Wednesday, 10 August 2011

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்...

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


“உலகெலாம்”

“உலகெலாம்” என்கிற சொல் தெய்வச் சேக்கிழார் பாடியருளிய பெரியபுராணம் எனப்படும் திருத் தொண்டர்புராணத்தின் முதற்பாடலின் முதல் வரியில் உள்ள முதற் சொல். தில்லை ஆடலரசுப் பெருமான் புராணம் பாடுவதற்காக எடுத்துக் கொடுத்தருளிய  முதல். இந்த முதலாகிய சொல்லைக் கொண்டுதான் சேக்கிழாரும் புராணத்தின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வைத்துப் புராணத்தைப் பாடிமுடித்தார். இச்சொல்லை இறைவர் முதலாக எடுத்துக் கொடுக்கக் காரணம் இந்த உலகமெல்லாம் உய்யவேண்டும் என்பதற்காகத்தான்! உலகம் என்னும் சொல் மங்கலச் சொல்லாகும்.  “உ” என்னும் உகார எழுத்து பிள்ளையார் சுழியையும் குறிக்கும், காத்தல் தொழிலையும் குறிக்கும். உலகு என்ற சொல் ஆகுபெயராக அதில் வாழுகின்ற உயிர்களைக் குறிக்கும். அதிலும் குறிப்பாக உணர்ந்து ஓதற்கு அரியவன் என்று பின்னர் கூறியதனால் ஆய்ந்து உணரும் அறிவுடைய மனித உயிர்களைத்தான் குறிக்கும்.

“அகர முதல எழுத்தெல்லாம்” என்று திருவள்ளுவப் பெருமான் எடுத்துரைத்ததுபோல் ‘அ’ ஆகிய அகர எழுத்து மேற்சொன்ன ‘உ’கர எழுத்திலும் அமைந்திருக்கிறது. ஆக “உலகெலாம்” என்கிற சொல்லில் அ,உ,ம் என்கிற மூன்று எழுத்துக்களும் அடங்கியுள்ளன. இது  ஓங்காரத்தின் வியட்டிப் பிரணவ வடிவமாகும். பெரியபுராணம் பிரணவத்தோடு தொடங்குகிறது என்று அறிஞர்கள் கூறுவர். 
“உலகெலாம்” என்கிற சொல் இரண்டு வெவ்வேறு சொற்களால் ஆன ஒரு சொல். ‘உலகு’ என்ற சொல் உயிர்களாகிய பசுவையும், ‘எலாம்’ என்ற சொல் எல்லாமாகிய இறைவனாகிய பதியையும் குறிப்பனவாகும். இது சைவ சித்தாந்த அத்துவிதக் கொள்கையைக்  குறிப்பதாகும்.   
இந்த “உலகெலாம்” என்கிற சொல் பாடலின் நான்காவது வரியில் உள்ள “மலர் சிலம்படி” என்பதோடு இயைந்து உலகெலாம் மலர்த்திய சிலம்படி, மலர்த்திக் கொண்டிருக்கும் சிலம்படி, மலர்த்தப் போகும் சிலம்படி எனப் பொருள் விரியும்படி சேக்கிழார் பெருமான் வினைத் தொகையை உள்ளமைத்துப் பாடியிருக்கிறார் என்பார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.

"உணர்ந்து ஓதற்கு அரியவன்"

இறைவன் உலக உயிர்களால் உணர்தற்கும் அரியவன் ஓதற்கும் அரியவன். ஓதல் என்பது  பாடுதல், உரைத்தல் எனப் பொருள்படும். உணர்தல் என்பது மனத்தின் தொழில். ஓதல் என்பது வாக்கின் தொழில். “மாற்றம் (உரை) மனம் கழிய நின்ற மறையோனே” என்பார் மணிவாசகர். உணர்தல் வேறு, அறிதல் வேறு. மேம்போக்காகத் தெரிந்து கொள்வது அறிதல். உள்ளத்தில் தெளிவாகப் பதியுமாறு விளக்கம் பெறுதல் உணர்தலாகும். ஆனால் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாதவனாகிய  இறைவனை எப்படி உணர்ந்து ஓதுவது? 
முதலமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமானுக்கு முந்திய முதலமைச்சராகிய மணிவாசகப் பெருமான்  இதற்கு பதில் கூறுகிறார். இறைவன் சொல்லற்கு அரியவனாக இருந்தாலும்  ஏதோ ஒருவகையில் அவனுடைய திருவருளாலே ஒருவாறு சொல்லித் துதிப்போமாக. அவ்வாறு சொல்லித் துதிப்பதையும் பொருள் உணர்ந்து சொல்லுவோமாக. “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்” என்பார். 
அவர் சொல்லிய பாட்டு- திருவாசகம். 
திருவாசகத்திற்குப் பொருள் யாது? என்று கேட்டபோது திருசிற்றம்பலத்தானைச் சுட்டிக் காட்டி “இவன்தான் பொருள்” என்றார்.. 
சேக்கிழார் பெருமானும் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாக இறைவன் இருந்தாலும்  அவனுடைய மலர்சிலம்படிகளை அவனுடைய திருவருள் துணையாலே ஒருவாறு வாழ்த்தி வணங்குவோமாக என்கிறார்.
“நிலவுலாவிய நீர்மலி வேணியன்”
“நீர் இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்

வானின்று அமையாது ஒழுக்கு”. 
என்பார் திருவள்ளுவர். வானத்திலிருந்து மழை பெய்யவில்லை என்றால் இந்த மண்ணுலகத்தில் எதுவுமே நடைபெறாது என்பது திண்ணம். திருக்குறளில் வான்சிறப்பு எனும் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருத்து இது. வான் சிறப்பு- ஆகாயத் தலமாகிய தில்லையின் சிறப்பும் இதுவேயன்றோ?

இன்று நம் நாட்டின் பிரச்சினையே தண்ணீர்தானே? மழை அறவே பொய்த்து விட்டது. குளங்கள், ஏரிகள், நதிகள் எல்லாம் வறண்டுபோய் பாலை நிலங்களாக ஆகிவிட்டன. நிலத்தடி நீரோ மிகவும் குறைந்துபோய் விட்டது. மாநிலத்திற்கு மாநிலம் (தண்ணீரை) விட்டேனா பார் என்று கொக்கரிப்பும் போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இப்படியே போனால் கடல்நீரும் குறைந்து நிலப் பகுதிகள் ஆகிவிடும்.

“நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான் நல்காதாகி விடின்”! என்பார் திருவள்ளுவர்.

கடல்நீரோ வெறும் உப்பு நீராகும்.பருக ஒண்ணாது. இன்றைக்கு நல்லநீர் இருக்கும் இடம் கங்கை நதி ஒன்றுதான். அதுவும் வானின்று மழை பொய்ப்பின் இல்லாமற்போய் விடும்.

என்றும் வற்றாத நீர் மிக அதிகமாக உள்ள ஒரே இடம் இறைவனின் சடாமுடி ஒன்றுதான்! அங்குதான் ஆகாய கங்கை அடக்கிவைக்கப் பட்டிருக்கிறது.

“நீர்மலி வேணியன்” என்கிறார் சேக்கிழார் பெருமான்.

(வேணி-சடை) அந்த கங்கைக்கரையின் ஓரமாகத்தான் சந்திரன் மெல்ல உலாவிக் கொண்டிருக்கிறானாம்! ஏன் தெரியுமா? தன்னுடைய கலைகளை எல்லாம் இழந்து குளிர்ச்சியையும் இழந்து களையிழந்து “அடைக்கலம்” என்று வந்தவனைச் சடையில் வைத்துத் தாங்கினவர்  சிவபெருமான். இப்பொழுது, தான் இழந்த குளிர்ச்சியைப் பெறுவதற்காக ஆற்றின் கரையில் உலாவிக் கொண்டிருக்கிறான்.

“அலகில் சோதியன்”

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய பெருமான் அளவிடற்கரிய ஒளிமயமாக, பெருஞ்சோதிப் பிழம்பாக  விளங்குகிறான். உலக  உயிர்களால் மட்டுமன்று மும்மூர்த்திகளுள் திருமால், பிரம்மனாலும்கூட உணர்ந்து ஒதற்கோ கண்டு தரிசிப்பதற்கோ அரிய பெரிய சோதி சிவபெருமான்! இந்த அலகில் சோதியின் திருவடியைத் திருமாலும் திருமுடியைப் பிரம தேவனும்  இன்னும்கூடத் தேடிக் கொண்டிருப்பதாக வேதங்கள் கூறுகின்றன! 
“பிரமனும் திருமாலும் கைதொழப் பேரழலாய பெம்மான்” என்பார் திருஞானசம்பந்தர். 
“தேச விளக்கெலாம் ஆனாய் நீயே!, 
திருவையா றமர்ந்த செம்பொற் சோதி!” என்பார் அப்பர் பெருமான். 
“சோதியே சுடரே சூழொளி விளக்கே!” என்பார் மணிவாசகர். 
“அருட்பெருஞ்சோதி” என்பார் வள்ளலார் பெருமான். 
கண்ணுக்குத் தெரிகின்ற சோதியாக இருந்தால் இவ்வளவு பெரிது என்று அளவிட்டுக் கூறலாம். ஆனால் இதுவோ, கற்பனை கடந்த சோதி! அளவிட்டு அறிய முடியாது. இறைவனைச் சோதி வடிவத்தில் கண்டு தொழுவது என்பது எல்லா மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

இந்த அலகில் சோதிதான்  கருணையே உருவமாகக் கொண்டு  தில்லைத் திருச்சிற்றம்பலத்தே வந்து நின்று அற்புதமாகப் பொற்புடன்  நடம் செய்கிறது.

“அலகில் சோதியன்” 

காணுதற்குரிய சோதியாக இருந்தால் அளவு கூற முடியும். இதுவோ கற்பனைக்கும் எட்டாத பேரொளி. “காண்பரிய பேரொளியே” என்பார் மணிவாசகர்.  
அளவில்லாத சோதி என்பது மட்டுமன்று, அழிவில்லாத சோதியுமாம்! 
“நொந்தா ஒண்சுடரே” என்பார் சுந்தரர். “தொடர்ந்திலங்கு சோதி நீ!” என்பார் சம்பந்தப் பெருமான். மேலும், “சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஓர் சோதியாய்” என்றார். இறைவனுக்குப் ‘பரஞ்சோதி’ (மேலான சோதி)  என்றே சிறப்பான திருநாமமும் உண்டு. சிவலிங்கத்தை சோதி வடிவமாகவே காண்பர் சிவ ஞானிகள். சிவலிங்கமும் அருவுருவே, சோதியும் அருவுருவே. 
உலகில் நாம் காணுகின்ற சோதி குற்றம்(மாசு) உடையதாக ,இருக்கலாம். ஆனால் இந்த சோதி-மாசிலாத மணி விளக்காம்! 
“மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச் சுடரே” –திருவாசகம். 
‘சுடர்’ என்ற பெயர் -அது சுடுதலாகிய குணத்தை உடையதால் உண்டாகிய பெயர். நாம் காணும் விளக்குகள்- தொட்டால் சுடும். ஆனால் இந்த இறைவனாகிய சுடரோ- குளிர்ச்சியாக இருக்கிறதாம்! ‘மலர்ச் சுடரே’ என்கிறார் மணிவாசகர்! 
“தீ மேவும் உருவா, திருவேகம்பா!” என்பார் அப்பர் பெருமான். திருமேனி முழுக்க தீ, அலகில் சோதி –ஆனால் திருவடி மட்டும் ‘மலர் சிலம்படி’ என்கிறார் சேக்கிழார் பெருமான். 
உலகில் காணப்படும் நெருப்பு சுடுதலாகிய கெடுதலை மட்டுமே செய்யும். ஆனால் இறைவனாகிய நெருப்பு - அடியார்களுக்குப் புனலினும் குளிர்ச்சியாகவும், அல்லாதார்க்குத் தீயினும் வெம்மையாகவும் இருக்கும்   என்பார் திருமூலர். 
“தீயினும் வெய்யன், புனலினும் தண்ணியன்”, என்பார். 
சுண்ணாம்புக் காளவாய் நெருப்பு அப்பர் பெருமானுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் சமணர்கள் வைத்த நெருப்பு அடியார்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனால், ”பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” என்று சம்பந்தப் பெருமான் திருப்பி அனுப்பிய நெருப்பு பாண்டியற்கு வெப்பு நோயாகச் சென்று  தகித்தது.

மலர் சிலம்படி

இறைவனுடைய திருவடிகள் இரண்டும் மலர்ந்த, மலர்கின்ற, மலரும் திருவடிகளாக விளங்குகின்றன. நாட்டிய இலக்கணத்திற்கேற்ற சிலம்பை அணிந்த சேவடிகளாகவும் திகழுகின்றன. 
திருமேனி முழுவதும் தீ வண்ணமாகத் திகழத் திருவடி மட்டும் மலர் போன்று குளிர்ந்திருக்கிறது. காரணம் அடியார்களுக்கு அடைக்கலமாக இருப்பவை அத்திருவடிகளே!  
இத்திருவடிகளாகிய மலர்களை வேதங்களாகிய வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கின்றனவாம். இந்த அழகிய மலர்கள் அடியார்களுடைய சிந்தையிலே செந்தாமரைப் பூக்களாக மலர்ந்த மலர்களாம்! 
“மன்பெரும் திரு மாமறை வண்டு சூழ்ந்து 
அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை” என்பார் சேக்கிழார். (பெ.பு.337) 
மலர்-கண்களுக்கு விருந்து, சிலம்பொலி செவிகளுக்கு விருந்து. 
மலர்- அழகிய ஒளியை உடையது, சிலம்பு- இனிய ஒலியை  உடையது. 
மலர்- மென்மை தன்மை உடையது, சிலம்பு= வண்மைத் தன்மை உடையது. சிலம்பை வீரக்கழல் எனவும் குறிப்பிடுவர். 
“மலர் சிலம்படி” என்பதையே மற்றோர் இடத்தில் “பூங்கழல்” என்று குறிப்பிடுவார் சேக்கிழார். (பெ.பு.351) 
இரண்டு திருவடிகளில் ஒன்று உயிர்களுக்குப் பந்தமாகிய பிறப்பைத் தருகிறது, மற்றொன்று வீடாகிய முத்தியை அளிக்கிறது. 
“பந்தம் வீடு தரும் பரமன் கழல்” என்பார் சேக்கிழார். (பெ.பு.3௦௦)

ஒன்று ஊன்றிய திருவடி. உயிர்களைப் பந்தத்தில் ஆழ்த்துகிறது. மற்றொன்று தூக்கிய திருவடி, உயிர்களைப் பந்தத்திலிருந்து மீட்டு முத்தியைத் தருகிறது.
வாழ்த்தி வணங்குவாம்
உலகெலாம் உணர்தற்கு அரியவனும் ஓதற்கு அரியவனும் ஆகிய பெருமானின் மலரடிகளை வாழ்த்தி வணங்குவாம். வாழ்த்துதல் என்பது வாயின் தொழில் (வாக்கின் பணி). 
“வாயே வாழ்த்து கண்டாய்” என்றும் “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை....” என்றும் அப்பர் பெருமான் பாடுவார். வாயின் தொழில்கள் இரண்டு. ஒன்று உணவுண்பது. மற்றொன்று பேசுவது. இந்த இரண்டாவது தொழில் மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே கிடைத்த அரியதொரு வாய்ப்பு. இறைவனை வாழ்த்துவதற்கும் வேதங்களை ஓதுவதற்கும் இசையோடு பாடி பரவுதற்கும் என்றே  நமக்கு இவ்வாய்ப்பினைத் தந்துள்ளான் இறைவன். 
“பேசுவதும் திருவாயால்-மறைபோலும் காணேடி“ என்பார் மணிவாசகர். 
வணங்குதலாவது உடலின் தொழில். இதுவும் மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே கிடைத்த அரியதொரு வாய்ப்பாகும். 
ஆக மனம், வாக்கு, உடல்  என்னும் முக்கரணங்களில் வாக்கு, உடல் ஆகிய இரண்டின் செய்கைகளைக் கூறுவதால் மனத்தின் செய்கையும்  இதில் உள்ளடங்கி இருப்பதை நாம் உணரலாம்.  
பொதுவாக நம்மைவிட வயதில் பெரியவர்கள் நம்மை வாழ்த்த வேண்டும். நாம் அவர்களை வணங்கவேண்டும். இதுதான் உலகியல் நியதி. இறைவனோ எல்லாரையும் விட மிகமிகப் பெரியவன். அவனை நாயினும் கடைப்பட்ட நாம் வாழ்த்துவதா?  என்றால் இந்த உலகியல் வாழ்த்து – ஆசீர்வாதம்   எனப் பொருள்படும். ஆனால் இறைவனை வாழ்த்துவதாவது ஏத்திப் புகழ்வது என்று பொருள்படும். 
அவ்வாறு இறைவனை நாம் வாழ்த்துவதால் நம்முடைய வாழ்வு வளம்பெறும். “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மிகவேண்டி” என்பார் மணிவாசகர்.

சேக்கிழார் பெருமானின் சிந்தனைகள் !
http://www.dheivasekkizhar.com/periyapurnamsinthanaigal/ulagelam.html

No comments:

Post a Comment