Wednesday, 27 March 2013

டுசுன் டுரியான் தோட்ட நாடகங்கள்...


(  டிரெக்டர் ஓட்டுனராக  நெடுங்காலம் பணியாற்றி அன்மையில் ஓய்வுபெற்ற திரு ராமசாமி குப்புசாமி அவர்கள்  தனது நாடக அனுபவங்களை  இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். )

மகாபாரதம் ஒரு இதிகாசமென குறிப்பிடுகின்றனர். இதை சமஸ்கிருதத்தில் இயற்றியவர் வியாசர். ஆனால் அதை நம் தமிழுக்கு  மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார்.  இரு பங்காளிகளுக்கு இடையே நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியதும் இதே...

டுசுன் டுரியான் தோட்டத்தில் அன்றைய மகாபாரத நாடகத்தை ஏற்று நடத்தியவர் மரியாதைக்குரிய காலம்சென்ற திரு பொன்னையா அவர்கள்.  அறுபதுகளில் அவரின் மேற்பார்வையில்தான் தோட்டத்தில் பணியாற்றிய, ஆர்வமுள்ள பலர் நடிப்பிலக்கியம் பற்றி தெரிந்து கொண்டனர். பல அரிய திறமைகளை ஒருங்கே கொண்டிருந்தவர்   திரு.பொன்னையா அவர்கள். 

அவர் தலமையில் நடந்தேறிய நாடகங்களில் திரு.சாமிரெட்டி அர்ஜுணனாகவும், திரு சேகரின் தம்பி வேலு பீமனாகவும், டிரெக்டர் கிருஷ்ணன் கிருஷ்ணனாகவும் சிறப்பாக நடித்து எல்லோரையும் அசத்தினர்.

திரு பொன்னையா அவர்கள் பொதுவாக தனது நடிகர்களுக்கு அவர்களின் கதாபாத்திரத்திற்கேற்ப அவர்கள் பேச வேண்டிய வசனத்தை தனித் தனியே எழுதித் தந்துவிடுவார்.  நாடக மாந்தர்கள் அவ்வசனங்களை மனப்பாடம் செய்து ஒத்திகையின் போது ஒப்பிப்பார்கள்.  இந்த ஒத்திகை கள்ளுக்கடை மூடப்பட்ட பின் இரவில் அங்கு நடைபெறும்.  இவ்விடத்தை ஒத்திகைக்கு நாடக ஆசிரியர் தேர்ந்தெடுத்ததிற்கு ஒரு சிறப்பு காரணமும் உண்டு. 

இத்தோட்ட கள்ளுக்கடை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதனை ஒரு பக்கம் கௌரவர்களுக்காகவும் மறுபக்கம் பாண்டவர்களுக்காகவும் திரு பொன்னையா அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்.  இரு பிரிவினரும் ஒத்திகையின் போது வசனத்திற்கேற்ப மோதிக்கொள்வர். இந்த ஒத்திகையினை காணவே பலரும் அங்கு வந்து குழுமி இருந்தனர் அக்காலத்தில். அவ்வளவு சுறுசுறுப்புடனும் விறுவிறுப்புடனும் நாடக ஒத்திகைகளே இருந்திருந்தன.

பொதுவில் துரியோதணனுக்கும் கிருஷ்ணனுக்குமே அதிக வசனங்கள் இருக்கும். காரணம் இவர் நடத்திச் சென்ற நாடக பார்வை அப்படி இருந்ததும், அந்த பாத்திரங்களில் நடித்திருந்தோரின் அசாத்திய திறமைகளும் இரு பெரும் காரணங்களாகும்.

இவர்களை தவிர்த்து இவர்களுக்கு துணையாகவும், பலர் பின்னனியில் உதவி இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானோர் நடிகர்கள் வசனத்தை மறந்துவிடாமல் இருக்க அவ்வப்போது நடிகர்களின் பகுதிகளை கதவோரம் நின்று எடுத்துக்கொடுக்கும் உதவியாளர்களாகும்.

மைக் எனப்படும் ஒலிவாங்கி மேடையின் நடுவில் இருக்க, வசனத்தை மறந்து விடும் நடிகர்கள் ராஜ நடை நடந்து உதவியாளர்களிடம் வந்து வசனத்தை கேட்டு ஒலிவாங்கியின் முன் வந்து ஒப்பித்த முறையும் மேடை நாடக யுக்தியாக அன்றிருந்திருக்கிறது.  

இப்போது இதை படிக்க சற்று நகைச்சுவையாக பட்டாலும் ஒரு நாடகம் வெற்றிகரமாக நடந்தேற அன்றைய சூழ் நிலையில் இந்தச் சிறு சிறு பங்களிப்பினை கேள்விப்படும்போது நமக்கு பெரும் ஆச்சரியம் மேலிடுகிறது.




ஆயிரக்கணக்கானோர் இரவு முழுவதும் மேடை முன் அமர்ந்து  இதுபோன்ற நாடகங்களை பொறுமையாக ரசித்த காலம் அது.

திரு.பொன்னையாவின் பொறுப்புக்களை அடுத்து எடுத்துக் கொண்டவர் திரு நடராஜா அவர்கள். கிளனாங் பாரு, ஓ.பி.ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்தவர் இவர்.

 நான் பீமனாக நடிக்க வந்தபோது இவரின் மேற்பார்வையில் 1974ம் மற்றும் 1975ம் ஆண்டுகளில் மகாபாரதம் திருவிழாக் கால மேடை நாடகமாக அரங்கேறியது. அப்போது, திரு.முருகேசு ( ஓபிஆர் எஸ்) அர்ஜுணனாகவும், திரு. தேவேந்திரன் ( கில்கீ எஸ்டேட்) துரியோதணனாகவும், திரு. ஜோசெப் (ஓபிஆர் எஸ் )தருமனாகவும் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றனர்.

ஆனால் திரு நடராஜா வேறிடத்திற்கு மாற்றலாகி சென்றதும் புதிய நாடக ஆசிரியர் திரு. கேசவன் தலமையில் 1976ம் ஆண்டு முதல் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு அரங்கேற்றப் பட்டது. இக்கால கட்டத்தில் பீமனாக என்னோடு, போர்மென் சண்முகம் அர்ஜுணனாகவும், எனது தம்பி ராஜு கர்ணனாகவும், திரு.ரெங்கசாமி துரியோதணாகவும், நாடகத்தின் ஆசிரியர் திரு கேசவனே தருமனாகவும் நடித்திருந்தனர்.

அன்றைய காலத்தில் வானொலி தொலைக்காட்சி முழு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. இது போன்ற நாடங்கள் மக்களின் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று புகழ் பெற அதுவும் ஒரு காரணம். வயது வேறுபாடின்றி அனைவரும் விரும்பி ரசித்து நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாடகக் கலைக்கு தங்களின் ஒருமித்த ஆதரவை வழங்கினர்.

ராமாயணமும் மகாபாரதமும் வெறும் கற்பனையாக மக்கள் பார்த்திராத காலம் அது. இன்று பலர் சொல்லிக்கொள்வது போல் அவை பிரமாண்டமாக சொல்லப்பட்ட பொய்கள் அல்ல. நமது நல்வாழ்வுக்காக சான்றோர்களால் வகுக்கப்பட்ட நற்பண்புகளின் குறிப்பேடு அவை.  மகாபாரதம் இல்லையேல் கீதை இல்லை. கீதை இல்லையேல் கிருஷ்ணன் இல்லை. ஆக கிருஷ்ணன் இல்லையேல் நமது மதமே இல்லையெனும் நிலையில் பக்திப் பார்வையில் படைக்கப்பட்டு பார்ப்போரின் மனதில் நல்லெண்ணங்களை விதைத்தன இது போன்ற நாடகங்கள்.

அதன் பின் வந்த மேலை நாட்டு கலாச்சார மாற்றங்களினால், மேடை நாடகங்களின் புகழ் மங்கத் தொடங்கி விட்டது. வண்ணத் தொலைக்காட்சி, வீடியோ என அறிவியல் வளர்சியில் மேடை நாடகங்களை பார்ப்போரின் கவனம் திசை திருப்பி விடப்பட்டுவிட்டது.

மலேசிய வானொலியின் புகழ் பெற்ற கலைஞரான திரு.எஸ்.வைரக்கண்ணு 1974/5ம் ஆண்டு வாக்கில் இந்தத் தோட்டத்தில் அவரின் தமக்கையின் வீட்டில் தங்கி இருக்கும்போதுதான் அவரின் முதல் தொடர் நாடகம் சிங்கை வானொலியில் ஒலியேறியது என ஒரு கொசுறுத் தகவலும் உண்டு.

- திரு. கே. ராமசாமி சொல்லக்கேட்டு எழுதியவர் ராஜ்பாவ்

No comments:

Post a Comment