Wednesday, 3 July 2013

அன்றைய நம் நாட்டு பாடகர்கள்...

பிறந்தது முதல் போவது வரை நம்மோடு துணைக்கு வருவது இசை என நமது பதிவுகளில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இளம் வயதில் நான் பார்த்து, கேட்டு ரசித்த உள்ளூர் பாடகர்களை இன்று நினைவுகூர்வோம்.

பல பாடகர்கள் நம் மொழிப்பாடல்களை வானொலி, தொலைக்காட்சி மற்றும் கலப்பட நிகழ்ச்சிகளில் பாடி பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றனர். அவர்களில், எம் எஸ் பிரிட்டோ, ராஜ ராஜ சோழன், ரேசா, ஸ்ரீ சண்முக நாதன், சாரங்கபாணி, என்.மாரியப்பன், சுதன், கேசவன், கே, லாரண்ஸ், சின்னப்பன், எம் ராமையா, மாதவன் போன்ற ஆண் கலைஞர்களும், சுசிலா மேனன், சுகந்தி பெருமாள், சாந்தி, மலர்விழி மற்றும் மணிமாலா போன்றோரும் எவ்வளவு காலம் ஆனாலும் நம் நினைவை விட்டகலாத அன்றைய நமது உள்ளூர்ப்பாடகர்களாகும்.

1970ம் 80ம் ஆண்டுகளில் தொலைகாட்சியில் நமக்கு ஒரே ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தபோதே இங்கு சொல்லப்பட்ட பாடகர்கள் அந்த வாய்ப்பினைப் பயன் படுத்தி தமிழ்ப் பாடல்களுக்கு ஏங்கி நின்ற பல்லாயிரம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தங்களின் திறமையினால் முத்திரையிட்டுச் சென்றனர்.

ரங்கையான் மேரா, வானொலி 6 போன்ற கால கட்டங்களில் கலப்படமும் பெரும் புகழோடு உலா வந்துகொண்டிருந்தது. தொடக்க இசை, ஒரு பாடல், ஒரு நகைச்சுவை, ஒரு போட்டி அங்கம் மீண்டும் ஒரு பாடல், இறுதியில் முடிவிசை என கலப்படம் ஒலியேறிக்கொண்டிருந்தது. அதில் பல உள்ளூர்ப்பாடகர்கள் ஜொலிக்கத்தொடங்கினர்.

அன்றைய பாடகர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்க அன்றைய தயாரிப்பாளர்கள் தாயார் நிலையில் இருந்தனர். திறமை இருந்தோரை இது போன்ற மேடை நிகழ்ச்சிகளில் இடம்பெறச்செய்வதனால் அவர்களும் மக்களிடம் மனப்பூர்வமான கைதட்டல்களை வாங்கிச் சென்றனர். வானோலியில் அன்று மதி சுல்தான், அசன் கனி, ரெசா, துளசி கிருஷ்ணன், சுசிலா, பைரோஜி நாரயணன், பி சுப்பையா, வீ ஆறுமுகம், பாலசேனா போன்றோர் பணியில் இருந்து வானொலி நேயர்களுக்கு பொழுது போக்கானதாகவும் அதே நேரம் பயனுள்ளதாகவும் மலேசிய வானொலியில் சேவையாற்றினார்கள்.

எம் எஸ் பிரிட்டோ 80களில் பத்து கேவ்ஸ் பகுதியில் லைனடெக்ஸ் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். வேலை நிமித்தம் அவரை அங்கு பார்த்து பழகிய அனுபவம் எனக்குண்டு. பகுதி நேரங்களில் தன் குரலை மாற்றி சி எஸ் ஜெயராமனைப் போல பாடிவந்தார். சந்தனப் பொதிகையில் தென்றலெனும் பெண்ணாள்.... நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே... போன்ற பாடல்கள் அவர் குரலில் இனிக்கும். தனது சிகையளங்காரத்தை அப்ரோ ஸ்டைலில் வைத்து பல காலம் மக்களின் மத்தியில் பாடி புகழுடன் இருந்தார்.

 பாடகர் ராஜ ராஜ சோழன், சீகாழி கோவிந்தராஜன் குரலில் புகழ்பெற்றார். " அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்..." என அவர் பாடிய போது உடல் சிலிர்த்து அன்று. உணர்வுப்பூர்வமாக பாடல்களை தேர்ந்தெடுத்து, பார்ப்போரையும் கேட்போரையும் பரவசப்படுத்தியவர். அவர் குரலில் எனக்கு அதிகம் பிடித்தது " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா..." எனும் கர்ணன் திரைப்பாடலாகும். அசலைப்போலவே இவர் குரலும் பாடலோடு ஒன்றியிருந்தது. சீர்காழியார் பாடல்களை இவர் பாடி கேசட் விற்பனையிலும் பெரும் புகழ் சேர்த்தவர் இவர்.

 ஸ்ரீ சண்முக நாதன் பல குரல் மன்னனாக வலம் வந்தார். அவரது இருகுரல் திறமையை வியந்து பாராட்டாதவரே இல்லை எனலாம். நகைச்சுவையில் மலாய் நடிகர் ஜமாலி ஷாடாட் பல குரலில் சிரிப்பலையை தொடர்ந்து கொண்டிருக்க, இரு குரலிசை பாடல்களில் நமது ஸ்ரீ சண்முக நாதன் மக்களை அவர்களது காதுகளை கூர்மையாக்கி தனது குரல் மாற்றிப் பாடும் வித்தையில் லயிக்கச் செய்தார். அவர் பாடிய டூயட்டுகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில்' தாழ்வு எனும் பாடல் பல இடங்களில் பாடப்பட்டது. இன்னும் அவர் இதை மேடைகளில் பாடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக எஸ் ஜானகி அம்மாவுடன் அவர் பாடி தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தோம்.

சாரங்கபாணி தமிழ்ப்பாடல்களோடு மலாய் மொழியில் பாடுவதிலும் கெட்டிக்காரர். 'ஹித்தாம் மானிஸ், ஒஹ் ஹித்தாம் மானிஸ், பாண்டாங் தாக் ஜெமு, பாண்டாங் தாக் ஜெமு' என அவர் பாட தமிழ் மக்கள் மட்டுமல்ல மலாய் மக்களும் ரசித்தனர். ஹித்தாம் மானிஸ் என்பது கருப்பு வர்ணத்தை குறிக்கும் வார்த்தையாகும். கருப்பானாலும் ( மான் நிறமானாலும் ) போரடிக்காதது உன்முகம் எனும் பொருளில் இருந்தது அப்பாடல். ( கருப்புதான் எனக்கு பிடித்த கலரு பாடலுக்கு முன்னரே திரு சாரங்கபாணி கருப்பு நிறத்தை வர்ணித்து பாடிய பாடல் )


இன்னும் வரும்....
sorry ...work in progress....

No comments:

Post a Comment