Tuesday 5 March 2013

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கலாமா?

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கலாமா என்பது இன்று நேற்றல்ல சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்ட ஒரு விவாதம்.

" நாங்களும் அடி வாங்கி இருக்கிறோம். அதன்படித்தான் படித்து முன்னுக்கு வந்திருக்கிறோம்" எனச் சொல்வோர் மத்தியில்,
"அடிப்பது காட்டுமிராண்டித்தனம். பயத்தினால் படிப்பை வரவழைக்க முடியாது. வார்த்தைகளினால் கட்டுப்படாத மாணவனை  அடிப்பதனால் அவன் அடங்கிப் பொய் படிப்பான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனச் சொல்வோரும் இருக்கவே செய்கிறார்கள்.

பெற்றோருக்கு அடுத்து கல்வி கற்றுத்தரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு உயர்ந்த இடம் நம் இந்திய சமூகத்தில் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது.  இதில் பாலர் பள்ளி ஆசிரியர்கள் முதல் பல்கலைகழக விரிவுரையாளர்கள் வரை அடங்குவர்.

மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு அவர்களின் ஒழுக்கத்தை நிலை நாட்டவும், குற்றம் குறைகளை களையவும் அந்தந்த கால கட்டங்களில் ஆசிரியர்கள் தங்களின் சிறந்த ஆளுமையின் மூலம் கண்டித்தலையும் ஒரு அங்கமாகவே கல்வி பாடத்திட்டத்தில் வகுத்து வைதிருந்திருக்கின்றனர்.

தவறு செய்யும் மாணவர்களை திடலைச் சுற்றி ஓடச்செய்வதும், ஒருவர் காதை மற்றவர் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வதும், " இனி நான் தவறு செய்ய மாட்டேன்" என பத்து பக்கங்கள் எழுதச் சொல்வதும் அன்றைய நடைமுறையில் இருந்தச் சில கண்டிப்புகளாகும். இவற்றுக்குச் சிகரம் வைதாற்போன்றதுதான் 'பிரம்பால் அடித்து மாணவர்களை அச்சுறுத்தியது."

ஆனால், அவை தற்கால கல்வித்திட்டத்திற்கு ஏதேனும் பங்காற்றுகின்றதா எனும் கேள்விக்குத்தான் விடை தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம்.

'ஆமாம்' என்போர் ஒரு பக்கமும், 'இல்லை' என்போர் மறுபக்கமும் தங்களின் கூற்றினை தினம் தினமும் முன் மொழிந்தவாறு இருந்து கொண்டே இருக்கின்றனர். சரியென எடுத்துக்கொள்வதும் தவறென தவிர்த்து விடுவதும் கல்வி கற்பிப்போருக்கு மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோருக்கும் ஒரு பெரிய தலைவலியாகவே இன்னும் இருக்கிறது.

கால நேர வித்தியாசமின்றி ஆசிரியர்கள் பள்ளியிலும் வெளியிலும் மாணவர்களின் வழிகாட்டிகளாக போற்றப்பட்டனர் அன்று. மனச் சோர்வு, ஸ்கூல் ஃபோபியா போன்றவை அன்றைய மாணவர்கள் கேட்டறியாத சில வார்த்தைகளாகும்.

அன்றைய குடும்பச் சூழலில் பள்ளிபிள்ளைகளின் எதிர்காளம் பெற்றோரை விட ஆசிரியர்களை சார்ந்ததாகவே இருந்தது.  பள்ளிப் படிப்பில் அறிவும், அனுபவமும் குறைந்திருந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல ஆசிரியர்களையே பெரிதும் நம்பி இருந்தனர். அதற்காக தங்கள் பிள்ளைகள் அடிவாங்கினாலும், அது அவர்களை நல்வழிப் படுத்தத் தான் என்றே அவர்களுக்குப் பட்டது. ஆசிரியர் அடித்தார் என வீட்டுக்கு வந்து சொன்னாலே இன்னும் அதிகம் அடி விழும் பெற்றோர்களிடமிருந்து.

இதற்கு பயந்து கொண்டே ஆசிரியர்களுக்கு பணிந்து அவர்களிடம் அடிவாங்காமல் அவர்கள் சொல் கேட்டு படித்து பட்டம் பெற்றனர். பட்டம் பெறாதோர் கூட நல்ல பண்பினை வளர்த்துக் கொண்டனர்.

இது அன்றைய நிலை. அடிப்பது மாணவர்களை நல்வழிப்படித்தி ஒழுக்கமாக கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவே என எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒன்று.

இன்றோ, காலச் சக்கர மாறுதல்களால், அதிலும் மேல் நாட்டு கலாச்சார ஊடுருவலால், தொடர்புத்துறை, தொலைக்காட்சி போன்றவற்றின் வளர்ச்சியினால், மக்களின் சிந்தனைகளில்  மாறுதல்கள் வரத் தொடங்கிவிட்டன. மனித நேயம் பேசுவோர் அதிகரித்து விட்டனர். அறிவில்லா மாணவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களை அடக்கி ஆளக்கூடாது  என வசனம் பேசுவோர் பெருகிவிட்டனர்.

மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்படுத்த வேறு அனுகுமுறைகளை முயற்ச்சிக்கிறார்கள் இப்போது. இதையெல்லாம் கடந்து மாணவர்களுக்கு கல்விகற்றுத் தரும் நிர்பந்தம் ஆசிரியர்களுக்கு பெருகிவிட்டது. அடிக்கவும் கூடாது, அறிவும் புகட்டவேண்டும்...தேர்விலும் வெற்றி பெறச்செய்யவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு கூடிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இது இப்படி இருக்க, திறமையற்ற ஆசிரியர்கள், மாதா மாதம் வருமானம் வந்தால் போதும் என மாணவர்களை அலட்சியப் படுத்தும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரின் தேவையற்ற கட்டுப்பாடுகள் போன்றவை அதிகம் தோன்றத் தொடங்கி விட்டன.

இந்தச் சாராருக்கு மாணவர் நிலை அப்படி ஒன்றும் பெரிதாகப் படுவதில்லை. ஒழுக்கத்தைப் பற்றி அவர்களுக்கே சரிவரத் தெரியாத போது மாணவர்களை எப்படி முறை படுத்துவர்?

இப்படி பலவற்றுக்கும் நடுவே மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கலாமா என்னும் விவாதம் இன்னும் மக்களிடயே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


No comments:

Post a Comment