1964 – ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் படங்கள் ஏழு. அவற்றில் வேட்டைக்காரன் என் கடமை, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில் ஆகிய நான்கு படங்களுக்குக் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.
‘எம்.ஜி.ஆருக்குக் காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது!’ என்று, விளம்பரமிக்க சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் நாளிதழ் எழுதிவிட்ட செய்தியொன்று, எம்.ஜி.ஆருக்குப் பெரும் மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்த நேரம்.
தேவர் பிலிம்ஸ் சார்பில் ‘வேட்டைக்காரன்’ படம் தயாரித்துக் கொண்டிருந்த சமயமும் அதுவே. 1957 – ஆம் ஆண்டு ‘மகாதேவி’ படத்திற்குப் பின்னர், 1963 – ஆம் ஆண்டு ‘பரிசு’ படத்தில் நடித்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி எம்.ஜி.ஆரோடு இணைந்து நடிக்கும் படமும் அதுவே.
கவிஞருக்கு,
சூழ்நிலையின் தன்மை புரிந்தது. எம்.ஜி.ஆரும் சற்று மாறுபட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணி உடையில் கம்பீரத்தோடு புலியை வேட்டையாடும் வேட்டைக்காரனாக நடித்தார்.
கவிஞருக்குச் சொல்லவா வேண்ண்டும்? படத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்களையும், நீதி சொல்லும் பாடல்களையும், கே.வி. மகாதேவன் இசையில் கேட்போர் மயங்கும் வகையில் வாரி வாரித் தந்தார்.
“என்……
கண்ணனுக்
கெத்தனை கோவிலோ?
காவலில் எத்தனை தெய்வமோ?
மன்னனுக்
கெத்தனை உள்ளமோ?
மனதில் எத்தனை வெள்ளமோ?…”
எனத் தொடங்கி,
“என் கண்ணன் தொட்டது பொன்னாகும்! – அவன்
கனிந்த புன்னகை பெண்ணாகும்!
மங்கை எனக்குக் கண்ணாகும்!
மறந்து விட்டால் என்னாகும்?”
என்று, கதையின் நாயகன் எம்.ஜி.ஆர். புகழுபாடும் கீதமாக, பி. சுசீலாவின் குரலில், நாயகி பாடுவதாக முதல் பாடல் படத்தில் எழுந்தது.
இரண்டாவதாக,
ஆண்: மஞ்சள் முகமே வருக!
மங்கல விளக்கே வருக!
பெண்: கொஞ்சும் தமிழே வருக!
கோடான கோடி தருக!”
என, எம்.ஜி.ஆரின், பழுதுபடாத அன்றைய குரலைக் கொஞ்சும் தமிழாக்கிக் கோடான கோடி இன்பம் தரும் கோமானாக்கி’
“கேட்டாலும் காதல் கிடைக்கும் – மனம்
கேளாமல் அள்ளிக் கொடுக்கும்”
என்றே, அவரைக் காதல் தலைவனாக்கியே பாடல் ஒலிக்கும்.
மூன்றாவதாக,
பெண்: “கதாநாயகன் கதை சொன்னான்! – அந்தக்
கண்ணுக்குள்ளும் இந்தப்பெண்ணுக்குள்ளும் ஒரு
கதாநாயகன்
கதை சொன்னான்!”
இப்படிக் கண்ணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் காதல் கதை பேசும் கதாநாயகன்;
பெண்: “காவிரிக் கரைக்கு வரச் சொன்னான் – இளங்
கன்னத்திலே
ஒன்று தரச் சொன்னான்!
கையுடன் கைகளைச்
சேர்த்துக்
கொண்டான் – எனைக்
கட்டிக் கொண்டான்! நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்!”
எனக் ‘காவிரிக்கரையில் இளமை தவழும் தன் கன்னத்தில் ஒன்று தரச் சொன்னான்!’ என்றே, நாயகனின் காதல் ரசனை பற்றிய பாடலைத் தொடர்ந்து,
காதல் மொழிகளைக் கவிதையில் கவிஞர் வாரி வாரி இறைத்து,
ஆண்: “மாமல்லபுரத்துக் கடல் அருகே – இந்த
மங்கை இருந்தாள் என்னருகே!
பார்த்துக்
கொண்டிருந்தது வான்நிலவு – நாங்கள்
படித்துக்
கொண்டிருந்தோம் தேன்நிலவு!”
என, இளைய நெஞ்சங்களில் இன்பக் கோயிலையே, கண்ணதாசன் கட்டி முடிப்பார்.
எம்.ஜி.ஆருக்கா, காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது! காதல் வேட்டையாடும் கட்டிளங்காளையாம் வேட்டைக்காரனைப் போய்ப் பாருங்கள்! என்ற வேகத்தையே இப்பாடல் காட்சிகள் எழுப்பியது.
இதன் விளைவு! அன்றைய நாளில் பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில், பத்மினி பிக்சர்ஸ் தயாரித்து, சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், அசோகன், சாவித்திரி, தேவிகா, எம்.வி. ராஜம்மாள் போன்ற பிரபல நடிகர்கள் நடித்து பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட, கண்ணதாசனின் காவிய கீதங்கள் நிறைந்தே வெளியான ‘கர்ணன்’ திரைப்படம், வெற்றி பெற இயலாது திக்குமுக்காடிப் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அந்த அளவிற்கு, அன்றைய இளைய சமுதாயத்தை, சாதாரண நிலையில் தயாரிக்கப்பட்ட ‘வேட்டைக்காரன்’ படம் ஈர்த்துப் பெரும் வெற்றியைப் படைத்தது.
இப்படத்தில், இன்னும்,
பெண்: “ஹூம்…ஹூம்….ஹூம்!
மெதுவா மெதுவா தொடலாமா?
மேனியிலே
கை படலாமா?”
என்று தொடரும் பாடலில்,
பெண்: “வேட்டைக்கு வந்தது நினைவில்லையா?
நினைவில்லையா? – இங்கு
வேறொரு புள்ளிமான் கிடைக்கல்லையா?
கிடைக்கல்லையா?
காட்டுக்குள்ளே இந்த நாடகமா?
காதலென்றால் இந்த அவசரமா? அவசரமா?”
என்றே எழுந்து வரும் வரிகளும்:
ஆண்: “குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா? மாறட்டுமா – உன்
கூந்தலில்
நடனம் ஆடட்டுமா? ஆடட்டுமா!
கொல்லும்
கண்களை வெல்லட்டுமா?
கோடிக்கதைகள் சொல்லட்டுமா?”
இப்படித் தொடர்ந்து கவிஞர் தொடுத்த கவிதை வரிகளும், டி.எம்.எஸ். பி. சுசீலாவின் இனிய குரல்களில் இனிமையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடியையர் திலகம் சாவித்திரியின் பொருத்தமான நடிப்பில், காதல் பூகம்பத்தையே எழுப்பிப் புதிய வரலாற்றையே படைத்தது எனலாம்.
சரி வெறும் காதலை மட்டுமா சொல்லுவார் எம்.ஜி.ஆர்? சமுதாயத்திற்குச் சொல்லவேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லுவாரே! பின் என்ன சொல்லாமலா விடுவார்?
அதற்கும்
கண்ணதாசனின், எண்ணக் கருத்துகள் எழுந்து வரும் விதம் காணீர்!
“வெள்ளிநிலா முற்றத்திலே
விளக்கெரிய
விளக்கெரிய
உள்ள மென்னும் தாமரையில்
உனையெடுத்துக் கொண்டு வந்தேன்!”
பாடலின் ஆரம்பத்தைப் பார்த்தீர்கள்!
வேட்டைக்காரன் பாபு, தன் காதல் தலைவியை, வாழ்க்கைத் துணைவியாக்கி, அதன் வரப்பிராதமாக வந்த மகன் ராஜாவை அன்புடன் அணைத்து வளர்க்கிறார்.
காரணம், வாழ்க்கைத் துணைவயான காதல் தலைவி, காசநோயின் தாக்குதலில் தத்தளிக்கிறாள். எனவேதான் பிள்ளைக்குத் தந்தையான பாபுவே, தாயின் அன்பையும் சேர்த்து ஊட்டும் கடமையின் சொந்தக்காரராகிறார்.
உள்ளமெனும்
தாமரையில் கொண்டு வந்த மகனுக்கு உணவூட்டிக் கொண்டே, நல்லுணர்வுகளை ஊட்டிட, நன்னெறிகள் வளர்ந்திட வாழ்த்தியே பாபு பாடுகிறார்.
வாழ்த்துவதைப் பாருங்களேன்!
வேலெடுக்கும் மரபிலே
வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே
நடையைக் காட்டு! – வரும்
பகைவர்களை
வென்றுவிடும்
படையைக் காட்டு!”
பார்த்தீர்களா?
பால் குடிக்க வந்தவன்… எங்கே இருந்து….? வீரம் செறிந்த மண்ணில் இருந்து! எந்த மரபில் இருந்து? வெற்றிவேல் எடுக்கும் மரபில் இருந்து!
அப்படியானால் அவன் எப்படி இருக்கவேண்டும்?
வெற்றி நடையைக் காட்டவேண்டும்! பகைவர்களை வென்றுவிடும் படைபலத்தையும் காட்டவேண்டும்!
சரிதானே!
இவை போதுமா?
“முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே
கலந்து எப்போதும்
சுவைத்திருப்பாய்!”
எப்படியாம்?
உடல் உரம் பெற்றிட முக்கனிச் சாறெடுத்து உண்ண வேண்டும்!
சிந்தையைத்
தெளிவாக்க, செவிக்உக உணவான, முத்தமிழாம் தேனை, வள்ளுவர் தந்த முப்பாலிலே கலந்து, எப்போதுமே சுவைத்திருக்க வேண்டுமாம்!
அப்போதுதானே தமிழரின் பண்பாட்டோடு, தமிழரின் வீரமும் தழைத்து வளரும்.
இவையும் போதா? இன்னும்……
“நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு
வாழ்வதுதான்
சுயமரியாதை!
– நல்ல
மனமுடையோர்
காண்பதுதான்
தனி மரியாதை!….”
ஆமாம்! நல்லோர், நான்கு திசையிலுள்ளோர் போற்ற வேண்டும்! நாடு உன்னை வாழ்த்தவேண்டும்! ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போல்’ மானத்தோடு வாழ்வதே சுய மரியாதையாகும்.
அத்தகு நல்மானம் கொண்டோர்தான், அவர்கள் காண்பதுதான் சுயமரியாதையாகும்.
இப்படியெல்லாம் மகனுக்கு வீர உணர்வூட்டித் தன்மானத்தோடு வாழ்ந்திட வழி சொல்லும் தந்தை பாபுவாக எம்.ஜி.ஆரும்; மகன் ராஜாவாக அன்றைய பெயர் பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலாவும் தோன்றி நடிக்கும் காட்சியைக் கண்டு மகிழாமல் இருந்திட இயலுமா?
படத்தின்
உசகட்டப் பாடலோ, சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலே;
“உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
உலகத்தில்
போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை ‘
வணங்காமல்
நீ வாழலாம்!”
என்று ஆரம்பமாகும் பாடலமாகும்.
மற்றவரைப்
பற்றி உனக்கென்ன மனக்கவலை! ‘உன்னையே நீ அறிவாய்!’ என்று கிரேக்கஞானி சாக்ரடீஸ் சொன்னாரே; அவர் சொன்ன மொழியை ஏற்று முதலில் நீ உன்னை அறியக் கற்றுக்கொள்! உன்னை நீ அறிந்துகொண்டால், நீ உலகத்தில் எழுந்து நின்று போராடலாம்.
அப்போதுதான் உன் வாழ்க்கையில் உயர்வு வந்தாலும், தாழ்வு வந்தாலும் பிறர்க்குத் தலை வணங்காமல் நீ வாழ்ந்திடலாம். என்கிறார். யார்? எம்.ஜி.ஆர்.
“மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று
சொல்வதில்லையா?…தன்னைத்
தானும் அறிந்துகொண்டு
ஊருக்கும்
சொல்பவர்கள்
தலைவர்கள்
ஆவதில்லையா?…ஓ….ஓ…ஓ…”
‘இங்கும்,
மானமே பிரதானமாகச் சொல்லப்படுகிறது.
மானமே பெரியதென்று வாழும் மனிதர்களே, கவரிமான் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள்!
மானத்தொடு,
நல்லது கெட்டதை அறிந்துகொண்டு, அறிந்ததை ஊருக்குள் சொல்பவர்களே தலைவர்களாவார்கள்!’
அரிய கருத்துக்களே! அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகளே!
இன்னும் எம்.ஜி.ஆர். வாயிலாகச் சொல்லப்படுவன என்ன? இதோ!….
“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு
நிகரில்லையா?…பிறர்
தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?….ஓ….ஓ….ஓ…”
என்னே அருமை!
பூமியல் சாமிக்கு நிகரானவர் யாராம்? நேர்மையாக வாழ்கின்றவர் எல்லோருமே சாமிக்கு நிகரானவரேயாம்! அது மட்டுமா?
பிறரது தேவைகளை அறிந்துகொண்டு, தன்னிடம் உள்ள செல்வத்தை வாரி வாரிக் கொடுப்பவர்களே தெய்வத்தின் பிள்ளைகளாம்!
(அந்த வகையில் வாரி வாரிக் கொடுத்த வள்ளலாம் எம்.ஜி.ஆரும் தெய்வத்தின் பிள்ளைதானே! கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் அவ்வாறு தோன்றிய விதத்தால்தானே பாடலும் இவ்வாறு பிறந்தது.)
அடுத்து என்ன? அடுத்து வரும் பாடல் வரிகள்தான்….. எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கே இலக்கணமான இலக்கிய வரிகள்…..
“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்! – ஒரு
மாற்றுக்
குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப்
புகழவேண்டும்!….ஓ….ஓ….ஓ….”
அடேயப்பா!
‘மாபெரும்
சபைகளுக்குள் நீ நடந்து வந்தாலே, உன் மகிமையறிந்து மாலைகள் வந்து விழவேண்டும்! ஒரு குறையும் சொல்ல முடியாத, மாற்றுக் குறையாத பொன்னான மன்னவன் இவனென்றே, இந்த உலகம் உன்னைப் போற்றிப் புகழவேண்டுமாம்!’
இவையெல்லாம் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்தவையல்லவா? நாம் கண்டவையல்லவா? இவற்றைத் தானே கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னார்! அவர் சொன்ன வாக்கு இவ்வையகத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பலித்தவைதானே!
எத்தனையோ
பாடல்கள்…. கவிஞரின் கருத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும்; எவர் எவர்க்கோ அவர் எழுதியிருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பொருந்திய விதங்களே வியத்தகு சிறப்புக்கு உரியன எனில் மிகையாகா.
இவற்றிற்கெல்லாம் ஏதேனும் அடிப்படைக் காரணங்கள் இருக்குமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவற்றைக் கண்ணதாசனே சொல்லக் கேட்போமே! வாருங்கள்!
புரட்சி நடிகர் பற்றிக் கவியரசர்!
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் படங்களுக்கெல்லாம் நான் எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
மதுரைவீரன்
படத்துக்கு எழுதியபோதுதான் என்து எடை அதிகரிக்கத் தொடங்கிற்று. காரணம் லேனா போட்ட சாப்பாடு!….
இன்று பாட்டெழுதப் போய் உட்கார்ந்தால், தமிழ் தெரியாதவர்கள், ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாரும் பாட்டிலே திருத்தம் சொல்லுகிறார்கள். ‘அந்த வரியை மாற்று, இந்த வரியை மாற்று’ என்று ஆணையிடுகிறார்கள்! காட்டுப்புறத்தில் கள்ளி பொறுக்கியவனெல்லாம் பாட்டுக்கு விளக்கம் கேட்கிறான்!
மதுரைவீரனில் லேனாவோ, யோகானந்தமோ, எம்.ஜி.ஆரோ என் எழுத்தில் ஒரு வரியைக்கூட மாற்றியதில்லை.
…. பிரகாசமான
எதிர்காலத்தைப் பற்றிய திடமான நம்பிக்கை, அந்த தணிகாசலம் செட்டி ரோடில்தான் (மதுரைவீரன் படம் எடுத்த, லேனோ செட்டியார் கம்பெனி இருந்த ரோடு) எனக்கு ஏற்பட்டது.
நானும் கருணாநிதியும் சினிமாவின் மூலம் நண்பர்களானவர்கள். அரசியல் தொடர்பு பின்னால் வந்தது. நாங்கள் பழகியது மாதிரி யாரும் பழகி இருக்கவும் மாட்டார்கள்; எங்களுக்குள் பகை வந்த மாதிரி யாருக்கும் வந்திருக்காது……
டால்மியபுரம் போராட்டத்தில் பிடிபட்ட மறுநாளே, அவர் ஆறுமாதம் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போய்விட்டார். நான் கலவர வழக்கில் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் ‘இல்லறஜோதி’ சந்தர்ப்பம் கிடைத்தது. எழுதிய வசனங்களை ரகசியமாக சிறைச்சாலைக்குள் அனுப்பி வைத்தோன். அந்த ஃபைலைப் பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டார்.
அதுதான் எங்கள் பகைமையின் ஆரம்பம் என்று தோன்றுகிறது.
பழகிய மரியாதைக்காகத்தானே அவருடைய பார்வைக்கு அனுப்பினேன்! ‘நன்றாய் இருக்கிறது; இல்லை!’ என்று குறிப்பாவது எழுதியிருக்கலாம் அல்லவா?
பத்திரிக்கைத் துறையிலும் போட்டி வளர ஆரம்பித்தது. எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் மனவேறுபாடு இருந்ததால், எம்.ஜி.ஆர் எனக்கு வெகுவாக ஊக்கம் கொடுத்தார். சொல்லப் போனால் எனக்கு அதிகமான தொகை கிடைப்பதற்குக்கூட ஏற்பாடு செய்தார். ‘மதுரை வீரனைப்’ போட்டுப் பார்த்தபோதெல்லாம் மனம் திறந்து பாராட்டினார்.
‘மன்னாதி மன்ன’னுக்கு நான் எழுதிய காலம் பொன்னான காலம். அதைத் தயாரித்த திரு. எம். நடேசன்,…. ‘மன்னாதி மன்னன் கதையையே நான் சொல்லித்தான் அவர் தேர்ந்தேடுத்தார்.
‘மதுரைவீரன்’
அபார வெற்றியடைந்ததும், தனது ‘நாடோடி மன்னன்’ கதையையும் என்னிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர்.
…. முதன் முதலில் பாட்டெழுதும் பொறுப்பையும் சேர்த்துக் கொடுத்தவர் எம். நடேசன்.
அடுத்தாற்போல் கதை, வசனம், பாடல் மூன்றையும், ‘மகாதேவி’ படத்திற்காக திரு. சுந்தரராவ் நட்கர்னி.
(அப்படத்தில்)
கொடுமையைப்
பற்றி ஒரு வசனம்.
“கொடுமையைக்
கண்டு யார்தான் பயப்பட மாட்டார்கள்! உச்சி வெயிலின் கொடுமை தாங்காமல் மனிதனின் நிழல்கூட அவன் காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது!”
இது காளிதாசன் உவமையைவிட அற்புதமாக இல்லையா?
ஒரு படத்தை எப்படிப் பொறுப்புணர்ச்சியோடு எடுக்கவேண்டும் என்பதற்கு உதாரண புருஷர் எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ படத்தை அவர் எடுக்கும்போது இராப்பகலாக அதைப் பற்றியே சிந்தித்தார். அவர் எவ்வளவு சிந்தித்திருப்பார் என்பது எனக்கும், ரவீந்தருக்கும் தான் தெரியும்.
அந்தப் படத்திற்கு நாங்கள் இருவர் எழுதி இருந்தோம்.
இருவரும்
தனித்தனியாக இரண்டாயிரம் பக்கங்கள் எழுதியிருப்போம். ஏழாம்தேதி சில காட்சியமைப்புகளைச் சொல்லி இருப்பார். பதினைந்தாம் தேதி அவற்றை நாங்கள் எழுதிக் கொண்டு வரும்போது காட்சிகளை வேறுவிதமாக மாற்றியமைப்பார்.
சிந்தனை அதிலேயே லயித்தால்தானே புதிய புதிய அமைப்புகள் தோன்ற முடியும்?
‘நாடோடி மன்னன்’ மகத்தான வெற்றியடைந்தது. மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமையெல்லாம் எம்.ஜி.ஆருக்கு இருப்பதை அந்தப் படம் நிரூபித்தது.”
புரட்சி நடிகர் பற்றிக் கவியரசர் கூறிய கருத்துகளைக் கண்டோம். இவையெல்லாம். ‘சினிமாச் சந்தையில் 30 ஆண்டுகள் என்ற நூலிலும்; ஏற்கனவே ‘மனவாசம்’ போன்ற நூல்களிலும் கவியரசர் கூறிய கருத்துகளே.
ஆக, ஒருவரது சிந்தனையோட்டத்தை அறியும் திறன் என்பது, மற்றவரிடத்தில் அமையும்போதுதான், இருவரது கருத்துகளும் ஒன்றாகி, நன்றாக வெளிப்படும். இத்தகு அதிசயக் கூட்டமைப்பு ‘எம்.ஜி.ஆர் – கண்ணதாசன்’ இருவரிடையேயும் நிலவியது.
அதனால்தான்,
கவிஞரது பார்வையில் பார்த்த எம்.ஜி.ஆர் என்ற கற்பக மரம், பூத்துக் காய்த்துக் கனிந்து பலன்கள் தந்து, நிலைத்து நின்றதை நம்மால் நாளும் உணர முடிகிறது.
பணக்காரக் குடும்பம்! பாடல்கள்… பாரீர்!
ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில், டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில், மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பில், 23.4.1964 ஆம் நாளன்று வெளியான படமே. ‘பணக்காரக் குடும்பம்.’
இப்படத்தில் கண்ணதாசன் எண்ணத்தில் பிறந்த, சிறந்த பாடல்களைப் பார்ப்போம்.
“பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக – நான்
பாதியிலே
திரும்பி வந்தேன்
தனிமரமாக!
தனிமரமாக!…”
பாடல்….! உள்ளத்தைத் தொட்ட பாடல்தானே!
எளிமையான
சொற்களுக்கு விளக்கங்கள் ஏன்?
தொடர்ந்து
பாடலைப் பார்ப்போம்!
“மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட – அதை
மண்மீது போட்டு விட்டேன்
வெய்யிலில்
வாட!
மணமேடை போடச் சொன்னேன்
மங்கலமில்லை!
மணமகளைக்
காண வந்தேன்
குங்குமமில்லை!
காதலுக்கே
வாழ்ந்திருந்தேன்
கற்பனை இல்லை!….”
எல்லை தாண்டிய நாயகன் சோகத்தை, எளிய சொற்களில் கவியரசர் வடித்துத் தந்த வார்த்தைகளில் பார்த்தீர்கள்!
நாயகன் நல்லவன்; குற்றமற்றவன் என்பதைத் தெளிவுபடுத்தவே,
“காதலுக்கே வாழ்ந்திருந்தேன்
கற்பனை இல்லை!”
என்ற கருத்தாழம் பொதிந்த பாடல் வரிகள் பதிவு செய்யப்பட்டன.
சரி! காதலுக்கே வாழ்ந்திருந்தவன் கண்டது என்ன? கேளுங்களேன்!
“கண்ணாலே பெண்ணை அன்று
கண்டது பாவம்!
கண்டவுடன்
காதல் நெஞ்சில்
கொண்டது பாவம்!
கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி
வந்தது பாவம் – வெறும்
கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம்!….”
கேட்டீர்களா?
எத்தனை பாவங்களை, காதலுக்கே வாழ்ந்திருந்தவன் அடுக்கிக் காட்டுகிறான்.
No comments:
Post a Comment