Wednesday, 20 February 2013

திட்டமிடல் அவசியம். . .

முன்னோக்கிப் பார்க்கும் 'எனலிட்டிக்கல் எபிலிட்டி' அதாவது பகுத்து ஆராயும் திறன் ஒவ்வொரு தனிப்பட்டவருக்கும், நிறுவனங்களுக்கும், அமைப்புக்கும், அரசாங்கத்துக்கும் மிக அவசியமானதாகும். இதையே திட்டமிடல் என் கிறோம்.கொள்கைகளையும் குறிக்கோள்களையும் உருவாக்கிக்கொண்டு அதன்படி செயல்படத் தொடங்குவதே திட்டமிடல் என வகைப்படுத்தி இருக்கின்றனர் பெரியோர். இப்போது என்ன செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எதிர்காலம் நமக்கு வலுவுள்ள ஓரிடத்தை கொண்டிருக்குமா என அப்போது எழும் சந்தேகத்தை இப்போது தீர்த்து வைப்பதே திட்டமிடல் என்பதாகும்.

சில சமயம் சின்ன விசயம்கூட நம்மை சிதறடித்து விடும். சின்னதோ பெரியதோ, எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கையாக நல்ல விதம் திட்டமிடுவது நம் வாழ்வை நாம் சீராக கொண்டு செல்ல மிகவும் உதவும்.

தொலைநோக்குப் பார்வையுடன் எதையும் ஆழமாக எண்ணி செயலில் இறங்குவது, ஆரம்பத்தில் கடினமாக பட்டாலும் போகப் போக அதுவே நமது வெற்றிப் படிகளில் ஒன்றாக மாறிவிடும். திட்டமிடுவதானது செயல்களுடன் இடைவிடாத தொடர்புடையது. எந்த நேரத்திலும் முடிவு செய்யப்பட்ட திட்டங்களை நோக்கியே நமது கவனம் இருக்கவேண்டும்.

அரசியல் தலைவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை திட்டமிடுதலுக்கான தேவை இருக்கவே செய்கிறது.

ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் அதன் அறிவியல் கண்டுபிடிப்பிகளிலும், அறிவியல் வளர்ச்சியிலும் அடங்கியுள்ளது என்பார்கள். ஆயினும் அதனோடு அரசாங்காம் இடும்  சமூக, பொருளாதார  நிலை திட்டங்களே அந்தந்த நாட்டின் வெற்றியினை நிலை நிறுத்துகிறது. நிர்வாகத் திறன் கொண்ட அதிகாரிகளால், கொள்கை வகுப்பாளர்களால்  வகுப்படும் திட்டங்கள் நல்ல அரசியல்வாதிகள் மூலம் நாட்டுக்கு நன்மைகள் தருகின்றன.

மாணவர்கள் தங்கள் நேரத்தினை பல பிரிவுகளாக பிரித்து தங்களுக்கான பாடத்திட்டத்தினை அங்குலம் அங்குலமாக அலசி அதன்படி படிக்கத்தொடங்கினால் தேர்வில் சிறப்பான இடத்தை அடைவது பெரிய ஒன்றாகப் படாது. அவ்வப்போது தங்களது பயிற்சிகளை மதிப்பீடு செய்வதும் உதவும்.

இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அமைப்புக்களை, அதன் வழி செய்ய நினைக்கும் பொது நலச் செயல்களை பலமுறை எண்ணிப்பார்க்க வேண்டும். அவசரத்தில், மனது சொல்வதைக்கேட்காமல், மதி சொல்வதைக் கேட்டு அதன்படி செயல் படத் தொடங்குவது தரமான அவர்களின் திட்டமிடும் ஆற்றலைக் காட்டும். அதில், வயோதிகத்துக்கு உகந்ததென நினைக்கும் அனைத்தையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதே ஏற்பாடு செய்துகொள்வதும் அடங்கும். மனை, மனைவி, மக்கள், மாதாந்திர கணிசமான வருமானம் என்பவைகள் அவற்றில் சில. தற்போது கையிருப்பிலுள்ள அனைத்து சக்தியையும், யுக்தியையும், பொருட்களையும், பொருளாதாரத்தையும்கூட எதிர்கால நலனுக்காக உபயோகப் படுத்திக்கொள்வது நல்லது.

இப்படியே புத்திக்கூர்மையிலும், நாவன்மையிலும் உயர்ந்தவர்களின் கண்ணோட்டமும். அது அவர்களின் எதிர்காலத்தை முன் நிறுத்தியே அமைந்திருக்கும்.

லாப நோக்கினை அடிப்படையாய்க் கொண்டே நிறுவனங்கள் தங்களின்  வல்லுநர்களைக்கொண்டு திட்டங்களை வகுக்கின்றன. வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர வரவு செலவுகளின் பட்ஜெட் நிலவரங்கள் சீர்தூக்கிப் பார்க்கப்படுகின்றன. அதன்படியே அவர்களின் தொழிலும் தொடர்கின்றது. சரியான திட்டத்தில் செயல் படாத நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குப் பின் இழுத்து மூடப்படுகின்றன.

குடும்பத் தலைவர்கள், தங்கள் குடும்பத்தின் எதிர்கால தேவை அறிந்து அதன்படி குடும்பத்தை நடத்திச் செல்கிறார். மழைத்துளி போல சிறுகச் சிறுக சேமிப்பதன் வழி குடும்பத் தேவைகள் அனைத்தும் கவனத்தில் கொண்டு செயல் படுத்தப்படுகின்றன. அனாவசிய செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை பாதுகாப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் என்றென்றும் நிலைத்திட திட்டமிடுகிறார். அவருக்கு சக குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பும் கிடைக்கிறது.

பெண்கள் இல்லத்தரசிகளாக பிராகாசிக்கிறார்கள். வேறிடத்தில் பிறந்து புகுந்த வீட்டில் திருமணம் முடிந்த ஒரு சில வருடங்களிலேயே தங்களது ஆளுமைத்திறனை காட்டத் தொடங்கி விடுகிறார்கள். கணவனோடு இணைந்து குடும்பத்தை சிறந்த வழியில் பயணிக்கச் செய்ய இவர்களின் பங்களிப்பும் முக்கிய ஒன்றாகும்.


No comments:

Post a Comment