இங்கு மனித ஜாதியில்…மகுடம் சூடும் ஜாதி! மண்டியிடும் ஜாதி என்ற தொல்லைகள் பற்பல….! இவற்றைப் பார்த்த கவியரசர், பின்னால் புவியாளும் புகழ்படைத்த புரட்சித்தலைவர் மூலம் புவிக்கு அள்ளித்தரும் அனல் பறக்கும் அற்புதப் பாடல் வரிகளை வாசித்துத்தான் பாருங்களேன்!
“கொடுப்பவன்தானே மேல்ஜாதி!
கொடுக்காதவனே கீழ்ஜாதி!
படைத்தவன்
பேரால் ஜாதி வைத்தான்!
பாழாய்ப்
போன இந்தப் பூமியிலே!”
வாசித்தீர்களா!
இங்கே பரமசிவனோ? பாற்கடல் பரந்தாமனோ? அருள் வழங்கும் அல்லாவோ! இரக்கமுள்ள இயேசுவோ? புனிதமுள்ள புத்தனோ? மகிமையான மகாவீரரோ? யாருமே ஜாதி என்னும் சதி வலையை விரித்து, மக்களைப் பிரித்துப் பார்க்கவில்லை!
ஆனால்…! படைத்தவன்… ஆம் மானுட ஜாதியைப் படைத்தவன்!… அந்தப் பரம்பொருள்! அவன் பெயரால்… ஒவ்வொரு வரும் ஜாதியைப் பகுத்து வைத்தனர்….! இது நியாயமா? நீதியா? இல்லவே இல்லை!
அதனால்தான்…
இந்தப் பூமி…! பாழாய்ப் போன பூமியென்று கவியரசர் மீண்டும் தம் கவிதைமூலம், புவியாளப் பிறந்த புரட்சித்தலைவர் மூலம் சொல்லவைத்தார்.
அப்படியானால்… உண்மையான ஜாதி?
இல்லாத இதயங்களுக்காக இரக்கமோடு கொடுப்பவனே மேல்ஜாதி! இருப்பதை இருட்டறையில் வைத்துக்கொண்டு ஈயாதவனே கீழ்ஜாதி!
சரி! ஜாதியை இரு பிரிவாக வகுத்துக் கொண்டோம்! பாழாய்ப் போன பூமியைப் பண்படுத்த வழி…! இதோ….! புரட்சி நடிகர் செப்பும் புரட்சி கீதம்… கவியரசர் வழி வருவதைப் பார்ப்போமே….!
“நடப்பது யாவும் விதிப்படி என்றால்,
வேதனை எப்படித் தீரும்?
உடைப்பதை
உடைத்து, வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படி யாகும்!”
பார்த்தீர்களா?
‘பாரில் நடப்பதெல்லாம் பகவான் விதித்த விதிப்படி என்றால், இப்பாரிலுள்ள பலகோடி ஏழை மக்களின் வேதனைகள் எப்போது, எப்படித்தான் தீரும்? பொறுமை கொண்டோரே! பொறுத்தது போதும்! இனி உடைத்தெறிய வேண்டிய பத்தாம்பசலித்தனமான பழைமைகளை உடைத்தெறிந்து விட்டு, வளர்க்க வேண்டிய புதுமைகளையும், பழைமைகளையும் பாதுகாத்து வளர்த்தால் உலகமே உருப்படியான புத்துலகமாக மாறும்!’
சரிதானா?
டி.எம். சௌந்தரராஜன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடி, புரட்சி மனத்துள்ளலோடு புரட்சி நடிகராம் எம்.ஜி.ஆர் பாடல் காட்சியில் தோன்றி நடித்த, கண்ணதாசனின் இப்பாடல் கருத்துகளை இன்றும் காண்போர், கேட்போர் மெய்சிலிர்த்து, தம்மை மறந்து உணர்ச்சிப் பெருக்கோடு நிற்பர் என்பது உண்மையன்றோ!
நாடு! அதை நாடு!
‘நாடோடி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு மிகச்சிறந்த தேசியவாதி.
போர்மேகங்கள் பெரிதும் சூழ்ந்து நின்ற 1965 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பெற்ற படமே ‘நாடோடி’.
எனவே இப்படத்தில் தேசிய உணர்வு பெருக்கெடுத்து ஓடும் கவியரசர் பாடல் இடம்பெற்றதில் வியப்பேதுமில்லை. புரட்சி நடிகரும் தேசிய உணர்வும், தேசப்பற்றும் மிகுந்தவர் என்பதை யாரும் மறுத்திட இயலாது.
1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது, இந்தியாவிலேயே யுத்த நிவாரண நிதியாக அதிகத்தொகையாம் ஒரு இலட்ச ரூபாயையும்; 110 சவரன் தங்க வாளினையும், எம்.எல்.சி. பதவிக்குக் கிட்டிய சம்பளத்தையும் தந்த தங்கமனம் படைத்த தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
இவை தவிர தாம் நடித்த சொந்தப் படங்களை ‘எம்.ஜி.ஆர். வாரம்’ எனத் திரையிட்டு ரூபாய் 17500-ஐயும் 1962-ஆம் ஆண்டு பாதுகாப்பு நிதிக்கு ஈந்த தேசபக்தச் செம்மலே எம்.ஜி.ஆர்.
இதுவுமின்றி முதலிலே கூறிய நன்கொடைப் பட்டியல்படி பண்டிதல் ஜவகர்லால் நேரு நினைவு நிதிக்கு 1964 – ஆம் ஆண்டு ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை வாரித் தந்த வள்ளலே எம்.ஜி.ஆர்.
பட்டியல்
நீளும் வண்ணம் பல மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, வறட்சி நிவாரண நிதியெனத் தேசபக்தியுடன், கருணையுள்ளத்தோடு பல இலட்சங்களைப் பாங்குடன் ஈந்த பாரிவள்ளலே எம்.ஜி.ஆர்.
எனவேதான்,
அத்தகு எம்.ஜி.ஆர் மூலம் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் நாட்டுப்பற்று மிக்க பாடலைத் தர விரும்பியே, நமது தேசிய தெய்வீகக் கவிஞராம் பாரதியாரின் வாரிசாய்ப் பரிமளித்த கவியரசர் கண்ணதாசன்.
“நாடு அதை நாடு – அதை
நாடாவிட்டால் ஏது வீடு?”
எனத் தொடங்கும் எழுச்சிமிக்க பாடலை எழுதினார்.
பாடலின் தொடர்ச்சியைப் பாடித்தான் பாருங்களேன்!
“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு!
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு!
பாலைவனம்
என்றபோதும் நம்நாடு!
பாறை மலைகூட நம் எல்லைக்கோடு!
ஆறுநிலம்
பாய்ந்து விளையாடும் தோட்டம்!
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்!”
பாடிப் பார்த்தீர்களா?
பாரத நாட்டின் பெருமை; அது பெற்றுள்ள மக்களின் அருமை; எக்காளமிட்டே, எம்.ஜி.ஆர் என்ற புரட்சித்தலைவரால் புகழப்படும் போது நமது உடலெல்லாம் புல்லரிக்கின்றதல்லவா!
இப்பாடலுக்கான முழுமையான விளக்கம் ‘கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்’ என்ற நூலில் எழுதியுள்ளேன்.
கூறியது கூறலை நான் தவிர்க்கிறேன். அறிந்துகொள்ள விரும்புவோர் அந்நூலைப் பாருங்கள்!
பாரத நாட்டு மக்கள் எத்தகைய உயர்வுடையோர் என்பதை, கவிஞர் கவி வழி, எம்.ஜி.ஆர் எடுத்தியம்பி நடித்திட்ட பாடல் வரிகளை மட்டும் மீதியின்றிப் பார்க்கலாமே!
“வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை!
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை!
வெற்றித்
திருமாது நடைபோடும் எல்லை!
பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்!
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்!
நிலத்தில்
உயிர்வைத்து உரிமை கொண்டாடும்!
எதிர்த்து
வருவோரை உரமாப் போடும்!”
பார்த்தீர்களா?
‘பாரதத்தாய்
பெற்றெடுத்த வீரதீரச் செல்வங்களை… இவர்கள் விருந்தாகவும் மாறுவார்கள்! புலியாகவும் சீறுவார்கள்! பாரத மண்மீது உயிர்வைத்து உரிமை முழக்கமிடுவார்கள்! எதிர்த்து வருவோரை, பாரத மண்ணுக்கே உரமாக்கிப் போடுவார்கள்!’
இவற்றைப்
புரட்சித்தலைவரின் வீரம் கொப்பளிக்கும் நடிப்புத்திறனோடு காட்சியாகப் பார்த்தோர், இப்பாடலை இன்னும், ஏன்? என்றும் மறப்பாரோ!
தனிப்பிறவி!
‘தமிழ்த் திரையுலகில் கவியரசர் வாக்கே வேதவாக்கு! அதனால்தான் அவர் பெற்றார் செல்வாக்கு! அவர் வாக்கோ என்றும் உலாவரும் நல்வாக்கு! நாமெல்லாம் நாளும் போற்றும் தனிவாக்கு!’
என்றெல்லாம் கூறுவதைத் ‘தனிப்பிறவி’ படப் பாடல்கள் மூலம் முழுவதுமாக நிரூபித்துக் காட்டியுள்ளார் கண்ணதாசன்.
16.9.1966 ஆம் நாளில் வெளிவந்த ‘தனிப்பிறவி’ படத்தில்; திரையிசைத திலகம் கே.வி. மகாதேவனின் இனிய இசையில்,
“எதிர்பாராமல் நடந்ததடி? – முகம்
கண்ணுக்குள் விழுந்ததடி!
புதிய சுகம் ஒன்று புகுந்ததடி! – அது
பொழுதுக்குப் பொழுது வளருதடி!”
என்று தொடங்கும் கவியரசர் பாடல்; பி. சுசீலாவின் இனிய குரலில் ஒலிக்கும்.
இப்பாடலில்,
“யாருக்கு யாரென எழுதியவன் – என்னை
அவனுக்குத்
தானென எழுதிவிட்டான்!
நேருக்கு
நேரே பார்க்க வைத்தான்! – மனம்
நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான்!…”
என்ற கவிஞரின் கவிதை வரிகளில், புரட்சித் தலைவரின் வாரிசாய்ப் புகழ் படைக்கும் புரட்சித் தலைவியை, முன்னமே படம் பிடித்துக் காட்டிய பாங்கு புலப்படும் விதத்தைப் பாருங்களேன்! மேலும்….
“குன்றத்து முருகன் போல வந்தான்! – தன்
குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான்!”
என்ற கவி வாக்கு, புவிக்குள் நிகழ்த்திய அதியத்தை நாம் இன்னும் காண்கிறோம் அல்லவா?
புரட்சித்தலைவரின் அரசியல் இயக்கத்திற்கே, அவரது இரத்தத்தின் ரத்தமான பெருங்குலத்திற்கே தலைவியாகும் பேறு, கலைச் செல்வியாய்த் திகழ்ந்த ஜெயலலிதாவிற்கே கிட்டியதை எண்ணிப் பாருங்கள்! அப்போதுதான் கவியரசரின் வாக்குப் பலிதம் காதல் கவிதையிலும் பலித்த விதம் நமக்கு நன்கு புரியும்!
புரட்சிப் பெண்! புரட்சித் தலைவி!
கண்ணதாசன்
ஏதோ, புரட்சி நடிகர் படத்தில் மட்டும், அன்றைய காவிரி தந்த கலைச்செல்வியாகத் திகழ்ந்த ஜெயலலிதாவைப் புகழ்ந்து பாடல்களை எழுதினார் என்பதில்லை.
கண்ணதாசன்
எண்ணத்தில், கலைச் செல்வி ஜெயலலிதா நடித்த பல படங்களில் பாடல்களிலும் வாக்குப் பலித்த விதங்களைப் பார்க்கலாம்.
ஏ.வி.எம். நிறுவனத்தாரின் ‘அனாதை ஆனந்தன்’, என்ற திரைப்படத்தில், கதாநாயகி ஜெயலலிதா. இப்படத்தில் கவிஞரின் அருமையான பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
“அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே
கண்ணன்!”
என்ற பக்திப் பரவசமூட்டும் பாடல் இடம் பெற்றிருந்த அப்படத்தில்தான்,
கதாநாயகி
ஜெயலலிதா பாடுவதாக,
“உலகம் பொல்லாத உலகம்!”
என்று தொடங்கும் பாடலைக் கவிஞர் எழுதினார்.
இப்பாடலில்,
“இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்!
புதுமைப்
பெண்ணாக மலர்ந்தேன்!
புரட்சிப்
பெண்ணாக உயர்ந்தேன்!”
என்றும் எழுதினர்.
கவியரசர்
பார்வையில் புதுமைப் பெண்ணாக, புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்த கலைச்செல்வியே, இன்று மாண்புமிகு தமிழக முதல்வராய், புரட்சித் தலைவியாய், காவியத் தலைவியாய்த் திகழ்கிறார் என்றால், அவரது வாக்குப் பலிதத்தின் உயர்வை நம் உள்ளங்கள் உணர்ந்தே உயர்வாய்ப் பாராட்டலாம்.
இவ்வாறெல்லாம் எழுதிய நம் கவிஞர்தான், ‘தனிப்பிறவி’ படத்தில் இன்னும் சில அதிசயத்தக்க பாடல் வரிகளைத் தந்துள்ளார். அவற்றையும் காண்போமாக.
தனிப்பிறவிகளே!
‘தனிப்பிறவி’
படத்தில் நாயகியாய் நடிக்கும் ஜெயலலிதா பாடிடும் பாடலாகக் கவியரசர்,
“ஒரே முறைதான் உன்னோடு
பேசிப் பார்த்தேன்!
நீயொரு தனிப்பிறவி!”
என்று தொடங்கும் பாடலை எழுதினார்.
கதாநாயகனாக
நடிக்கும் எம்.ஜி.ஆரைப் பாராட்டுவதாக இப்பாடல் வரிகள் இதமாய் ஒலிக்கும்.
இதே வரிகளை மீண்டும் நாயகனாக நடிக்கும் எம்.ஜி.ஆர். நாயகியாம் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பாடுவதாகவும் கவியரசர் எழுதியிருக்கிறார்.
பல பிறவிகளில் அடைய வேண்டிய புகழை ஒரே பிறவியில், சத்யா எனும் தாய் பெற்றெடுத்த புரட்சித் தலைவரும்! சந்தியா எனும் தாய் பெற்றெடுத்த புரட்சித் தலைவியும் அடைந்துள்ளார்கள் என்பது உலகறிந்த உண்மையே.
இதனை உய்த்துணர்ந்து 1966 ஆம் ஆண்டிலேயே, தம் எண்ணத்தில் எழுந்த கருத்தாக இப்புவிக்குச் சொன்ன ஜோதிடக் கவிஞரே கண்ணதாசன் எனலாம்.
கண்ணதாசன்
எண்ணத்தில் தனிப்பிறவிகளாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும், தமிழக வரலாற்றிலும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, அரிய சாதனைகள் புரிந்தவர்கள் வரிசையில் வலம்வரும் தலைசிறந்த தலைவர்கள்தானே!
தர்மநீதி மக்களாட்சி வாழ்க!
புரட்சித்தலைவர் படமென்றால் சமூக நீதியைச் சொல்லும் பாடல் இல்லாமலா இருக்கும். அந்தப் பாடலையும் கவியரசர் எழுதினால் அப்பாடல் நம் இதயங்களில் இடம் பெறாமலா இருக்கும்!….
உழைக்கும்
வர்க்கத்தை உயர்த்தி, உல்லாசக் கோட்டைகளில் வாழும் உள்ளங்களிலும் உழைப்பின் உன்னதத்தை உயர்த்திட, தனிப்பிறவியாம் எம்.ஜி.ஆர். மூல்ம கண்ணதாசன் எடுத்துரைத்த என்றும் வாழும் சமூகநீதிப் பாடலைச் சந்திப்போமா?
“உழைக்கும் கைகளே!
உருவாக்கும் கைகளே!
உலகைப் புதுமுறையில்
உண்டாக்கும் கைகளே!”
பாடலின் தொடக்கத்தைச் சந்தித்தோம்!
“உழைக்கும் கைகள்!
உலகையே புதுமுறையில்
உருவாக்க
நினைத்து, அப்படியே
உண்டாக்கும் கைகள்!’
உண்மையானே!
இந்தக் கைகள் இவ்வுலகில் செய்யும் அதிசயங்கள்…. என்னவாம்? ஒன்றா? இரண்டா? கேளுங்களேன்!
“ஆற்றுநீரைத் தேக்கி வைத்து
அணைகள் கட்டும் கைகளே!
ஆண்கள் பெண்கள் மானம்காக்க
ஆடை தந்த கைகளே!
சேற்றில்
ஓடி நாற்றுநட்டு,
களை எடுக்கும் கைகளே!
செக்கர்வானம் போல என்றும் சிவந்து நிற்கும்
கைகள் எங்கள் கைகளே!”
கேட்டீர்களா? இப்படி உழைக்கும் மக்களின் உயர்வை, படிக்காத பாமரமும் அறியும் வண்ணம் எளிய சொற்களில், புரட்சித் தலைவர் மூலம் பூமிக்கு உணர்த்தும் கவியரசரின் கவித்துவத்தின் மகத்துவமே மகத்துவம்.
இப்பாடலின்
விரிவான விளக்கங்களும், ஏற்கனவே முன்னர் வந்த நூல்களில் முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளன.
இருப்பினும் நம் இதயங்களைத் தொடும் இரண்டொரு வரிகளை வாசிப்போமே!
‘உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்
மக்கள் ஒன்றாய்க் கூடுவோம்!
ஒன்று எங்கள் ஜாதியென்று
ஓங்கி நின்று பாடுவோம்!
தர்மநீதி
மக்களாட்சி வாழ்கவென்றே
ஆடுவோம்!
– நாம்
வாழ்கவென்றே ஆடுவோம்!”
வாசித்தோம்!….
யோசிப்போமா?
‘உலகமெங்கும் உள்ள தொழில் வளர்க்கும், தொழிலாளர் வர்க்கம் ஒன்றாய்க்கூட வேண்டும்! ஒன்று எங்கள் ஜாதியென்றே, ஓங்கி நின்று உரத்த குரலில் பாட வேண்டும்!’ என்கிறார் கவிஞர்.
இங்கே, பாரதிதாசனாரின்,
“புதியதோர் உலகம் செய்வோம்! – கெட்டப்
போரிடும்
உலகினை வேரோடு சாய்ப்போம்!”
என்ற ஒரே பாடலை, 1966 ஆம் ஆண்டில் வெளியான ‘சந்திரோதயம்’ படத்திலும், 1975 ஆம் ஆண்டில் வெளியான ‘பல்லாண்டு வாழ்க!’ படதிதலும் இடம்பெறச் செய்த எம்.ஜி.ஆரின் உள்ளத்தைக் கண்ணதாசன் படம் பிடித்துப் பார்த்த பார்வையாலே உருவான பாடலே இந்த உன்னதப் பாடல் எனலாம்.
இன்னும்,
‘தர்மம்! நீதி! மக்களாட்சி! இம்மூன்றும் வாழ்கவென்றே ஆட வேட்டுமாம்!’
இதனைத் தானே ‘நாடோடி மன்னன்!’ படத்தின் தாரக மந்திரங்களாக்கிப் புரட்சி நடிகர் முழங்கினார்! அப்படத்திற்கு, என்றும் வாழும் வரலாற்று வசனங்களை எழுதியவரே கவியரசர் கண்ணதாசன்தானே!
உழைக்கும்
மக்களின் உரிமை கீதத்தை உலகமெங்கும் பரவ்விட்ட புரட்சித் தலைவர், கவியரசர் புகழை, உழைக்கும் மக்கள் என்றும் பாடுவார்கள் என்பதில் ஐயமில்லையே!
பறக்கும் பாவை
ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்து, டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில் கண்ணதாசனின் கருத்துமிக்க பாடல்களோடு, 11.11.1966 அன்று வெளியான படமே ‘பறக்கும் பாவை’.
“பட்டுப் பாவாடை எங்கே?
கட்டிவைத்த
கூந்தல் எங்கே?
பொட்டெங்கே?
பூவும் எங்கே?
சொல்லம்மா!
சொல்லம்மா!”
“முத்தமோ மோகமோ
தத்தி வந்த வேகமோ?”
“நிலவென்னும் ஆடை கொண்டாளோ – அவள்
தன்
நிழலுடன்
நின்றாளோ!”
“கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? – நாம்
கையோடு கைசேர்த்துக் கொள்ளலாமா?”
“சுகம் எதிலே இதயத்திலா?
பொன்னான கன்னமா?”
“உன்னைத்தானே – ஏய்!
உன்னைத்தானே!
உறவென்று
நான் நினைத்தது
உன்னைத் தானே!”
இவ்வாறெல்லாம் காதல் தேனாறு, பெருக்கெடுத்து ஓடும் அருமையான ஆறு பாடல்களையும்;
“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா
பூமியிலே யாவும் வஞ்சம்!
உறவெல்லாம்
முள்ளாகும்!
உயிரெல்லாம் கல்லாகும்!…”
எனத் தொடங்கும், கேட்போர் நெஞ்சங்களை நெக்குருகச் செய்து…
“கண்ணைத் தந்த தெய்வங்களே!
கருணை தந்தால் ஆகாதோ!
“வாழ்த்தும்
கையில் வாளுண்டு!
போற்றும்
பொழியில் விஷமுண்டு!
என்ற சொல்லச் சொல்ல் சோகத்தைக் கூறி, சுகமாக சுமைகள் குறைய ஆறுதல் கூறும் அமுதவரிகள் நிறைந்த பி. சுசீலா பாடிய பாடலையும் யார்தான் மறக்க முடியும்!
தாய்க்குத் தலைமகன்!
1967 ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் நான்குதான் வெளியாயின.
காரணம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.
மறுபிறவி
பெற்ற மக்கள் திலகம் பேசும் திறனைப் பெறுவதற்கே பலநாள்கள் ஆயின.
எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்கு முன் ஜெயலலிதாவோடு இணைந்து நடித்த தேவர் பிலிம்சாரின் ‘தாய்க்குத் தலைமகன்’ படம் 13.1.1967 அன்று, திரையிடப்பட்டது. இப்படம் வெளியாவதற்கு முதல்நாள்தான்; ஆம் 12.1.1967 அன்று இரவுதான் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட, சோகச் செய்தி தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல் பரவியது.
கவலைப்பட்ட
ஏழை உள்ளங்கள், எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சிக்குக் காங்கிரஸ் இயக்கமே காரணம் என்று கருதியது. அதற்கு ஏற்றாற்போல், காங்கிரஸ் இயக்கத்தை ஆதரித்த தந்தை பெரியாரின், திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளராய்த் திகழ்ந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் அக்காலகட்ட மேடைப் பேச்சுகளும் அமைந்திருந்தன.
இவற்றின்
எதிரொலியாக 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் இயக்கம் தமிழக ஆட்சியையே பலி கொடுக்க வேண்டிய பரிதாபத்திற்கு உள்ளானது.
இச்சூழலில்
வெளிவந்த ‘தாய்க்குத் தலைமகன்’ படத்தில், எம்.ஜி.ஆர் படங்களுக்கே உரித்தான சமுதாயச் சீர்திருத்தப் பாடலோ, நீதி நெறிகளை உணர்த்தும் பாடலோ ஏனோ இடம் பெறவில்லை.
மகிழ்வு தந்த பாடல்கள்!
‘திரையிசைத்
திலகம்’ கே.வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தில்,
“பர்த்துக் கொண்டது கண்ணுக்குக் கண்ணு!
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு!….”
என்று தொடங்கும் டி.எம்.எஸ். பி. சுசீலா இணைந்து பாடிய பாடல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த பாடல் காட்சிக்குப் பெரும் சுவையைத் சேர்த்த பாடலே எனலாம்.
“கட்டழகன் கண்ண்டி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சட்டு!”
“கூறுங்கள்
கேட்டுக் கொள்வேன்!
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்!
நானுங்கள்
சொந்தமல்லவா!…..”
என்று பி. சுசீலாவின் குரலில் ஒலித்த கவியரசரின் பாடல் வரிகள், அன்றைய கலைச்செல்வி ஜெயலலிதாவே பாடி, எம்.ஜி.ஆரைப் புகழ்வதுபோல் அமைந்திருந்த தன்மை, இரசிகர்களைப் பெரிதும் மகிழவைத்தன என்பது உண்மையே.
ஆராரோ பாட வந்தார்! யார்?
புரட்சித்
தலைவர் தமிழகத்தின் தலைமகன். அதனாலதான், தேவர், ‘தாய்க்குத் தலைமகன்’ என்ற பெயரில் புரட்சித் தலைவரை வைத்துப் படமெடுத்தார். அப்படத்தில் புரட்சித்தலைவி பாடுவதாக;
“அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்!
என்னவென்று
பாடுவென் கண்ணே! கண்ணே!
எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே!”
என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.
கவியரசரின்
வாக்குப் பலிதம் பாருங்கள்! தொட்டிலைத் தாலாட்டும் அன்னையாக ஆகாமலே, தமிழகத்தில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ கொண்டு வந்த அன்னையாக ஜெயலலிதா மாறிய விந்தையை….!
இன்னும் தொடரும் இப்பாடலில்,
“தொள்ளு தமிழ்ச் சோலையிலே
தெள்ளித்
தெள்ளி அள்ளி வந்த
பிள்ளைத்தமிழ் பாடவா? – கண்ணா! கண்ணா!
பேசும் தமிழ் பேசவா கண்ணா!….”
என்றே துள்ளிவரும் வரிகள், கேட்போர் மனங்களில் இன்பத் தமிழ்ச் சுவையை அள்ளி அள்ளிச் சேர்க்கிறதல்லவா?
இன்று, தமிழகத்தின் தலைமகளாய்த் திகழும் ஜெயலலிதாவை, அன்றே ‘ஆராரோ!’ பாடவைத்து, அன்னையாக்கி, அமுதமாய்த் தமிழ்ச்சுவையை நுகர வைத்த கவியரசரைப் புவியாள்வோர் போற்றத்தானே செய்வர்.
பால்! தமிழ்ப்பால்!
1968 ஆம் ஆண்டில், புரட்சி நடிகர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாயின. இவற்றுள் கவியரசர் எழுதிய பாடல்கள் ‘ரகசிய போலீஸ் 115, புதிய பூமி ஆகிய இரண்டு படங்களில் இடம் பெற்றன.
ரகசிய போலீஸ் 115 திரைப்படம், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், கண்ணதாசனின் இனிமையான பாடல்களோடு, 11.1.1968 ஆன்று வெளியானது.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.என். நம்பியார், நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் கவிஞர் எழுதிய ஆறு பாடல்களும் தேனாற்று வெள்ளத்தைப் பெருகச் செய்த பாடல்களே!
“கண்ணே! கனியே! முத்தே! மணியே!
அருகே வா!..”
என்று தொடங்கி, பி.சுசீலா, டி.எம்.எஸ். குரலில் மாறி மாறி ஒலிக்கும் கவிஞரின் பாடலில்;
“கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா!
கனிதரும்
வாழையின் கால்கள் பின்ன வா!
செம்மா துளையோ பனியோ மழையோ உன்
சிரித்த முகமென்ன?
சிறு தென்னம்பாளை மின்னல் காற்று வடித்த
சுகமென்ன?
ஒருகோடி முல்லைப்பூ விளையாடும் கலை
என்ன?”
என்றே தொடரும் வரிகளில் வந்து நிற்கும் வளமான சொற்கள் கூடி எழுப்பும் சுவையை என்னவென்று நாம் புகழ்வது….?
இனி…..!
“உன்னை எண்ணி
என்னை மறந்தேன்!….”
என்றே பி. சுசீலாவின் குரலில் எழுந்து வந்த பாடலும் சுவையானதே!
“பால் தமிழ்ப்பால் எனும்
நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் தித்திப்பால்
சுவை அறிந்தேன்!”
என்று, டி.எம்.எஸ். பி. சுசீலாவின் குரல்களில் வலம் வரும் பாடல், நம்பால் வந்து, நம் இதயத்தின்பால் இடம் பெறவில்லையா?
இப்படி, மக்கள் திலகத்தின் மனமறிந்து பாடல் வரிகளை வாரி வாரி, வழங்கி, இன்றும் அப்பாடல்களை நம் மனதின்பால் நிற்க வைத்த, தமிழ்ப்பாற்கடலன்றோ கண்ணதாசன்.
இதே படத்தில் புரட்சி நடிகரும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்திட்ட பாடல் காட்சிக்காகக் கவிஞர். எழுதி, டி.எம்.எஸ். ஈஸ்வரி இருவரும் இணைந்து பாடிய இணையற்ற பாடலொன்றைப் பாருங்களேன்!
பெண்: “கண்ணில் தெரிகின்ற வானம்
கைகளில் வாராதோ?
துள்ளித்
திரிகின்ற மேகம்
தொட்டுத்
தழுவாதோ?
கட்டியணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ?
ஆண்: பொன்னழகுப் பெண்முகத்தில்
கண் விழுந்தால் என்னாகும்?
பொன்னாகும்!
பூவாகும்! தள்ளாடும்!
செங்கனி மங்கையின் மீது
செவ்வரி வண்டாடும்!….”
பார்தீர்களா?
இப்பாடலை
முழுவதும் பாடிப் பாருங்களேன்! பாட முடியாவிட்டால், பாடலைக் கேட்டாவது பாருங்களேன்! இதயங்களை மகிழ்விக்கும் இனிய மெல்லிசையில் மலர்ந்த இதுபோன்ற மேன்மையான பாடல்களை, இன்றைய திரையுலகம் மறந்ததை எண்ணி நம் மனங்களே வேதனை கொள்ளும்.
காவிய வள்ளல்
“சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது…..”
என்று தொடங்கும் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த பாடல்….பாடல் காட்சியில் நடித்தவரோ கலைச்செல்வி ஜெயலலிதா.
தொடரும் பாடலில், தவழ்ந்து வரும் கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளைப் பாருங்களேன்!
“பட்டுக் கன்னம் தத்தித் தத்தி தவிக்கின்றது!
பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது!”
சரிதானா?
எதிர்பார்த்த உள்ளம்…..
காவிய வள்ளலாம் எம்.ஜி.ஆரைக் கண்டுவிட்டதாம்! உள்ளம் மகிழ்ச்சியில் மகிழ்ந்தாடுதாம்.
இப்படி ஆடும் மங்கைக்கும் காவிய வள்ளலுக்கும் உள்ள பொருத்தம் எப்படியாம்?
கவியரசர்
பாடலே சொல்லட்டுமே?
“என்ன பொருத்தம் நமக்குள்
இந்தப் பொருத்தம்!”
சரியான பொருத்தமா?
“என்ன பொருத்தம்?
ஆகா! என்ன பொருத்தம்!
ஆகா! என்ன பொருத்தம்!”
இவ்வாறு,
திரும்பத் திரும்பக் கவியரஞர் சொன்ன பொருத்தமே….! புரட்சித்தலைவருக்கும்,
புரட்சித்தலைவிக்கும் அரசியல் பொருத்தத்தை ஏற்படுத்தி, உறுதிப்படுத்தியது எனலாம்.
சும்மாவா
சொல்கிறார்கள்?
‘நல்லவர் நாவில் எழும் வார்த்தை!
நாட்டு நடப்பினில் நடக்கும் வார்த்தை!’
என்றே.
அதுவும் கவியரசர் வாக்கு, புவிமீது பொய்க்குமா? பொய்க்காது!….
இவற்றைச்
சொல்லும்போது, சிலர் பத்தாம்சலித்தனம் என்பர்; இன்னும் சிலர் வலிந்து சொல்வது என்பர். எது எப்படியோ? கவியரசர் வாக்கு… புவிமீது பலிக்கும்… பலித்தது என்பது என் போன்றோர் நம்பிக்கை.
எனவே வாதங்களுக்கு வரவேண்டிய கட்டாயம் நம்க்கு வேண்டாம்.
எம்.ஜி.ஆரைக் கேலி செய்த
கண்ணதாசன்!
1975 – ஆம் ஆண்டு, துக்ளக் சோவின் கதை வசனத்தில், இயக்கத்தில் வெளிவந்த படமே, ‘யாருக்கும் வெட்கமில்லை!’ என்ற படம்.
எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலம். துக்ளக் சோவோ தி.மு.க, எம்.ஜி.ஆர். தொடங்கிய அண்ணா தி.மு.க, இரண்டும் தமிழகத்தில் வளர்ந்து விடாது, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு மேடைகளில் பேசியும், எழுதியும் வந்தவர். இதே வேகத்தில் நின்றவரே கண்ணதாசன்.
அதனால்,
‘யாருக்கும் வெட்கமில்லை’, படத்தில் எம்.ஜி.ஆரைக் கேலி செய்து ஒரு பாடல் காட்சி.
அப்பாடல்
காட்சிக்கான பாடலைப் பார்ப்போமே!
“சினிமாவில் வருவது போலே – நீ
சிரித்துக்
கொண்டு டூயட் பாடடி!….”
என்று தொடங்கும் பாடலில்,
ஆண்: “அழகிய தமிழ் மகளே!
பெண்: என் அன்பே! கொடை வள்ளலே!
ஆண்: புரட்சித் தலைவி நீயே!
பெண்: என் புதுமைக் கலைஞன் நீயே!
நீ இல்லை என்றால் நான் இல்லை!
ஆண்: அடி நீ அல்லை என்றால் நான் இல்லை!”
என்றெல்லாம் வரிகள் வளர்ந்து வரும்.
எம்.ஜி.ஆரைக் கேலி செய்து கவிஞர் எழுதிய பாடல் வரிகளில் கூட,
‘கொடை வள்ளல்!’ ‘புதுமைக் கலைஞன்!’ என்ற சொற்கள் வந்துதானே நிற்கின்றன.
1990 – ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவை, 1975 – ஆம் ஆண்டே கவிஞரின் பாடல் வரி,
‘புரட்சித்தலைவி நீயே!’
என்று சுட்டுவதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! அப்போது புரியும் அவரது வாக்கின் வலிமை.
ஜெயலலிதா
அரசியலுக்கு வராத அக்காலகட்டத்தில், கவியரசரின் எண்ணத்தில் எழுந்து வந்த வார்த்தை, இன்று தமிழகமெங்கும் ஒலிக்கப் பெறுவதை எண்ணிப் பாருங்கள்!
பின்னர்,
‘நீ இல்லை என்றால் நான் இல்லை!’ என்ற தொடருக்கு, நீங்களே பதில் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment