Tuesday 30 October 2012

ஜேம்ஸ்பாண்ட் 007 பகுதி 2

இப்போதுள்ள டேனியல் கிரேக்கிற்கு முன் ஐந்து பேர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் காலத்தில் தனித்தன்மை கொண்ட சிறந்த நடிகர்களாகவே இருந்திருக்கின்றனர்.


1962ல் அறிமுகமாகி ஆறு படங்களில் "ஜேம்ஸ்பாண்ட்" பாத்திரத்தில் நடித்து அதற்கு பெருமை சேர்த்தவர் 'ஷாவ்ன் கொனரி'.  ஐம்பது ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் இவரே சிறந்த "பாண்ட்" என சொல்வோர் நிறையவே இருக்கிறார்கள். அதிகாரபூர்வமற்ற முறையில் இவர் " நெவெர் சே நெவெர் அகைய்ன்" எனும் படத்திலும் நடித்திருக்கிறார். படம் சிறப்பாக இருந்தாலும் வழக்கமான பாண்ட் படங்களுக்கான பின்னனி இசை இல்லாததால் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை.  முகத்தை மிகவும் சீரியசாக வைத்துகொண்டு வில்லன் களை புரட்டிப்போடும் நாயகன் இவர்.
 நவீனங்களுக்கு எப்போதுமே மக்களிடம் ஒரு தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்துக்கு தீனியாய் வந்தவை இவரது பாண்ட் படங்கள். "டாக்டர் நோ" தொடங்கி "டைமன் ஸ் ஆர் ஃபோர் எவர்" வரைக்குமான இவரது படங்கள் மேற்கத்திய சினிமா வளர்ச்சிக்கு ஒரு முத்திரையாக அமைந்தன.



அடுத்து வந்தவர் "ஜோர்ஜ் லேசன்பி". 1969ல் "ஒன் ஹெர் மெஜெஸ்டிஸ் சீக்ரட் சேர்விஸ்" எனும் ஒரே படத்தில் நடித்திருந்தார். படம் பிரமாதமாக வந்தது. கார்கள் ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு போகும் போது பின்னனியில் அந்த ஜேம்ஸ்பாண்ட் இசை காட்சிகளுக்கு மிருகேற்றியது. ஆனால் ஏனோ ஒரே படத்துடன் இவர் நிறுத்திக்கொண்டார். இவரின் படத்தில் தான் இவரின் மனைவியை வில்லன் "கோஜெக்" டெல்லி சவலஸ் சுட்டுக் கொண்றுவிடுகிறார். வழக்கமான முடிவாக இல்லாமல், சற்று சோகமாகவே படம் முடிந்திருக்கும். தேவையற்ற இந்த 'சென்டிமென்டல்' முடிவு அடுத்தப் படங்களில் தொடரவில்லை...( நல்லவேளை தப்பிச்சோம் ).


மூன்றாவதாக வந்து ஜேம்ஸ்பாண்ட் நாயகனை உலகமெங்கும்  கொண்டு சென்று சேர்த்தவர் ,  'ரோஜர் மோர்'. 1972 முதல் 1985 வரை ஏழு படங்களில் அந்த நாய வேடத்தில் சாகசங்களை செய்தார்.  'லிவ் என்ட் லெட் டை" திரையில் அந்த இயந்திர படகு விரட்டும் காட்சிகளை உண்மையான பாண்ட் பிரியர்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பார்கள். அதில் இன்னொரு காட்சியும் நம்மைக் கவர்ந்தது. ஒன்றன் பின் ஒன்றாக முதலைகள் வரிசையில் நிற்க அதன் மேல் பாண்ட் ஓடி தப்பிப்பது போன்று வரும் காட்சியும் நம்மை பரவசப் படுத்தியது.  இவரின் படங்களில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும். வில்லன்களை அடித்து நொறுக்கும் அந்த குணம் எப்போதும் இருப்பதில்லை. இதுவரை வந்த ஜேம்ஸ்பாண்ட்களில் இவர்தான் ரொம்பவும் அழகானவர்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்பே இவர் 'தெ பெர்சுவேடர்ஸ், தெ சேய்ன்ட்' போன்ற தொலைகாட்சித் தொடர்களில் பிரபலமாக தோன்றியவர்.



டிமோதி டால்டன் 1986 முதல் 1994 வரை ஜேம்ஸ்பான்ட் ஆக நடித்தார். இவரும் ஷாவ்ன் கோனரியைப் போலவே சீரியசான நடிகர். இவரின் லைசன் ஸ் டு கில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.


1995 முதல் 2005வரை ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்க வந்தவர் 'பியர்ஸ் புரொஸ்னன்'. இவரை கம்ப்யூட்டர் நாயகன் என்றும் அழைப்பதுண்டு. காரணம் இவர் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் போது தான் கம்ப்யூட்டர், இன்டெர் நெட் என பெரிதாக பேசப் பட ஆரம்பித்தது. இளம் வயதினரை கவரும் வண்ணம் காட்சியமைப்புக்களும் மாற்றியமைக்கப் பட்டன. நான் கு படங்களில் இவர் நடித்திருந்தார்.


2005 க்கு பிறகு இன்றுவரை புதிய பாணியில் துப்பறியும் நுணுக்கங்களைக் கொண்டு விறு விறு நடையில் ஜேம்ஸ்பாண்டாக வளம் வருபவர் டேனியல் கிரேக். இவரின் முதல் பாண்ட் படமான கசினோ ரோயல் புதிய தலைமுறையை வெகுவாகக் கவர்ந்த படங்களில் ஒன்று. அதன் தொடக்க காட்சிகள் பாண்ட் நாயகனின் புதிய பரிமாணத்தைக் வெளிப்படுத்தியது.

( மேலுள்ள படங்கள் : சில இணையத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை )

No comments:

Post a Comment