எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவராய்’ அவர் நின்று காத்த இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவியாய்’ ஜெயலலிதா இன்று இருந்து காக்கும் அதிசயம், உங்கள் இதயங்களுக்குள் கவி வாக்கின் பெருமைதனைப் பேசிட வைக்கும் என்பதும் உண்மைதானே!
புதிய பூமியில் தோன்றிய புதுமை!
ஜேயார் மூவிஸ் தயாரிப்பில், ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘ஒளிவிளக்கு’, ஆகிய அருமையான படங்களை இயக்கிய ‘சாணக்யா’ இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், 27.6.1968 அன்று வெளிவந்த படமே ‘புதியபூமி’
இப்படம் தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு விரைந்து வெளியிடப்பட்ட படமாகும்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர். மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவராக நடித்தார். தென்காசித் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.கழக வேட்பாளர் பெயர் சம்சுதீன் என்ற கதிரவன். எனவே எம்.ஜி.ஆரும் கதிரவன் என்ற பெயரிலேயே படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
படத்தின்
வசனத்தை தென்பாண்டிச் சிங்கம், அன்றைய இராமநாதபுரம் மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் எஸ்.எஸ். தென்னரசு எழுதினார்.
படத்தின்
பாடல்களை எழுதியவரோ கவியரசர் கண்ணதாசன். தேர்தலை மையமாக வைத்துப் பிரச்சாரப் பாடல் ஒன்று தேவை. அதனைக் கவியரசர் எழுதாமல், பூவை செங்குட்டுவனை எழுதுமாறு செய்தார்.
அப்பாடல்தான்,
“நான் உங்கள் வீட்டுப்பிள்ளை!
இது ஊரறிந்த உண்மை!
நான் செல்லுகின்ற பாதை!
பேரறிஞர்
காட்டும் பாதை!”
என்ற பிரபலமான பாடலாகும்.
இக்கருத்தமைந்த பாடலை கவியரசர் எழுதாமைக்குக் காரணம்; அவர் பெருந்தலைவர் காமராஜரின் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரும் பற்றுக் கொண்டிருந்தமேயே எனலாம்.
இங்கேதான்
கவியரசருக்கும், புரட்சி நடிகருக்கும் இருந்த ஆழமான நட்பு; பரஸ்பரமாக விட்டுக்கொடுக்கும் பாங்கு; கவியரசரின் கவிதைகளுக்குப் புரட்சிநடிகர் தந்த மதிப்பு ஆகிய பெருந்தன்மைகள் வெளிப்படுகின்ற விதங்கள் தெளிவாகின்றன.
கவிசருக்கும், புரட்சிநடிகருக்கும் அவரவர் இயக்கங்கள் தேவை. கலையுலகப் பயணத்திலோ மாறுபடாத மனங்கள் தேவை. எனவே அறிந்து, தெரிந்து செயல்பட வேண்டிய விதங்களில் முடிந்தவரை இருவர் மனங்களும் செயலாற்றிய மேன்மை இங்கே புலப்பட்டன எனலாம்.
இதனைப் ‘புதியபூமி தோன்றுவித்த புதுமை’, என்றுகூடக் கூறலாம்.
படத்தில்
கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போமே!
“நெத்தியிலே பொட்டு வச்சேன்!
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்!”
எனத் தொடங்கும் இனிமையான பாடலொன்று, கதாநாயகி கலைச்செல்வி நடித்த பாடல் காட்சிக்காக எழுதப்பெற்றதாகும்.
அடுத்து;
“விழியே! விழியே! உனக்கென்ன வேலை!
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை!…”
எனத் தொடங்கி;
“விருந்து என்றாலும் வரலாம்! வரலாம்!
மருந்து தந்தாலும் தரலாம்! – அதில்
நாளையென்ன
நல்ல வேளையென்ன! – இங்கு
நான்கு கண்களும் உறவாட!….”
என்றே, தொடரும் நாயகன் எம்.ஜி.ஆர்; நாயகி ஜெயலலிதா நடிக்கும் காதல் காட்சிக்காகக் கனிந்து வந்த பாடலொன்றாகும்.
இனிவரும்
பாடலொன்றைப் பாருங்களேன்!
ஆண்: “சின்னவளை முகம் சிவந்தவளை – நான்
சேர்த்துக்
கொள்வேன் கரம் தொட்டு!
என்னவளை காதல் சொன்னவளை – நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு!
பெண்: வந்தவளைக் கரம் தந்தவளை – நீ
வளைத்துக்
கொள்வாய் வளையிட்டு!
பூங்குவளைக் கண்கள் கொண்டவளைப் – பது
பூப்போல்
பூப்போல் தொட்டு!…..”
பாடலைப் பார்த்தீர்களா?
ஏற்கனவே,
“சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் – இந்தச்
சின்னவரைப்
போய்க் கேளும்!”
என்று, ‘தனிப்பிறவி’ படத்தில், எம்.ஜி.ஆரைப் பார்த்து ஜெயலலிதா, ‘சின்னவர்’ என்று, கூறுமாறு பாட்டமைத்தார் கண்ணதாசன்.
அதேபோல் சின்னவருக்கு ஏற்ற சின்னவளாக ஜெயலலிதாவை, எம்.ஜி.ரே குறிப்பிட்டுப் பாடுமாறு செய்தவரும் கண்ணதாசனே!
இது எதற்காகக் கவிஞர் எண்ணத்தில் எழுந்ததோ? ஒருவேளை… அந்தச் சின்னவருக்குப்பின், இந்தச் சின்னவளே எம்.ஜி.ஆரின் வாரிசாய் வலம் வருவார் என்ற எண்ணமோ? இதைச் சொன்னால் கூட வலிந்து கூறுவதாக வாதம் செய்வார்கள்! சரி விட்டுவிடுவோம்!
பாடலின் நயத்தைப் பாருங்களேன்!
சின்னவளை – முகம்
சிவந்தவளை
என்னவளை
– காதல்
சொன்னவளை!
வந்தவளை
– கரம்
தந்தவளை
பூங்குவளை
– கண்கள்
கொண்டவளை…..
எத்தனை ‘வளை’ என்னும் சொல்லாடல் மீண்டும் மீண்டும் புதிது புதிதாய்ப் பூத்து வரும் ‘வளை’ கொண்ட பாடல் நம் மனங்களை வசம் செய்து, வாசமும் செய்யுமல்லவா!
இன்னும் பாருங்களேன்!
தூயவளை – நெஞ்சைத்
தொடர்ந்தவளை!
- பால் மழலை மொழி
படித்தவளை!
- வான்மழைபோல்
ஆனவளை! -
நீயவளை -
எனத் தொடரும் ‘வளை’ எனும் சொல் கொண்டு, கவியரசர் நம்மையும் ஏன்? எம்.ஜி.ஆரையும் கவித்திறத்தால் வளைத்து வசியம் செய்திட்ட பாங்கை எப்படித்தான் புகழ்வது!
அதனால்தானோ,
சினிமா உலகச் சின்னவர், இந்தச் சிறுகூடற்பட்டிக் கண்ணதாசன் கவிதைகளில் தன் எண்ணத்தைப் பறிகொடுத்து, தமிழக அரசவைக் கவிஞராக ஏற்றி வைத்தாரோ?
எழுபதில் எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா
பெற்ற ஏற்றங்கள்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படமான ‘ஒளிவிளக்கு’, 20.9.1968 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்திலும் கதாநாயகி கலைச்செல்வி ஜெயலலிதாவே.
1969 – ஆம் ஆண்டில் புரட்சிநடிகரின் இரண்டு படங்களே வெளியாயின.
வெளியான அடிமைப்பெண், நம்நாடு ஆகிய இரண்டு படங்களும் திரையுலகில் வெள்ளிவிழாக்களைக் கண்டு பெரும் சரித்திரங்களையே படைத்தன. இவ்விரு படங்களிலும் இன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவே கதாநாயகியாக நடித்துப் பெரும் புகழ் கண்டார்.
அறிஞர் அண்ணாவின் மறைவும், அரசியல் மாற்றங்களும், தி.மு.கழகப் பொருளாளர் என்ற பொறுப்பும், புரட்சி நடிகருக்கு 1969 – ஆம் ஆண்டில், அதிகப் படங்களை வெளியிட இயலாத நிலையை ஏற்படுத்தியது எனலாம்.
1970 – ஆம் ஆண்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஐந்து படங்கள் வெளியாயின. இவற்றுள் எம்.ஜி.ஆருடன் வாணி ஸ்ரீ இணைந்து நடித்த ‘தலைவன்’ என்ற படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.
ஏனைய நான்கு படங்களாம் ‘மாட்டுக்கார வேலன்’, ‘என் அண்ணன்’, ‘தேடிவந்த மாப்பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’, ஆகியவை பெரும் வெற்றிகளைப் பெற்றவையே.
இந்நான்கு
படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் கலைச்செல்வி ஜெயலலிதாவே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நான்கில் மேகலா பிக்சர்ஸ் வெளியீடான ‘எங்கள் தங்கம்’ தவிர ஏனைய மூன்று படங்களிலும் பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.
ஜெயந்தி பிலிம்ஸ் தயாரித்து, ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையில், கண்ணதாசன் பாடல்களோடு, எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில், ஜெயலலிதா, லட்சுமி ஆகிய இருவரோடு நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ 14.1.1970 அன்று, தமிழர் திருநாளில் வெளியானது.
சென்னையில்
‘மாட்டுக்கார வேலன்’ திரையிடப்பட்ட பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி ஆகிய நான்கு திரையரங்குகளிலும், தொடர்ந்து தினமும் மூன்று காட்சிகளுக்குக் குறையாமல் நூறு நாள்கள் ஓடி சாதனைச் சரித்திரம் படைத்தது.
இத்தகு சாதனைக்குரிய படத்தில், நம் சாதனைக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன.
டி.எம்.எஸ். குரல் கொடுத்து, எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிக்காகக் கவிஞர் தந்த பாடல்… ஒன்று… இதோ!….
“ஒரு பக்கம் பாக்குறா!
ஒரு கண்ணெ சாய்க்குறா! – அவ
உதட்டை கடிச்சுக்கிட்டு – மெதுவா
சிரிக்கிறா
சிரிக்கிறா சிரிக்கிறா!….”
பாடலின் தொடக்கம் கண்டீர்!
நாற்பது வயதை எட்டி நிற்கும் பலருக்கும் பாடல் முழுமையும் நினைவுக்கு வரலாம்… இல்லையெனில் பாடல் காட்சியாவது நினைவுக்கு நிச்சயம் வரலாம்?
அடுத்து…
“தொட்டுக் கொள்ளவா… நெஞ்சில்
தொடுத்துக்
கொள்ளவா!
பட்டுக் கொள்ளவா…மெல்லப்
பழகிக் கொள்ளவா!”
என்று தொடங்கி…..
“தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும்போது குலுங்கும் இசை ஆயிரம்”
என்றே வளரும் இனிய பாடலையும் கவியரசர் படைத்திட்டார்.
சத்தியம் நீயே! தர்மத்தாயே!
‘கோமாதா எங்கள் குலமாதா’, எனப் பால் கொடுக்கும் பசுவின் பெருமையைப் பாடிப் புகழ்ந்தவரே கண்ணதாசன்.
அவர்தான்
மாட்டுக்கார வேலன் மகிழந்து, பசுவைப் புகழ்ந்து பாடுவதற்காக அருமையான பாடலொன்றை ஆக்கித் தந்தார்.
அப்பாடல்தான்,
“சத்தியம் நீயே! தர்மத்தாயே!
குழந்தை வடிவே! தெய்வ மகளே!
குங்குமக்
கலையோடு குலங்காக்கும் பெண்ணை
குணத்தில்
பசுவென்று சொல்வார்கள் கண்ணே!
காலையில்
உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ்நாட்டுப்
பெண்ணே!”
இப்படித் தொடங்கும் பாடல்.
இப்பாடல்
காட்சியில் ஆரவாரத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தோன்றிடும்போது, திரையரங்குகளில் எழுந்த கரவொலி ஒசைகள், ஆர்ப்பாட்ட ஆனந்தக் காட்சிகள் அப்பப்பா….! அந்தக் காலகட்டங்கள்…. இனி திரையுலகில் திரும்புமா?
இப்பாடல்
முழுவதுமே கருத்துகளை அள்ளி அள்ளித் தரும் அழகோ, தனி அழகுதான்! கேளுங்களேன்!
“பால் கொடுப்பாய்! அது தாயாரைக் காட்டும்!
பாசம் வைப்பாய்! அது சேயாகத் தோன்றும்!
அம்மாவை அம்மா என்றழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ!…..”
கேட்டீர்களா?
என்னே விநோதம்!
‘அன்பான தமிழாம்….
அதற்கு ‘அம்மா!’ என்றழைக்கின்ற சொல்லைத் தந்ததே பால் கொடுக்கும் பாசமுள்ள பசுவாம்!’
இன்னும் பெருக்கெடுத்து வரும் இனிய வரிகளைத்தான் வாசிப்போமே….!
“வளர்த்தவரே உன்னை மறந்துவிட்டாலும்,
அடுத்தவரிடத்தில் கொடுத்துவிட்டாலும்,
வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம்!
வாய் மட்டும் இருந்தால் மொழிபேசும் தெய்வம்”
வாசித்தோம்….!
யோசிப்போம்!
‘நன்றி மறவாத, பேசும் வாய் இல்லாத செல்வம்… அந்தப் பசுவிற்குப் பேசும் வாய் இருந்தால்… அதுவே மொழிபேசும் தெய்வமாம்!’
‘கண்ணதாசா!
கருத்துக் கவிக்கடலே! உன்னை எப்படியப்பா தன் எண்ணத்திலிருந்து எம்.ஜி.ஆரால் அகற்ற முடியும்?’ என்றல்லவா இக்கவிஞர், இன்றிருந்தால் நாமும் கேள்விதனைக் கேட்போம்! அப்படித்தானே!
பாடலின் முடிந்த முடிவு!….
“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே
தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துன்னைக் காப்பதென் பாடு!”
சரிதானே!
‘நார், இலை, பூ, தண்டு, பழம் என அனைத்தையும் கொடுக்கும் வாழைக்கு ஈடே பசு…. குடும்ப வாழ்க்கை நடத்தும் சம்சாரிக்கு ஒரு பசுவே போதும். பொன்னையே கொட்டிக் கொடுத்தாலும் அந்தப் பசுவுக்கு ஈடாகாது. எனவே அப்பசுவைப் பூப்போல வைத்துக் காப்பதே எனது பாடாகிய உழைப்பின் உயர்வாகும் என்று மாட்டுக்கார வேலனாய் நின்று எம்.ஜி.ஆர். சொல்லும் தத்துவம், என்றைக்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தத்துவந்தானே’.
இந்தத் தத்துவத்தைப் படத்தில் கூறி நின்ற எம்.ஜி.ஆரும்; பாடலில் தந்த கண்ணதாசனும் என்றும் தமிழகத்தின் தத்துவ நாயகர்களே எனில் தவறாகா.
இப்படத்தின் பாடல்களைப் பாடிய டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும், ஒலித்த அவர்களின் குரல்க்ள மூலம் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்பதும் நிஜமே.
நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு!
‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 12.5.1970 அன்று,,
‘என் அண்ணன்’ படம் வெளியாயிற்று.
வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கண்ணதாசனின் கருத்துமிக்கப் பாடல்களோடு, புரட்சி நடிகரும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த இப்படமும் பெரிய வெற்றிப் படமாகவே அமைந்தது.
இப்படத்தின் முதல் பாடலே, கேட்போர் நாடி நரம்புகளையெல்லாம் முறுக்கேற்றி வீரத்தை விளைவிக்கும் பாடலாக அமைந்தது.
அண்ணாசாலை…
அங்கே இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போதே தனது செலவில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அண்ணாசிலை.
1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில் அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து, சிலையைப் பார்த்து, குதிரைவண்டியை ஓட்டிக்கொண்டே வணக்கம் செய்து, எம்.ஜி.ஆர். பாடிவரும் பாடல் காட்சிக்கான பாடலாக அப்பாடல் திகழ்ந்தது.
காலமாற்றத்தில் காங்கிரஸ் இயக்கம் பிளவு கண்டது. கவிஞரோ இந்திராகாந்தியின் தலைமையிலான இந்திரா காங்கிரசில் சேர்ந்தார். அப்போது தி.மு.கழகமும் இந்திரா காங்கிரசோடு உறவு கொண்டிருந்தது. அறிஞர் அண்ணாவின் மீதும் மனதின் அடித்தளத்தில் மாறாத பாசங்கொண்டிருந்த கவியரசர் இச்சூழ்நிலையில், தி.மு.கழகத்தின் பொருளாளராய் வீற்றிருந்த எம்.ஜி.ஆருக்காக, வீரநடை போட்டு எழுதிய விவேகம் செறிந்த வேகப்பாடலே அது…! எது என்பீர்! கேளுங்களேன்!
“நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு! ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா! – நீ
ஆற்றுவெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!”
எப்படி இருக்கிறது. தொடக்கமே? கேட்டீர்களா?
‘நெஞ்சம் இருக்கிறது! அதிலே நேர்மையும் இருக்கிறது! வெற்றிக்கு உரிய நேரமோ காத்திருக்கிறது! அப்புறம் ஏன் பிறர் பால் அஞ்சி அஞ்சி, கெஞ்சி கெஞ்சி வாழ வேண்டும்? அஞ்சி வாழ்ந்ததும் போதும்! ராஜா! நீ காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் எழுந்து ஓடு!’ என்றல்லவா எம்.ஜி.ஆர். வீர முழக்கமிடுகிறார்.
அற்புதமான
புரட்சிப் பாடலின் அடுத்த வரிகள்!….இதோ!
“அடிமையின்
உடம்பில் ரத்தம் எதற்கு? – தினம்
அச்சப்பட்ட
கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக்
கண்டுகண்டு பயம் எதற்கு? – நீ
கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு….
எப்படிப்பட்ட வினாக்கள்? எம்.ஜி.ஆர்.. எழுப்புவன? நியாயந்தானே!
‘அடிமைப்பட்டு உயிர் சுமக்கும் உடம்பிற்கு இரத்தமும்; நாளும் அச்சப்பட்டு வாழும் கோழைக்குக் குடும்ப வாழ்க்கையும் எதற்காம்? கொடுஞ்செயல்களைக் கண்டு கண்டு பயப்படுதலும் எதற்காம்?
மனிதா! நீ பிறக்கும்போது கொண்டு வந்ததுதான் என்ன? தொலைந்து போவதற்கு என்ன இருக்கிறது? நீ தைரியமாக மீசையை முறுக்கு!’ இத்தகு புரட்சி வினாக்களை எழுப்பி, வீரம் விளைவிக்கும் விதைகளை யாரால் தூவ முடியும்? எம்.ஜி.ஆரால் தான் முடியும்! அதைப் பார்வையிட்டுப் பக்குவமாய்ப் பாடல் எழுதித்தரக் கண்ணதாசனால்தான் முடியும்! அப்படித்தானே!
இன்னும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேளீர்!
“அண்ணாந்து
பார்க்கின்ற மாளிகை கட்டி – அதன்
அருகினில்
ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால் – இந்த
பூமி சிரிக்கும்! அந்த சாமி சிரிக்கும்!”
அதிரும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேட்டீர்களா?
‘உயர்ந்து
நிற்கும் வானளாவிய மாகளிகைகள்! அதன் ஓரங்களில் ஓசை குடிசைகள்! இப்படி இருப்பதுதானா பொன்னான உலகம்? இப்படிப் பெயரிட்டு அழைத்தால் இந்த பூமி மக்கள் சிரிக்க மாட்டார்களா? பூமியைப் படைத்த அந்த ஆண்டவனாம் சாமி சிரிக்கமாட்டானா?’
இவற்றிற்கெல்லாம் விடைகள்! யார் தருவது?
விடைகள் தரப் புறப்பட்டு வரும் கவியரசர் வரிகள் இதோ! எம்.ஜி.ஆர். என்ற புரட்சித் தலைவர் மூலம் புவிவாழ் மக்களுக்குப் புலப்படுத்தப்படுவதைக் காணீர்!
“உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு! – இங்கு
உன்னைவிட்டால் பூமி ஏது? கவலை விடு!
ரெண்டில்
ஒன்று பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து! – அதில்
நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து!”
விடைகளைக்
கண்டீர்களா?
‘உறுதிகொண்ட
நெஞ்சம் உள்ள இளைஞனே! உன் நாட்டில் எல்லாம் உண்டு என்ற நம்பிக்கையில் உன் காலை முன்வைத்து முன்னேறு! நீதானே இந்த பூமியின் ராஜா! உன்னைப் போன்ற இளைஞர்களை விட்டுவிட்டு இந்த பூமி இயங்க முடியுமா? எனவே கவலையை விட்டுவிடு!
வெற்றியா? தோல்வியா? இந்த இரண்டில் ஒன்றைப் பார்ப்பதற்கு நீ தோளை நிமிர்த்து! நீதியே உன்னைத் தேடி வந்து வெற்றி மாலையைச்சூட்டும்!’
எல்லாம் சரிதான்! கவிஞர், புரட்சித் தலைவர் இருவரும் கூடி, இறுதியில் சொல்லும் விடை எங்கோ இடிப்பதுபோல் உள்ளதே? என்பீர்கள்!
ஆமாம்! கவிஞர் ஆவேசமுடன் தீட்டிய வரி, சென்சாரில் மாட்டி, படத்தில் எம்.ஜி.ஆரால் எடுத்துச் சொல்ல முடியாமல் மாற்றம் பெற்றுவிட்டதுதான் உண்மை.
அந்த ஈற்றடி இதுதான்….!
“நீதி வரவில்லை எனில் வாளை உயர்த்து!” என்பதே.
இப்போது சரிதானே! உண்மை உழைப்பு! உயர் தியாகம்! இவற்றிற்கெல்லாம் நீதி கிட்டாவிடில் வாளை உயர்த்த வேண்டியது தானே! வெட்ட வேண்டிய தீமைகளை வேரறுக்க வேண்டியது தானே! இப்போது விடை சரிதானே!
மனசாட்சி! அரசாட்சி!
மக்கள் திலகம் மந்திரச் சொற்களுக்குக் கட்டுப்பட்ட மக்கள்தானே, பலரது மனக்கோட்டைகளுயும் தகர்த்தெறிறிந்துவிட்டு அவரை செயின்ட்ஜார்ஜ் கோட்டையிலே முதல்வர் ஆசனத்தில் அமர வைத்தனர்.
அத்தகு மாமனிதர் சொல்லக்கூடிய சொல் நயங்களை, கவியரசர் கவிநயத்தில் கேட்போமா!
“கடவுள் ஏன் கல்லானான்? – மனம்
கல்லாய்ப்
போன மனதர்களாலே!”
கல்லாய்ப்
போன மனித மனதைப் பார்த்துத்தான் கடவுளே கல்லாகி விட்டானா? இதுவென்ன நியாயம்? பொறுத்துப் பார்ப்போம்!
“கொடுமையைக்
கண்டவன் கண்ணை இழ்ந்தான்! – அதைக்
கோபித்துத்
தடுத்தவன் சொல்லை இழந்தான்!
இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை இழந்தான்! – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!”
நியாயங்களை
மீறிய அநியாயப் பட்டியல் பாரீர்!
கொடுமையைக் கண்டவனுக்கோ
கண்கள் போயின!
கொடுமைகளைக் கோபித்துத் தடுத்தவனுக்கோ
பேசும் சக்தி போயின!
இரக்கத்தை
இதயத்தால் நினைத்தவனுக்கோ
பொன்பொருள்
போயின!
இவை கூடப் பரவாயில்லை! இந்தப் பூமியில் எல்லோர்க்கும் நல்லவனாய் இருந்தவனோ தன்னையே இழந்து போனான்!’
இத்தனைக்கும் காரணங்கள்!…..
“நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி – அது
நீதிதேவனின் அரசாட்சி!
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி!”
காரணங்கள்
புரியாத புதிரானதோ?
‘நெஞ்சுக்குத் தேவை மனசாட்சிதான்! அந்த மனசாட்சியே நீதிதேவனின் அரசாட்சியாம்! உலகில் நடக்கும் அனைத்து உண்மைகளுக்கும் அவனே, ஆம்! அந்த நீதிதேவனே சாட்சி!
ஆனால் மக்கள் அரங்கத்திற்கு வராதாம் அந்த நீதிதேவனின் சாட்சி!
அப்புறம்
மனசாட்சி ஏன்? நீதிதேவனின் அரசாட்சி ஏன்? அந்த நீதி தேவனின் சாட்சிதான் ஏன்? ஏன்?
இனியென்ன
பாக்கியோ?
“சதிச்செயல் புரிந்தவன் புத்திசாலி – அதைச்
சகித்துக்
கொண்டிருந்தவன் குற்றவாளி!
உண்மையைச்
சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம்!….”
அடப் பாவமே!
‘உலகில் சதிச்செயல்களைப் புரிந்தவன் புத்திசாலி! அந்தச் சதிச் செயல்களைச் சகித்துக் கொண்டிருந்தவனோ குற்றவாளி! உண்மையைச் சொல்பவனோ சதிகாரன்!’
இதுவெல்லாம் யார்வகுத்த அதிகாரமாம்! உலகத்தில் ஆண்டவன் வகுத்த அதிகாரமாம்!
அப்படியானால் அந்த ஆண்டவனாம் கடவுள், கல்லானது சரியோ? கல்மனத்தவர் செய்த செயலுக்காக அவனை நோவதில் என்ன இலாபம்?
இத்தகு உலகநீதியைச் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்காட்சியைக் கண்டு உள்ளம் உருகியோர் ஏராளம்! ஏராளம்!!
புரட்சித்தலைவர் நடித்த ‘என் அண்ணன்’ படத்திற்காகக் கவியரசர் எழுதிய எல்லாப் பாடல்களும் மக்களின் இரசனையைப் பெற்ற பாடல்களே.
இந்தப் படத்திற்குத்தான் முதன்முதலாக நூற்றுயெட்டடி கட்டவுட் சென்னை மாநகரில் வைக்கப்பெற்றதென்பதும் திரைப்பட வரலாற்றில் ஓர் சாதனையே எனலாம்.
இப்படத்திற்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் மிக நீளமான பாடல் ஒன்று உண்டு. அப்பாடல் எம்.ஜி.ஆர். என்ற மனிதசக்தியை, அவர் பார்த்த பார்வையில் உருவான பாடல் என்றே சொல்லலாம்!
பாடலைப் பார்க்க நாம் புறப்படலாமே!
“நொந்தி கணபதிக்கும் சுப்பிரமணியனுக்கும்
அந்தப் பரமனுக்கும் ஜோடி….ஜோடி!….”
என்று தொடங்கும் பாடல்,
எம்.ஜி.ஆரைக் கண்ணதாசன் படம்பிடித்துப் பார்த்த பார்வைக்குச் சிறந்த மேற்கோளே இப்பாடல் எனலாம்.
இப்பாடலை
முழுமையாகப் படித்துப் பாருங்கள். கருத்துச் செறிவான இப்பாடலுக்கு முழு விளக்கங்கள் கண்டால் இங்கு பக்கங்கள் நீளும்.
நிரந்தர உண்மைகள்!
பத்தினி பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில்; எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இணைந்து நடித்த ‘தேடிவந்த மாப்பிள்ளை’ திரைப்படம் 29.8.1970 அன்று வெளியானது. சிறப்பான வெற்றியும் பெற்றது.
கண்ணதாசனின் இனிய பாடல்கள் இப்படத்திலும் இனிதே உலா வந்தன.
அவற்றுள்;
“தொட்டுக் காட்டவா?
மேலைநாட்டு
சங்கீதத்தைத்
தொட்டுக்
காட்டவா?
என்ற பாடலும் அடங்கும்.....
எம்ஜிஆர் & கண்ணதாசன் தொடர் இத்துடன் நிறைவடைகிறது.
மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்....
No comments:
Post a Comment