Tuesday, 5 March 2013

ஒருவரை ஒருவர் சார்ந்தே நாம் வாழ்கிறோம்...

வேலைக்குச் சென்று சோர்வாக வீடு திரும்பும் கணவன் மனைவிக்கு தேவைப்படுவது உற்சாக மொழி.  ஆனால் அதிலும் கூட, ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பார்களேயானால், அனுசரித்து போகும் தன்மை நிறையவே தேவைப்படுகிறது. சூழ் நிலைக்கேற்ப பரஸ்பரமானதாக அது இருந்து விட்டால் அன்பு குடும்பத்தில் நிலைத்து நிற்கும். உணவும் உறக்கமும் அடுத்த நிலைதான்.

கணவன் மனைவியைச் சார்ந்திருக்கிறார்,
மனைவி கணவனைச் சார்ந்திருக்கிறார்,
பிள்ளைகள் பெற்றோரைச் சார்ந்திருக்கிறார்கள்,
வயதான பெற்றோர் பிள்ளைகளைச் சார்ந்திருக்கிறார்கள்......

இதன்படியே மற்றெல்லா உறவுகளும், ஒன்றைச் சார்ந்தே மற்றதும் அமைந்துவிடுகிறது. நம் சமூகத்தில் தெளிவாகத் தெரிகின்ற அதிகார வரிசையிலான நிலை இது.

இந்த தொடரில் ஏதாவதொரு பாதிப்பு ஏற்படும்போது பாதிக்கப் பட்டவர் நிலை குலைந்து போகிறார்.  இந்த சார்பு நிலையில் இருந்து பிரளும் போது ஏதோ பெரியதாக ஒரு பிரச்சினை தோன்றிவிட்டது போன்று மனச் சோர்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் இவர்கள் ஆதரவு காட்டும் வேறு சிலரோடு சேர்ந்து விடுவதும் உண்டு. தங்களிடம் உள்ள பொருள் பலத்தை பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுத்துவிடும் பெற்றோர் நிலையினை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். ஏமாற்றமடைவோர் முதியோர் இல்லங்களில் சேர்ந்து விடுகின்றனர் அல்லது பலவந்தமாக தங்களின் சொந்த பிள்ளைகளினாலேயே சேர்த்துவிடப்படுகின்றனர். பரவலாக நாம் காணும் ஒன்றே இது.

மனம் நோகும் இது போன்ற செயல்களுக்கு காரணங்களையும் அடிப்படைகளையும் ஆராயத் தொடங்குவுமேயானால், 'அத்திப் பழத்தை பிய்த்துப் பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பார்களே அதுபோல சம்பந்தப் பட்ட அனைவருமே குற்றவாளிகளாக தெரிவார்கள்.  சில சமயங்களில் நம் வீட்டுக்கு வரும் மறுமகனும், மறுமகளும் ...ஏன், அவர்களின் உறவினர்களும்கூட காரணவாதிகளாக தெரியலாம். 100 விழுக்காடு ஒருவரைச் சார்ந்து இருப்பதால் தோன்றக்கூடிய பாதகமான செயல் இது.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தகுந்த தற்காப்பு, சிறுகச் சிறுக நாம் பிறரைச் சார்ந்திருக்கும் தன்மையினை குறைத்துக் கொள்வதே ஆகும். அன்பும், ஆதரவும், அரவணைப்பும்  எப்போதும் பாதிக்கப்படாமல் இருக்கும் அதே நேரம், நமது தன்னம்பிக்கையும் வளர்ந்து நாமே சுயமாக செய்து முடிக்கவேண்டிய கடமையினையும் பொறுப்பினையும் உணர்ந்து நடப்பதும் அவசியம்.

என்னதான் நாம் பிறரைச் சார்ந்து இருந்தாலும், நம் சக்திக்கும், வசதிக்கும் ஏற்றாற்போல் நம் காலில் நிற்கும் வல்லமையும் நாம் கொண்டிருப்பது நல்லது. இதனால், மனம் வேதனையில் துவண்டு விடாமல், வாழ்க்கை வாழ்வதற்கே என முன்னேறிப்போகும் நம் பயணம் தடை படாது.

சொற்களால் சொல்லப்படாத, எழுத்தால் எழுதப்படாத,  தினசரி வாழ்வில் நமக்கென வரையறுக்கப்படும் ஞாயமான எதிபார்ப்பினை செயல் படுத்தும் திறனைக் கொண்டிருப்போமானால், இந்தச் சார்பு நிலையில் உள்ள சாதகப் பலன் களை நாம் வாழ் நாள் முழுவதும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.

No comments:

Post a Comment