Tuesday 12 March 2013

பேச்சுத் தமிழ். . .

இயல், இசை, நாடகம் எனும் சங்ககாலத் தமிழில், பேச்சும் ஒரு அங்கமாகும்.  எழுத்திலக்கியம் போல பேச்சிலக்கியமும் முக்கிய ஒன்றாக கருதப்பட்டது.

மனிதனின் கண்டுபிடிப்பான எழுத்தாணியும், ஏடும் வருவதற்கு முன்பே இயல், இசை மற்றும் நாடகக் கலை வாய் வழியாக வந்திருக்க வேண்டும் என்பதை யூகிக்க அதிக சிரமமிருக்காது.

ஆனால், எழுதுவதற்கும் பேசுவதற்கும் அதிக வேறுபாடு  உண்டு.  பேச்சுத் தமிழிலில் பிற மொழிகள் அதிகம் கலந்திருக்கும். அவற்றை பிரித்தெடுத்து தூய தமிழில் பேசுவதென்பது சாதாரண மக்களுக்கு நகைப்பைத் தரும்.

"அன்னையே, பசியோடு வந்திருக்கிறேன் ..அன்னமிடுக.." என மகன் கேட்டால் எந்த தாயும் மிரளவே செய்வார்.... " நல்லாத்தானே இருந்தான், இப்போ என்னாச்சி இவனுக்கு...?" என அவர் தலைக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடும்.

கடந்தாண்டு எனது தமிழ் நாட்டு பயணத்தின் போது நான் சந்தித்த அங்குள்ள பலரும் ஆங்கில கலப்பில் தான்  தமிழ் பேசினார்கள்.

" சார், இந்த காப்பி ரொம்ப டேஸ்ட்டா இருக்கும், குடிச்சிப் பாருங்க..."என்றார் ஒருவர்.

" நம்ம பிரெஸ்லெ தி பெஸ்ட் புக்குன்னு சொன்னா அது இதுதான்..." என்று இன்னொரு இடத்தில் ஒருவர் ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்தார்.

" எங்க போகனுங்க... போஸ்ட் ஆபிஸா...?  இப்படியே ஸ்ட்ரெய்ட்டா போயி லெப்ட்டுலெ திரும்புனா அதுதான் போஸ்ட் ஆபிஸ்" என்று வழிகாட்டினார் ஒருவர்.

இதனால் சுருக்கமாகவும், சட்டென்று புரிந்து கொள்ளவும், சொல்வதை தெளிவு படுத்தவும் ஆங்கில கலப்பிலிருந்தாலும் பேச்சுத் தமிழ் உதவுகிறது என்பது தெரிகிறது.

எழுத்துத் தமிழில் இவ்வித கலப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காண்கிறோம்.  அதுமட்டுமல்ல, எழுதுவதென்பது சர்வதேச அளவில் தரப்படுத்தப் பட்டு நடைமுறையில் இருப்பதனாலும், கற்றோரே எழுதத் துணிவதனாலும் எழுத்திலக்கியம் படைப்பிலக்கியமாகும் போது வேற்று மொழிகளின் சிதைவு சற்று குறைந்தே இருக்கிறது.

ஆனல் அதே நேரம், உச்சரிப்புகளில் கோட்டை விட்டு மொழிச் சிதைவுக்கு வித்திடுவோரும் நம்மிடையே அதிகமானோர் இருக்கின்றனர். 

வாழைப்பழக்கதை நம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.  கிராமங்களில் "வாயப் பயம்" என்றே இன்னமும் அழைக்கிறார்கள். யாரும் உச்சரிப்புக்கு அதன் மரியாதையை தந்து பேசுவதாக காணோம்.  "வாலைப் பலம்" அல்லது "வாலை பளம்" என்று சொல்வோரே அதிகம். ஆசிரியர்களும், தமிழை சரிவர கற்றுத் தேர்ந்தவர்களும் மட்டுமே "வாழைப் பழம் " என முறையாக சொல்கிறார்கள். பேச்சுத் தமிழில் உள்ள பலவீனம் இது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், எழுதும் போது பொதுவாக அனைவரும் "வாழைப் பழம்" என்றே எழுதுகிறோம்.

 நல்ல உச்சரிப்பு என்பது ல, ள, ழ எழுத்துகளின் ஒலியினை சீர் செய்துவிடும் தன்மை கொண்டது.

 நகைச்சுவைக்காக சினிமாவில் காட்டினாலும்,
" இது யார் தைத்த சட்டை
  என் தாத்தா தைத்த சட்டை..."

மற்றும்,
" ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான்,
அந்த கிழ நரி முதுகில ஒரு பிடி நரை முடிதான்.."

போன்ற வாக்கியங்களை வேகமாக விறு விறு நடையில் சொல்லிப் பழகினாலே அதன் வேறுபாடுகள் புரிந்து விடும். நமது உச்சரிப்பு சிறக்க நல்லதொரு பயிற்சியுமாகும் இது.

எனது நண்பரின் குழந்தை கார்மேகங்களைக் கண்டதும்,
"மலை வருது மலை வருது..."
என துள்ளிக் குதிப்பார்.

 நான் நண்பரை பார்த்ததும்,
" அது ஒன்னுமில்ல, பயப்படாதீங்க.  மலை வராது.... ஒருவேளை மழை வேண்டுமானால் வந்தாலும் வரலாம்..." என தனது குழந்தையின் தற்காப்புக்கு போவார்.

மலை வருமா... மழை வருமா...???

 காவியங்கள் நூல் வடிவில் என்றைக்குமே இருக்கும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், பேச்சுத் தமிழை முறையாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்காவிட்டால், 'வல்லினம் மெல்லினம், இடையினம்' என்பன இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் பெருகிவிடும்.


No comments:

Post a Comment