Saturday, 16 February 2013

வாசிக்கும் பழக்கம்...

புத்தகங்கள் வாசிப்பதற்கு ஓரளவு ஆர்வமும், 'வாசிப்பதனால் நன்மையே தவிர தீமை இல்லை' என்னும் எண்ணமும், நமக்குள் மேலிட வேண்டும். நேரத்தை வீனடிக்கும் செயல் என வாசிக்கும் பழக்கத்தினை நினைத்தால், அதன் பின் புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம், அது எவ்வளவு நல்ல புத்தகமாயிருந்தாலும் அதைத் தொட மனம்  வராது.

புத்தகங்கள் நமக்கு நல் அறிவினைத் தரும் ஆசிரியர்களாகவும், சந்தோசம் தரும் நண்பர்களாகவும் கருதப்படுபவை. கத்தியினை தீட்டுவது போல் புத்தியினை தீட்ட புத்தகங்கள் பேருதவியாக இருக்கின்றன. புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு புத்திக்கூர்மை உச்சத்தில் இருக்குமென அரிஞர்கள் குறிப்பிடுவதை நாம் படித்திருப்போம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலருக்கு வாசிக்கும் பழக்கம் இன்றியமையாத ஒன்றாக இருந்திருக்கிறது.   படிப்பதும், எழுதுவதும் மட்டுமே வெற்றியாளர் சிலருக்கு தங்களின் வாழ்வில் எல்லாமுமாக இருந்திருக்கின்றது. வயிற்றுப் பசியோடு இருப்பவர்களுக்கு அறுசுவை உணவு எப்படியோ அதுபோல அறிவுப்பசியோடு இருப்போருக்கு புத்தகங்கள் அமைகின்றன.

வாசிக்கும் பழக்கம் என்பதில் பல வகை உண்டு. சிலருக்கு  தினமும் நாளிதழை படித்தே ஆகவேண்டும். இல்லையேல் அந்த நாள் திருப்தியாக முற்றுப்பெறாது அவர்களுக்கு. வேறு சிலர், இணையத்தளங்களில்  கவனத்தை செலுத்துவர். வெளியூர் 'ஈசின்' இதழ்களையும், நாளிதழ்களையும் இணையத்தளங்களிலேயே படித்து தங்கள் ஆர்வத்தை தீர்த்துக்கொள்கின்றனர். புத்தகங்களை வாங்கும் பொருட்செலவும், அவற்றை சேமித்து வைக்கும் இடமும் குறைவு என்பவை இவர்கள் சொல்லும் காரணங்கள். உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஞாயமானவையே. இணையத்தளங்களில் இனாமாக படிக்க எண்ணற்ற தலைப்புக்களில் கணக்கிலடங்கா பல   நூல்கள் இருக்கின்றன.

ஆயினும், என்னைக்கேட்டால், ஒரு புத்தகத்தை நம் கைகளில் ஏந்தி, அதன் பக்கங்களை ஒவ்வொன்றாக திருப்பி வாசிப்பதில் கிடைக்கும் மன அமைதி, இரண்டடி தொலைவில், கணினி திரையில் படிப்பதில் இல்லை என்பேன். இது என் கருத்து மட்டுமே. இதுவே சரி என என்னால் சொல்ல இயலவில்லை. காரணம், பத்தாண்டுகளுக்கு முன்னிருந்து கணினியின் வரவு, புத்தகம் வாசிக்கும் பலரை மாற்றிவிட்டதை நான் தினமும் பார்த்து வருகிறேன். நல்ல முன்னேற்றம் என்றே எனக்கும் படுகிறது.

வாசிப்பது அவசியம். வாசிக்க எடுத்துக்கொள்ளும் வழிமுறைகள் அவரவருக்கு ஏற்றாற்போல் இருப்பதில் கருத்து வேறுபாடு எதுவுமில்லை.

இலக்கியம், சமூகம், ஆன்மீகம் என பல துறைகளில் திறம்பட எழுதியோரும், இன்னும் எழுதி வருவோரும் நம்மிடையே நிறைய பேர் உண்டு.  கல்கி, அகிலன், ஜெயகாந்தன், மு.வ., நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், சுஜாதா போன்றோரின் படைப்புகள் இலக்கிய தரத்தில் புகழ் பெற்றவைகளாக இருந்திருந்தாலும், சமூக நாவல் எழுதுவோரும் வாசகர்கள் மத்தியில் புகழ் பெறவே செய்கின்றனர். அவர்களில் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணிசந்திரன், தி.ஜானகிராமன் போன்றோர் என்னைக் கவர்ந்தவர்கள்.

தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் அதிக அளவில் இருக்கும்  அதே நேரம் நம் மலேசிய நாட்டிலும் நட்சத்திர எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். நடப்புச் சூழ்நிலைகளுக்கேற்ப அவர்கள் அந்தந்த காலத்தில் எழுதிய புத்தகங்கள் நம் மலைநாட்டு மகிமையையும், நம் இனப் பெருமையையும் என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஒரு காலத்தில் பரிசாக மற்றவர்களுக்கு கொடுக்க நான் தேர்ந்தெடுத்தது நல்ல புத்தகங்களையே. ஆயினும் இன்று அப்பழக்கம் என்னிடம் இல்லை. காரணம் புத்தகத்தினை பரிசாக பெற விரும்புவோர் குறைந்துவிட்டார்கள். பரிசாக வழங்கப் பட்ட புத்தகத்தை என்னிடமே திருப்பித் தந்து "அன்கிள் நான் இதைப் படிக்க மாட்டேன். ஒன்லைனில் தான் படிப்பேன்" எனச் சொன்ன குழந்தைகளும் உண்டு. இப்போது பரிசு கொடுக்க வேண்டி நேர்ந்தால், ஒரு 'ஐபேட்' அல்லது 'டாப்' எனும் அட்டைக் கணினிதான் சிறந்த பரிசாக பிள்ளைகளுக்கு கொடுக்க முடியும். அதையே அவர்களும் விரும்புவார்கள்.

உண்மையில், ஒரு சாதாரண 'ஐபேட்'டில் பல நூல்களை தரவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்பு நேரம் கிடைக்கும்போது சாவகாசமாக படிக்க 'ஐபேட்' அல்லது 'டாப்'  எனும் அட்டைக் கணினி பெரிதும் உதவியாக இருக்கிறது. என்னுடைய 'ஐபேட்'டில் சுமார் நூறு புத்தகங்கள் சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு மினி நூல் நிலையமாக அது எனக்கு பயன்படுகிறது. யாருக்காகவாவது அல்லது எதற்காகவாவது காத்திருக்கும் தருணங்களில் இந்த 'ஐபேட்' உதவி கொண்டு அந்த நேரத்தை சுவாரஸ்யமானதாக மாற்றி பயனுள்ள வகையில் செலவிடுகிறேன்.

மற்றபடி நான் அதிகம் விரும்புவது புத்தகத்தினை கையில் ஏந்தியவாறு ஒவ்வொரு பக்கத்திலும் பார்வையை செலுத்தி, அந்தப் பக்கத்தின் வாசனையை நுகர்ந்து படிப்பதனையே. புதுப்புத்தகத்தில் இருக்கும் 'புதுமையும்' பிடிக்கும், அதன் 'புது' மையும் பிடிக்கும். அதைப் போல, பழைய புத்தகத்தின் வாசனையும் அதனோடு வரும் கடந்த கால நினைவுகளும் பிடிக்கும்.

ஆக, புத்தகங்கள்...அதிலும் நல்ல புத்தகங்கள் ஏராளம் இருக்க, அவற்றை ஆர்வமோடு படிப்போர் எண்ணிக்கையும் பெருகவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

2 comments:

  1. I too like to hold a book in my hand and flip through the pages unlike some gazing the monitor for hours.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி. rajpow2011@yahoo.com எனும் மின்னஞ்சலுக்கும் உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    ReplyDelete