Saturday 15 March 2014

படித்ததில் பிடித்தது : சாவித்ரி-7

சாவித்ரி-7. மஞ்சள் முகமே வருக!

First Published : 20 June 2015 10:00 AM IST
சா
வித்ரி ஆபத்பாந்தவி என்பதை முன்னமே சொல்லி இருக்கிறேன். அது எல்லா கட்டங்களிலும் நிருபணமானது. 1964ல் அதிலும் ஒரு புது அனுபவம். உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொண்ட உணர்வை சாவித்ரிக்கு ஏற்படுத்தியது தேவர் பிலிம்ஸ்.
சின்னப்பாதேவர்  சினிமாவில் சிகரம் தொட்ட உன்னத தமிழன்! 2015 ஜூன் 28ல் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. திரைக் கலைக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் ஆற்றிய சேவைகள் வேறு எவராலும் நெருங்க இயலாதவை. தமிழர்களும் அனைவரும் பெருமைப்படவேண்டிய சாதனையாளர். எவராலும் எளிதில்  கட்டுப்படுத்த  முடியாத எம்.ஜி.ஆர். என்கிற யானையை, தோழமை அங்குசத்தால் ஆண்டவர்.
பத்மினிக்கு திருமணம் ஆகிவிட்டது. சாவித்ரி பருமனானார். விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆரின் மனைவி என்பதால் மூவேந்தர்களும், அவருடன் ஜோடியாக நடிக்க ஆர்வம் காட்டவில்லை. மிச்சம் இருந்தவர்கள் சரோவும் தேவிகாவும். அதில் தேவிகாவை விட சரோவுக்கு விநியோகஸ்தர்கள், ரசிகர்களின் ஆதரவு அதிகம்.        
சரோஜாதேவி என்கிற மொழி தெரியாத குருப் டான்சருக்கு, தேவர்  எட்டுப் படங்களில் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு  அளித்தார். அதில் குறுகிய காலத்தில்  எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஐந்து வெற்றிச் சித்திரங்கள். கன்னடத்துப் பைங்கிளியாகவும், கை தொடாத ரோஜாவாகவும் மக்களின் மனத்தில் நிலை நிறுத்தி சரோஜாவை  உச்சம் தொட வைத்தவர் தேவர்.
அதை மறந்து சரோவின் தாயார் ருத்ரம்மா, தேவரிடமே நன்றிக் கெட்டத்தனமாக நடந்து கொண்டார்.
 
இந்தியாவிலேயே வெற்றுக் காசோலைகள் வழங்காத ஒரே தயாரிப்பாளர் தேவர். கலைஞர்களுக்கான  முழு சம்பளத்தையும்  பணக்கட்டுகளாக மேஜையில் அடுக்கியவர். அதற்கேற்ப  ஒட்டு மொத்தமாக கால்ஷீட்டையும் பெற்று, குறித்தத் தேதியில் படத்தை ரிலீஸ் செய்தவர்.
1963  விடுதலை நாள் வெளியீடு ‘நீதிக்குப் பின் பாசம்.  பாதிக்குப் பின் மோசம் எனப் பத்திரிகைகள் கிண்டல் அடித்தாலும் வசூலை அள்ளியது. அடுத்து வேட்டைக்காரனில் சரோவை ஒப்பந்தம் செய்யச் சென்றார் தேவர். ருத்ரம்மா நடந்து கொண்ட விதம், தேவரின் சந்தனம் பூசிய மேனியில் அனலை வாரி இறைத்தது.
‘முன்ன மாதிரி ஒரேயடியா கால்ஷீட் கொடுக்க முடியாதுங்க. பாப்பா டே அன்ட் நைட் வேல செஞ்சாலும் போதல.’
‘வர்ற பொங்கலுக்கு வேட்டைக்காரன் ரிலீஸ். எம்.ஜி.ஆர். நான் கேட்டபடி கால்ஷீட் கொடுத்திட்டார். அதை வீணாக்க முடியாதே. அதுக்கேத்த மாதிரி சரோஜா வந்து நடிக்குமா இல்லையா...?’
‘இப்படிப் பேசினா எம்பொண்ணு உங்க சினிமால நடிக்காது.’
‘உங்க மக என் படத்துல நடிக்கறதா வேண்டாமான்னு நீங்க முடிவு செய்யக் கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்!’
மறத்தமிழன் சாண்டோ சின்னப்பா தேவர் சீற்றம் அடங்காமல் வெளியேறினார்.
சரோவை இழப்பதில் எம்.ஜி.ஆருக்குச் சம்மதமில்லை. சிநேகிதரை சமாதானம் செய்தார். இனியும் தன் கம்பெனியில் சரோவுக்கு வேலை கிடையாது என்று தேவர்  திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். வேட்டைக்காரனில் இனி யார் ஹீரோயின் என்பது அன்றைய மில்லியன் டாலர் கேள்வி. தேவருக்கு கவுரவப் பிரச்சனை. எப்பாடு பட்டாவது 1964 பொங்கலுக்குப் படம் வந்தாக வேண்டும்.
 
‘ஆனந்த ஜோதியில்’ எம்.ஜி.ஆரும் தேவிகாவும் ஜோடி. நன்றாகவே ஓடி வசூலித்தது. தேவிகா, சரோ கிடையாது என்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். வாத்தியாருடன் தேவிகா நடிப்பதாக இருந்த அத்தனைப் படங்களும் கேன்சல் ஆனது.
சரோவின் இடத்தை நிரப்புவது அத்தனைச் சுலபமல்ல. தேவர் பிலிம்ஸ்- எம்.ஜி.ஆர். கூட்டணி வெற்றிகளைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத தருணம்.
புதிதாக யார் கிடைப்பார்கள்...? எம்.ஜி.ஆரும் சாவித்ரியும் இணைந்து நடித்த ‘பரிசு’ தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
கனமான தோற்றத்தைத் தவிர, நடிகையர்திலகத்திடம் குறை ஒன்றுமில்லை. தேவரின் கார் சாவித்ரி வீட்டை நோக்கிச் சென்றது.எப்போதும் போல்  சாவித்ரிக்குத் தெலுங்கிலும் தொடர்ந்தது வெற்றித் தேரோட்டம். அவரை  உடனடியாக வேட்டைக்காரனில்  நடிக்க வைப்பதில் ‘தேவர் பார்முலா’ பயன் அளித்தது.
இரண்டு படங்களில் சாவித்ரியை ஒப்பந்தம் செய்து, அதற்கான முழு ஊதியமும் கையோடு வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்.- சரோவுக்காக எழுதப்பட்ட உல்லாசமான சம்பவங்கள் நடிகையர் திலகம் நடிப்பதற்காக உருக்கமாகத் திருத்தி எழுதப்பட்டன. எம்.ஜி.ஆர். சினிமாவில், ஒரு ஹீரோயினுக்காக முதலும் கடைசியுமாகத்  திரைக்கதை மாறியது வேட்டைக்காரனில் மட்டுமே. அது சாவித்ரியின் நடிப்பாற்றலுக்குக் கிடைத்த 1964-ன் ஆஸ்கார்.
எம்.ஜி.ஆரும்  தாய்க்குலங்களைக் கவரும் வகையில், ஏழு வயதுச் சிறுவனைத்  தூக்கி வளர்க்கும் பொறுப்புள்ளத் தந்தையாக, ‘வெள்ளி நிலா முற்றத்திலே’ பாடினார்.
 
தமிழில் முதன் முதலாக ‘கவ்பாய்’ காஸ்ட்யூமில் வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர். ‘வெற்றி! வெற்றி!’ என்று ஓடி வர, புரட்சி நடிகரின் தோள்களை அணைத்து சாவித்ரி தாராளமாகக் கொஞ்ச,  ‘மஞ்சள் முகமே வருக!  மங்கல விளக்கே வருக!’ பாடலோடு வாகினியில்  நிச்சயித்த தேதியில் படம் சரியாகத்  தொடங்கியது.
வேட்டைக்காரனில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டோம் என்ற கடுப்பு சாவித்ரிக்கு உண்டானது.
மென்மையான அணுகு முறையோடு எப்போதும் பீம்பாயின் இயக்கத்தில் தென்றல் வீசும். அதனாலேயே பீம்சிங் - சாவித்ரி இருவரும் மிகச் சில ஆண்டுகளில் ஒன்பது படங்களில் இணைந்து பணியாற்ற முடிந்தது. அது ஓர் அபூர்வ சாதனை. தமிழில் சாவித்ரி நடித்து அதிகப் படங்களை இயக்கிய பெருமை பீம்சிங்கையே சேரும்.
தேவர் பீம்சிங்கிங்கிற்கு நேர் எதிர். வாகினியில் வேட்டைக்காரன் படப்பிடிப்பு காட்டு தர்பாராகக் காட்சியளித்தது. எம்.ஜிஆர். வர தாமதம் ஆகும். அப்போது எம்.ஜி.ஆரைக் காணாமல் டீ கொடுக்கும் பையன்களைக் கண்ட மாதிரி ஏசி அடிக்கவும் செய்வார் தேவர்.  
வேட்டைக்காரனில் வேண்டா வெறுப்பாக நடித்த போது, அன்றாடம் சாவித்ரி சந்தித்த சங்கடங்கள் ஏராளம். அவற்றைச் சுடச்சுட ஆரூர்தாஸிடம், கொட்டித் தீர்த்தார்.
‘இதென்ன ஷூட்டிங்கா இல்லே. யுத்த களமா?  ஒரே சத்தம். அடிதடி கலாட்டாவாயிருக்கு. எங்க வீட்டுக்காரரு அப்பவே சொன்னாரு. உனக்கும் தேவருக்கும் சரிப்பட்டு வராதுன்னு.    
தேவர் வேட்டிய மடிச்சிக்கட்டிக்கிட்டு ப்ரொடக்ஷன் ஆளுங்களை வெரட்டி வெரட்டி  அடிக்கிறாரு. ஹீரோ என்னன்னா எதையுமே கண்டுக்காம இருக்கிறாரு. இப்படியொரு ஷூட்டிங்கில் நான் இதுவரை நடிச்சது கிடையாது. ஏன்... பார்த்தது கூட இல்ல.
ஒக்காரவே விட மாட்டேங்கிறாரு தேவர்.  ரிகர்சல் பாக்குறதுக்குள்ளே டேக் டேக்னு அலறுறாரு. எனக்கு ரொம்ப நெர்வஸா இருக்கு.  இப்படின்னு முந்தியே தெரிஞ்சிருந்தா, நான் ஒத்துக்கிட்டு இருக்கவே மாட்டேன். மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணி கால்ஷீட் வாங்கிட்டு கூத்தடிக்கிறீங்க.
இனியும் நான் இங்க நடிக்க மாட்டேன். இந்த ஒரு படமே எனக்குப் போதும் சாமி. இதோட என்னை விட்டுடுங்க. அப்படிப் பதற்றத்தோட பணம் சம்பாதிக்கணும்ங்கிற அவசியம் எனக்கு இல்லை. என் டைப்புக்கு இது சரி வராது. ஏன் தேவர் பிலிம்ஸ்ல நடிக்க ஒத்துக்கிட்டேன்னு எல்லாரும் கேக்குறாங்க.’
ஆனால் வேட்டைக்காரனில் சாவித்ரி  சலிப்போடா தெரிகிறார்? அதுவே அவரது நடிப்பின் சாகஸம். சாவித்ரி அதுவரையில்  வன விலங்குகளுடன் நடித்தவர் அல்ல. காட்டு மிருகங்களுடன் அவர் நடிக்க, சாவித்ரிக்குப் பிரத்யேக வழி காட்டியவர் வாத்தியார். அதை சாவித்ரியும் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
‘மகாதேவியில் முதன் முதலாக  எம்.ஜி.ஆருடன் நடித்தேன்.  அப்போது, தாய்க்குப் பின் தாரம் அமோக வெற்றி அடைந்திருந்தது. அதில் வந்த மாட்டுச் சண்டைக் காட்சி தமிழ்ப்பட உலகில் புதிய திருப்பம். தமிழ்ப் படங்களில் சிருங்காரம், வீரம்  இரண்டிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. இந்தப் புதுமையே அவருடைய படங்களைச் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்க்கச் செய்தது. 
அந்தந்த சீனுக்குத் தகுந்தபடி நம்மை நடிக்கத் தயார் செய்து விடுவார்  எம்.ஜி.ஆர். காட்சிகளுக்கேற்றவாறு நம்முடைய நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொடுப்பார். ஆனால் நடிக்கும் போது மட்டும் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று வற்புறுத்திச் சொல்லுவார்.  
‘நன்றாக நடிக்க வேண்டியதுதான். ஆனால் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.  பட முதலாளிகள் நம்மை நம்பி நிறையப் பணம் போட்டுப் படம் எடுக்கிறார்கள்.  நாம் கவனமாக நம்முடைய காட்சிகளை  முடித்துக் கொடுக்க வேண்டும். நம்மால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும்படி செய்து விடக்கூடாது.’ என்பார் எம்.ஜி.ஆர்.’
1963 தீபாவளிக்கு சாவித்ரி நடித்து பரிசு, கற்பகம் என இரண்டு வெற்றிப் படங்கள் வெளியாயின. ஆனால் அதைக் கொண்டாட சாவித்ரி சென்னையில் இல்லை. வேட்டைக்காரன் ஷூட்டிங்கிற்காக ஊட்டி அவுட்டோரில் இருந்தார்.
‘ஒரு கதாநாயகன் கதை சொன்னான்’ என்று கல்லட்டி நீர்வீழ்ச்சியில்  எம்.ஜி.ஆருடன் ஆடிப் பாடினார்.
மறு நாள் தீபாவளி. எம்.ஜி.ஆர். வள்ளல். யூனிட் மொத்தத்துக்கும் வேட்டி சட்டையோடு, கைச்செலவுக்கு இருநூறு ரூபாய் பணமும் வழங்கினார். மக்கள் திலகத்துக்குத் தான் ஒன்றும் சளைத்தவர் கிடையாது என்று சாவித்ரியும் நிரூபித்தார்.
அவரும் டைரக்டர் திருமுகம் உள்படத் தொழிலாளர் அனைவருக்கும் இருநூறு ரூபாய் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 1963ல் அதன் மதிப்பு ஒரு பவுனை விடவும் அதிகம். அப்படியெல்லாம் தீபாவளியின் போதும் வீடு திரும்பாமல் கூட, அருமையாக நடித்துக் கொடுத்த சாவித்ரிக்கு நடந்தது அவமானம் மட்டுமே.
வாகினியில் வி.ஐ.பி.களுக்கான வேட்டைக்காரன் சிறப்புக் காட்சி. எம்.ஜி.ஆரும்-வி.என். ஜானகியும் வந்து விடவே விரைந்து மணி அடித்து விட்டார் தேவர். டைட்டில் தொடங்கிய ஒலியைக் கேட்டதும், சாவித்ரியின்  முகம் சிவந்தது. உள்ளே நுழையப் பிடிக்காமல் சட்டென்று, வேகமாக காரைத் திருப்பி  கோபத்துடன் வெளியேறினார். அவரை வரவேற்று அழைத்துச் செல்லக் காத்திருந்த ஆரூர்தாஸ் அதிர்ந்து நின்றார்.
சாவித்ரியின் கூடவே பிறந்தவை முன் கோபமும்  சுயமரியாதையும். மறுநாள் காலை. மனக் கொதிப்பு அடங்காமல் தொலைபேசியில் ஆரூர்தாஸிடம் நியாயம் கேட்டார் சாவித்ரி.
‘நேத்து ராத்திரி நான் ப்ரொஜெக்ஷனுக்கு வந்தது எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் தெரியுமா?’
‘நான் சொல்லல.’
‘எதுக்குப் பயம்? சொல்ல வேண்டியதுதானே. விரட்டி விரட்டி வேல மட்டும் வாங்கத் தெரியுது. நாள் தவறாம கரெக்டான டயத்துக்கு வந்து எவ்வளவு ஒத்துழைச்சி நடிச்சேன். எனக்காகக் கொஞ்சம் காத்திருக்கக் கூடாதா? குடியா முழுகிடும்?’
ஆண் ஆதிக்கம் மிக்க கோலிவுட்டில் ஒரு நடிகை அனைத்துத் தருணங்களிலும் அடங்கி நடக்க வேண்டும். இல்லாவிடின் அவர் தூக்கி வீசப்படுவார். அத்தகைய விதிகளை அநாயாசமானத் தன் நடிப்பாற்றலால் அன்றே வீழ்த்தி எறிந்தவர்  சாவித்ரி. அதன் விளைவு விரைவில் தெரிந்தது.
 
யோகானந்த் மதுரை வீரன், காவேரி, ராஜாதேசிங்கு, பார்த்திபன் கனவு, போன்ற முத்திரைச் சித்திரங்களின் டைரக்டர். பின்னாளில் ‘தாய்,  நான் வாழ வைப்பேன், வா கண்ணா வா’ உள்ளிட்ட  சிவாஜியின்  மிக அதிகமான சினிமாக்களை இயக்கியவர்.
பாசமலர்  கதையை எழுதிய கொட்டாரக்கராவோடு இணைந்து  ‘பரிசு’  படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். எம்.ஜி.ஆர். ஹீரோ. அப்போது நடந்த அவலம் டைரக்டரின் வார்த்தைகளில்: 
‘எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.  எனது இயக்கத்தில் சரோ கால்ஷீட் குளறுபடிகள் செய்ததால், அவரை எங்களது தயாரிப்பில் போடத் தயங்கினேன்.
‘பரவாயில்லை. நான் உங்களை அனுப்பியதாக, சரோஜாவிடம் கூறுங்கள். கால்ஷீட் தருவார்.’ என்று எம்.ஜி.ஆர்.  சொன்னதும், எனது சுயகவுரவத்தையும் பாராமல் அட்வான்ஸ் பணத்தை எடுத்துக் கொண்டு சரோஜாதேவியின் வீட்டுக்குப் போனோம்.
சரோவின் அம்மாவும், சரோவும் எங்களிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டு, ‘மற்ற விஷயங்களை எங்கள் மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள்.’ என்று முகத்தில் அடித்தாற்போல்  கூறியதுடன் வீட்டினுள்ளே சென்று விட்டனர். 
எனக்கு வந்ததே ஆத்திரம். இனி சரோஜாதேவியே வேண்டாம் என்று நடந்ததை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
‘சரி, அவருக்குப் பதிலாக யாரைப் போடப் போறீங்க?’ என்றார்.
சாவித்ரியை என்றேன். ஓகே சொன்னார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்.- சாவித்ரி நடித்த பரிசு நன்றாக ஓடியது. தொடர்ந்து அவர்களையே ஜோடியாக வைத்து ‘வாழ்வே வா’ என்ற படத்தை ஆரம்பித்தேன்.
பூஜை போட்டு இரண்டு நாள்கள் மாத்திரம் படப்பிடிப்பு நடைபெற்றது. எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்துத்  தருவார் என நம்பி,  தி.நகர். ஜி.என். செட்டித் தெருவில் மூன்றரை வருடம் ஆபிஸ் வைத்திருந்தேன். ஷூட்டிங் நடக்காமல் வெறும் அலுவலக நிர்வாகம் நடந்ததில் எனக்கு  நாலு லட்சம் நஷ்டமானது. அதை என் வீட்டை விற்று சரி செய்தேன்.
நான் எம்.ஜி.ஆர். சொல்படி சரோஜாதேவியை நாயகியாகப் போடாமல், சாவித்ரியைப் போட்டு  எடுத்ததால்  ‘வாழ்வே வா’  படம் ‘வாழ்வே போ’என்று என்னை அழ வைத்தது.’   
1964 தைத் திருநாளில் வெளியானது பத்மினி பிக்சர்ஸ் ‘கர்ணன்’ வண்ணச் சித்திரம்!  பந்தலுவின் பிரம்மாண்டம் உண்டாக்கிய எதிர்பார்ப்பு, நடிகர் திலகம் - நடிகையர் திலகம்- என்.டி.ராமாராவ் கூட்டணியின் அற்புத நடிப்பு அத்தனைக்கும் முன் வேட்டைக்காரன் சராசரி என்றே எம்.ஜி.ஆரும் சாவித்ரியும் நினைத்தார்கள். ஒட்டு மொத்தத் தமிழர்களின் எண்ணமும் அதுவே.
வாத்தியாரே எதிர்பாராத வண்ணம்  அதிக செலவின்றி கருப்பு வெள்ளையில் தயாரான வேட்டைக்காரன் வசூலில் முரசு கொட்டியது.
‘மெதுவா மெதுவா தொடலாமா... என் மேனியில் உன் கை படலாமா...’
உள்ளிட்ட லவ் டூயட்டுகளில் சரோவுக்கும் கூடுதலாகவே எம்.ஜி.ஆரை கட்டிப் பிடித்து நெருங்கி நடித்தார் சாவித்ரி. தமிழகமெங்கும் அன்றைய கார்த்திகை ராத்திரிகளில் இன்பத் தத்தளிப்பு!
சாவித்ரியின் உற்சாக உத்சவத்தை அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கிறார் கலாப்ரியா.
‘அது வேட்டைக்காரன் பார்த்துவிட்டு வந்த முன்னிரவு. சாவித்ரி என்னமா நெருங்கி நடிச்சிருக்கா. பரிசு படத்தை விட ஓவர்.   ஜெமினி பார்த்தார்னா செத்தார். எனத் தெருவில் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருந்தன.
இன்னக்கி ராத்திரி கனவுலே சாவித்ரி அத்தை வரப்போறாலே... எங்க வீடுதான் முதல்ல இருக்கு. முதல்ல என் கனவுலதாம்லே வருவா.’ என்று சொல்லிவிட்டு மஞ்சள் முகமே வருக என்று பாடினான்.
‘ஏல,  ஒரு கதாநாயகன் கதை சொன்னான் இந்தக் கண்ணுக்குள்ளும் அந்த நெஞ்சுக்குள்ளும்...’  பாட்டு இப்ப வரும்லே போய்க் கேட்போமா’.   
‘சொல்லப் பொறுக்குமா... தியேட்டரை நோக்கி ஓடினோம்.’ - கலாப்ரியா
இன்னமும் சின்னத்திரைகளில் வாரம் தவறாமல் வேட்டைக்காரன் ஒளிபரப்பாகிறது. 
வேட்டைக்காரன் வெற்றியடைந்தும், அதோடு தேவர் பிலிம்ஸூக்கு சாவித்ரி டாட்டா காட்டிவிட்டார். சொல்லையும் செயலையும் ஒன்றாக பாவிக்கும் உயர்ந்த குணம் சாவித்ரிக்கு. இரட்டை நாக்கு அவருக்கு   இல்லை.

No comments:

Post a Comment