இன்று சின்னதாக ஒரு கதை சொல்லப்போகிறேன்.
புத்திக்கூர்மையான நண்பர்களை ஒரு சில நேரங்களில் ஏன் நாம் நம்பக்கூடாது என்பதற்கு இந்தக்கதை பொருந்தும்.
காட்டில் புலி ஒன்று தன் பசியைப் போக்கிக்கொள்ள அப்பக்கமாக வந்த ஒரு நரியை துரத்தியது. வேகமாக ஓடிய நரி பக்கத்திலிருந்த உயரமான மரத்தின் மேது ஏறி அமர்ந்து கொண்டது. புலியால் அம்மரத்தில் ஏற முடியவில்லை. ( புலிகளுக்கு மரம் ஏறத் தெரியும் இறங்கத்தெரியாது என்றுதான் நாம் முன்னர் படித்திருப்போம். ஆனால், இந்தப் புலிக்கு மரம் ஏறவே தெரியவில்லை...)
அதே மரத்தில் குரங்கொன்றும் இருந்தது.
நேரம் ஆகிக்கொண்டே இருக்க, தன் கைக்கு எட்டிய சில பழங்களை குரங்கு பறித்து நரிக்குத் தந்தது. எப்படி மரக் கிளையைப் பிடித்து தூங்கவேண்டும் எனவும் நரிக்குச் சொல்லித் தந்தது.
அயர்ந்து தூங்கத் தொடங்கியது நரி.
புலி குரங்கைப் பார்த்தது.இருக்கும் இரண்டில் ஒன்றையாவது தனது பசிக்கு உணவாக்கிட எண்ணியது.
தந்திரமாக குரங்கிடம், " நண்பனே, தூங்கும் அந்த நரியை கீழே தள்ளி விடு, உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.
ஆனால் குரங்கோ "ஆபத்திலிருக்கும் ஒருவனிடம் 'அட்வான்டேஜ்' எடுத்துகொள்ளும் ஆள் நானில்லை..சரிதான் போ" என சொல்லி மறுத்துவிட்டது.
நேரம் சென்றதும், குரங்கு தூங்க நரி காவலுக்கு விழித்திருந்தது.
புலி இம்முறை, " நரியாரே, அந்தக் குரங்கை கீழே தள்ளி விடு. நீ அப்படிச்செய்தால் இனிமேல் நீயும் நானும் நெடுங்காலம் நண்பர்களாக வாழலாம்" என்றது.
நரி யோசித்தது... புலியின் நட்பு நமக்கு கிடைத்தால் மற்ற மிருகங்களும் நம்மை மதிக்கும்... என அதற்குப்பட்டது. உடனே பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த குரங்கை கீழே தள்ளி விட முயன்றது.
தூக்கத்தில் இருந்த குரங்கு தான் கீழே விழுவதை உணர்ந்து சட்டென்று ஒரு மரக்கிளையைப் பிடித்து தப்பித்துக்கொண்டது.
புலி சிரித்துக்கொண்டே "ம்ம் இன்று அவ்வளவுதான்" என அவ்விடத்தை விட்டு அகன்றது.
நரியோ தான் செய்யத் துணிந்த தகாத காரியத்தால் தலை குனிந்து நின்றது.
நீதிக்கதைகளில் இதை நாம் முன்பு படித்திருப்போம்.
"தீயவருக்குச் செய்யும் உதவி நம்மையும் தீங்கிற்கு இட்டுச்செல்லும்..."
No comments:
Post a Comment