Monday 31 March 2014

படித்ததில் பிடித்தது : சாவித்ரி-8

சாவித்ரி- 8. தென்றலும் புயலும்

First Published : 27 June 2015 10:00 AM IST

1964.  சாவித்ரி உச்ச நட்சத்திரமாக இரண்டரை இலட்சம் சம்பளம் வாங்கிய வருடம். அவரது வாழ்வில் மறக்க முடியாத ஓர் ஆண்டாக ஆகிப் போனது. வேட்டைக்காரனின் விஸ்வரூப வெற்றியோடு தொடங்கி, ‘ஆயிரம் ரூபாயில்’ அட்டகாச நடிப்போடு பூர்த்தியானது. ஆனால்  டிசம்பரில்  ஜெமினி-சாவித்ரி ஜோடிக்கு ஏற்பட்ட இயற்கை பேரிடர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இடையில் சாவித்ரி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் திடீரென்று மேடைப் பிரவேசமும் செய்தார். ஓய்.ஜி. மகேந்திரனின் தாயார், ‘திருமதி. ராஜலட்சுமி’யுடன், ‘பாவம் பலராமன்’ என்ற அமெச்சூர்  நாடகத்தில்  பங்கேற்றார். அதில் நடிப்பதற்காக சாவித்ரி காட்டிய அக்கறையும், ஆர்வமும், இன்முகமும், ஈடுபாடும்  நடிகையர் திலகத்துக்கே உரியவை.  இன்றைக்கு வாசித்தாலும் பாவம் பலராமனில் சாவித்ரி மடிசார் மாமியாக கூடு விட்டு கூடு பாய்ந்தது மிக சுவாரஸ்யம்! 
‘எழும்பூர் பொழுதுபோக்கு சங்கத்தின் 50 வது ஆண்டு விழாவில் ‘பாவம் பலராமன்’ என்ற நாடகம் நடைபெற்றது. அதில் திருமதி ராஜலட்சுமிக்கு  பலராமன் எனும் ஆண் வேடம். அன்றைய சிறப்பு விருந்தினர்கள் ஜெமினி கணேஷ் - சாவித்ரி. பின்னர் அவர்களிருவரும் ராஜலட்சுமி என்கிற ராஷ்மியை எங்கே  பார்த்தாலும், ஜோடி நாயணமாகி
‘என்ன பலராமன் சார் சவுக்கியமா?’ என்று அமர்க்களமாகக்  கிண்டல் செய்தார்கள்.
பாவம் பலராமனில் துடுக்கு வெடுக்கு ‘அம்மாமி ரேவதி’. அந்த வேடம் சாவித்ரிக்கு மிகவும் பிடித்து விட்டது. கஸ்தூரி பாய் நிலையத்தின் நிதி உதவிக்காக பாவம் பலராமன் நடக்க இருந்தது. சாவித்ரியை அதில்  நடிக்கச் சொன்னார் ராஷ்மி. தட்டாமல், தயங்காமல் சட்டென்று  சரி என்றார் சாவித்ரி.
ஓர் அரிதார மோகத்தில், ஒப்பனை தாகத்தில் மடிசாரோடு மேடையில் தோன்ற  சம்மதித்து விட்டாரே தவிர,  சாவித்ரிக்கு எங்கே  ட்ராமாவில் தலை காட்ட நேரம் இருக்கப் போகிறது என நினைத்தார்கள் ஒய்.ஜி.பி. தம்பதியினர்.
ஆனால் நடிகையர் திலகம் சொன்ன சொல் தட்டாதவர். அவரது வீட்டிலேயே முதல் ஒத்திகை தொடங்கியது. பாவம் பலராமனின் டைரக்டர் ராஷ்மியின் கணவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி.
‘நடிகையர் திலகமாயிற்றே... நாம் போய் அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பதா...  என்கிறத் தயக்கத்தில் மவுனம் சாதித்தார். சாவித்ரி விடவில்லை.
‘இந்த நாடகத்தில் நடிக்க எல்லாரை விடவும் நான் தான் அதிகம் பயப்படுகிறேன். நான் சரியாகச் செய்யா விட்டால், மக்கள்  ‘பாவம் சாவித்ரி!’ என்பார்கள். கூச்சப்படாமல் அவ்வப்போது திருத்தம் சொல்லுங்கள்.’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தான் செய்தது சரியா எனக் கேட்டு கேட்டு நடித்தார். யானைக்கும் அடி சறுக்கி விடக் கூடாது என்கிற அச்சம்  ஆழ் மனத்தில் அரித்தது. டைரக்டரை நடித்துக் காட்டச் சொல்லியும் சில  இடங்களில் மெருகேற்றிக் கொண்டார்.
இன்ன மாதிரியாக நடித்தால் இன்னும் காமெடியாக இருக்கும் என்றால்,  மகிழ்ச்சியுடன் தலையாட்டினார். அமெச்சூர் ட்ராமா தானே... என்கிற அலட்சியம் அறவே இல்லை.  இரண்டே நாள்களில்  வசனம் அனைத்தும் அத்துபடி ஆகி விட்டது.
நடிகையர் திலகம் தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து, மாறி மாறி ஜொலி ஜொலித்த நெருக்கடியான பொழுது.
சாவித்ரி சினிமா ஷூட்டிங் முடிந்ததும், இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ரிகர்சலில் பங்கேற்றார். ஒரே நாளில் ஏற்கனவே இரண்டு மூன்று  படங்களில் நடித்த களைப்பே இருக்காது. உற்சாகமாக ஒத்திகையில் ஒத்துழைத்தார்.  
மிகச் சாதாரண  புதுமுக ஹீரோயின்கள் கூட, மிகச் சில நாள்களிலேயே அலட்டிக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.
‘இன்னிக்கு நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும், என் போர்ஷனை முதலில் பார்த்துடலாம்.’ என்ற நச்சரிப்பு தாங்காது.
சாவித்ரி மிகுந்த பொறுமையோடு எல்லாரும் நடித்து முடிக்கும் வரை  காத்து நின்றார். ‘முதல்ல நான் நடிச்சிட்டுக் கிளம்பறேனே...’ என்று அடம் பிடித்தது கிடையாது. மற்றவர்கள் நடிக்க வேண்டிய கேரக்டர்களையும் அவர்களுக்கு நடித்துக் காட்டினார். அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் தானே என்று எவரையும் அவமதித்தவர் அல்ல.
பாவம் பலராமனில் பிராமணத் தமிழ் அதிகம். சாவித்ரி மூன்று முறை ஒரு டயலாகை சொல்லிப் பார்த்து,  டைரக்டர் ஓகே செய்த பிறகே, அடுத்த வசனம் பேச ஆரம்பிப்பார்.
தன்னையும் அறியாமல் தப்பும் தவறுமாக ஏதாவது உளறினால், ‘கை கொடுத்த தெய்வம் - கோகிலாவாகி’  வயிறு குலுங்கக் குலுங்க   வாய் விட்டுச் சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்கவே முடியாது. நள்ளிரவு தாண்டியும் ஒத்திகை  தொடர்ந்தது.
ரிகர்சலுக்குப் பிறகு  சாவித்ரி மட்டும்  தனியே  திரும்ப மாட்டார். வழியில் யாராவது  இறங்க வேண்டுமென்றால் அவர்களையும் ஏற்றிக் கொண்டு கார் பறக்கும்.
‘அன்னிக்கு என்னை சாவித்ரி, அவங்க வண்டியிலேயே ட்ராப் செஞ்சாங்களே..!’ என  உடன் நடித்தவர்கள்  பெருமைப்பட்டுக்கொண்டார்கள். நள்ளிரவில் ஒரு திரை தேவதையோடு, தங்களின் கனவுக்கன்னியோடு  பயணித்ததை காலமெல்லாம் எண்ணிப் பரவசம்  அடைந்தார்கள்.
ஒத்திகையைப் பார்க்க ஜெமினி கணேஷ், ஏ. நாகேஸ்வரராவ்  போய் இருக்கிறார்கள். ஆலோசனை... அது இது என்று மூச்சு விட மாட்டார்கள். நடிப்பு நெருப்பிடம் நெருங்க பயம்!
சாவித்ரிக்கு  இரண்டு வாரம் ஹைதராபாத்தில் தெலுங்கு ஷூட்டிங் வேறு. அதற்குள் அதிகமாக  காமெடி சீன்களைப் புதிதாகச் சேர்த்து விட்டார் ஒய்.ஜி.பி. சாவித்ரி சென்னை திரும்பிய போது நாடகத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே இருந்தன. வேலைப் பளு பற்றி அலட்டிக் கொள்ளாமல், சாவித்ரி விரைவாக கூடுதல் வசனங்களையும் கற்றுக் கொண்டு பிரமாதப் படுத்தினார்.
தமிழ் நாடகத்தில்  நடிக்க முதன் முதலாக சபை ஏறிய தினம். பூஜை சமயத்தில் சாவித்ரிக்கு உள்ளூறப் பதற்றம். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். மணி அடித்தார்கள். மடிசார் மாமி வேஷத்துக்காக 400 ரூபாய் மதிப்பில் நீல நிறத்தில், ஒன்பது கெஜம் பட்டுச் சேலையைக்  கட்டிக் கொண்டு நடித்தார் சாவித்ரி.
‘கோயில் வாசல்லயும் கிணத்தடியிலும் எனக்காக வந்து பல்லை இளிச்சிண்டு நின்னப்ப, தோணலையா இதெல்லாம்...?’
‘ஆண்டி பெத்தது அஞ்சும்  குரங்கும்பாங்க... சரியாய்த்தான் இருக்கு.’
‘நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. விஜயனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு. அதைக் கேட்டவுடனே எலக்ட்ரிக் பில்லை பார்த்த மாதிரி ஷாக் அடிச்சி குதிக்கிறார்...’
என்றெல்லாம் மிகச் சரளமாக பிராமணத் தமிழில் அசத்தினார் சாவித்ரி. ஓர் இடத்தில் வசனத்தை மறந்து விட்டார். ராஷ்மி மெள்ள எடுத்துக் கொடுத்தார். சட்டென்று சுதாரித்து சாவித்ரி சரியாகப்  பேசி விட,  பலத்தக் கைத்தட்டல்கள்.
அமெச்சூர் நடிகைகள் மேடைகளில்  எப்போதும் தங்களது தடுமாற்றங்களை இலேசில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  டயலாக் எடுத்துக் கொடுப்பதை அவர்கள் விரும்பியதும் கிடையாது. ஆனால் சாவித்ரி கள்ளங் கபடம் அற்றவர். அந்த சீன் முடிந்ததும் ராஷ்மியிடம் சென்று, மிக்கப் பெருந்தண்மையுடன்
‘நீங்க அந்த வசனத்தை எனக்காக எடுத்துச் சொன்னீங்க. ரொம்ப நல்லதாப் போச்சு. இல்லாவிட்டால் மறந்து போய் இருப்பேன். உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்’ என்றார்.
-------------------------
காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!
ஜெமினி மிகவும் வெளிப்படையானவர். தன் வாரிசுகள் குறித்து  பூரிப்பும் பெருமிதமும் பொங்கப் பொங்கப் பேசுவதில் ஆர்வமுள்ளவர். அவரது முதல் குடும்பத்தில் பாப்ஜிக்கு நான்கும் பெண்கள். அவர்களில்  கணேசன் ஜெமினியில் சேருவதற்கு முன்பே பிறந்தவர் டாக்டர் ரேவதி. மற்றவர்கள்  டாக்டர் கமலா செல்வராஜ், நாராயணி, எய்ட்ஸ் நிவாரணத்தில் உலகப் புகழ் பெற்ற டாக்டர் ஜெயஸ்ரீ ஸ்ரீதர். ஆகியோர்.
 
ஜெயஸ்ரீ, கார்த்திக்குடன் ஸ்ரீதரின்  ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் ஜோடியாக  நடித்துள்ளார். அவருடைய நிஜப் பெயர் ஜெயலஷ்மி. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தின் டைரக்டர் -  அறிமுக இயக்குநராக தேசிய விருது பெற்ற  ஸ்ரீதர்ராஜன். ஜெயஸ்ரீயின் கணவர்.
இரண்டாவது பந்தத்தில் 1953ல் சாவித்ரி, ஜெமினியின் வாழ்க்கையில் நுழைந்த பிறகு, புஷ்பவல்லி-ஜெமினி  இருவருக்கும் பிறந்தவர்கள் நடிகை ரேகா, மற்றும் அவரது தங்கை ராதா.
மூன்றாவதாக சாவித்ரிக்கு விஜயசாமுண்டேஸ்வரி. ஒரே குழந்தை! ஆக  ஏழு பெண்களைப் பெற்றும்,  காதல் சாம்ராஜ்யத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தியாக சந்தோஷ நடை போட்டவர் நடிக மன்னன்.
திருவிளையாடல் ஷூட்டிங்கில் நிகழ்ந்தவை... நடிகையர் திலகத்தின்  பக்திச் சொற்களில் :
‘சிவாஜி என்னை அம்மாடி என்று அழைப்பது வழக்கம். நான் முருகனை மடியில் வைத்துக் கொண்டேன். ‘முருகனை மடியில் வெச்சிட்டு இருக்கே. அம்மாடிக்குப் பையன் தான் பொறக்கப் போறான்’ என்றார் சிவாஜி. நாங்களும் ஆவலாகவே காத்திருந்தோம். அதற்குள் எங்களுக்கு ஏற்பட்ட பயங்கர சோதனை...?
ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பது ஜெமினி கணேசனின் ஆவல்.  நண்பர் வித்வான் லட்சுமணன் அவரிடம், ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறான்’ என ஜோசியம் சொல்லி இருந்தார்.
வேறு சில நண்பர்களும் ராமேஸ்வரம் போய் வந்தால் நல்லது என்று கூறினர்.  அதனால் நான், ஜெமினி கணேசன், டாக்டர் லீலாவதி, அவருடைய கணவர் டாக்டர் ராமகிருஷ்ணன், என் தாயார், மகள் விஜி எல்லாரும் கொடைக்கானலில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டுப் போனோம். ஒரே நாளில் சென்று விட்டுத் திரும்புவதாகத் திட்டம்.
ரயில் பாம்பன் பாலத்தின் மீது மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. காற்று அதிகமாக இருந்தது. அப்போது நான்  ‘இந்தப் பாலம் காற்று அதிகமாக அடித்தால் அசைந்து கொடுக்குமோ என்னவோ... இரும்பு உத்தரங்கள் விழுந்து விடுமோ?” என்றேன். ‘நான் சொன்னவாறே ஆயிற்று!’
‘ராமேஸ்வரத்தில் என்ன நடந்தது...? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
சென்னை வானொலி நிலையத்தின் வானிலை அறிக்கையில்-
‘நாகப்பட்டினத்தில் மீண்டும் புயல் சின்னம்’ மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஐந்தாம் எண் கொடி ஏற்றப்பட்டுள்ளது’ என்கிறச் செய்திகள்  இயல்பானவை.
1964. டிசம்பர் 21ஆம் தேதி அன்றும் ‘புயல் மெதுவாக நகர்ந்து நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும்’ என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது.
சென்னைத் தமிழர்கள் உல்லாசமாக மிட்லண்டில் நவராத்திரியும், பிளாசாவில் படகோட்டியும்,  சித்ராவில் தாயின் மடியிலும் பார்த்து ரசித்தார்கள். அதே நேரத்தில் புயல் நாகப்பட்டினத்தை நட்டாற்றில் விட்டு விட்டு தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்தது. ராமேஸ்வரத்தில் காற்றின் ரகளை ஆரம்பமானது.
ராமேஸ்வரம் - மண்டபம் இடையே மிக அதிசயமானது பாம்பன் பாலம். கடல் மீது கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் மீது ரயில் போகும். அதே சமயத்தில் கடலில் அந்த வழியாக கப்பல் ஏதும் வந்தால், கப்பல் செல்வதற்கு வசதியாக பாலம் இரண்டாகப் பிரிந்து வழி விடும். 
தனுஷ்கோடியை வெள்ளம் சூழ்ந்த நேரத்தில், பாம்பன் பாலத்தில் பிரயாணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஆவேசமான சுனாமி அலைகள்  பாலத்தோடு ரயிலையும் சேர்த்து அருந்திச் சுவைத்தன.  வெள்ளம் வடிந்த பின்பு பாலமும் அதன் மீது ஓடிய ரயிலும், தடங்களின்றி தண்ணீரில் தொலைந்து போய் இருந்தன. ரயில் பயணிகள் அனைவருமே கடலுக்கு பலி ஆனார்கள். 
தனுஷ்கோடிக்குள் கடல் புகுந்ததால் அடையாளம் தெரியாமல் மொத்த ஊரும் அழிந்தது. கடற்கரையில் மணலுக்குப் பதிலாக பிணங்களின் குவியல். அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். நாளிதழ்களில் அதிர்ச்சி தரும்  செய்திகளை வாசித்த மக்கள் நடுநடுங்கிப் போனார்கள்.
‘ஜெமினி கணேசன் - சாவித்ரி என்ன ஆனார்கள்...?’ என்று டிசம்பர் 24 - காலையில் தினசரிகள் கொட்டை எழுத்துக்களில்  கேள்வி எழுப்பின. சாதனைக் கலைஞர்களைக் காணாமல்  தமிழ்நாடு ஒட்டு மொத்தமாகப் பதறியது. 
ஜெமினி - சாவித்ரி உயிர் தப்பியது அதிசயத்திலும் அதிசயம்! அவை  அவர்களது அவஸ்தை வார்த்தைகளில்  இனி:
‘ராமேஸ்வரத்தில் சுவாமி கும்பிட்டு விட்டு தனுஷ்கோடி சென்றோம். அங்கு கடலில் குளித்தோம். அன்று டிசம்பர் 22 ஆம் தேதி. குளித்ததும் ராமேஸ்வரத்துக்குத் திரும்பி விடலாம் என்றேன் சாவித்ரியிடம்.மேலும் ஒரு நாள் இங்கேயே தங்கி விட்டுப் போகலாம் என்றாள்.
நான் பிடிவாதமாக எல்லாரையும் புறப்படச் செய்தேன். மாலை நாலரை மணிக்கெல்லாம் ரயிலில் ராமேஸ்வரம் திரும்பி விட்டோம். ரயில் நிலையம் அருகிலேயே பயணிகள் குடிலில் தங்கினோம். இரவு எட்டு மணிக்கு நான் படுத்துத் தூங்கிவிட்டேன்.’  ஜெமினியை மேலே பேச விடாமல், சாவித்ரி குறுக்கிட்டுத் தொடர்ந்து கூறியவை.   
 ‘எட்டரை மணிக்குப் புயல் அடிக்க ஆரம்பித்து விட்டது. நள்ளிரவு நேரத்தில் சூறாவளி. ஓ! என்ற சத்தத்துடன் காற்று சுழன்று சுழன்று அடித்தது. காற்று இவ்வளவு பலமாக இருக்கிறதே, என்ன ஆகுமோ...!’என்று நானும் டாக்டர்களும் கவலையோடு பேசிக் கொண்டோம். இரவு முழுவதும் நான் தூங்கவில்லை.  நரிகளின் ஊளைச் சத்தம்... எங்களை நடுநடுங்கச் செய்தன. வர வர புயல் அதிகமாகியது. அவர் விழித்துக் கொண்டார். சினிமாவில் வருவது போன்ற பயங்கர சம்பவம், வாழ்க்கையிலும் நடக்கிறதே என்று எண்ணினேன்.
அதிகாலை மூன்றரை மணி முதல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோரப் புயல் உச்சக்கட்டத்தை அடைந்தது. எங்கள் விடுதியின் கூரைகள் பறந்து விட்டன. விடிந்ததும் எங்கும் வெள்ளக்காடாக இருந்தது.
‘என்னம்மா... ரோட்டில் ஆறு மாதிரி தண்ணி ஓடுது...!’ என்று என் மகள் விஜயா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
 கோயிலுக்குப் போகிற வழியெல்லாம் மரங்கள் வேரோடு விழுந்து கிடந்தன.  வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. 
‘இவ்வளவு பயங்கர புயல்  வீசி இருக்கிறதே... நாங்கள் திரும்பிச் செல்ல ரயில் கிடைக்குமா?’ என்று கேட்டோம்.’ரயிலா ? பாம்பன் பாலத்தையே கடல் அடித்துப் போய் விட்டதே! தனுஷ் கோடி கடலில் மூழ்கி விட்டது என்றார் கோயில் அதிகாரி.
அன்று முழுவதும் ராமேஸ்வரத்தில் தங்கினோம். நாங்கள் ஆயிரம் ரூபாய் கொண்டு போய் இருந்தோம். அதை அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தோம். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க உதவினோம்.
25 ஆம் தேதி காலை எழுந்ததும், எப்படி ஊர் திரும்புவது என்ற கவலை ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் ஒரு ரயில் என்ஜின்  மட்டும் நின்று கொண்டிருந்தது.அதில் ஒரே ஒரு பெட்டியை மட்டும் இணைத்து  எங்களை பாம்பனில் கொண்டு விடச் சொன்னோம்.
டிரைவர், ‘ரயிலை ஓட்டுவதற்கு  நிலக்கரி இல்லை.  நான் போய் எடுத்து வருகிறேன்.’ என்றார். போனவர் திரும்பவே இல்லை.
மாலை  நாலு மணிக்கு பாம்பனில் இருந்து வந்தது ரயில். புயல் நிவாரணப் பணிகளை கவனிக்க மந்திரி கக்கன் இறங்கினார். விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்கள் விழுந்தன. அவற்றை அதிசயமாகப் பார்த்த என் மகள், ஆறு வயது சிறுமி விஜி அதை ஒன்று இரண்டு என்று எண்ணினாள்.
26 ஆம் தேதி. காலை. அமைச்சர் கக்கன் சென்ற ரயிலிலிலேயே  நாங்கள் பாம்பன் போனோம். அங்கிருந்து மோட்டார் படகில் ஏறி மண்டபத்தை அடைந்தோம். அங்கு எங்களுக்காக கார் காத்திருந்தது. மாலையில் மதுரை விமானத்தில் கிளம்பி சென்னை திரும்பினோம். தனுஷ்கோடி புயல் நிவாரண நிதிக்காக   செஞ்சிலுவை சங்கத்திடம் பத்தாயிரம் ரூபாயும், முதல்வர் காமராஜரிடம் ஐயாயிரம் ரூபாயும் வழங்கினோம்.
 
1965. ஜூலை 31. ‘திருவிளையாடல்’ ரிலிசானது. ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி மகன் சதீஷ் பிறந்தான். எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஈஸ்வரனின் திருவிளையாடல்களைப் பற்றிய சினிமாவில் நடிக்க நேர்ந்தது. ஈஸ்வரனை, ராமர் பூஜித்த ஸ்தலத்துக்குப் போய் வந்தது.  இப்படியெல்லாம் எங்கள் ஆசை பலிதமாவதற்கு ஒரு சம்பந்தம் இருக்க வேண்டும் என்று  மனம் நினைத்து  நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டது.
சென்னை விமான நிலையத்தில் எங்களைப் பார்த்ததும்,  மாலை அணிவித்து ‘வந்திட்டீங்களா...’ என்று கட்டிப்பிடித்து கதறி அழுதார் மனோரமா.  நண்பர் கே. பாலாஜி, டைரக்டர் ஏ.பி. நாகராஜன்,  ஆகியோரும் வரவேற்க வந்திருந்தார்கள்.’- ஜெமினிகணேசன் -சாவித்ரி. 
ஜெமினி நேராக பாப்ஜியின் இல்லத்துக்கு விரைந்தார். மறுபிறவி எடுத்த அன்புள்ள அப்பாவைப் பார்க்க அவரது மகள்கள் துடித்துக் கொண்டிருந்தனர். பாப்ஜி பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
‘கணவனே கண் கண்ட தெய்வம்- மனாளனே மங்கையின் பாக்கியம்’ என வாழ்ந்த மாதர் குல மாணிக்கம். குணசுந்தரி.கற்புக்கரசி! அவர் காதல் மன்னனுக்கு ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

No comments:

Post a Comment