Friday, 16 August 2013

அறிவியல் வளர்ச்சி...

தகவல் சாதனங்களின் வளர்ச்சி நமது கலாச்சாரத்தின் மான்பையும் மதிப்பையும் கெடுத்துக்கொண்டு வருகிறது இன்றைய அதி நவீன சூழ்நிலைகளில்.

அதில் உள்ள நன்மைகளை அதிகரித்துக்கொள்வதை விட அனாகரிகமான செயல்களை சித்தரிப்பனவற்றில் மதி மயங்கி தங்களின் காலத்தையும் நேரத்தையும், ஏன் தங்களின் எதிர்காலத்தையுமே அழித்துக்கொள்கின்றனர் இன்றைய இளம் பருவத்தினர்.

ஊடகங்களின் தாக்கம் ஒரு புறம், குடும்பத்தினர் தரும் அதிக சுதந்திரம் மறுபுறம்.  இவற்றுக்கிடையே இறை நம்பிக்கை மங்கிப்போய்க் கொண்டிருப்பது பலருக்கு இன்னும் புரியாமலே இருக்கிறது.

முகநூல் பற்றி நாம் ஏற்கனவே இங்கு சொல்லி இருக்கிறோம். அதில் நன்மைகளை விட ஆயிரம் மடங்கு தீமைகளே அதிகம் என பலரும் சொல்லி வந்தாலும், இளையோர் என்னவோ தங்கள் காதுகளில் அவை விழவில்லை என்பது போலவே நடந்து கொள்கின்றனர். அதுவும், தனியாக விடப்படும் போது, தங்களின் உடல் அழகினை ஊராருக்கும் காட்டத் துணிகிறார்கள், முகநூலில் அதுபோன்ற படங்களை பதிவிட்டு.

அறிந்தும் தெரிந்தும் தான் இப்படி செய்கிறார்களா என எண்ணி முடிவெடுக்கும் கால கட்டத்திற்குள் அதன் தாக்கமும் பாதிப்பும் கட்டுக்கடங்காமல் போய்விடுகின்றது. பல இளையோரின் வாழ்வு பாழ்பட முகநூல் ஒரு முக்கிய காரணம் என துணிந்து கூறலாம். இருந்தும் இந்த சீர்கேடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

செயற்கை மழை 1960ம் ஆண்டுகளில் பெரும் பிரபலமான ஒன்றாக இருந்தது. உப்புத் துகள்களை பனிபோல மேகங்களிடயே தூவிட, அதன் குளிர்ச்சியினால் பெய்த மழையினை செயற்கை மழையென பெருமை பட்டுக்கொண்டோம் அன்று.

இன்றைய நிலை வேறு. காமா கதிர்களிலிருந்து நானோ  நுண்ணணுக்க முறை கூட வர வர பழையதாகிவிட்டது. அறிவியல் என்பது காலத்துக்குக் காலம் மாற்றங்களோடு வளர்ந்து கொண்டுபோகும் ஒன்றென்பது விஞ்ஞானிகளின் கூற்று. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

அறிவியலின் கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் உயிர் காக்கும் தேவைகளை அவ்வப்போது பூர்த்தி செய்து வருகின்றன. இதை யாரும் மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த காலங்களில் பல நூற்றாண்டுகளாக சுனாமியின் தாக்கம் இருந்திருப்பதற்கான அதிர்ச்சி தகவலின்படி, கோடிக்கணக்கான மக்கள்  பலியாகியிருக்கலாம் என்ற யூகங்களுக்கு இடம் தந்தது.

ஆயினும் 2006-க்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சுனாமி ஏற்படப்போகும் வாய்ப்பை முன்னதாக அறிந்து கொண்டு பல உயிர்களைக் காக்கும் யுக்திகளை நாம் பெற்றுவிட்டோம்.

இதற்கு, கதிரியக்கக்கரிம ஆய்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வளவு அதிர்வெண் கொண்ட பூகம்பங்கள் இதற்கு முன் ஏற்பட்டது என்பதை துள்ளியமாக அறிந்து, இனி எப்படி அதுபோன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பனவற்றை அறிவியல்தான் நமக்குச் சொல்லித்தருகிறது.

ஆனால், இந்த அறிவியல் சாதனைகள் ஒரு தனி நபர்  முன்னேற்றத்துக்கு எப்படி உதவுகின்றன....?

ஒரு நாடு மற்ற நாட்டுக்கு இடும் சவால், தனது விஞ்ஞானிகளையும் அவர்களின் சிறந்த கண்டுபிடிப்புக்களையும் பறைசாற்றிக்கொள்வதே.
 இதனால் ஒரு நாட்டின் நன்மதிப்பு கூடுகிறது. தற்காப்புக்கென பல நவீன ஆயுதங்கள், வெளி உலக தொடர்புக்கான ஆரய்ச்சிகள், நோய்களை முன்கூட்டியே அறியும் திறன் போன்ற செயல்கள் நாட்டின் அறிவியல் வளர்சியின் அளவுகோல்.

ஆயினும் பலவித புதுமையான கண்டுபிடிப்புக்களின் வழி நாடு சிறக்குமே தவிர, நம் குடும்பமும் சமூகமும் சிறக்க இது போன்ற கண்டுபிடிப்புக்கள் காரணமாக இருக்க முடியாது. இவை நம் வாழ்வுக்கு ஒத்தாசையாக வருவனவே.

அப்படியானால், அறிவியல் வளர்ச்சி நமக்கு பாதகமானதா?

சரியாக, முறையான வகையில் பயன் படுத்தும் நெறிகளை மீறிடும் போது, அவை ஆக்க சக்தியாக முடியாது....அழிக்கும் சக்தியே.

முந்தய காலத்தில் தகவல் பரிமாற்றம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தது. நாட்டு மக்கள் எதையெல்லாம் கேட்கவேண்டும் என செய்திகளை பிரித்து மக்களுக்குச் சென்றடைய அரசாங்கம் தகவல் துறையின் மூலம் ஏற்பாடு செய்திருந்தது.

பத்திரிக்கைகள் படிப்போரும் மிகக் முறைவு. வானொலியில் வெளிவருவதை கவனிக்க ஒரு குழுவும் இருந்தது. ஆக, உலகில் வேறு எங்கு தவறான செய்கைகள் இருந்தாலும் அவை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வருவதை தடுத்து நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடிந்தது.

அறிவியல் வளர்ச்சி எனும் பார்வையில் தொடர்புத்துறை முன்னேற்றம் அடைந்து விட்ட இந்நாட்களில், நல்லதை விட தீயன பற்றிய செய்திகளை தடுக்கும் சந்தர்ப்பங்கள் இன்று அரசாங்கத்துக்கு கூட இல்லை எனும் நிலையாகிவிட்டது.  இதைத்தான் நாம் கவனமுடன் கையாளவேண்டும் என்கிறோம்.

நமது இளைஞர்கள் மிக மிக விழிப்புடன்  செயல் படக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகிவிட்டது.  புதுமையை விளங்கிக் கொள்ளுதலில்  தவறு நேரும்போது அது அவர்களின் வாழ்க்கையே பாதிக்கிறது.

நம் மலேசிய நாட்டில் தினமும் 18 வயதுக்கும் குறைவானோர் காணாமல் போகும் எண்ணிக்கை 15 ஆகும். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 6. சமூக அமைப்புக்கள் இணையத்தையும், தனிப்பட்டவரின் ஒழுக்க நெறிகளையுமே இங்கு முன் வைக்கின்றன.  கற்கும் வயதில் நம் இளைஞர்கள் கத்தியைத் தூக்குவது அதிரும் வகையில் பெருகி வருகிறது.

இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி என பலரும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். உடனடியாக நம் நினைவுக்கு வருவது இறை நம்பிக்கை மட்டுமே. மற்ற மாற்றங்கள் பின்னர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். ஆயினும், இன்றே ஏதாவதொரு விழிப்பு நிலையை நாம் இளையோருக்கு காட்டவேண்டியதிருப்பதால் இறை நம்பிக்கையைத் தவிர உடனடி தீர்வாக நமக்கு வருவது வேறொன்றும் இல்லை.

எந்நிலையில், யாருடன் இருந்தாலும் அல்லது யாருடனும் இல்லாது தனித்திருந்தாலும், ஒருவரை ஒழுக்கமுடன் வழி நடத்திச் செல்வது இறையருளே. அன்று அதன் அடிப்படை நம் சமூக மக்களின் ஒவ்வொரு குடும்பங்களிலும் இருந்தது. தொன்றுதொட்டு, குடும்பம் குடும்பமாக, வழி வழியாக இறைவனை வணங்கி வாழும்  நேரான  சிந்தனை நிலை அனைவருக்கும் இருந்தது. மொத்த மக்களில் தவறு செய்வோர் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை என்றே படித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, அன்று இருந்தோரும் , வெளியிடப்பட்ட புத்தகங்களும் நல்லவற்றையே எடுத்துச்சொல்லி வந்தன. அதனால் நல்லதை பின்பற்றுவோர் குறைவில்லாமல் இருந்தனர்.

தற்போதைய சமூக நிலை மாற்றங்கள் எவ்வித நன்மைகளும் செய்வதாயில்லை.

பேய் இருப்பதாகவும், அதன் சேட்டைகளை அடக்கியாள்வது எப்படி என்றும் புத்தகங்கள் வெளிவருகின்றன தற்போது.   சினிமா, தொலைக்காட்சி, யூ டியூப்  என மிக எளிதில் மக்களுக்கு கிட்டிவிடுகிறது. அதில் உள்ள விரசம் அதிகம் விலைபோகின்றது.  அதன் தாக்கம் மக்களை சீரழிக்கிறது.  சாதுக்களின் கருத்துக்களை பிழை  எனச் சொல்வோரும் வந்துவிட்டனர், தானே கடவுள் எனச் சொல்லிக் கொள்ளும் குருமார்களும் மலிவாக காணப்படுகின்றனர் எல்லா ஊர்களிலும்.  சமயத்தினை போதிக்கத்தான் குருமார்கள் எனும் நிலை மறைந்து, சில குருக்கள் தாங்களே கடவுள் என சொல்லிக்கொள்ளும் அவல நிலை இப்போது நம் கண் முன்னே நடக்கின்றது. நமது திருக்குறளை குறை சொல்வோரும், காந்தியடிகளின் கொள்கைகளே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் என வாதிடுவோரும்கூட மலிந்து விட்டனர்.

இவை நமக்கு எதை காட்டுகின்றது...?
அறிவியல் வளர்ச்சி என நாம் பின்பற்றும் அதிக சுதந்திரத்தையே.

கண்டுபிடிப்புகள் இயந்திரங்களாகவோ, தொடர்புத்துறை நுணுக்கங்கங்களாகவோ இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆயினும், செயல்படுத்தப்படும்போது அது நமது ஒழுக்க நிலையை அசைத்துப்பார்த்தால் அந்த வளர்ச்சி பாதகத்தையே செய்யும்.

சவாலான பல சூழ்நிலைகளில் இன்றைய இளைஞர் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பதனால், அவர்களாகவே திருந்தி வெளிவராவிடில் மற்றவர்  உதவி என்பது குறிப்பிடும்படி எங்கிருந்தும் வரப்போவதில்லை என்பது இப்போது நம் கண் முன்னே காட்சியாக தெரிகிறது. அனைவரும் சுயநலத்திலேயே நாட்டமுடன் செயல்படுவதால், இளையோருக்கான உதவிகள் அவர்களைத் தேடி வரப்போவதில்லை. இது நிச்சயம்.

தாங்களே தங்களை உயர்த்திக்கொண்டால்தான் உண்டு. அதில் ஒன்று தான், கணினி மற்றும் கைபேசி தொடர்பான ஒழுக்க நிலை.... தவறெனப்படுவதை தவிர்க்கும் மனப்பக்குவம்.

இதில் பெற்றோர்களின் பங்கும் நிறையவே இருக்கிறது. பிள்ளைகள் கேட்கிறார்களே என புத்தம் புது மோடல்களில் கைபேசிகளை வாங்கித் தருகிறார்கள். பலருக்கு அவற்றின் விலை பற்றிய கவலையே இல்லை. அப்படி வாங்கித்தரும் பெற்றோர் அவ்வப்போது பிள்ளைகளின் கைபேசி 'மெமரி கார்டு'களை வாங்கி திடீர் பரிசோதனை செய்தாலே இன்றைய இளையோரின் அவல நிலை தெரியத்தொடங்கி விடும்.

ஆகவேதான் சொல்கிறோம், அறிவியல் வளர்ச்சி சில நேரங்களில் எதிர்மாறான அசம்பாவிதங்களுக்கும் காரணமாகிறது என்று.

No comments:

Post a Comment