும் நிறுவனங்கள் மருத்துவர்களை நாடி தங்களது மருந்துகளை உபயோகிக்க கேட்டுக்கொள்கின்றன. விலை  நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகின்றது. தரமும் அவற்றுக்கேற்ப வேறுபடுகின்றது. இந்நிலையில், அதிக இலாபம் விரும்பும் மருத்துவர்கள், தரமில்லாத மருந்துகளை நோயாளிகளுக்குத் தரும் தவற்றைச் செய்கிறார்கள்.

மறுத்துப்பேசி தர்க்கம் செய்யக்கூடிய கருத்துக்களாக இவை இருந்தாலும், அவர் சொல்வதில் இருக்கும் உண்மையையும் ஆராய்ந்து பார்க்கவேண்டி உள்ளது.

தவறான மருந்துகளை உட்கொள்வதால் நோய் குறைவதைக் காட்டிலும் பலவிதமான பக்க விளைவுகள் நம்மை வந்தடைகின்றன.

சந்தேகத்தினால் தொடர்கேள்விகள் கேட்கும் தங்களது நோயாளிகளை சரிகட்டும் மருத்துவர்கள், தங்களின் தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்வது இல்லை. அதுமட்டுமல்ல, ஒரு சராசரி நோயாளி மருத்துவர்களின் தவறுகளை கண்டறியும் திரண் கொண்டவரா என்ன?
ஆக, மருத்துவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்களை தட்டிக்கேட்கவும் பலர் முன்வருவதில்லை.

கடவுளுக்கு அடுத்ததாக உயிர்களைக் காக்கும் அவர்களைக் காட்டிக் கொடுத்தல் பாவம் என்று சிலர் கருதவும் கூடும். காரணம், மருத்துவர்கள் பால் நாம் கொண்டுள்ள மரியாதை தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஒன்றாகும். நோயின் பிடியில் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அளவற்ற அன்பு மட்டும் உதவிடுமா? அங்கே அவர்களின் துயருக்கு நிவாரணியாக வருவது அன்பை விட நோய் தீர்க்கும் மருத்துவரே. நோயிலிருந்து விடுதலை பெறும் அவர் பின்னரே அடுத்ததைப் பற்றி பேசுகிறார். இப்படி அவர்களை கண்கண்ட தெய்வமாக பார்க்கும் போது அவர்களின் சுய நலத்தால், கவனக் குறைவால் ஏற்படும் இறப்புக்களும் அதிகரித்திருப்பதையும் நாம் நிறையவே பார்த்து வருகிறோம்.

என்னுடைய சில உறவினர்களின் இறப்பிலும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கும், மருந்துகள் செலுத்தப்பட்ட சந்தேகமான முறையும், தங்களின் பொறுப்பை தாதியரிடம் விட்டுச்சென்ற சூழ் நிலைகளும் காரணங்களாக இருக்குமோ என பல நாள் சிந்தித்து, திரம்பட அவர்களை அனுகாத நிலையை எண்ணி என்னையே நான் நொந்துகொண்டதுண்டு.

மருத்துவமனைகளுக்கு நோயாளிகளாக உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துச்செல்லும் நமக்கு சில அடிப்படை விசயங்கள் தெரிந்திருந்தால், பல நேரங்களில் கண்முன்னே நடக்கும் மருத்துவ தவறுகளை தடுத்திருக்கலாம். இதற்கு நாம் ஒரு மருத்துவரைப்போல் அதிகம் படித்திருக்கவேண்டும் எனும் கட்டாயம் இல்லை. ஒட்டு மொத்தமாக 'எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்" என இல்லாமல், செயல்படுத்தப் படுகின்ற சிகிச்சை முறைகளை நாம் சற்று கவணமுடன் பார்த்து வந்தாலே போதும், அங்கு நடக்கும் பல தவறுகளை களைந்துவிடலாம்.

 நம்மில் பலர் மருத்துவமனையை எந்த தவறுகளும் நடவாத ஓர் உன்னத இடம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். மருத்துவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எனும் மாயையில் இருக்கிறோம். இது நமது அறியாமை. இது நமது தவறல்ல. இப்படித்தான் வாழ்ந்து வந்தோம். நம்மைக் கவனித்துவந்த அனைத்து மருத்துவர்களும் கைராசிக்கார்களாகவும், திறமையானவர்களாகவும் நம் உயிருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கின்றனர். அதிசயமாக, எங்கோ ஓர் இடத்தில் மட்டுமே அவர்களால் ஏற்படக் கூடிய அசம்பாவிதங்களை நாம் கேட்கமுடியும் அப்போது. பொதுவில் அவர்களை தலைமேல் தூக்கி வைத்து ஆடிய காலம் அது. ஆனால், இன்றைய நிலை வேறு. உங்களைச் சுற்றி உள்ளோரோடு உங்கள் குடும்பத்தினரும் நீங்களும் நெடு நாள் நிம்மதியாக வாழ, நம்மைச்சுற்றி நிகழும் மருத்துவ தவறுகளை உற்றுப்பார்த்து அதன் படி நடக்கவேண்டிய சூழ் நிலை வந்துவிட்டது.

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததுண்டு...

கிள்ளான் நகரில் சுமார் 15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. வயிற்றின் உபாதை தாங்காது தவித்த நான் அறுவை சிகிச்சைக்கு ஒரு புகழ் பெற்ற தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். பலவிதமான பரிசோதனைகள் நடந்து முடிந்தன. அடுத்த நாள் அறுவைசிகிச்சைக்கு சில நிமிடங்களுக்கு முன் பணியில் இருந்த மருத்துவர் இடது பக்கத்தில் செய்யவேண்டிய அறுவைசிகிச்சைக்கு வலது பக்கத்தை தயார் படுத்திக்கொண்டிருந்தார். கடைசி சில வார்த்தைகள் சொல்லி அறையின் வெளியே செல்ல இருந்த என் மனைவி அதைப் பார்த்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் சொல்ல, எக்ஸ்ரே படத்தை தவறாக பார்த்து செயல்பட இருந்ததை உணர்ந்த அவர் ஏதோ காரணங்கள் சொல்லி மழுப்பினார். அந்தச்சம்பவம் இன்னும் எனக்கு பயத்தை தருகிறது. அன்று மட்டும் அது தொடர்ந்திருந்தால். . .

இப்படி மருத்துவர்களின் தவறான அனுகுமுறைகளையும் கவனமின்மையையும் பாதிக்கப்பட்ட பலரிடமிருந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

இரத்த பரிசோதனைக்கான சலுகை முறை சீட்டுகளை ஒரு பெரிய மருத்துவமனைக்காக வினியோகித்து வந்த நேரம் அது. சுமார் பத்துவருடங்களுக்கு முன் அந்த வாய்ப்பு எனக்கு கிட்டியது. அப்போது நானும் இருதய நோயால் தாக்கப்பட்டிருந்தேன். அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக்கொண்டதாலும், அவற்றுக்கு தவரான சிகிச்சை அளிக்கப்பட்டதாலும் என்னுடைய நோய் அறுவை சிகிச்சை வரை சென்று நான் மீண்டு வந்த நேரம். என்னைப் போல் மற்றவர்களும் இருந்துவிடக்கூடாது எனும் எண்ணத்தில், இரத்த பரிசோதனையின் முக்கியத்துவம் உணர்ந்து மற்றவர்களுக்கும் சொல்லி வந்தேன்.

அப்போது எனக்கு தெரிய வந்த சில உண்மைகள் ...

பலமொழிகளைப் பேசும் நம் மலேசிய நாட்டில், அரசாங்கம் ஏற்று நடத்தும் மருத்துவ முகாம்களுக்கு நமது பங்களிப்பும் நாம் கலந்து கொள்வதும் மிகக் குறைவு. அதனால், நோய்களைப் பற்றிய நம்மவர்களின் விழிப்பு நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை, இரத்தப் பரிசோதனையின் அவசியம் தெரிந்திருக்கவில்லை,
நோய்களின் அறிகுறிகளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இல்லை, ஆபத்து அவசரங்களின் போது என்ன செய்வதென்று தெரிந்து வைத்திருக்கவில்லை, மருத்துவமனைகளில் தங்களின் நோயினைப் பற்றி தகுந்த விளக்கங்களைப் பெறுவதில்லை. இப்படி இன்னும் எவ்வளவோ...

அன்று முதல், இரத்த பரிசோதனைக்கான சலுகைச் சீட்டுகள் நிறுத்தப்பட்டவுடன், மருத்துவ காப்புறுதி அட்டையை வினியோக்கிக்க துவங்கினேன். காப்புறுதி அட்டைகளை விற்கிறோனோ இல்லையோ, அது மற்றவர்களோடு தொடர்புகொண்டு எனக்குத் தெரிந்த ஒரு சிலவற்றை அவர்களோடு பகிர்ந்து கொள்ள நல்ல சந்தர்ப்பமாயிற்று.

'என் தொழில் நிலைக்க உங்களின் நோயும் நீடிக்கட்டும் ' என்பது கேலியாக மருத்துவர்களைப் பார்த்து அந்தக் காலத்தில் சொல்லப்பட்டு வந்த ஒன்று. இப்படி பேசுவது நிறுத்தப்பட்டிருக்கலாம் இன்று. ஆனால், மருத்துவர்களின் தவறுகள் குறைந்துவிட்டனவா என பார்க்கும் போது, 'இல்லை' என்கிற பதிலே மிகச் சத்தமாக காதுகளில் கேட்கின்றது.




No comments:

Post a Comment