Monday 22 August 2011

எம்ஜிஆர் & கண்ணதாசன் - 9


 காதல் தோல்விகளால் கண் கலங்கும் இன்றைய இளைய சமுதாயத்திற்கும் இப்பாடல் ஆறுதல் தரும் அருமருந்துதானே!
ஒன்று எங்கள் ஜாதியே!

எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஓரினம்
 எல்லாரும் இந்திய மக்கள்!
 எல்லாரும் ஓர் நிறை! எல்லாரும் ஓர் விலை!
 எல்லாரும் இந்நாட்டு மன்னர்!….”

என்ற மகாகவி பாரதியாரின் மந்திரச் சொற்களுக்கு, மதிப்பளித்துப் போற்றியவரே நம் கவியரசர்.

 ‘பாரதி எந்தக் காலத்துக்கும் பிரிதிநிதி!’ என்று சொன்ன கண்ணதாசனே, தன் எண்ணத்தில், பாரதியின் கருத்துகளையே என்றும் சொல்லிடத் துடிக்கும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் மனநிலையை அறிந்து, மக்கள் என்றும் போற்றும் பாடலொன்றைப்பணக்காரக் குடும்பம்படத்தில் படைத்தார்.

 அந்த அமுதப்படையலை இப்போது நாம் செவிகளுக்கு உணவாக்கிக் கொள்வோமா?….

ஒன்று எங்கள் ஜாதியே!
 ஒன்று எங்கள் நீதியே!
 உழைக்கும் மக்கள் யாவரும்
 ஒருவர் பெற்ற மக்களே!
 வெள்ளை மனிதன் வேர்வையும்
 கருப்பு மனிதன் கண்ணீரும்
 உப்பு நீரின் வடிவிலே
 ஒன்று சேரும் கடலிலே!….”

 சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கிட உறுதி கொண்டெழும் இத்தகு கருத்துகளை யார் சொன்னால் மக்கள் வரவேற்பார்கள்? இந்த வினாவிற்கான மூலத்தையே அறிந்தவர் அல்லவா கண்ணதாசன்!

 அதனால்தான், புகழ்மிக்க பொன்மனச் செம்மல், சொல்லி நடிக்கும் காட்சிக்கென்றே இப்பாடலை, கவியரசர் உருவாக்கினார்.

 உருவான பாடலின் மீதியையும் பார்ப்போம்!…..

ஆதிமனிதன் கல்லையெடுத்து
 வேட்டையாடினான்!
 அடுத்த மனிதன் காட்டையழித்து
 நாட்டைக் காட்டினான்!
 மற்றும் ஒருவன் மண்ணிலிறங்கி
 பொன்னைத் தோண்டினான்!
 நேற்று மனிதன் வானில் தனது
 தேரை ஓட்டினான்!
 இன்று மனிதன் வெண்ணிலாவில்
 இடத்தைத் தேடினான்! – வரும்
 நாளை மனிதன் ஏழு உலகை
 ஆளப்போகிறான்!….”

 உயர்வான பாடல் உணர்த்துவனவோ….! பல…!

 ஆதிமனிதன் வேட்டையாட,

 அடுத்த மனிதன் நாட்டை உரவாக்கிக் காட்ட,

 மற்றொரு மனிதன் பொன்னையும தோண்ட

 கற்கால மனிதவர்க்கம்நாகரிக நாற்றங்கால்களை நட்டு வளர்ந்து பயிராக்கி, விளைச்சல் கண்ட விவேகமுள்ள வர்க்கமாயிற்று.

 அடுத்த நிலை….

 நேற்றைய மனிதன், வானத்தில் பறந்து செல்லும்

 விமானத்தேரை ஓட்ட,

 இன்றைய மனிதன் வெண்ணிலாவில்

 இறங்கி இடம் தேட,

 நாளைய மனிதனோ, ஐந்து கண்டங்களாம்

 உலகங்களையும், அவற்றின் மேலும், கீழும்

 உள்ள உலகங்களையும் ஆளப்போகின்றான்!

 இவையெல்லாம் உண்மையானே!

 கைகளிலே செல்ஃபோனை வைத்துக்கொண்டு, உலகையே வீட்டிற்குள் வரவழைத்து, இணையதளத்தோடு இதயங்களையே பகிர்ந்து கொள்ளும் மானுடவர்க்கம் எவற்றையும் சாதிக்கலாந்தானே!

 இன்னும் பாடல் சொல்லும் இனிய கருத்துகள் எவ்வளவோ….!

மன்னராட்சி காத்து நின்ற
 தெங்கள் கைகளே!
 மக்களாட்சி காணச்செய்த
 தெங்கள் நெஞ்சமே!
 எங்களாட்சி என்றும் ஆளும்
 இந்த மண்ணிலே!”

 ஆமாம்!….

 மன்னர்கள் ஆள, அவர்களது ஆட்சிகளைக் காப்பாற்ற்க கைகளில் வேலும், வாளும் தாங்கிப் போர்க்களங்களில் எதிரிநாட்டுப் படைகளை வென்று, காத்து நின்றன கைகளே!

 காலமாற்றங்களில் மக்களாட்சியை மலரச் செய்து மகிழ்ந்ததும் மக்கள் நெஞ்சங்களே!

 இந்த மக்களாட்சியாம் எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே!

 எங்கள் ஆட்சி என்றும் ஆளும்

 இந்த மண்ணிலே!’ – என்ற வரிகள்,

 1967 – ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி அமைந்தபோதும், 1977 – ஆம் ஆண்டு, அண்ணா தி.மு.கழக ஆட்சி அமைந்த போதும், திரையரங்குகளில் பெற்ற வரவேற்பு அளப்பரியது எனலாம்.

 அடுத்து,

கல்லில் வீடுகட்டித் தந்த
 தெங்கள் கைகளே!
 கருணைத் தீபம் ஏற்றிவைத்த
 தெங்கள் நெஞ்சமே!
 இல்லையென்ப தில்லை நாங்கள்
 வாழும் நாட்டிலே!….”

 ஆமாம்!…

 கற்களால் வீடு கட்டித் தந்தது உழைக்கும் மக்களின் கரங்களே! கருணை எனும் தீபத்தை ஏற்றி வைத்ததும் அவர்களின் உயர்ந்த உள்ளங்களே!

 (இந்த எண்ணங்கள் இல்லாததால்தானே, இன்று இனச் சண்டை, மதச்சண்டைகள் பரவி, பாரத நாட்டின் ஒற்றுமைக்கே, புதிதாய் முளைத்துள்ள தீவிரவாதங்கள் அச்சுறுத்தல்களாய் அமைந்துள்ளன. அவற்றை வீழ்த்த மக்கள் மனங்களில் ஒற்றுமை உணர்வுகள் ஓங்கிட இதுபோன்ற நல்ல பாடல்கள் திரைப் படங்களில் காட்சிகளாய் இனியேனும் விரியட்டும்மே!)

 இறுதியாக,

 ‘இல்லை என்பதே இல்லை நாங்கள் வாழும் நாட்டிலே!’ – என்று கூறி, தேச ஒற்றுமைக்கும், தேசத்தின் பெருமைக்கும் அல்லவா இப்பாடல் கட்டியம் கூறுகிறது.

 திரையில், புரட்சி நடிகரும், அவரது தங்கையாக நடிகை மணிமாலாவும் மிதிவண்டிகளில் வலம் வந்து, இப்பாடல் காட்சியில் தோன்றும்போது, பார்க்கும் மக்களும் பரவசத்தில் அல்லவா மிதந்தார்கள்.

 பாடலை, டி.எம். சௌந்தரராஜனோடு, தனது கவர்ச்சிக் குரலில் எல்.ஆர். ஈஸ்வரியும் சேர்ந்து பாடிப் புகழ்க்கொடியையே ஏற்றிக்கொண்டட பொன்னான காலமே அந்தக் காலம்.

 புரட்சி நடிகரை இப்படித் தன் பார்வையால் அளந்து பார்த்து, அவர் தம் படங்களில் சிறந்த பாடல்களை எழுதிய கவியரசரை எந்த நாளும் இந்த பூமியின் மனித மனங்கள் மறந்திடுமோ!

 ஆக, 1964 – ஆம் ஆண்டு வெளிவந்தவேட்டைக்காரன்’ ‘பணக்காரக் குடும்பம்படப்பாடல்கள் இன்னும் வெற்றிகரமாய் ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

 1967 – ஆம் ஆண்டுத் தேர்தலில், பெருந்தலைவர் காமராஜரே, “அந்த வேட்டைக்காரன் கிட்ட ஜாக்கிரதைய்யா இருக்கணும்ன்னேன்! ஜனங்க எல்லாம் அந்த வேட்டைக்காரன் மேலேதான் ரொம்பப் பாசமா இருக்காங்கண்னேன்!” என்று கூறும் அளவுக்கு, எம்.ஜி.ஆரின் புகழ் விசுபரூபம் எடுத்து, எங்கும் பரவியிருந்தது.

 ‘என் கடமை’, ‘தாயின் மடியில்படங்களில் கவிஞர் எழுதிய பாடல்களில், குறிப்பாகஎன் கடமைபடப்பாடல்கள் இன்னும் இளமை பொங்கும் காதல் கீதங்களாய், ஒலிப்பதைக் கேட்கலாம்.
எழுதாத நிலையில் எழுந்த
 ஒரே கீதம்! உரிமை கீதம்!

 1965 – ஆம் ஆண்டு புரட்சி நடிகர் நடித்து வெளிவந்த ஏழு படங்களில் இரண்டில் மட்டுமே கவியரசர் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

 அவை: ‘ஆயிரத்தில் ஒருவன்
 ‘தாழம்பூ

 இவற்றிலும், ‘ஆயிரத்தில் ஒருவன்படத்தில் மூன்று பாடல்களையும், ‘தாழம்பூபடத்தில் மூன்று பாடல்களையும் மட்டுமே எழுதினார்.

 இதற்கெல்லாம் என்ன காரணங்கள்?

 1961 – ஆம் ஆண்டு, தி.மு.கழகத்தை விட்டு வெளியேறிய கவியரசர், .வி.கே. சம்பத் தலைமையிலான தமிழ்தேசியக் கட்சியைத் தொடங்கிய முக்கியத் தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார். அந்தத் தமிழ்தேசியக் கட்சி, பெருந்தலைவர் காமராஜர் முன்னிலையில், காங்கிரஸ் பேரியக்கத்தில் 1964 ஆம் ஆண்டு இணைந்தது.

 இதன்பின்னர், காங்கிரஸ் மேடைகளில் கவிஞர் கண்ணதாசனின் முழக்கங்கள் தி.மு.கழகத்தை திக்குமுக்காட வைத்தது. அறிஞர் அண்ணாவும், ஏனைய தி.மு.கழக முன்னணி யினரும் அவரது முழக்கத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். திராவிட நாடு பிரிவினை முழக்கம் கவிஞரால் கடும் தாக்குதலுக்குள்ளானது.

 இந்த நிலையில்தான் புரட்சி நடிகரின் படங்களில் பாடல்கள் எழுதும் பொறுப்பிலிருந்து கவிஞர மெல்ல மெல்ல தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.

 சிவாஜிகணேசன் படங்களில் பாடல்கள் எழுதாத நிலையிலிருந்த கவிஞர், அவர் நடித்த அனைத்துப் படங்களுக்கும் எழுதும் நிலையில் இருந்தார்.

 இத்தருணத்தில்தான் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் புரட்சிநடிகரை வைத்து பி.ஆர். பந்துலு இயக்கியஆயிர்த்தில் ஒருவன், படம் தயாரிக்கப்பட்டது.

 இப்படத்திற்காக மெல்லிசை மன்னர்கள் விசுவநாதம்ராமமூர்த்தி இருவரும் இசையமைத்துக் கொண்டிருந்தனர். இப்படத்திற்குப் பின்னர் இவ்விருவரும் பல்லாண்டுகள் பிரிந்தே இசையமைத்தனர் என்பதும் பலரும் அறிந்ததே.

 பாடல்கள் ஒன்றிரண்டு பதிவாயின. இப்படத்தில்தான் முதன்முதலாக இன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, எம்.ஜி.ஆரோடு இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

 கதாநாயகனும், கதாநாயகியும், அடிமைப்பட்ட வீரர்களோடு சேர்ந்து, உரிமைகீதத்தைக் கப்பலில் பயணிக்கும்போது பாடுவதாக ஓர் பாடலை உருவமைக்க வேண்டும்.

 படத்தின் இயக்குநர் பி.ஆர். பந்துலுவும், மெல்லிசை மன்னர்களும் பாடல் எழுதும் கவிஞர்களோடு பலநாள்கள் கலந்து பேசியும், காட்சியமைப்புகளைக் கூறியும், அவர்கள் விரும்பிய விதத்தில் பாடல் பிரசவமாகவில்லை.

 பி.ஆர். பந்துலுவுகும், மெல்லிசை மன்னர்களுக்கும் கண்ணதாசனை அழைத்துப் பாடலை எழுத வைக்கலாம் என்ற ஆசைகள் இருந்தாலும், மனங்களுக்குள் எழுந்த அச்சம் தடுத்தது.

 ‘எம்.ஜி.ஆர். என்ன சொல்லிவிடுவாரோ?’ என்ற அச்சமே அது. சூழ்நிலையை மெல்ல மெல்ல எம்.ஜி.ஆர். அறியும் நிலை ஏற்பட்டது.

 எம்.ஜி.ஆரோ, பி.ஆர். பந்துலுவிடம், ‘பாடலை ஆண்டவன் எழுதுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது!’ என்று சொன்னவுடன் பந்துலுவுக்கும், மெல்லிசை மன்னர்களுக்கும் பேரானந்தம் ஏற்பட்டது.

 (எம்.ஜி.ஆர். எப்பொழுதுமே கண்ணதாசனைஆண்டவனேஎன்றுதான் அழைப்பார்.

 உடனே கவியரசருக்கு அழைப்பு, பறந்தது. வந்தமர்ந்த கவிஞரிடம் பாடலின் காட்சியமைப்பு விவரிக்கப்பட்டது.

 அவ்வளவுதான்!…..

 கவியரசர் பாடலைப் பொங்கிவரும் குற்றால அருவியெனக் கொட்டினார். பி.ஆர். பந்துலுவும், மெல்லிசை மன்னர்களும் பலநாள்கள் முயற்சித்தும் கிட்டாத பலனை, எட்டிப்பிடித்த ஆனந்தத்தில் கவிஞரைக் கட்டிப்பிட்த்து முத்தமழை பொழிந்தனர்.

 அப்படியோர் சூழ்நிலையில் பிறப்பெடுத்த பாடல்தான்,

அதோ அந்தப் பறவைப்போல
 வாழ வேண்டும்!
 இதோ இந்த அலைகள்போல
 ஆட வேண்டும்.!
 ஒரே வானிலே ஒரே மண்ணிலே
 ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்!……”

என்ற பாடல்!…. பாடலைக் கண்டீர்களா?

 ‘பறவைகள் சிறகுகளை விரித்துப் பறப்பதற்கும், கடலலைகள் எழுந்து வந்து ஆர்ப்பரித்உத ஆடுவதற்கும் தடைகள் உண்டா? அவற்றிற்குத்தான் எவ்வளவு உரிமைகள்!….

 அவற்றைப் போலவே, ஒரே வானத்தின் கீழ், ஒரே பூமியில் வாழ்கின்ற மக்களல்லவா நாம்! நாமும் ஒரே கீதமாம் உரிமை கீதத்தை, நாம் அடிமையில்லை என்றே உரிமையுடன் பாடுவோமாக! என்ற கருத்துகளைக் கவியரசர் பாடலில் மிதந்து வரச்செய்த பாங்கினைப் பார்த்தீர்கள்….!

 எவ்வளவு பெரிய செய்தியை, எத்தகு எளிமையான சொற்கள் மூலம், எல்லோரும் அறியுமாறு கவியரசர் செய்துவிட்டார்! இதனாலன்றோ இன்னும் அவர் நம் இயதயங்களில் வாழ்கின்றார்.

 பாடலைத் தொடர்வோம்!…..

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே!
 கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே!
 காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே!
 காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே!”

 இவையெல்லாம், இவ்வுலகில் என்றும் உலவும் உண்மைகள்தானே!

 ‘வீசுகின்ற காற்று, இவன் விடுதலை பெற்றவன், இவன் அடிமைப்பட்டவன் என்று பிரித்துப் பார்த்து, தகுதியறிந்தா வீசுகிறது! கடலின் நீரும் இவன் அடிமைப்பட்டவன் என்று, எவனையாவது சுடுகிறதா? ஓடுகின்ற ஒவ்வொரு நொடியும், ‘அடிமைகள் இவர்கள்என்று நம்மில் யாரையாவது விட்டுவிட்டா ஓடுகிறது. அப்படி ஓடும் காலத்தை நாம் யாராவது பார்த்துண்டா? உள்ளத்தில் பொங்கியெழும் காதல் உணர்வுகள், கட்டுக்கடங்காத பாசம், பெற்றெடுத்த தாய்மையின் நேசம் இவையெல்லாம் நம்மை மறந்து இட்டனவா? இல்லை! அவையெல்லாம் நமக்கின்றி நாம் வாழ்கின்றோமா?’ சிந்தியுங்கள் என்கிறார் கவிஞர்! யார் மூலம்….. எம்.ஜி.ஆர் மூலமாகவே!

 சிந்தனைக்கு உரமாகும் பாடலின் தொடர்ச்சியைத் தொடர்வோமே!…….

தோன்றும்போது தாயில்லாமல்
 தோன்றவில்லையே
 சொல்லில்லாமல் மொழியில்லாமல்
 பேசவில்லையே
 வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
 போகும்போது வேறுபாதை போகவில்லையே!”

 சிந்தனைக்கு உரம்போடும் கருத்துகளைக் கவனித்தீர்களா?

 ஒரு மனிதன் தோன்ற வேண்டுமெனில் தாயிடமிருந்துதானே தோன்ற வேண்டும்.

 ஒரு மனிதன் சொற்கள் இல்லாமல், சொற்களால் உருவான மொழியில்லாமல் பேசமுடியுமா?

 வாழ்கின்ற மனிதயினம், வாழ்கின்றபோது பசியில்லாமல் வாழ்ந்திட முடியுமா?

 வாழ்ந்து முடிந்து, இறப்பெனும் இறுதிநிலையை எய்தி, பயணிக்கின்ற மனித உடல் கூட வேறு பாதையில் போக முடியுமா?

 எல்லோர்க்கும் எந்த வழியோ, அத வழிப் பயணந்தானே ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திடக் கூடும்!

 இவையெல்லாம் நிகழ்ந்த, நிகழ்கின்ற, நிகழப்போகும் நிரந்தர நிஊங்கள்தானே!

 சரி! இவையெல்லாம் நிகழும்வரை மனிதர் வாழ்வு எப்படி இருக்கவேண்டும்?

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை!
 கோயில்போல நாடு காண வேண்டும் விடுதலை!
 அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை!
 அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும்
 விடுதலை!”

 இவ்வாறுதான் இருக்கவேண்டும்!…

 “அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!” என்று சொன்னார் ஔவைப் பெருமாட்டி.

 அத்தகு மானிடப் பிறவிதன் உடலில் இருந்து உயிர் விடுதலை பெற்றுச் செல்லும்வரை, ‘ வாழ்வதற்கு அடிமை தடையாக அமையலாமா? அமையக்கூடாது.

 அதனை வலியுறுத்தியே,

கோடி மக்கள் சேர்ந்து வாழவேண்டும்….
 அதற்கு வேண்டம் விடுதலை!
 கோயில் போன்ற புனிதத்தை,
 கோயில் போன்ற பெருமிதத்தை,
 கோயில் போன்ற உயர்வினை….
 நாடு காண வேண்டும்!….
 அதற்கு வேண்டும் விடுதலை!
 மனிதரெல்லாம் அச்சம் அகன்று
 ஆடிப்பாடி மகிழ வேண்டும்!….
 அதற்கு வேண்டும் விடுதலை!’

என்கிறார் எம்.ஜி.ஆர்.

 இத்தகு விடுதலை…. எங்களுக்கோ, எங்கள் நாட்டிற்கோ மட்டுமா வேண்டும் என்கிறார் எம்.ஜி.ஆர்!

 அதுதான் இல்லை!

அடிமைகள் வாழும் பூமியெங்கும்
 வேண்டும் விடுதலை’!

என்கிறார் எம்.ஜி.ஆர்.

 அவர், ‘உரிமைக்குரல்எழுப்பியஉலகம் சுற்றிய வாலிபன்மட்டுமா? ‘புதிய பூமிகண்ட புரட்சித்தலைவர் அல்லவா?

 ஒரே கீதம்!…. உரிமை கீதம்!!….

 எம்.ஜி.ஆரால் முழங்கப்பட்ட விதங்கள் கண்டோம்! அதற்கென தேனில் ஊறிய முக்கனிச் சுவை போன்ற பதம் பதமான பக்குவப்பட்ட சுவையான சொற்கள் நிரம்பி வழிந்த கண்ணதாசனின் பாடல் வரிகளையும் கண்டோம். உள்ளம் மகிழ்ந்தோம்.
கலைச்செல்விக்காகக்
 கவிஞர் தந்த பாடல்!

 புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம்ஆயிரத்தில் ஒருவன்என்பதை நாம் அறிவோம். இப்படத்தில்அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்!’ என்ற பாடலை அருமையாக எழுதிய கவிஞரையே, படத்திற்குத் தேவையான மீதி இரண்டு பாடல்களையும் எழுதுமாறு, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு வேண்டிக் கொண்டார்.

 அவற்றுள் ஒன்றுக்கான காட்சியைப் பந்துலு விவரித்தார். ‘கதாநாயகி ஜெயலலிதாவோ சிறுவயதுப் பெண்; முதன்முதலாக மிகப்பெரும் புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரோடு நடிக்கிறார். அதுவும் நெருக்கமான காதல் காட்சியில் நடிக்கிறார். அக்காட்சியே படப்பிடிப்பில் முதலாவதாக எடுக்கப்படவுள்ளது. எனவே பாடலும் அதற்கேற்ப அமைய வேண்டும்!’ என்றார்.

 கவியரசருக்கா, காட்சியமைப்பிற்கான கானம் எப்படியிருக்க வேண்டும் என்று தெரியாது? ஏற்கனவே கலைச்செல்வியின் தமிழ்க் கலையுலகத்தின் தலைப்பிரசவமான முதல் படமான, ‘வெண்ணிற ஆடைபடத்தின் வெற்றிக்கே மூலகாரணமான பாடல்களைப் பாங்குடன் எழுதியவராயிற்றே கவியரசர்!

 ஸ்ரீதரின் இயக்கத்தில், அவரது தயாரிப்பில் உருவான சித்ராலயாவின்வெண்ணிற ஆடைபடத்தில் கலைச்செல்வி ஜெயலலிதா நடித்த முதல் காட்சி ஓர் அற்புதமான பாடல் காட்சியாகும் அப்பாடல்,

கண்ணன் என்னும் மன்னன் பேரைச்
 சொல்லச் சொல்ல
 கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
 மெல்ல மெல்ல!….”

என்று, கனிவாய் மலர்ந்து, கேட்போர் மனங்களை மகிழ்விக்கும் கண்ணதாசன் பாடலேயாகும்.

 இப்பாடல் காட்சி பற்றி, வெற்றிச் செல்வி ஜெயலலிதாஎன்ற நூலில், பி.சி. கணேசன் குறிப்பிட்டுள்ளவற்றைப் பார்ப்போமா?

 ஜெயலலிதாவெண்ணிற ஆடைபடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். தாயார் சந்தியா ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.

 அந்தப் படத்தில் ஜெயலலிதா நடிக்கும் பாடல் காட்சி முதன் முதலாகப் படமாக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலின் பல்லவி இதுதான்.

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
 கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல

 ஜெயலலிதா தெய்வபக்தி மிக்கவர். அவருடைய வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்பட்ட கல்லையும், முள்ளையும் தெய்வ பக்தி சார்ந்த தனது மன உறுதியால் பூவாக மாற்றி வெற்றிநடை போட்டு வந்திருக்கிறார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படத்தில் அவர் ஏற்ற பாடல் வரிகளே அவருடைய எதிர்கால வாழ்க்கைக்குக் கட்டியம் கூறுவதுபோல் அமைந்துவிட்டன.”

 - ‘வெண்ணிற ஆடைபடப்பாடல் பற்றிய பி.சி. கணேசன் கண்ணோட்டத்தைப் பார்த்தோம்.

 இங்கும் கண்ணதாசனின் வாக்கு வென்ற விதத்தைக் காணலாம். இவற்றைப் பற்றிக்கண்ணதாசன் பார்வையில் காவியத் தலைவிஎன்ற நூலில் விரிவாக நான் எழுதியுள்ளேன்.


 இதனால் கவிஞருக்குள் எழுந்து வரும் பாடல் வரிகள், பலரது வாழ்க்கைக்கும் அனுபவப் பாடமாகவே அமைந்துள்ளன என்பதனை அறியலாம்.

No comments:

Post a Comment