Friday 9 December 2011

எண்ணங்கள் ஆயிரம்...6

நண்பர்கள் பலவிதம்.

நமக்குத்தெரியாத ஒன்றல்ல இது.

நல்லது கெட்டது என சீர்தூக்கிப்பார்த்த பின்னே அவர்களுடன் நாம் தொடர்ந்து நட்பாக பழகிவருகிறோம்.

ஆயினும் நெடு நாள் நட்புகூட சில நேரங்களில் நமக்கொரு மனச்சுமையாக மாறிவிடுகிறது. நண்பர்கள் பகைவர்கள் ஆகிறார்கள்.

யாருக்கு யாரும் சளைத்தவர் அல்ல என்பது போல மாற்றி மாற்றி குற்றங்களையும் குறைகளையும் கூறிக்கொள்வர்.  இது சகஜமாக நடைமுறையில் உள்ள ஒன்றுதான்.

இப்படி கசந்துபோகும் நட்புக்கு உண்மையில் யார் அல்லது எது காரணம்?

" நாம் எவ்வளவு செய்கிறோம் எப்படி அன்பாக நடந்துகொள்கிறோம். இப்படி நேர்மையாக நாம் பழகும்போது அவர்கள் நம்மைப்போல நடந்துகொள்ளவில்லையே என்னும் அதிக எதிர்ப்பார்ப்பின் காரணமோ என்னவோ...?"

 நட்பு என்பது ஒரு இருவழிப்பாதை. கொடுக்கல் வாங்கல் என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சுமூகமான குடும்ப சூழ் நிலையில் ஒருவருக்கொருவர் எந்த லாபமும் பார்க்காமல் பழகுவதிலும் இருக்கவேண்டும். 

நட்பின் நற்பண்புகளை பொதுவில் வைத்து அதன்படி இருவரும் நடக்கவேண்டும். சாலை போக்குவரத்தில் மட்டுமல்ல, நட்பிலும் சட்ட திட்டங்கள் உண்டு.அந்த  சட்ட திட்டங்களின் படி நடந்து கொண்டால் நல்ல நட்பு நீடித்திருக்கும்.

நேரத்தைப் போலவே ஒருமுறை நமது நல்ல நண்பர்களை இழந்துவிட்டோமானால், அவர்களை மீண்டும் திரும்பப்பெற முடியாது. திரும்ப வந்தாலும் அந்த உறவு சிறக்காது. பேங்கில் கறுப்புப் புள்ளி பட்டியலில் நமது பெயர் இருப்பதுபோல மனதில் என்றென்றும் இருந்து சுதந்திரமாக செயல் பட விடாது.

நாம் இழந்துவிட்ட நல்ல நட்பு, திரைப்படங்களில் வருவது போல, வாழ்வின் அந்திம காலத்தில் எட்டி நின்று கவலைப்பட வைக்கும்.

என்றோ  நமக்கு நல்ல நண்பராக திகழ்ந்த ஒருவரின் கடைசி நிமிடத்தில், அவரின் மூச்சு நிற்கும் தருவாயில் ண்கள் பணித்து, இதயம் கனக்க நம்மை தீரா சோகத்திற்கு இட்டுச்செல்லும்...

வேண்டாம்.... இப்படி நம் வாழ்வில் வேண்டாம்... நண்பர்களை நண்பர்களாக நடத்துவோம்.

ING மெடிக்கல் கார்ட் சொல்வது போல, தேவையின் போது ஓடி வந்து உதவும் உற்ற துணையாக நாம் இருப்போம்.

மலேசியாவின் சிறந்த ஹைவே ரோடுகளைப்போல நாமும் இருபக்க நல்லுணர்வுகளை பேணிக்காத்துச் சிறப்புடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment