பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுத வைத்தார்கள்.
அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடு நெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.
அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால், கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குத் தெரியாத அளவிற்கு அதிகமாக அவருக்குத் தெரியும்.
டைரக்-ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.
வசனத்தைப்
படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு, எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்து கொள்ளுவார்.
மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்.
இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரிக் கதைதான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.
இந்த மாதிரிப் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டால்தான், மக்களிடையே மரியாதை இருக்கும் என்பதையும் அவர் அறிவார்.
கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும், சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!
அதனாலேயே
சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.
இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவர அமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.
(இப்போது புரியுமே? எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் கண்ணதாசன் எழுதிய வசனங்களும், பாடல்களும் சத்தானவையாய், முத்தானவையாய் அமைந்து மக்கள் மனங்களை ஈர்த்ததன் மூல காரணங்கள்!)
இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப் பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.
அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்ட பழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.
நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும் ஆரம்பித்தோம்.
‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும், எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலே அவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.
ஆனாலும்கூட
தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.
அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.
என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர் கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நன் குறிப்பிட்டிருக்கிறேன்.
மற்றவர்கள்
செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்து நிலைத்து நிற்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”
கவிஞர் கண்ணதாசன் சொன்னதைக் கேட்டீர்கள்! கவிஞர் பார்வையில் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் திகழ்கிறார் என்பதையும் அறிந்தீர்கள்!
மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும் ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம், தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடு மன்னன்’ 1969 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய மூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.
காலமாற்றம்,
அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும் மக்களின் மனமாற்றங்களை அறிந்து வெள்ளித்திரையில் வெற்றியை எப்போதும் காணமுடிந்த நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ஒருவரே.
எனவேதான்
அவருடைய படங்களுக்கெனக் கவியரசர் கண்ணதாசன், கருத்துச் செறிவுடன் எழுதிய வசனங்களும், பாடல்களும் காலம் கடந்தும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன. இன்றைய இளைஞர்களும் அவற்றை விரும்பி இரசித்துப் பாராட்டும் விந்தையைக் காண்கின்றோம்.
அடுத்து,
இன்னும் 1962 – ஆம் ஆண்டு, படங்களின் பார்வையிலேயேதான் உள்ளோம்.
உண்ணும் உணவு வகைகளில் எல்லாமே சுவையாக இருந்தால் என்ன செய்வோம்? எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுவைப்போம்! அதுபோல… இனி தொடர்வோமா?
1962 – ஆம் ஆண்டு, தமிழ்ப்புத்தாண்டில், திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய ‘தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து தேவர் பிலிம்சாரின் ‘குடும்பத் தலைவன்’ திரைப்படம் அதே ஆண்டு சுதந்திர திருநாளன்று வெளியிடப் பெற்று மகத்தான வெற்றியைக் கண்டது.
இதில் அதிசயம் என்னவென்றால், தேவர் பிலிம்ஸ் என்ற ஒரே நிறுவனம் தொடர்ந்து வெளியிட்ட இரண்டு படங்களிம் வெற்றியை ஈட்டின என்பது மட்டுமன்று. இரண்டு படங்களிலும் கதாநாயகன் எம்.ஜி.ஆர், கதாநாயகி சரோஜாதேவி; கதை வசனம் ஆரூர்தாஸ், இயக்கம் எம்.ஏ. திருமுகம்; இசை கே.வி. மகாதேவன்; பாடல்கள் கண்ணதாசன்.
இப்படியொரு
கூட்டமைப்பினரின் இரு படங்கள் இடைவெளியின்றி, நான்கு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றதாக உலகப்பட வரலாற்றில் எங்கும் காண இயலாது என்பதே உயர்வான அதிசயம்.
‘குடும்பத்தலைவன்’ படத்தில் கண்ணதாசன் எழுதியுள்ள பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களே!
“மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்!”
இவ்விதம் தொடங்கும் பாடலில்,
“ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்!”
என்று, புரட்சிநடிகரைப் பார்த்து நாயகி பாடுவதுபோல் கவியரசர் எழுதிய பாடல், எம்.ஜி.ஆரை எடைபோட்டுப் பார்த்து, இந்தப் புவியோர்க்குச் சொன்ன உண்மையைப்போல் உள்ளதல்லவா?
பலம் – ஆயிரம் யானை பலம்!
மனம் – அல்லிக்கொடிபோல் மென்மை மனம்!
பாசம் – தாயின் பாசம்!
அணைப்பு
– ஆடவர்க்கும் மெய்சிலிர்க்கும் அணைப்பு!
கவியரசர்
எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வைகள் அனைத்துமே பாங்கானவையே.
“திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்!”
என்று தொடங்கும் பாடலும், இன்றும் திருமண மேடைகள்தோறும் ஒலிக்கக் கேட்கிறோம்.
“அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்!”
இப்படித்
தொடங்கும் கவிஞர் பாடலில், எம்.ஜி.ஆரின் புகழ் எப்படியெல்லாம் எடுத்துக் கூறப்பெற்றுள்ளன என்பதைப் பாருங்களேன்!
“வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை – மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை!
…………………………………
அத்திப்பூ
முகத்தைக் காண எத்தனைக் கூட்டம் – அதைத்
தொடர்ந்து
நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம்!”
பார்த்தீர்களா?
எல்லோர்க்கும் எங்க வீட்டுப் பிள்ளையாய்த் திகழ்ந்து, ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’, என்று கூறிய எம்.ஜி.ஆருக்கு எல்லோரும் வேண்டியவர்கள்தானே! மக்களின் மனமெனும் வீடுகளுக்குள் அவர் என்றும் இருப்பார்! அதனால்தானே அவர் ‘மக்கள் திலகம்’ எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள முடிந்தது.
மனங்களுக்குள் இருக்கும் அவரைக் காணாமல், அழகு மிளிரும் அவரது அத்திப்பூப் போன்ற முகத்தைக் கண்டு தரிசிக்கவே தினம் மக்கள் கூட்டம் எல்லையின்றி அலைமோதுகிறதாம்.
இதனால்தான்
அறிஞர் அண்ணாவும், எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘தம்பீ! நீ முகத்தைக் காட்டினால் போதும்! முப்பது இலட்சம் ஓட்டு வரும்!’ என்று கூறினாரோ?
அத்தகு அருள்பாலிக்கும் முகத்தைத் தொடர்ந்து பார்த்து வந்தால், மனதிலுள்ள வாட்டமெல்லாம் தீர்ந்து போகுமாம்!
இப்படியோர்
திரையிசைப் பாடலில், அதுவும் காதலி கூற்றாக வரும் பாடலில், எம்.ஜி.ஆர் எனும் தனிமனிதரின் குணநலன்களைக் கூறிப் பக்குவமாகப் புகழ யாரால் முடியும்? கவியரசரால் மட்டுமே முடியும்!
இன்னும்;
“கட்டான கட்டழகுக் கண்ணா! – உன்னைக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?….”
எனும் வினாவோடு தொடங்கும் பாடலில்;
“மதயானை வடிவமே!
நடமாடும்
வீரனே!
மலர் போன்ற உள்ளமே வா!….”
என்று மதுரைவீரனாய், மன்னாதிமன்னனாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் வடிவப் பொலிவினையும், வீரத்தின் திட்பத்தையும்; கண்ணதாசன் பாடலை யாரால்தான் கேட்காமல் இருக்க முடியும்?
உலகியல் தத்துவம்!
புரட்சித்
தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள், தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.
அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
விளையாட்டு
வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன் எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி, டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!
“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின்
வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)
காட்டுப்
புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)
வரவறியாமல்
செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல்
காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே
விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!
திட்டும்
வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும்
கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”
பாடலைக் கண்டீர்கள்!
இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால் புறந்தள்ள முடியும்?
இவற்றைப்
புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்த தரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத் தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன் எழுதியுள்ளார். முடிந்த மட்டும் நாமும் பார்ப்போமாக.
உலகம் பிறந்தது எனக்காக!
எம்.ஜி.ஆருக்காக!
‘குடும்பத்தலைவன்’ படம் வெளிவந்து பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த இரண்டாவது வாரமே, ஆர்.ஆர். பிக்சர்ஸாரின் ‘பாசம்’ திரைப்படம் 31.8.1962 அன்று திரையிடப்பட்டது.
தித்திக்கும் தேனாறாய் இப்படத்தின் பாடல்கள் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கின.
“ஜல் ஜல ஜல்லெனும் சலங்கையொலி”
என்று, ஒலி எழுப்பி,
“அவன்தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்!
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுசாய்த்
திருட மறந்துவிட்டேன்!….”
எனத் தொடரும் பாடலை, எஸ். ஜானகியின் இன்பக் குரலில் எழுந்த பாடலை, சரோஜாதேவியின இன்முகத் தோற்றத்தில் காட்சி வடிவாய் வரும் பாடலை, பெண்மனக் காதலை, புதிய இலக்கிய நயத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலை எவரால் மறக்க முடியும்?
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிதைக் கடலில் நீந்தியவர் கவியரசர். அந்தக் கம்பரின் இலக்கியத்தைத் தேன்சுவைச் சாறாக்கிக் கொடுப்பதில் தனி இன்பம் கண்டவர் கவியரசர்.
இப்படத்தில் கம்பரின்,
“கால்வண்ணம் அங்கே கண்டேன்!
கைவண்ணம்
இங்கே கண்டேன்!”
எனும் பாடலைச் சுவைத்த கவியரசர்,
“பால்வண்ணம் பருவம் கண்டு
வேல்வண்ணம்
விழிகள் கண்டு
மான்வண்ணம்
நான் கண்டு
வாடுகிறேன்!…..
கண்வண்ணம்
அங்கே கண்டேன்
கைவண்ணம்
இங்கே கண்டேன்
பெண்வண்ணம்
நோய் கொண்டு
வாடுகிறேன்!….”
என்றெல்லாம் ஆரம்பமாகி, மெல்லிசைக் குரலோன் பி.பி. ஸ்ரீநிவாசனும், கொஞ்சும் சலங்கைக் குரல் எஸ். ஜானகியும் மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – ராம்மூர்த்தி இருவரது இணைந்த இசையில் மயங்கிப் பாடும் பாடலாக யார்த்துத் தந்தார்.
இன்றைய திரைக் கவிஞர்கள் இதுபோன்ற பாடல்களைத் தினமும் கேட்டு, சிந்தித்தால் தரமான பாடல்களைத் தமிழ்த் திரையுலகிற்குச் சீதனமாகத் தரலாமே! சிந்திப்பார்களா?
‘பாசம்’ படத்தில் வரும் பரவசமான பாடல்! பைந்தமிழ் நாடெங்கும் இன்னும் இனிமையாய் ஒலிக்கும் பாடல்! டி.எம். சௌந்தரராஜன் குரலில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல்! புரட்சித்தலைவருக்கென்றே புத்துணர்ச்சியோடு, புதுமை எண்ணங்களோடு, புவியே பாராட்டக் கவியரசர் உருவாக்கித் தந்த உயர்வான பாடல்! எதுவென்று எல்லோர்க்கும் தெரியுமே! பாடலை ஆனந்தமாய்ப் படித்து… ஏன்? பாடித்தான் பாருக்களேன்!
“உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக!…..”
படித்து, பாடித்தான் பார்த்தீர்களா?
உலகம் பிறந்ததும்
ஓடும் நதிகளும்
மலர்கள் மலர்வதும் எனக்காக!
என்று சொல்வது யார்? எம்.ஜி.ஆர்!
சொல்ல வைத்தவர் யார்? கண்ணதாசன்.
எல்லாமே எம்.ஜி.ஆருக்காக! அதற்காகத்தான் இயற்கை
அன்னையும்;
சத்யா அன்னையும் மடியை விரித்தார்களாம்!
இன்னும் பாருங்களேன்!
“காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருந்ததை நான்றிவேன்
என்னை அவனே தான்றிவான்!….”
ஆம்!
பண்டைத்தமிழர் மரபுப்படி, இயற்கையின் வடிவங்கள் எல்லாம் இறைவனே! அம்முறைப்படி, காற்றின் ஒலியில், கடலின் அலையில் இறைவன் இருப்பதைப் புரட்சித்தலைவர் அறிவாராம்! பூமி தந்த அந்தப் புனிதனை இறைவனும் அறிவானாம்!
அவரது அரசாங்கம் எத்தன்மையாதாம்? கவிஞரின் கவிதையே சொல்லட்டுமே!
“தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள்
பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்!”
தன்னைத் தாங்கும் தங்க ரதமே வானத்தில் தவழும் நிலவாம்! தனது மணிமகுடமோ வானத்து நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட மணிமகுடமாம்! அரச மாளிகையோ, இன்னிசைக் குயில்கள் பாடும் கலைக்கூடமாம்! இவையனைத்தும் கொண்டதுதான் எம்.ஜி.ஆரின் அரசாங்கமாம்!
அவர் ஆண்டபோது, தமிழக மக்களின் மனமகிழ்ச்சியும், எழுச்சியும் இப்படித்தானே எட்ட முடியாதனவற்றையெல்லாம் எட்ட முடிந்த நிலையில் இருந்தன….
நியாயவிலைக் கடைகளில் அரிசி முதல் அனைத்திற்கும் பஞ்சமில்லையே! ஐந்துகிலோ எடையுள்ள பாமாயில் டின்கள் அல்லவா தங்களைத் தாங்குவார் கரங்களித் தேடித்தேடி அலைந்தன?
எதற்கும்
பஞ்சமில்லாத ஆட்சியல்லவா எம்.ஜி.ஆரின் ஏற்றமிகு பொற்கால ஆட்சி!
படங்களில்
பாடியதுபோல் பாராண்ட பண்பாளர் அல்லவா எம்.ஜி.ஆர்! இதிலென்ன ஐயம் என்றுதானே அனைவரும் கேட்பார்கள்?
எல்லாம் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் எண்ணம் மட்டும் எப்படி இருந்ததாம்….?
கண்ணதாசன்
கவி வழியில் கேட்போமே!
“எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்!….”
கேட்டீர்களா?
பொங்கித்
ததும்பும் தாய்ப்பாசத்தை….! கருவறைக்குள் பத்துமாதங்களாக உருவாகும் பச்சைப் பசும்பொன்னாம் பச்சிளங்குழந்தைக்காக, கண்ணிலே உறக்கமின்றி, ஊன் உண்ணும் உற்சாகமுமின்றி, வயிற்றில் எட்டி உதைக்கும் மழலை எப்படிப்பிறக்குமோ என்று எண்ணியெண்ணி, ஈன்றபொழுது பெரிதுவக்கும் பெறற்கரிய அன்னையைவிடப் பெருந்தெய்வம் உலகில் உண்டா? இல்லை! இல்லவே இல்லை.
இதனால்தான்,
‘எல்லா நலங்களும், வளங்களும் எனக்கென்றே இருந்தாலும், என்னைத் தனக்குள்ளேயே வைத்திருக்கும் அன்னையின் மனமே என் ஆலயம்! அவளே என்றும் என்னை ஆளுகின்ற தெய்வம்!’ என்றார் எம்.ஜி.ஆர்.
அன்னையை வணங்காமல் எந்தச் செயலையும், எந்நாளும் செய்தறியாத எம்.ஜி.ஆரைப் பற்றி அறிந்ததால்தான், கண்ணதாசனால் அவருக்கு ஏற்றபடி, காலத்தை வெல்லும் பாடலை எழுத முடிந்தது.
கண்ணதாசன்
பாடல்களையும், எம்.ஜி.ஆரால் என்றும் அறிந்து, புரிந்து போற்ற முடிந்தது.
இதே 1962
– ஆம் ஆண்டு வெளியான ‘விக்கிரமாதித்தன்’ படத்திலும்,
“கன்னிப் பெண்ணின் ரோஜா
கன்னங்கண்ட
ராஜா கவிஞரம்மா…
சிறுவிழிப்
பார்வையில் காணாத சொல்லையே
செந்தமிழ்க் காவியம்தான் காணவில்லையே!”
என்றதோர் அருமையான பாடலைக் கண்ணதாசன் எழுதினார்.
இந்த செந்தமிழ்க் காவியக் கவிஞரைப் பற்றித் திரையுலகச் சக்கரவர்த்தியாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் எண்ணந்தான் எப்படி இருந்தது என்பது பற்றியும் நாம் சற்று அறியலாமே!
புரட்சித் தலைவர் பார்வையில்
சாகாவரம் பெற்ற சத்தியக் கவிஞர்!
கவியரசர்
கண்ணதாசனைப் பற்றி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூறியுள்ள கருத்துகளில் சிலவற்றைத்தான் இங்கே காணப்போகிறோம்.
“காலக்காற்று இந்த மாபெரும் கவிஞரை எங்கெல்லாமோ அலைக்கழித்தது. எந்தத் துறைமுகத்திற்கு இந்தப் படகு பயணப்பட்டாலும், அங்கெல்லாம் இது சீரோடும், சிறப்போடுமே போற்றப்பட்டது. அவரிடமிருந்த தமிழ்தான் அதற்குக் காரணம்.
மற்றவர்கள்
கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார்.
‘கவிஞர்’ என்றால் அது கண்ணதாசன் ஒருவரைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்கு அவருக்குப் புகழ் சேர்ந்தது.
பாரதி – பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு அவர்தான் என்பது நிலைமை அவர் காலத்தில் வாழ்ந்தது தமிழர்களாகிய நமக்குப் பெருமை. பல கவிஞர்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்த பிறகே வாழ்த்தப்பட்டார்கள்.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்தபோதே வரலாறாகிவிட்டார். மரணத்திற்குப் பிறகு அவருக்குச் சூட்டப்போகிற கீர்த்தி கிரீடத்தை, வாழ்ந்தபோதே பார்க்கக் கொடுத்துவைத்த கவிஞர்களில் அவரே தலையானவர்.
மற்றவர்கள்
சரித்திரம் படித்தவர்கள். கவிஞர் சரித்திரமே படைத்தார். பள்ளியிறுதி பார்க்காத அவர், பழந்தமிழ்ச் சாற்றைப் பருகி, புதுத்தமிழ் பொழிய வாழ்ந்தார் என்பது அதிசயமாகவே இருக்கிறது.
அவர் சொன்னால் கவிதை. அவரை சொன்னதெல்லாம் கவிதை என்று வாழ்ந்தவர் அவர்.
இலக்கியம்
படைக்க முடிந்தவர்களால், எளிதான கவிதைகளைப் படைக்க முடிந்ததில்லை. இந்த இலக்கியவேலி, கவியரசு காலத்திலேதான் அவராலேதான் வீழ்த்தப்பட்டது.
‘மாங்கனி’
போன்ற காவியங்களை எழுதிய அவரது கரமே, கோடிக்கணக்கானவர்கள் கேட்டு மகிழ்கின்ற எளிதான, இனிமையான திரைப்படப் பாடல்களையும் எழுதியது. திரைப்படப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சிக்குரிய அற்புதங்களாவதற்கு அவரே பெருங்காரணமாக இருந்தார்.
அருவி நடை, ஆன்றபுலமை, அன்புள்ளம், பிள்ளை மனது, உயர்ந்த சிந்தனை – உலகளாவிய பார்வை இவையே கவியரசு கண்ணதாசன்.
நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்யவேண்டிய இலக்கியப் பணியைக் கவிஞர் அவர்கள் ஒருவரே செய்தார்.
எப்போதோ ஒருமுறை தோன்றுகின்ற இதிகாசக் கவிஞர் அவர்.”
கண்டீர்களா?
சாகாவரம்
பெற்ற சக்தியக் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிப் புவிபோற்ற வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கூறியுள்ள கருத்துகளை… பார்வையை… இதனைவிடக் கவியரசரைப் புவியில் யார், ஆழ்ந்து நோக்கி ஆய்வு செய்திட இயலும்? சொல்லுங்கள் பார்ப்போம்!
எதனையும்
நுட்பமாக ஆய்கின்ற ஆற்றல் பெற்ற எம்.ஜி.ஆர். அற்புதமாகக் கவியரசரை அணுகி, ஆய்ந்து கூறிய கருத்துகள் காலத்தை வென்று நிற்கும் கருத்தாய்வுப் பெட்டகந்தானே!
தன்னை இந்த அளவிற்கு ஆய்கின்ற அன்புள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர் படங்களுக்கு அந்தக் கவியரசர் அள்ளித் தந்த பாடல்களை… இல்லை!…. இல்லை…! பார்போற்றும் பாடல்களைத் தொடர்ந்து நாமும் கார்ப்போமாக.
அதிகமான படங்கள் தந்த
1963 – ஆம் ஆண்டு
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு 1963 – ஆம் ஆண்டாகும். இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஏறத்தாழ அனைத்துமே வெற்றிகளை ஈட்டிய படங்களே எனலாம்.
இந்த ஒன்பது படங்களில், எட்டுப் படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றிருந்தன என்றால் நம் இதயங்களே வியப்பில் விம்முகின்றன அல்லவா!
அவரது பாடல் இடம்பெறாது வெளிவந்த ஒரே படம் மேகலா பிச்சர்ஸ் சார்பில், கலைஞர் கருணாநிதி தயாரித்து, அவரே வசனம் எழுதி, ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சித்தலைவன்’ படம் மட்டுமேயாகும்.
இனி 1963
– ஆம் ஆண்டு, முதன்முதலில் 11.1.63 அன்று வெளியான, ‘பணத்தோட்டம்’ படத்தில் கவிஞர் எழுதிய மகத்தான பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக:
வாருங்கள்!
சுவைமிகுந்த காதல் பாடலில் எம்.ஜி.ஆரின் பெருமையைப் பேசவைக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இன்பம் பொங்கும் பாடலைப் பார்ப்போம்!.
ஆண்: “பேசுவது கிளியா? இல்லை
பெண்ணரசி
மொழியா?
கோயில் கொண்ட சிலையா?
கொத்து மலர்க்கொடியா?”
பாடலின் தொடக்கமே, இன்பவாரியில் நம்மை நீந்தச் செய்கிறதல்லவா? அடுத்த வரிகளை வாசியுங்களேன்!
பெண்: “பாடுவது கவியா? இல்லை
பாரிவள்ளல்
மகனா?
சேரனுக்கு
உறவா?
செந்தமிழர்
நிலவா?”
வாசித்தீர்களா? இனி யோசியுங்கள்!
பாடுவது யாராம் கவியா?
ஆமாம்! கவித்துவத்தை உணர்ந்த இரசனைக்குரிய சீமான்தான்!
அவர் யார்? பாரிவள்ளல் மகனா?
அவர்தான் கலியுகப் பாரிவள்ளல் என்று பெயர் பெற்ற பெருமகனார் ஆயிற்றே!
அவர் என்ன சேரனுக்கு உறவா?
ஒரு காலத்தில் முடியுடை மூவேந்தர்களில் முதலிடம் பெற்ற சேரமன்னர்கள் ஆண்ட, வாழ்ந்த பூமியிலே பிறப்பெடுத்த புண்ணியன்தானே!
அவர் என்ன செந்தமிழர் நிலவா?
செந்தமிழர் உள்ளங்களில் எல்லாம் உறவாடி, நித்த நித்தம் நீந்தி வரும் வெள்ளிநிலாவாய்த் திகழ்ந்தவர், திகழ்பவர் அல்லவா எம்.ஜி.ஆர்!
இப்படியெல்லாம் கவிமகனார் கண்ணதாசன் எழுதிய காதல் கவிதையிலேயே எம்.ஜி.ஆர். எனும் ஏந்தலின் பெருமை பேசப்பட்டுள்ளதை அறியும்போது, நமது உள்ளங்களில் உவகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன அல்லவா?
இன்னும்:
“வில்லேந்தும் காவலன்தானா?
வேல்விழியாள் காதலன்தானா?
கொல்லாமல்
கொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் கவலன்தானா?
மன்னாதிமன்னர்கள் கூடும் மாளிகையா? – உள்ளம்
வண்டாட்டம்
மாதர்க்ள கூடும் மண்டபமா?”
இப்படிப்
பெண்மையைப் பாடவைத்து, பார்போற்றும் நாயகனின் புகழை ஏற்றிப் போற்றும் விதமே விந்தைதான்!
‘வில்லேந்தும் காவலனாம்!
கோட்டை கட்டும் காவலனாம்!
அவர் உள்ளமோ!
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையாம்!
மாதர்கள்
கூடும் மண்டபமாம்!’
இவையெல்லாம் உண்மைதானே!
வீரத்திருமகனாய், கோட்டையிலே கொலுவிருந்து ஆண்ட காவலனாய்; நாட்டிலுள்ள அரசியல் விற்பன்னர்கள், அரசு அதிகாரிகள், மிட்டாமிராசுதாரர்கள் உள்ளிட்ட மன்னாதி மன்னர்களும் கூடிய இல்லம் அவர் இல்லம்! அவர்களைக் குடிவைத்ததோ அவரது உள்ளம்!
அவரது உள்ளம் கோடானகோடி மாதர்களாம் தாய்க்குலத்தையும் மகிழ்வித்த உள்ளந்தானே! இவையனைத்தும் உயர்ந்த உண்மைகள்தானே!
தவழ்ந்துவரும் தத்துவங்கள்!
கவியரசர்,
புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?
தொகையறா:
“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும்
தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”
பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?
மனத்தோட்ட
மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!
இதனாலன்றோ
வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.
இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?
அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!
“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார்
கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால்
பிறந்த இனம்
சிங்கம்போல
வளர்ந்த குணம்
தங்கத்தால்
அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால்
அழிந்ததேயடி!”
சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?
மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….
சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.
ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!
இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!
இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!
பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!
“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள்
போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன்
தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும்
ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”
மீதியைப் பார்த்தோம்!
ஊசிமுனையோ
மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!
மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!
எண்ணெயுடன்
தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.
நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?
No comments:
Post a Comment