Tuesday 25 February 2014

படித்ததில் பிடித்தது : சாவித்ரி-4

சாவித்ரி- 4. பாசமலர்

First Published : 30 May 2015 10:00 AM IST
‘கை 
வீசம்மா கை வீசு’ என்று பிஞ்சுகளிடம் கொஞ்சத் தொடங்கினால், நம் ஒவ்வொருவரின்  மனத்திலும் ’பாசமலர்’ பூத்துக் குலுங்கி மணம் வீசும். எத்தனை யுகங்கள் கடந்தாலும் திரை இசைத் தாலாட்டுப் பாடல்களில் ‘மலர்ந்தும் மலராத’  தேன் மழையாகப் பொழியும். ’பாசமலர்’ கண்ணதாசன் சூட்டிய காவியப் பெயர்!
சிவாஜி கணேசனின் சிநேகிதர்கள் எம்.ஆர். சந்தானம்( பிரபல நடிகரும், டைரக்டருமான சந்தான பாரதியின் அப்பா) மற்றும் சென்னை பிரபாத் டாக்கீஸ் உரிமையாளரின் மகன், சினிமா விளம்பர பேனர்கள் தயாரித்த    ’மோகன் ஆர்ட்ஸ்’  மோகன்  ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பு பாசமலர். சிவாஜி கணேசனின் தாயார் பெயரில் ’ராஜாமணி பிக்சர்ஸ்’ என்கிற அவர்களது புதிய நிறுவனம் பாசமலருக்காகவே உருவானது.     
கதை - மலையாள எழுத்தாளர் கே.பி. கொட்டாரக்கரா. இயக்கம் -  ஏ. பீம்சிங். இசை -  விஸ்வநாதன் - ராமமூர்த்தி. பாடல்கள் - கண்ணதாசன். வசனம் - ஆரூர் தாஸ் என வெவ்வேறு மண்ணின் மைந்தர்களின் மகத்தானப் பங்களிப்பு. அவர்களில் பீம்சிங்கின் பூர்வீகம் சுவாரஸ்யமானது. கட்டுப்பாடுகள் நிறைந்த அக்காலத்தில்  ஜாதி மத இன வேலிகளைக் கடந்த, பரிசுத்த இதயங்களின் தன்னலமற்ற இமாலய அன்பின்  எதிரொலி அவர்.
ராஜ புத்திர வம்சத்தைச் சேர்ந்த அகர்சிங்கின் மகன் பீம்சிங். அவரது தாயார் ஆந்திரத்தைச் சேர்ந்த ஆதியம்மாள். மனைவி சோனாபாய். மாமனார் தஞ்சாவூரின் ராகவாச்சாரி என்கிறத் தமிழ் அய்யங்கார். மாமியார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். பீம்சிங்கின் மைத்துனரும்  சோனாபாயின் அண்ணனுமாகிய ’கிருஷ்ணன்’, (பஞ்சு) பராசக்தியில் நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்தியவர். கிருஷ்ணன் -பஞ்சு இரட்டையர்களிடம் உதவியாளராக இருந்தவர் பீம்சிங். தனது வழிகாட்டிகளையும் கடந்து வாகை சூடினார்.
பீம்சிங்-கிருஷ்ணன் இருவரின் குடும்பத்தில் நடந்த மாமன் மச்சான் உறவுச் சிக்கல்கள், சந்தானம் மற்றும் மோகன் ஆகியோரின் வீடுகளில் நடைபெற்ற பாசப் போராட்டங்கள் ஆகியன கலந்து, அண்ணன்-தங்கை நேசத்தைச் சொல்லும் திரைக்கதை தயார் ஆனது.
திட்டமிட்டு தரமான ஒரு வெற்றிச் சித்திரத்துக்கானப் பிள்ளையார் சுழி புனிதமான கிறிஸ்துமஸ் தினத்தில் போடப்பட்டது.1960 டிசம்பர் 25. நெப்டியூன் ஸ்டுடியோ. ’மெக்ரெனட்’ ஊழியர்கள் உருவாக்கிய சாக்லெட் கேக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளோடு ’பாசமலர்’  என வெண்ணிற க்ரீமீல் எழுதப்பட்டு இருந்தது.கேக்கின் முதல் துண்டை  ஆரூர்தாஸூக்கு ஊட்டினார் சிவாஜி. எல்லாரும் கை தட்டினார்கள். ஜெமினி- சாவித்ரியின் கரவொலி அனைவரையும் மிஞ்சியது.
 
ஜெமினி - சாவித்ரி நடித்த சவுபாக்யவதி படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ். அவரது இலக்கிய நயமிக்க  உரையாடலுக்கு, ஒளிமயமானதோர் எதிர்காலத்தை ஏற்படுத்த விரும்பியது  ஜெமினி - சாவித்ரி ஜோடி.
1957ல் சவுபாக்யவதி டைட்டிலில்  நடிகைகள் பட்டியலில் முதலில் இடம் பெற்றது. எடுத்த எடுப்பில் சாவித்ரியின்  பெயர். பிறகே ஜெமினி உள்பட மற்றவர்கள். ஜெமினியை விடவும் உச்ச நட்சத்திர அந்தஸ்து சாவித்ரிக்கு.
கதை சொல்ல வரும் ஏழை எழுத்தாளர்களின் கற்பனைகளைக் களவாடி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு, மற்ற மொழிகளுக்கு விற்று அதிலும் கொழுத்த லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் அரும்பாத காலம்.
பீம்சிங்கின் படங்களில் பெரும்பாலும் உரிமை பெறப்பட்ட வங்காள, மராத்திய, மலையாளத்தின் உள்ளம் உருக்கும் கதைகளோ, அல்லது சோலைமலை, பிலஹரி, போன்றத் தமிழர்களின் படைப்புகளோ இடம் பெறும். திரைக்கதைக்காக வலம்புரி சோமநாதன், இறைமுடிமணி, ராம அரங்கண்ணல் உள்ளிட்டக் குழு தனியே செயல்படும். வசனம் எழுதவும்  கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றத் தன்னிகரற்றவர்கள் வாய்த்தார்கள்.‘குடும்பக் கதைகளுக்கு ஆருர்தாஸ் சிறப்பாக வசனம் எழுதுவார். அவரையே பாசமலருக்கு எழுதச் சொன்னால் நன்றாக இருக்கும்.’
சாவித்ரி  ஆரூர்தாஸூக்காக சிபாரிசு செய்தார். பீம்சிங் நினைத்தால் ஆரூர்தாஸின் வாழ்வு மலரும் என மனமார நம்பினார்.
‘ஹீரோ ஒப்புக் கொண்டால் தனக்கு ஆட்சேபணை கிடையாது.’ என்றார்  பீம்சிங். சிவாஜி கணேசனின் வாயிலிருந்து உதிரும் சொற்களில் சிறைப்பட்டிருந்தது சினிமா உலகம். நடிகர் திலகத்தின் கடைக்கண் பார்வைக்காக மாபெரும் ஸ்டுடியோ அதிபர்கள் தவம் கிடந்தார்கள். அவர்களுக்கு முன் ஆரூர் தாஸ் எம்மாத்திரம்?
ஓர் அந்தண நடிகரும் நாயுடு நடிகையும் கலந்து நடத்திய நட்சத்திர இல்லறத்தில், மாதாவை வழிபடும் ஆரூர்தாஸ் என்கிற கத்தோலிக்க கிருத்துவ இளைஞர்,  சாவித்ரியை அன்போடு  சுந்தரத் தெலுங்கில் வதினா என்று அழைக்கும் கொழுந்தன். ஏ. பீம்சிங்கின் பரம்பரைக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல ஜெமினி- சாவித்ரியின் மன ஆகாயம்.
சொந்த அண்ணிகள் தங்களை அண்டி நிற்கும் மைத்துனருக்கு சோறு போடாத நமது சமூகத்தில், கலை சமுத்திரத்தில் அகப்பட்ட ஆரூர்தாஸுக்காக ஜெமினியிடம் மன்றாடினார் சாவித்ரி.
 
‘பாசமலர் டயலாக் விஷயமா, சிவாஜி அண்ணா கிட்டப் பேசினீங்களா... என்ன சொல்றார்?’
’புதுப் பையன்னு சொல்றே. பார்க்கலாம்னு இழுக்கறான். அதோட இவன் வேறே அவன் கிட்ட வர மாட்டேங்கிறான்.’  ஆரூராருக்கும் சிவாஜியின் சிறப்புகள் தெரிந்திருந்தது.
எளிய திரைப் படைப்பாளிகளின் சுயமரியாதை, தன்மானத்தை அவமதிக்கும் அலட்சிய போக்கு, குறும்பு, கேலி, கிண்டல், எகத்தாளம், ஏளனம், நக்கல்,நையாண்டி, பரிகாசம் அனைத்துக்கும் அதிபதி சிவாஜி.  உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் உற்சாகத்தில் தன்னை உதாசீனப்படுத்தி விட்டால்...  சொர்க்க வாசலாக தேவர் பிலிம்ஸ் துணை இருக்கும் போது, சிங்கத்திடம் வலியப் போய் சிக்குவானேன்.
ஆரூர்தாஸ் தயங்கினால் சாவித்ரி விட்டுவிடுவாரா...!  பிடிவாதம் நடிகையர் திலகத்தின் உடன்பிறப்பு ஆயிற்றே!
‘சிவாஜி ஒண்ணும் சொல்ல மாட்டாரு. அதுக்குப் பார்த்தா எப்படி முன்னேற முடியும்? நீங்க பேசாம இவரோட போங்க. எங்கள்ட்ட கூட கால்ஷீட்டெல்லாம் வாங்கிட்டாங்க. அப்புறம் வேற ரைட்டரை ஃபிக்ஸ் செஞ்சுட்டாங்கன்னா எங்க முயற்சி வீணாப் போயிடும்.’
‘கணேஷ் ஏற்கனவே நாம லேட்டு. இப்பவே நீங்க அவரை சிவாஜி கிட்டே கூட்டிட்டுப் போறீங்க. அவருக்குப் பாசமலர்ல வாய்ப்பு வாங்கிக் கொடுத்துட்டு வந்தாத்தான் நமக்கு லன்ச். நீங்க நல்ல செய்தியோடு வரவரைக்கும் நான் சாப்பிடாம உட்காந்திருப்பேன்... புரிஞ்சுதா.’
 உள்ளன்போடு பிறருக்கு உபகாரம் செய்வதில் சாவித்ரி ஓர் எம்.ஜி.ஆர். அவரது ஆளுமையின் வேகம் ஆரூர் தாஸூக்கு அழியாப் புகழைத் தேடித் தந்தது. பாசமலரின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது ஆரூர் தாஸின் எழுத்து என்றால் யாரும் கோபிக்க மாட்டார்கள். பாசமலரில்  நடித்ததற்காக மட்டுமல்ல, ஏழை எழுத்தாளனின் திறமை வெளிப்பட உதவியதற்காகவும் சாவித்ரி பாராட்டப்பட வேண்டியவர்.
அண்ணன்-தங்கையின் அன்புக் கதைகள் பூமி பிறந்த போதே தோன்றியவை. இராவணன் - சூர்ப்பனகையின் கண் மூடித்தனமான ராட்சஸ பாசம் இராமாயணத்துக்கு விதையாக விளங்கியது.
ஏற்கனவே  ஏவி எம்முக்காக ’சகோதரி’ என்ற படத்தை இயக்கியவர் பீம்சிங். பாசமலரை  பீம்சிங் எடுத்துக் கையாண்ட விதம் அலாதி. சகலருக்கும் சாவித்ரியின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புத நடிப்பால் கிடைத்தப் பரவசம் பாசமலர்! இத்தனைக்கும் சாவித்ரிக்கு உடன் பிறந்த அண்ணன் தம்பி என்று எவரும் கிடையாது.
‘என்னோடு கூடப் பிறந்தவர்கள் என் அக்கா மட்டும்தான். அம்மா அப்படியில்லை.  எட்டு பேருக்கு இடையே பிறந்தவள். அந்த மாதிரி பெரிய குடும்பத்தில் பிறக்கவில்லையே  என்று நான் சில சமயம் ஏங்குவது உண்டு.
ஒரு அண்ணனுக்காக சில சமயம் ஆசைப்பட்டிருக்கிறேன்.  ஆனால் நினைத்துப் பார்க்கும் போது அப்படியில்லாததும் நன்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சுற்றமும் நட்பும் உதவியாக  இருந்தால் நல்லது. இல்லாவிட்டால்...?’ - சாவித்ரி. 
1961. மே 27ல் தமிழக மக்கள் நாட்டியப் பேரொளி பத்மினியின் திருமணத்தில் மனம் லயித்திருந்தனர். அன்று பாசமலர் ரிலீஸூம் கூட. திரை ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளிகளின் வாண வேடிக்கை. இன்ப வெளிச்சம்!
பாசமலர் விளம்பரங்கள் ஏற்கனவே ஜனங்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் கூடுதலாக்கியிருந்தது.
‘சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை’
இது சஞ்சிகைகளில் வெளியான முதல் விளம்பரம்! சினிமா வெளிவந்து ஐம்பது நாள்களைக் கடந்த பின்னும் தினசரிகளில் மட்டும் அல்லாமல் வார இதழ்களிலும் விளம்பரங்கள் தொடர்ந்தன.
‘படம் என்கிறார் சிலர் பாடம் என்கிறார் பலர்!  பாசத் தேன் குடம் இது எனப் பல்லோரின் வாழ்த்துடன்’
சாவித்ரி ஜெமினியைக் காதலித்து மணந்தவர். இருவருக்கும் இரண்டரை வயதில் விஜி என்கிற மகள் இருக்கிறாள் என்பதெல்லாம் தென்னக மக்களுக்கு அத்துப்படி. இருந்த போதும் பாசமலரில் ஜெமினி கணேசன், ‘சாவித்ரியிடம் நான் உன்னைக் காதலிக்கிறேன்...’ என்று தன் மன மோகத்தை நயம் பட இதமாகச் சொல்லும்போது-
கள்ளங்கபடமற்ற முகத்தில் கண்களை அகல விரித்து கறந்த பாலாக, ‘அப்படின்னா..!’ என்று ஆச்சரியப்பட்டு, அப்பட்டமான அப்பாவித்தனத்தை மிக இயற்கையாக, சூல் அறியா இளம் மொட்டாக, பார்வையைப் படர விடுவாரே ... அவர் தான் நடிகையர் திலகம்!
 பாசமலருக்கு முன்னும் பின்னும் அது வேறு எவருக்கு சாத்தியம்? இன்றைக்கு அமலாபாலும், அஞ்சலியும், லட்சுமி மேனனும், நயன்தாராவும், த்ரிஷாவும், வாயில் பெயர் நுழையாத இந்தி இறக்குமதிகளும் அதே வசனத்தைப் பேசினால் அரங்கமே கைகொட்டிச் சிரிக்காதா...?
கணவர் ஆனந்தன், பணக்கார அண்ணன் ராஜசேகரனிடம் சம்சாரத் தகராறில் சிக்கி அடிபடும் போது,
‘இது எங்கள் குடும்ப விஷயம். நீங்கள் யார் தலையிட?’ என்று பொங்கி எழும் சாவித்ரி, தங்கை ராதாவுக்காக அண்ணன் சொந்த மாளிகையை விட்டு வெளியேறும் போது, வேலைக்காரன் முதற்கொண்டு அவர் பின்னால் செல்வதைக் கண்டு, பதறியவாறு ‘அய்யோ சங்கரா... எல்லாரும் என்னை விட்டுட்டுப் போறீங்களே என அலறுவாரே...’ அங்கே சாவித்ரியை யாரும் பார்க்கவில்லை. ராதாவைத்தான் கண்டார்கள்.
 
பாசமலர் க்ளைமாக்ஸ். கருப்பு வண்ணச் சேலையில் கவலை ரேகைகள் வழியும் சோகம் விழுங்கிய முகத்தில், அரிதாரப் பூச்சு அதிகமின்றி சாவித்ரி செட்டுக்குள் வந்தார். ஏதோ இழவு வீட்டுக்குள் நுழைவது மாதிரியான தோற்றம். குறும்பு கொப்பளிக்க உலா வரும் ஜெமினியும் சும்மா எட்டிப் பார்த்து விட்டு ஓடிப் போனார்.
இறப்பதற்குத் தயாராக சிவாஜி தனது கடைசி வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார். நடிப்புக்காகப் பெற்ற ஆசிய விருதைக் கடந்து, உலகக்  கலைஞனாகும் கனவுகள்  அவருக்குள் கனல் விரித்து எரிமலையை ஏற்படுத்தின. வடலூரில் வள்ளலார் தீ மூட்டிய அனையாத அடுப்பு எரிவது போல், எப்போதும் அனல் காற்று  வீசிக்கொண்டிருந்தது அவர் உள்ளத்தில்.
சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப்  பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித்  தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?
ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின்  காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள். 
‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா?’
உணர்ச்சி வசப்பட்ட உச்சக்கட்ட நடிப்பில் சாவித்ரிக்கு வைரி என்கிற அவ்வளவு அறிமுகமில்லாத வார்த்தை ஞாபகமில்லை. விரோதி என மாற்றிச் சொல்லி விட்டார்.
’வைரி, விரோதி இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். பின்னே என்னா அம்மாடி. பீம்பாய்  பர்பாமன்ஸ் ஓகேயா?’ உயிர் உருகும் நேரத்திலும் ராஜசேகரன் மெல்லிய வறட்சியான குரலில் ராதாவுக்காகப் பரிந்து பேசினார்.   
சாவித்ரி ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லே இந்தத் தடவை சரியா சொல்றேன்.  அது நல்ல டயலாக். ஒன்மோர் டேக் ப்ளீஸ்’ எனக் கெஞ்சும் குரலில் வற்புறுத்த,
வைரி மிகச் சரியாக ஒலித்தது. ஆனால் முந்தைய டேக்கில் பொங்கிய அணை மீறிய  உணர்ச்சி வெள்ளம் காணாமல் போய் விட்டது. ‘முதல் ஷாட்டையே வெச்சுக்கலாம் அம்மாடி’ என ஆறுதலாக சிவாஜி சொல்ல, சாவித்ரி கூனிக் குறுகிப்போய்,  தன் இரு கைகளாலும் முகம் பொத்தி நிஜமாகவே அழுதார்.
‘திரைப்பட வசனகர்த்தாவாக- எனது நீண்ட நெடிய அனுபவத்தில் - எத்தனையோ படங்களுக்கு எழுதி, எண்ணற்ற நடிகர் நடிகைகள் நடித்ததில், வசனத்தில் ஒரே ஒரு வார்த்தை தன்னை அறியாமல் மாறிப் போனதற்காக வருந்திக் கண்ணீர் விட்டு அழுத ஒரே ஒரு நடிகை சாவித்ரி மட்டுமே.’- ஆரூர்தாஸ்.
பாசமலராக இருந்தாலும் படையப்பாவாக இருந்தாலும் சவமாக நடிப்பதிலும் சிவாஜி சிகரம். அண்ணனை மரணத்திலும் துரத்திய சாவித்ரியும் பிணமாகவே கிடந்தார்.  இம்மி அளவும் கண்களை இமைக்காமல், இறந்து பின்னும் நடிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இரு திலகங்களும். பன்னீரின் நறுமணம் வீசும் பீம்பாயின் கைக்குட்டைகள் கண்ணீரில்குளித்தன  நாள் முழுவதும்.
32 வாரங்களைக் கடந்து ஓடியது பாசமலர். 1961 கோடையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம்  2015ல் இன்னமும் மங்காமல் சின்னத் திரைகளிலும் வியாபித்து நிற்கிறது. வருடம் தவறாமல் அனைத்து சேனல்களிலும் நூறு தடவைகளாவது சலிக்காமல் வாசம் பரப்புகிறது!
இனி சாவித்ரியின் அனுபவத்தை அறிந்து கொள்வோம். அவை கலைப் பெட்டகத்தின் அரிதாரச் சுவடுகள்.
‘பாசமலரில் எனக்கு  முழுக்க முழுக்க மென்மையான உணர்ச்சிகள் கொண்ட ஒரு சகோதரியின் பாத்திரம். அதே போலவே சிவாஜிக்கும்.
அதில் நடித்த போது புது சிக்கல் ஒன்று ஏற்பட்டது. க்ளைமாக்ஸில் நான் மெலிந்து நலிந்து உருக்குலைந்து போவதாக வருகிறது. அதை  இயற்கையாகவே நடித்து முடிக்கத் தீர்மானித்தேன்.பாசமலருக்காக ஒரு மாதம் சாப்பாட்டை மிகக் குறைந்த அளவுடன் நிறுத்தினேன்.
ஜப்பானிலிருந்து இதற்காக ஒரு ஸ்பெஷல் பவுடர்  வரவழைக்கப்பட்டது. அதைக் கொஞ்சம் சாப்பிட்டால் போதும். பசி குறைந்து போகும். ஆனால் சோறு தின்பது போல் ஆகுமா? மதிய உணவு வேளையில் எனக்காகப்  பால் பிளாஸ்கில் வரும். மற்றவர்களுக்கு ருசியான ஐயிட்டங்கள் சுடச்சுட வரும்.கேமராமேன் விட்டல், உதவி டைரக்டர் மகாலிங்கம் எல்லாரும் பக்கத்திலேயே உட்கார்ந்து சப்பு கொட்டிக்  கொண்டு சாப்பிடுவார்கள்.
‘அய்யோ பாவம் சாவித்ரி! இப்படிப் பட்டினி கிடக்கும்படி ஆயிற்றே... என்று வருத்தப்படுவது போல் நடித்து என்னை வம்புக்கு இழுப்பார்கள். நான் துளிக்கூட மசிய மாட்டேன். 
எனக்கென்னவோ அந்த ராதா கேரக்டரில் அப்படியொரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. அதிலேயே ஒன்றிப் போனேன்.  படம் முடியும் வரையில் அதை என் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே எண்ணிக்கொண்டேன். அதற்குப் பிறகும் அதற்கு முன்பும் எத்தனையோ வெள்ளிவிழாப் படங்களில்  நடித்திருக்கிறேன். ஆனால் அவை பாசமலரைப் போல் என்னைக் கவர்ந்தது இல்லை.
அண்ணன் சிவாஜி கணேசனின் மேக் அப்பும் இதில் ஸ்பெஷலாக இருந்தது. மீசை, தாடி, கோட் இவைகளுடன் அவர் குலைந்து போய் வரும் கடைசிக் காட்சியில் யாரும் மனம் நெகிழாமல் இருக்க முடியாது. படத்தின் இறுதிக் காட்சியை எப்படி எடுத்து முடிக்கப் போகிறோம் என்று எல்லாரும் ஒரு சஸ்பென்ஸூடன் காத்துக் கொண்டிருந்தோம்.
அந்த நாளும் வந்தது...
பாசமலர் கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ்  கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!  
அதனுடைய சோக முடிவு என்னை உலுக்கி விட்டது. அது ரீலீஸ் ஆன போது நான் சென்னையில் இல்லை. காஷ்மீரில் இருந்தேன். தேனிலவு ஷூட்டிங்கிற்காக ஜெமினியுடன் நானும் சென்றேன். மே 11ஆம் தேதியே நாங்கள் போய் விட்டோம். பாசமலர்  அபாரமான வெற்றி அடைந்திருப்பதாக எனக்குத் தயாரிப்பாளர் தந்தி கொடுத்திருந்தார்.
மலர்கள் மணம் வீசிய பிறகு வாடி மறைந்து விடுவது வாடிக்கை. பாசமலர் அப்படியல்ல. நாள் ஆக ஆக அதற்கு வாசம் அதிகம். உங்கள் உள்ளங்களில் நான் என்றென்றும் ஒரு பாசமலராகவே இருந்து மனம் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். அதுவே என் ஆசை.’- சாவித்ரி.
‘அண்ணனுக்கு ஏற்ற தங்கை. சிவாஜிக்கு ஏற்ற சாவித்ரி.’ ‘’ராதா’ பாகத்தைச் சொந்த பாணியிலேயே முழுக்க முழுக்கக் கையாண்டிருப்பது திருமதி கணேஷிற்கு ஒரு சிறப்பு.
‘உங்கள் காலில் என் அண்ணா விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், உங்கள் காதல் எனக்குத் தேவை இல்லை...’ என்று உதறும் இடத்தில், தியாகத்தின்  கம்பீரமும் தோல்வியின் சோகமும்  நம் உள்ளத்தை அள்ளுவதில் வியப்பென்ன...!’ என சாவித்ரியின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளியது குமுதம்.

No comments:

Post a Comment