Tuesday 23 August 2011

எம்ஜிஆர் & கண்ணதாசன் - 10


 சரி…. ‘ஆயிரத்தில் ஒருவன்படத்தில் காதல் காட்சிக்கான பாடல் எப்படிப் பிறந்து வருகிறது…?….!

ஆண்: “நாணமோ? இன்னும் நாணமோ? – இந்த
 ஜாடை நாடகம் என்ன? – அந்தப்
 பார்வை கூறுவதென்ன?
 நாணமோ?…. நாணமோ?…..

 பெண்: நாணுமோ? இன்னும் நாணுமோ? – தன்னை
 நாடிடும் காதலன் முன்னேதிரு
 நாளைத் தேடிடும் பெண்மை
 நாணுமோ? ….. நாணுமோ?”

 பாடல் பிறந்து வந்த விதம் கண்டீர்! டி.எம்.எஸ். பி. சுசீலா இருவரின் இன்பக் குரல்களில் ஒலிக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இந்தப் பாடல் தரும் இனிமையை இன்றும் நம் இதயங்கள் குளிரக் கேட்கலாமே!

 இப்பாடல் காட்சியில் முதன்முதலாகப் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும இணையந்து நடித்த பாங்கும், பார்த்தோர் உள்ளங்களைப் பரவசத்தில் மூழ்கச் செய்தன என்பதும் உண்மையே.

 இப்பாடல் காட்சியில், ஜெயலலிதா நடிக்கும்போது, அவரையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் உண்டாகி விட்டது. அதனைப் பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். ‘என்ன? ஏன் இப்படி நடுங்குறே? எதற்காக இப்படியெல்லாம் நடுங்க வேண்டும்? என்றார்.

 எப்படியோ…. பாடல் காட்சியில் ஜெயலலிதா நடித்து முடித்தார். இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அங்கு வந்திருந்த சாண்டோ சின்னப்பா தேவரும், காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும், ஜெயலலிதாவுக்குத் தைரியம் கூறி, ‘தைரியமா நடிக்கணும்மாஎம்.ஜி.ஆரோடு சரோஜாதேவி நடிச்சிருக்கிற மாதிரி நடிக்கணும்!’ என்றும் கூறிச் சென்றார்.

 ஆனால், பாடல் காட்சி திரையில் வரும்போது, கவிஞரின் நாணமோ? இன்னும் நாணமோ?’ என்ற நளின வார்த்தைகளுக்கு ஏற்பவே புரட்சிச் செல்வியின் நடிப்பும் அமைந்திருந்தது கண்டு அனைவரும் பாராட்டினர்

 இப்படிக் கலைச்செல்விக்காக, கவிஞர் தந்த முதல் பாடல்களை எல்லாம் முழுமையான வெற்றி பெற்ற பாடல்களே எனலாம்.

 இதே படத்தில் காதல் ஏக்கத்தில் கதாநாயகன் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதிய, டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ஒப்பற்ற பாடல் ஒன்றும் உண்டு. அதுதான்…..

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ!
 ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ!”

என்று ஆரம்பமாகும் பாடல்.

நாடாளும் வண்ண மயில்
 காவியத்தில் நான் தலைவன்!
 நாட்டிலுள்ள அடிமைகளில்
 ஆயிரத்தில் நான் ஒருவன்!
 மாளிகையே அவள் வீடு
 மரக்கிளையே என் கூடு!…..”

 இப்படித் தொடரும் பாடலை நம் மனங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா? இப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆரின் ஏக்கப் பார்வை கொண்ட நயமான நடிப்பைத்தான் நம் நினைவுகளில் இருந்து நீக்கி விடத்தான் முடியுமா?….முடியாதே!
தாழம்பூவில்கட்டழகன்!

 ஸ்ரீ பாலகுமாரன் புரொடெக்சன்ஸ் தயாரிப்பில், எம்.எஸ். ராம்தாஸ் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், புரட்சி நடிகரும், ‘புன்னகை அரசிகே.ஆர். விஜயாவும் இணைந்து நடித்ததாழம்பூதிரைப்படம் 28.8.1965 அன்று வெளியானது.

 படத்தில் கண்ணதாசனின் முத்தான மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

 அவற்றுள் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

பங்குனி மாதத்தில் ஓரிரவு
 பால்போல் காய்ந்தது வெண்ணிலவு
 தங்கத்தில் மிதந்தது மண்ணழகுஅங்கு
 தனியே தவித்தது பெண்ணழகு!….”

என்று தொடங்கும் பாடல் காட்சியில், தன் இளமைக்காலப் பருவ அழகைப் பக்குவமாய்க் காட்டி கே.ஆர். விஜயா, கவிஞரின் பாடலுக்கு உன்னத உயிரோட்டத்தைத் தந்திருப்பார்.

 பேசும் பெண்ணழகி, கூறுவதைக் கேளுங்களேன்!

காலடி ஒசை கேட்டுவிட்டாள்அந்தக்
 கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்!
 நாலடி நடந்தாள் முன்னாலேஅங்கு
 நடந்தது என்னவோ? பின்னாலே!….”

……கேட்டீர்களா? காலடிஓசை கேட்டுவிட்டாளாம்? யார் காலடி ஓசை? அது அவளுக்குத்தான் தெரியுமே! அந்தக் கட்டழகன்… ‘கட்டான கட்டழகுக் கண்ணா!’ என்றழைக்கப்படும் கட்டழகன் (எம்.ஜி.ஆரின்) முகத்தைப் பார்த்து விட்டாளாம்.

 பார்த்தவுடன்,

நாலடி நடந்தாளாம் முன்னாலே!
 அதன்பின்பு, அங்கு நடந்தது….
 என்னவோ?… பின்னாலே!’

 இதனைக் கூறுவது நாகரிகமில்லையே’….இத்தகு நயத்தக்க நாகரிகமான காதல் பாடலைக் கவிஞர் தந்தால், எம்.ஜி.ஆரின் கட்டழகு முகத்தைப் பற்றிய பாடலைப் பாராமல் நாமதான் பாய்ந்தோட முடியுமா?

 அடுத்து….தூவானந்தான்!…ஆம்!

தூவானம் இது தூவானம் இது தூவானம்
 சொட்ட சொட்டா உதிருது உதிருது!….”

எனத் தொடங்கி,

பூவாடும் இளங் கூந்தலுக்குள்
 புகுந்து புகுந்து ஓடுது!…..”

என நீண்டு செல்லும் பாடலும், நம் செவிகளுக்கு இன்பம் சேர்க்கும் கவிஞரின் பாடலே.

 இன்னும்….!

 ஆண்: “ஏரிக்கரை ஓரத்திலே
 எட்டுவேலி நிலமிருக்கு
 எட்டுவேலி நிலத்திலேயும்
 என்ன வைத்தால் தோப்பாகும்?”

என எழிலான வினாவுடன் தொடங்கி,

 பெண்: “வாழை வைத்தால் தோப்பாகும்!
 மஞ்சள் வைத்தால் பிஞ்சுவிடும்!
 ஆழமாக உழுது வைத்தால்
 அத்தனையும் பொன்னாகும்!….”

 இவ்விதமாகப் பல விடைகளைப் பெற்றுத் தரும் சுவை மிகுந்த கவியரசர் பாடலில்,

 கண்ட கனா பலிக்காதா?
 கதவு இன்று திறக்காதோ?
 நினைத்துவிட்டால் நடக்காதோ?
 நெருங்கிவிட்டால் பிறக்காதோ?….”

 என, அழகின் ஆராதனைகளாய்த் தொடரும், ஆசைமனங்கள் பேசும் பாடலைச் சுவைத்தால் சுவை கூடுந்தானே!
மீண்டும் அதிகமான படங்களில்
 புரட்சித்தலைவர்!

 1966 – ஆம் ஆண்டில் புரட்சித்தலைவர் நடித்த ஒன்பது படங்கள் வெளியாயின. 1963 – ஆம் ஆண்டிற்குப் பின் இந்த ஆண்டில்தான், ஒன்பது படங்கள் வெளியாயின.

 இவற்றுள், அன்பே வா, நாடோடி, நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, தாலி பாக்கியம், பெற்றால்தான் பிள்ளையா உள்ளிட்ட ஆறு படங்களில் சரோஜாதேவியும், முகராசி, சந்திரோதயம், தனிப்பிறவி முதலிய மூன்று படங்களில் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்திருந்தனர்.

 இவற்றுள் நாடோடி, பறக்கும் பாவை, முகராசி, தனிப்பிறவி ஆகிய நான்கு படங்களில் கண்ணதாசனின் பாடல்கள் முழுமையாக இடம் பெற்றிருந்தன.
முகராசிமகராசிபொருத்தம்!

 மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோடு, காதல்மன்னன் ஜெமினி கணேசன் சேர்ந்த ஒரே படம்முகராசிதான். இப்படத்தில் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்தவர் கலைச்செல்வி ஜெயலலிதா.

 ‘முகராசிதிரைப்படத்தை பதின்மூன்று நாட்களிலே தயாரித்து வெளியிட்ட பெருமை தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தையே சாரும். எம்.. திருமுகம் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கண்ணதாசனின் கருத்துமிக்க பாடல்களும் நிறைந்த இப்படம் 18.2.1966 – ஆம் நாளில் வெளியானது. நூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான வெற்றியையும் பெற்றது.

 புரட்சி நடிகரோடு, கலைச்செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த மூன்றாவது படமேமுகராசிஇப்படம் வெளிவந்த இதே ஆண்டில் மட்டும் ஜெயலலிதா நடித்த பதினான்கு படங்கள் வெளிவந்தன. இவற்றுள் தமிழ்ப்படங்கள் மட்டும் ஒன்பது; தெலுங்குப்படங்கள் மூன்று; கன்னடப் படம் ஒன்று; ‘எபிசில்என்ற ஆங்கிலப்படம் ஒன்று.

 இதில் பெரும் வியப்பு என்னவெனில் 1965 – ஆம் ஆண்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்து, சித்திரைத் திருநாளில்வெண்ணிற ஆடைபடமும், அதனையடுத்து மக்கள் திலகத்தோடு இணைந்து நடித்தஆயிரத்தில் ஒருவன்படமும், ‘கன்னித்தாய்படமும்; இவற்றோடு வேறு நான்கு படங்களுமாக மொத்தம் ஏழு படங்கள் வெளியாயின. ஆக நடிக்க வந்த இரண்டே ஆண்டுகளில் ஜெயலலிதாவின் இருபத்தோரு படங்கள் வெளியானது சாதனையல்லவா!

 எனவேதான் இந்த மகராசியையும், எம்.ஜி.ஆரின் முகராசியையும், தனது கருத்துப் பார்வையில் பார்த்த கவியரசர்,

எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்! – இதில்
 எத்தனை கண்களுக்கு வருத்தம்! – நம்
 இருவருக்கும் உள்ள நெருக்கம்இனி
 யாருக்கு இங்கே கிடைக்கும்?….”

என்று, புரட்சித்தலைவரும், தலைவியும் அன்றே பாடல் காட்சியில் பாடித் தோன்றிடும் விதமாகப் பாடலொன்றை எழுதினார்.

 எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எனும் ஜோடி மிகவும் பிரபலமாக இருந்த நேரத்தில், எழுந்த பலதரப்பு விமர்சனங்களுக்கும், கண்ணதாசனின் இப்பாடலே பதிலாக அமைந்தது என்று, அன்றே பலரும் கூறிய கூற்றுகள் இன்று வரை, பொய்க்கவில்லை.

அவர்களது பொருத்தம்!
 இன்றுவரை பலருக்கும் ஏற்படும் வருத்தம்!
 அரசியலில் அவர்களுக்குள் உருவான நெருக்கம்!
 இப்புவியில், இனியும் யாருக்காவது
 கிட்டுமா? யோசியுங்கள்!

எனவே காலக்கவிஞர் தந்திட்ட கவிதை வார்த்தைகள், வாக்குப் பலிதமாக, இன்றும் புரட்சித் தலைவரின் வாரிசு புரட்சித்தலைவியே என்று புவி போற்றிடும் அளவிற்கு உயர்ந்துள்ள உண்மையை யார்தான் மறுக்க முடியும்?’
நீதி சொல்லும் தேதி!

 ‘முகராசிபடத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலை, போலீசாரோடு மாறுவேடத்தில் வந்து கைது செய்யும் காட்சியொன்று.

 அக்காட்சியில் எம்.ஜி.ஆர், நீதி சொல்லிப்பாடும் பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதினார்.

 இப்பாடல் காட்சி, கவியரசரின் உடல்தகனம் செய்யப்பட்ட நாளில் சென்னைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அன்றைய முதல்வராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். சோகத்தோடு கவியரசரின் உடல் அருகே நின்ற காட்சியும், உறையாற்றிய காட்சியும் காட்டப்பட்டது. அந்த நினைவலைகளை நினைவில் நிறுத்திப் பாடலைப் பார்க்கலாமா?

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! -
 இங்கே
 கொண்டுவந்து போட்டவர்கள் நாலுபேரு!
 கொண்டாடும்போது ஒரு நூறு பேரு! – உயிர்
 கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?…”
 பாடலைப் பார்த்தோம்…..!

 அரிய பெரும் தத்துவத்தை, அவருக்கே உரிய பாணியில், எவ்வளவு எளிமையாகக் கண்ணதசன் எழுதியுள்ளார் பார்த்தீர்களா?

பாமரர்க்கும் புரியும் இப்பாடலுக்கு விளக்கம் ஏன்?

உயிர்!… ஒப்பற்ற ஒன்று! உடலெனும்
 கூடுவிட்டு அது போன பின்னே….
 கூட யாரு?’

 இதனைப் புரிந்தவர், தெளிந்தால் ஆடாத ஆட்டங்கள் ஆடுவரோ?

 எந்த மனிதர்க்கும் நிலை இதுதானா?….பார்ப்போம்!

தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்! – இவன்
 தேறாத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்! – பிறர்
 நோய் தீர்க்கும் வைத்தியன்தன்
 நோய் தீர்க்க மாட்டாமல்
 பாய் போட்டுத் தூங்குதப்பா! – உயிரும்
 பேயோடு சேர்ந்ததப்பா!…..”

 பாருங்களேன்!

தீராத நோய்களைத்
 தேறாத வைத்தியத்தை
 தேர்ந்து படித்தவன்
 தீர்த்து முடித்தான்!….
 ஆனால்…. மற்றவர் நோய் தீர்த்த
 மருத்துவன்!
 தன் நோய் தீர்க்க முடியாமல்
 பாய் போட்டுத் தூங்கிவிட்டான்!
 அவன் உயிரும்….
 பேயோடு சேர்ந்து விட்டது’.

என்கிறார் எம்.ஜி.ஆர்!

உலகியல் உண்மை இதுதானே!

இன்னும் நீதி சொல்வதென்ன?

கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்! -
 எந்தக்
 காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார்! – நல்ல
 சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
 நீதி சொல்லும் சாவு வந்து
 தேதி வைத்து வட்டதடியோ? – கணக்கில்
 மீதி வைக்கவில்லையடியோ!”

 ‘நல்ல சேதி சொல்லும் ஜோசியர்!…
 அவர்க்கும் நீதி சொல்லும்
 சாவு வந்து
 தேதி வைத்து விட்டதாம்!
 அவரும் தப்ப முடியாமல்,
 கணக்கில் மீதி வைக்காமல்,
 நீதி அவர் கதையையும்
 முடித்து விட்டதாம்!’

 நீதி சொல்வதில் யார்தான் தப்ப முடியும்? கவிஞரின் கணிப்பை, காட்சியாக்கிக் காட்டும் எம்.ஜி.ஆர் இன்னும் சொல்வதுதான் என்ன?

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்! – அந்தப்
 பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்! – அதில்
 எட்டடுக்கு மாடி வைத்துக்
 கட்டிடத்தைக் கட்டிவிட்டு
 எட்டடிக்குள் வந்து படுத்தான்! – மண்ணைக்
 கொட்டியவன் வேலி எடுத்தான்!”

 ‘பெரும் பட்டணத்தில் பாதியை வாங்கி, பட்டயத்தில் கண்டது போல், மண்ணைக் கொட்டி வேலி எடுத்தவன்!… அவ்வளவுதானா?

 எட்டடுக்கு மாடிகளை அளந்து, கட்டடத்தை அழகாகக் கட்டி முடித்தவன்….! கடைசியில் எட்டடி மண்ணுக்குள் வந்து படுத்தான்…. தன் கதையை முடித்தான்!’

 வாழ்க்கை என்பதே இவ்வளவுதான்….! இதற்கேன் வாழும்போதெல்லாம் போராட்டம்? தேவையில்லைதான்!

 யார் சொல்லி யார் கேட்கிறார்கள்?

 இப்படி மக்களுக்கு உகந்த தத்துவக் கருத்துகளை, மக்கள்திலகம் கூறும் விதத்தில் பாடலை இயற்றித் தந்த தத்துவக் கவிஞர் கண்ணதாசன் திறனை வியந்து எம்.ஜி.ஆர் பாராட்டியது நியாயந்தானே!
ஒரே மாதத்தில் மூன்று படங்கள்!

 1966 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் மட்டும் புரட்சி நடிகர் நடித்த மூன்று படங்கள் வெளியாயின. 4.2.1966 ஆம் நாளில், பத்மினி பிக்சர்ஸாரின், பி.ஆர். பந்துலு இயக்கிய, எம்.எஸ். விசுவநாதன் இசையமைத்த, கண்ணதாசன் பாடல்கள் நிறைந்தநாடோடிபடம் வெளியாயிற்று.

 இதே நாளில் சத்யா மூவீஸ் தயாரிப்பில், சாணக்யா இயக்கத்தில், உருவானநான் ஆணையிட்டால்படமும் வெளியாயிற்று.

 18.2.1966 ஆம் நாளில்முகராசிபடம் வெளியானது. மூன்று படங்களில்முகராசிநல்ல வெற்றியைப் பெற்றது. ‘நாடோடிசுமாரான வெற்றியைப் பெற்றது. ‘நான் ஆணையிட்டால்போதுமான வெற்றியைப் பெறவில்லை.

 இதனை இங்கே குறிப்பிடக் காரணம், ஒரே நடிகரின் மூன்று படங்கள் ஒரு மாதத்தில் வெளியாவதென்பதும், இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதென்தும், இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க இயலுமா? எண்ணிப் பாருங்கள்! இத்தகு வியத்தகு சாதனைகளை நிகழ்த்திட மக்கள்திலகம் போன்ற மகத்தான மாமனிதரால்தான் முடியும்!

 இனி, ‘நாடோடிபடத்தில் வரும் நல்ல பாடல்களை நாம் காண்போம்!
சங்க இலக்கியத்தின் சாரல்!

 தங்கத்தமிழ் ஈந்த சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தானே சுவைத்துச் சுவைத்துப் படித்து, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையாரிடம் அவற்றிற்குரிய இலக்கணங்களை ஐயம் திரிபறக்கற்றுத் தெளிந்தவரே கவியரசர் கண்ணதாசன்.

 அதனால்தான் சங்க இலக்கியங்களின் சாரங்களை, இலக்கிய நயத்தோடு, ‘சங்க இலக்கியத்தில் காதல்என்ற தலைப்பில் அவரால் நூலாய் எழுதி வெளியிட முடிந்தது.

 விளம்பரம் தேட விரும்பாத கவியரசரது அந்த நூல் பல பதிப்புகளைக் கண்டு, பைந்தமிழர் மனங்களில் பாடங்களாய்ப் பதிந்தன.

 இத்தகு, வியத்தகு சாதனைகள் புரிந்த கண்ணதாசன், கடையெழு வள்ளல்களில் சிறந்த பாரியின் நண்பரான கபிலர் எழுதியஅற்றைத் திங்கள்? எனத் தொடங்கும் பாடலில் தன் மனதைப் பறிகொடுத்தார்.

 அப்பாடலின் சாரத்தை மனதில் தேக்கி, ‘அன்று வந்ததும் இதே நிலாஎன்ற பாடலை, ‘பெரிய இடத்துப்பெண்எனும் படத்தில் எழுதினார்.

 அதே சங்க இலக்கியப் பாடலின் சாரத்தை மையமாகக் கொண்டு, ‘நாடோடிபடத்தில்,

பெண்: “அன்றொரு நாள் இதே நிலவில்
 அவர் இருந்தார் என் அருகேநான்
 அடைக்கலம் தந்தேன் என் அழகைநீ
 அறியாயே வெண்ணிலவே!”

என்று, ஆரம்பமாகும் அழகு தமிழ்ப் பாடலைக் கண்ணதாசன் ஈந்தார்.

 சொற்சுவையும், பொருட்சுவையும் போட்டி போட்டு விஞ்சிடும் இப்பாடலை, இன்றும் கேட்போர் சுவைக்க முடியும் என்பதனை நாமறிவோம்.

 இதே பாடலை, இன்பமயமாய்ப் பாடிய பி. சுசீலா, டி.எம்.எஸ். சோகமயமாய் இசைக்கும்போதும் கேட்போர் உள்ளங்கள் கிறுகிறுத்துத் தானே நிற்கின்றன.

 அந்த அளவுக்குப் பாடலின் தரமும், பாடல் காட்சிகளில் நடித்த எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் நடிப்புத் திறமும் அமைந்திருந்ததை இன்றும்நாடோடிபடத்தைப் பார்ப்போர் பாராட்டிடக் காணலாம்.
உலகமெங்கும் ஒரே மொழி!

 தம் தாய்மொழியைத் தாழ்த்தியும் பேசுவோர் உலகில் எங்கும் இருக்கின்றனர்.

 ஆனால் காதல் வயப்பட்டு உள்ளங்கள் உறவாடுகின்ற வேளையி, மொழிப் போராட்டம் எழும்புமா? அது எப்படி எழும்பும்?

உலகமெங்கும் ஒரே மொழி
 உள்ளம் பேசும் காதல்மொழி
 ஓசையின்றிப் பேசும்மொழி
 உருவமில்லா தேவன்மொழி!”

 கேட்டீர்களா?

 உலகமெங்குமே ஒரே மொழிதான்! அதுதான் உள்ளங்கள் பேசும் காதல் மொழி! ஓயாத போராட்டங்கள் இல்லாமல் ஓசையின்றிப் பேசும் மொழியே; உருவமே இல்லாத உயர்வான தேவன்மொழி!

 இத்தகு மொழியை இளைஞர் உலகம் பேசக் கற்றுக்கொண்டால், சாதி, மத, இன, பேதமில்லா உலகினை உருவாக்கிட முடியும் அல்லவா?

 பெண்ணும், ஆணும் இணைந்து பாடும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள,

கோடி மனிதர் பேசிய பின்னும்
 குறைவில்லாமல் வளர்வது காதல்!
 நாடுவிட்டு நாடு சென்றாலும்
 தேடிச்சென்று சேர்வது காதல்!”
 என்ற முத்தாய்ப்பான வரிகள் வாரி வழங்கும் கருத்துகள் என்ன?

 ‘எத்தனைக் கோடி மானுடர் மனங்கள் புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசினாலும், குறைவில்லாமல் வளர்வதே காதல்! நாடு விட்டு நாடு சென்றாலும் தேடிச சென்று சேர்வதே காதல்! இந்தக் காதல் பேசும் மொழியே உலகமெங்கும் உயர்ந்து நிற்கும் ஒரே மொழி!’

 இவ்வாறு, புரட்சி நடிகர் நடித்த படத்தில், காதல் காட்சியிலும் புரட்சி கீதங்களை எழுதி, அப்பாடல்கள் மக்கள் மனமேடைகளில் என்றும் நிலைக்குமாறு செய்தவரே கவியரசர்.
மேல் ஜாதி! கீழ் ஜாதி!

 புரட்சி நடிகர், புரட்சித்தலைவராக உயர்ந்தார் எனில், திடீரென்று வந்த உயர்வல்லஅவரது வாழ்க்கை நிகழ்வுகளும, படங்களில் அவர் நடித்த காட்சிகளும், மக்கள் மனங்களில் ஒன்றாகவே ஒன்றி இணைந்தன என்ற உண்மையே காரணம் எனலாம்.

 சொல்வதையே செய்வதிலும் கடைப்பிடித்தவரே எம்.ஜி.ஆர். இதனை நுட்பமாக உணர்ந்து, அவரது கொள்கை வழிப்பாடல்களை எழுதுவதில் வல்லவரே கண்ணதாசம்.

 அத்தகு பாடல்கள் பலவற்றில் ஒன்றேநாடோடிபடத்தில் வரும்….

கடவுள் செய்த பாவம்இங்கு
 காணும் துன்பம் யாவும்! – என்ன
 மனமோ என்ன குணமோஇந்த
 மனிதன் கொண்ட கோலம்?”

என்று தொடங்கும் பாடல்,

 ‘உலகில் உலவும் துன்பம் யாவும் கடவுள் செய்த பாவமாம்! மனிதர்கள் கொண்ட கோலங்களுக்கெல்லாம் அடித்தளங்கள் அவர்களது மனங்களும், குணங்களுமேயாம்!’

 இவற்றை மறுப்பது எங்ஙனம்?

பொருளேதுமின்றி கருவாக வைத்து
 உருவாக்கி விட்டு விட்டான்!
 அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
 இடம் மற்றி வைத்துவிட்டான்!”

 கருவிலே உருவாக்கி பொருளேதும் தராமல்தான், இறைவன் இவ்வுலகில் அனைவரையும் படைத்தான். உண்மைதான்!

 ஆனால் ஒவ்வொருவரும் பிறப்பெடுத்த இடம்? ஓருயிர் மாட மாளிகையில்? ஓருயிர் குந்தயிடமில்லாக்குடிசையில்! இவை நிகழ்ந்திடக் காரணம்?

 ஊழ்வினை என்பர் பலர்! உலகியல் முறை என்பர் சிலர்!

 அறிவை அனைவர்க்குமே ஈந்தான் இறைவன்! ஆனால் மரியாதையின்றி அந்த அறிவை, இடம் மாற்றி வைத்துவிட்டானாம் இறைவன்! பாவம் இறைவன்! பழிகள் எல்லாம் அவன்தான் சுமக்க வேண்டுமா?

 இன்னும் என்ன?

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
 நல்லவர் கெட்டவர் யாரென்றும்
 பழகும்போதும் தெரிவதில்லை
 பாழாப்போன இந்த பூமியிலே!”

 இங்கே மனிதர்கள் இடிபடுகிறார்கள்! எப்படி?

 நண்பர்கள், பகைவர்கள்!
 நல்லவர், கெட்டவர்!
 யார் யார் என்று,
 பழகும்போது தெரிவதில்லை
 காரணம்…?

 அவர்கள் வாழும் பூமியே பாழாய்ப் போன பூமி! பின்னர் எப்படிக்கண்டு தெளிய முடியும்?

 அடுத்துஎவ்வளவோ….! கண்ணதாசன், எம்.ஜி.ஆர்..மூலம் எடுத்து வழங்குகிறார்!

 நாமோ, கூறிட விரியும் என்ற எண்ணத்தால்சுருங்கப் பார்க்கவே விரும்புகிறோம்.





No comments:

Post a Comment