Sunday 7 October 2012

தவறு செய்யாதவர்களா மருத்துவர்கள்? ...2

ஓவ்வொரு நாளும் புதுப்புது மருந்துகளாக நிறுவனங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில், அவற்றை மருத்துவர்கள் திடமான காரணத்துக்காக பயண்படுத்தாவிடில், அவை கொண்டுவரும் எதிமறை மாற்றங்கள் நீரிழிவு, இருதய நோய் மற்றும் சில வகை வாத நோய்களால் பாதிக்கப்பட்டிருப்போபோருக்கு பல பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு சில நோய்களுக்காக நாம் தினமும் சாப்பிடும் மருந்துகளுடன் புதிதாக வேறு காரணங்களுக்காக நாம் உட்கொள்ளவேண்டிய மருந்துகளும் ஒன்றிப்போக வேண்டும். இல்லையேல் பக்க விளைவுகளின் காரணத்தினால் நம் உடல் நிலை இன்னும் பலவீனப்படும்.

புதிதாக வெளிவரும் மருந்துகளோடு அவற்றுடன் ஒவ்வாத மருந்துகளின் பெயர்களும் அவற்றினூடே இருக்கும். ஆனால் அவை எழுத்தில் மிகச் சிறியதாக  இருக்கக்கூடும். கண் நன்றாக இருப்பவர்களுக்கூட அவற்றின் அளவை பெரிது படுத்தி படிக்க  நேரிடும். கண் கண்ணாடி மட்டுமல்ல, 'பூதக் கண்ணாடி" என்பார்களே, அதுவும் சில வேளைகளில் தேவைப்படும்.  பலர் இதில் கவனம் செலுத்துவதில்லை. மருத்துவர்களும் இதை நோயாளிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை. சொல்லக்கூடாது என்பதனல் அல்ல, ஒரு அலட்சியத்தில் மறந்திருக்கலாம். இதையறியாது இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது தோன்றும் ஒவ்வாமைக்கு அவை தனி நோயென பின்னர் மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதித் தரவேண்டிய நிலை வரும்.  இப்படி நடப்பதையும் நான் நிறையவே பார்த்திருக்கிறேன்.

மருந்துகள்  உட்கொள்ளுவதே ஒரு பெரிய நோயாகிப் போவதும் உண்டு.

பலவகை மருந்துகளை சாப்பிடும் சூழ் நிலையில் மருத்துவர்கள் அவற்றோடு, வாயுத் தொல்லைகளிருந்து நிவாரணம் பெற மாற்று மருந்தொன்றையும் இணைத்திருப்பார்கள். இதனால் 'கேஸ்ட்ரிக்' போன்ற தொந்தரவுகள் தோன்றாது. ஆனால் இந்த 'கேஸ்ட்ரிக்' தடுப்பு  மருந்து சேர்ந்து வராத நேரத்தில்  வயிற்று வலி போன்ற  அசௌகரியங்களுக்கு ஆளாக நேரிடும்.

பின் என்ன...? மருத்துவர்தான்... அவர் கொடுக்கும் மருந்துச்சீட்டுதான்... கை கொடுக்கும்.

உயிரே போவது  போல தோன்றிடும் இவ்வலியினால் அதை நிறுத்துபவர் நமக்கு கடவுளாகிவிடுவார். பல 'போலிக் கடவுள்கள்' தோன்றியது இப்படித்தான்.

நன்றாக கவனமுடன் பார்த்தால், அடிப்படை தவறே மருத்துவரிடம் அல்லது மருத்துவ மனையிலிருந்துதான் தொடங்கி இருக்கும்.

அனுபவம் இல்லாததனால் நம்மால் தவிர்க்க முடியாதவை இவை. அனுபவம் மட்டுமே இதை நமக்குச் சொல்லித்தரும். ஒருவேளை, இதுபோன்றவற்றில் முன் அனுபவம் இருப்போர் நமது நண்பர்களாக இருந்தால் தப்பிக்க ஒரு சந்தர்ப்பம் உண்டு.

உண்மையைச் சொன்னால், பல வேளைகளில் எனது மருத்துவ நண்பரே என்னை இது போன்ற பல இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றியவர். தமிழ் தெரியாத அவருக்கு என்னுடைய இந்த பதிவை படிக்க நேராமல் போகலாம். அப்படி மற்றவர் துணையுடன் இதை படிக்க நேர்ந்தால், அவருக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு அவர் கிடைத்தது போல் எல்லோருக்கும் நல்ல மருத்துவர்கள் நண்பர்களாக கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். ( எல்லா மருத்துவர்களும் நேர்மையோடு நன்னெறியில் தங்கள் பணியைச் செய்தால் ஏன் இந்த வேண்டுதல்...)

நோய்களைப்பற்றிய மேல் ஆராய்ச்சிகளை மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களே பல நேரங்களில் பொருள் உதவிகள் செய்து ஏற்று நடத்துகின்றன. அவர்களின் இந்த கரிசனைக்கு நல்ல காரணம் உண்டு. நோய் தீர்க்கும் நிலை அறிந்து நல்ல பெயர் வாங்கிட அல்ல. அவற்றுக்கான மருந்துகளை கண்டறிந்து அவற்றை தயாரித்து விற்று பணம் சம்பாதிக்கவே என்பது பலருக்கு தெரிந்திருக்கமல் இருக்கலாம். விற்பனைக்கு ஏற்ற மருந்துகளையே அவர்கள் தேர்வு செய்கிறார்கள் இதைப்போன்ற ஆராய்ச்சிகள் மூலம். தரத்தில் உயர்ந்ததானாலும் 'மார்கெட்' இல்லாதவற்றில் இவர்கள் ஆர்வம் கொள்வதில்லை.

நோயின் அறிகுறிகளையும் காரணங்களையும் கேட்டவுடன் அதற்கான சிகிச்சை முறையினை உடனே சொல்லும் தனித்தன்மை கொண்ட மருத்துவர்கள் பலர் இருந்தனர் அன்றைய பொது மருத்துவ மனைகளில். நம் நாட்டில் இப்போது அப்படி யாரையும் காணோம்.

புதிதாக மருத்துவராக பதவி ஏற்ற ஒருவரை என்னுடைய மருத்துவ நண்பரும் நானும் உணவருந்தும் போது சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம். அவரின் புள்ளி விவரப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு சராசரி நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை அவர் பார்க்கவேண்டி இருக்கிறது. மற்ற வேலைகளோடு சுமார் ஐந்து மணி நேரம் அவர் நோயாளிகளோடு செலவிடுகிறார். அப்படியானால் அவர் தனி ஒரு நோயாளிக்கு செலவிடும் நேரம் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களே.

இந்த குறுகிய நேரத்தில் அப்படி என்ன பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்து ஒருவருக்கு
நோயில் இருந்து விடுதலை அளித்துவிடப் போகிறார்? சளிக் காய்ச்சலைத் தவிற வேறு எதற்கும் இந்த நேரத்தில் நிவாரணம் சொல்லிவிட முடியாது.

ஆக, 'ஏதோ மருத்துவமனைக்கும் போனோம், மருந்தெடுத்தோம், சாப்பிட்டோம்... அடுத்ததை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்..." என்னும் மன நிலையிலேயே மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள் இப்போது.

இங்கு மருத்துவர்களை குறை சொல்ல முடியாது என வாதிட்டாலும், இதே போன்ற சூழ் நிலைக் கைதிகளாக அவர்கள் மாறும் போதுதான், தங்கள் சேவையின் புனிதத்தன்மையை அவர்கள் இழக்க நேரிடுகிறது. வேலை பலுவினால் நோயாளிகளை முழு கவனமுடன் பார்க்க இயலவில்லை என பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். இது அவர்களுக்கு, அவர்களின் பார்வையில் சரி எனப் பட்டாலும், ஒரு நோயாளிக்கு இப்படி நேர்வது ஞாயமில்லாத ஒன்றல்லவா?

அடுத்தமுறை நீங்கள் மருத்துவரைக் காணச் செல்லும்போது அவரை நன்கு கவனியுங்கள். நோயின் அறிகுறிகளை நீங்கள் சொல்லச் சொல்ல அவர் கை அவசர அவசரமாக எதையோ எழுதிக்கொண்டே இருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. நீங்கள் சொல்லுகின்ற நோயின் அறிகுறிகளுக்கு அவர் எழுதும் மருந்துகளே அவை. மருந்தெழுதும் அந்தக் காகிதக் கட்டையும், பேனாவையும் அவரிடமிருந்து பிடுங்கி விட்டால்    அவர்  அடுத்து என்ன செய்வதென்றறியாது செயலிழந்து போவார்.





No comments:

Post a Comment