Tuesday 19 March 2013

"பெட் சோர்" எனப்படும் படுக்கைப்புண் ...

 இது பற்றி பலருக்கு தெரிந்திருக்காது.   எழுந்து அமர முடியாத, எந்த நேரமும் படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகள் யாரேனும் தங்கள் குடும்பத்தில் இருந்தால், அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் இந்த படுக்கைப்புண் பற்றி.

நோயாளியின் முதுகுத்தண்டின் கீழ், பெல்விக் பகுதியில் இருந்தே இந்த புண் ஆரம்பிக்கிறது என்கிறார்கள்.  ஆயினும், பெல்விக் எலும்புப் பகுதியில் மட்டுமல்லாது, முதுகின் பின்புறத்தோளிலும், மற்ற இடங்களிலும்  இந்த புண் ஏற்படலாம்.

இந்நோய்க்கான காரணங்கள் பல இருந்தாலும், முக்கியமானவை இவை:

    -    வயதானவர்களுக்கு கட்டப்படும் நெப்கின் துண்டில் உள்ள சிறுநீர், மலம் போன்றவற்றை  அப்புறப் படுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தினால் இந்த புண் வரலாம்.

    -    சில நேரங்களில் நோயாளியினை எழுந்து அமரச்செய்யும் செயலின் போது ஏற்படும் உராய்வுகளினாலும் இது ஏற்படலாம்.

    -   உடலில் சற்று புடைத்திருக்கும் பகுதிகள் படுக்கையில் அழுத்தமாக பதிவதால் இங்குள்ள தோளில் புண் தோன்றுகிறது.

    -   எந்நேரமும் படுத்தே இருப்பதனாலும், காற்றோட்டம் குறைவாக இருப்பதனால் ஏற்படும் வியர்வையினாலும்  இந்த படுக்கைப்புண்  சுலபமாக வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மிகச் சாதாரணம் போல தோன்றினாலும் இந்த படுக்கைப்புண்  ஒரு பயங்கர நோயாகும்.  அதிக வேதனை அளிக்கக்கூடையதுமாகும். இதனால் பாதிக்கப்படுவோர் ஒவ்வொரு நொடியும் முனகிக் கொண்டும், வலியின் தாக்கம் தாங்காமல்  ஓலமிட்டவாறும்  தவித்துப்போவர்.

ஆகவே, இந்நோயாளிகளை கவனிப்போர் என்றுமே அலட்சியமாக இருந்து விடக் கூடாது.  ஒரு நாள் கவனக் குறைவாக இருந்துவிட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் உயிர் போகும் விளைவுகளை தோற்றுவித்துவிடும்.

இதை படிக்கும் ஒரு சில நண்பர்கள்  இது உண்மைதானா... படுக்கைப்புண்  உயிரை போக்கும் கொடிய நிலைக்கு இட்டுச் செல்லுமா... என எண்ணலாம். என் அனுபவத்தில் நான் கண்ட, கேள்விப்பட்டவற்றையே இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் அழுத்தப் பட்ட தோள் சிவக்கும்.

பின்பு அங்கு சிறிய புண் போல தோன்றும்.
"அட ஏதோ புண்ணாக இருக்கிறதே ..." என நினைத்தால்,  இந்த புண்ணை ஆற்றுவதற்கே பெரும்பாடாகிவிடும்.  இது ஆரம்பக் கட்டம் மட்டுமே. உடனடி நிவாரணம் தேவை இந்த நேரத்தில்.

 நாம் எல்லோரும் மருத்துவ மனையையே மிகவும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் கொண்டு காட்டிவிட்டால், அடுத்து நம் கடமை தீர்ந்துவிட்டது என்றே மனதில் படுகிறது. படுக்கைப்புண்  இந்த நினைப்புக்கு நேர் எதிரானது. மருத்துவரிடம் காட்டி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாலும், நோயாளியின் நிலை புண் ஆற்றப் படும் வரை நம் கையில் தான் உள்ளது.

தோளில் தொடங்கிய புண், எலும்பினை அடைந்து வெகு ஆழமாக புறையோடிப்போகும். இந்த நேரத்தில், புண்ணை  கவனித்துப் பார்த்தால் அந்த ஆழத்தின் உள்ளே 'மெகட்ஸ்" எனப்படும் புழுக்களும் இருக்கும்.

இந்த நிலைக்கு வந்துவிட்டால், புண் தீவிரம் அடைந்து விட்டது என்று பொருள். அடுத்து நாம் ஏதும் செய்ய இயலாது. மருத்துவர்களின் அறுவை சிகிச்சையே  சிறந்த வழி.  ஆயினும், அதுவும் பலனின்றி உயிரழப்போர் ஏராளம் என்றே அறிகிறேன்.

பொதுவாக வயோதிகர்களையே இந்த படுக்கைப்புண்  வியாதி தாக்குகின்றது.

ஆகவே, நம் வீட்டில் பெரியவர்கள் யாரேனும் இது போன்ற படுக்கையிலேயே இருக்கவேண்டி நேர்ந்தால், ஆரோக்கிய முறைகளின் மூலம் படுக்கைப்புண்  வராமல் பார்த்துக்கொள்வோம். 

அவர்களை பராமரிக்கும் மருத்துவ வசதிகளை இரட்டிப்பாக்கி, காற்றோட்டமான... சுத்தமான... சுகாதாரமான  இடத்தில் படுக்கையிட்டு நம்முடைய நேரடி கண்பார்வையிலேயே அவர்களை வைத்திருப்போம்....


No comments:

Post a Comment