Saturday, 13 August 2011

தனா அண்ணன்...பழம் பாடல் ரசிகர்...

'அண்ணன்' எனும் அடைமொழியில் நான் கூப்பிடும் இவர் உண்மையில் ஒரு குருவைப் போல பலவற்றை உபதேசிக்கும் திறன் கொண்டவர். 'ஜாக் ஒஃப் ஆல் டிரேட்' என்பார்களே...அது போல.

நாம் கேட்கும் அனைத்திற்கும் உடனுக்குடன், சுடச் சுட பதில் வரும். தனக்கு பதில் தெரியாத நேரங்களில் எங்கே சரியான பதிலைத் தேடலாம் என்றும் சொல்லக்கூடிய நேர்மையானவர்.

இவருக்கு பல முகங்கள்; நல்ல இசை ஞானம் கொண்டவர், சுவைபட சமைக்கும் பக்குவம் தெரிந்தவர், நண்பர்களுடன் குதூகலமாக கதைபேசும் பேராற்றல் கொண்டவர், நல்ல கலா ரசிகர் மற்றும் ஒரு நல்ல குடும்பத் தலைவர்.

இவருடன் பழகுவோருக்கு இவருக்கு இசையில் இருக்கும் ஆர்வம் நன்றாகவே தெரியும். புதிய பாடல்களை தேர்ந்து கேட்டு அசத்தும் இவர், தனது பழைய பாடல்களினால் உடன் இருப்போரை திக்கு முக்காடச் செய்வார். அவரின் ரசிப்புத் தன்மைக்கு நிகர் விரல்களால் எண்ணுமளவுக்கு வெகு சிலரே.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நான் அவர் இல்லத்திற்கு போவதுண்டு. வயிற்றுக்கு நல்ல உணவு, காதுக்கு நல்ல இசை, கலகலப்பான சம்பாஷனை... இப்படி இனிமையாக பொழுது போகும்.


தலை நகரில் கொலம்பியா இசை நிலையத்தில் தனக்குப் பிடித்த பாடல்களை தேர்வு செய்து கொடுக்கும் அபாரத் திறமையை பார்த்த உரிமையாளர் பின்னாளில் இவரின் நல்ல நண்பர் ஆகிவிட்டார். 

"அப்பொவெல்லாம் இசைதட்டுகளில் தான் பாடல்கள் இருக்கும். டேப்பும் இன்னும் வராத காலம். இடை இடையே வரும் இரைச்சலோடு  பாடலைக் கேட்டு ரசித்தோம். அதற்கப்புறம்  டேப் வந்திடுச்சி. இதனால் நாமே நமக்குப் பிடித்ததை பதிவு செய்து கொள்ளும் ஆற்றலும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சீடிக்களில் பாட்டைக்கேட்கும் படியான முன்னேற்றம் அடைந்தோம். இப்போ, நேரடியாக இணையத்திலேயே எல்லா பாடல்களும் கிடைத்து விடுகின்றன. பதிவிறக்கமும் சுலபமாயிருக்கிறது...." என்று ஆர்வம் பொங்க பழைய காலத்தில் இருந்து தனது நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

" ஒவ்வொரு பாடகர் வரிசையில் அவர்களின் சிறந்த பாடல்களை நான் பத்திரப் படுத்தி வச்சிருக்கேன். சீனிவாஸ், ஏ எம் ராஜா, கண்டசாலா, ஜிக்கி, பி.லீலா, ஏ பி கோமளா, டி ஏ மோதி ... இப்படி பலருடைய பாடல்கள் அந்தக் காலத்தில் இருந்து என்னிடம் இருக்கு..."

சில பாடல்களை என்னிடம் போட்டுக் காண்பித்தார்.... அடடா...என்ன இனிமையான பாடல்கள்.... அந்தக் காலத்துக்கே நம்மை கொண்டு செல்வது போன்ற பாடல்கள்....

" நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா..."

'மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு கிளை பாரமா
கொடிக்கு காய்பாரமா...'

'மயங்காத மனம் யாவும் மயங்கும்..."

'தலைவாரி பூச்சூடி உன்னை
பாட சாலைக்குப் போய் வா
என சொல்வாள் உன் அன்னை...."

'ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே..."

போன்ற பல பாடல்களை எனக்கு கேட்க பதிவு செய்து தந்தார்.

" ஒரு காலத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஒரு படத்தையே பதிவு செய்து அதிலிருந்து நமக்குத் தேவையான பாடலை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்...இந்தவகையில் பதிவு செய்த இசை தட்டிலோ, டேப்பிலோ அல்லது சீடியிலோ இல்லாத பழைய பாட்டெல்லாம் என்னிடம் இருக்கு...." அவரின் பெருமிதம் எனக்கு விளங்காமலில்லை. நானும் ஒரு பழம் பாடல் ரசிகன்.

உண்மையான இசைப் பிரியர்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என  நிச்சயம் விளங்கும்.

No comments:

Post a Comment