Thursday, 28 February 2013

உன்னை அறிந்தால் - நீ

 நமக்குப் பயன் தரும் அனைத்தும் புத்தக வடிவில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும் ஞானிகளும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குத் தேவையான வழிகாட்டும் குறிப்புகளை எழுத்து வடிவில் நமக்கு சீதனமாக தந்திருக்கின்றனர்.
இது நமக்காகவும் நம்மைத் தொடர்ந்து வருகின்ற இளைய சமுதாயத்திற்கும் பெரியோர்களால் அருளப்பட்ட பொக்கிஷங்களாகும். இவற்றை சிறுகச் சிறுக படித்து வாழ்வின் நற்பண்புகளை இயன்றவரை நாமே கற்றுத்தீர வேண்டும்.
அடுத்தவர் சொல்லித் தெரிந்து கொள்வதென்பது தப்பான ஒன்றல்ல. ஆயினும் நாம் வாசித்து அதில் பொதிந்திருக்கும் நல்லவற்றை பிறருக்கும் தெளிவு படுத்துவது இன்னும் சிறப்பானதாக கருதப்படும். அதுமட்டுமல்ல, மற்றவர் தவறானவற்றை உண்மை போல் உரைப்பதும், அதை கேட்கும் நாம் அதன் பாவத்தில் விழாமல் நம்மை தற்காத்துக் கொள்வதும் இதனால் சாத்தியமாகிறது.
உதாரணத்திற்கு, "உன்னையே நீ அறி. உலகம் தெளிவுற புலப்படும்" என்றார்கள் சான்றோர். இது, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு சுலபமான ஒன்று.  படிக்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களை இதற்குத் தகுந்தாற்போல் தன்னை அறிய உதவும் தவ நூல்களின் பக்கம் திருப்பினாலே போதும்.

வாசிப்பை மூச்சாய் கொண்டோர் தெரிந்து தவறிழைக்க மாட்டார். அரிய நூல்கள் அவர்களுக்கு அறிவை போதிக்கும் குருமார்களுக்கு ஈடாகின்றன. தனி நபர்களைப் போல் தப்புகளும் தவறுகளும் ஊடுருவி, அறிவுக்கப்பாற்பட்ட கருத்துக்களை நம்முள் திணிக்கும் செயல் அறவே இருக்காது.

கையில் எடுக்கின்ற தலைப்புகளுக்கு ஏற்றாற்போல் அத்துறையினைச் சார்ந்த பல மகான்களினால் இயற்றப்பட்ட புத்தகங்கள் எவ்வித சிரமும் இன்றி இப்போது கிடைக்கின்றன.  இதன் மூலம்,  நமக்குக் கிடைக்கும் வழிகளை நாம் பயன் படுத்தி நம் அறிவின் அடிப்படையை உருவாக்கிக் கொண்டு, அதற்கும் மேல் நாம் தேட வேண்டியது ஏதுமிருப்பின் அவற்றைத் தான் நாம் மற்றவர் மூலம் பெறவேண்டுமே தவிர, எடுத்தவுடனே 'அ தொடங்கி அக்கன்னா வரை' எல்லாவற்றிற்கும் பிறரை தேடிச் செல்வது நம்முடைய கையாலாகத, நாம் தகுதி குறைந்தவர்கள் எனும் குண நலன்களையே  காட்டும்.
தனிமனிதன் தவறு செய்வான், சிந்தனைச் செல்வங்களாகிய அற நூல்கள் தவறு செய்யாது. இதை உணர்ந்து இன்றிலிருந்து தினமும் நல்லனவற்றை வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வோம்.

No comments:

Post a Comment